காதல் சேஸிங்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 6,392 
 
 

யமுனா ஃபோன் செய்ததில் இருந்து ராஜா சற்று பதட்டத்துடனும், மனக் குழப்பத்துடனுமே இருந்தான். அப்படி அவள் ராஜாவிடம் ஃபோனில் என்ன கூறினாள். அவர்களின் காதல் செய்தி யமுனாவின் தந்தைக்கு எப்படியோ தெரிந்துவிட்டது என்றும், சொல்லாமல் கொள்ளாமல் தன் தந்தை தனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், யமுனா ராஜாவிடம் அழுதுகொண்டே கூறினாள். அதுமட்டுமல்ல, இன்று மாலையே தன் தந்தை தனக்கு அவசர அவசரமாக நிச்சயதார்த்த ஏற்பாடு செய்திருப்பதாகவும்,எப்படியாவது தன்னை வந்து அழைத்து போகும்படியும், அப்படி வரவில்லை என்றால் அவள் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் கூறினாள்.

ராஜாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல், ஒன்றும் புரியாமல், கண் விழி பிதுங்கிப் போய் இருந்தான். அப்போது நண்பன் கிருபாவுக்கு கால் செய்தான்.

ஹலோ கிருபா !

ம்ம் சொல்றா நல்லவனே… என்னடா ?

எங்கடா இருக்க கிருபா ? ஒடனே கெளம்பி பாண்டி அண்ணே டீ கடைக்கு வாடா…

ஏன்டா ? எதுவும் பிரச்சனையா ..

டேய் நீ கெளம்பி வாடா சீக்கிரம் ! சொல்றேன்.

சரி வரேன் …

டேய் கிருபா .. கிருபா..

என்னடா ?

மச்சி பைக்ல வராத .. கார் எடுத்துட்டு வந்துரு !

காரா ? ஏன்டா.

டேய் சொல்றத செய்டா.

சரி வந்து தொலையிறே… எங்க அப்பா கிட்ட எனக்கு நீ செருப்படி வாங்கி தர போறேன்னு தெரிஞ்சுபோச்சு…..வரேன்.

ராஜா, பாண்டி டீ கடையின் பென்ச்சில் அமர்ந்து சிகரெட்டை புகைத்தபடியே கிருபாவிற்காக காத்திருந்தான். ராஜா ஃபோன் செய்த சில நொடிகளிலேயே கிருபாவின் கார் பாண்டி டீ கடையை நோக்கி வந்தது. கிருபாவின் காரை கண்டவுடன் ராஜாவின் மனம் சற்று நிம்மதி அடைந்தது. கிருபா காரை நிறுத்தி லாக் செய்துவிட்டு, ராஜாவை நோக்கி நடந்து வந்தான். ராஜாவின் உடல் அசைவிலும், கண் பார்வையிலும், அவன் செய்கையிலும் கிருபாவுக்கு தெரிந்துவிட்டது ஏதோ பிரச்சனை என்று.

பாண்டிண்ணே ஒரு டீ ! என்றான் கிருபா.

பாண்டி கண் அசைவில் கிருபாவை தன் பக்கம் வருமாறு அழைத்தான். என்ன, கிருபா தம்பி ! உன் ஃபிரெண்டுக்கு எதுவும் பிரச்சனையா என்ன ?

அதெல்லாம் ஒன்னு இல்லண்ணே ! ஏன் கேக்குறீங்க ?

இல்ல… வந்து பத்து நிமிஷத்துல அர பாக்கெட்டு சிகரெட்ட ஊதி தள்ளிருச்சே அதான் கேட்டேன்.

அதெல்லா ஒன்னுமில்லண்ணே என்று பாண்டியிடம் சொல்லிவிட்டு, கிருபா டீ கிளாஸை கையில் எடுத்துக்கொண்டு ராஜாவின் பக்கம் வந்து அமர்ந்தான்.

டேய் போதுண்டா சிகரெட்ட ஊதுனது ! தூக்கி போட்றா அந்த கருமத்த. ஏற்கனவே நம்ம விட்ட புகைல ஓசோன் லேயரே ஓட்ட ஆயிடிச்சு. இதுல நீ வேற உஃப்பூ உஃப்பூன்னு ஊதிட்டு… என்றான் கிருபா.

ராஜாவோ, என்னடா என்னய பார்த்தா நக்கலா இருக்கா ஒனக்கு ? என் டென்ஷன் ஒனக்கு எங்கடா தெரியப்போது. முன்ன பின்ன லவ் பண்ணி இருந்தாதான அதோட வலி என்னன்னு உனக்கு புரியும்.

அதற்கு கிருபா, டேய் நானுந்தான்டா லவ் பண்றே !

என்னோட அப்பாவ லவ் பண்றே…

என்னோட அம்மாவ லவ் பண்றே….

லவ்வுங்கறது ஆணும் பொண்ணும் சம்பந்தப்பட்டது இல்லடா. அது ரெண்டு மனசு சம்பந்தப்பட்டது என்று கிருபா தத்துவம் பாட .. டேய் கிருபா ஏற்கனவே நானு செம டென்ஷன்ல இருக்கே. என்னய கூட கொஞ்சம் கடுப்பேத்தாத…

கிருபா, ராஜாவின் தோலின் மேல் கை வைத்து என்ன பிரச்சன உனக்கு என்று கேட்டான்.

யமுனா வீட்ல அவளுக்கு மாப்ள பாத்துட்டாங்க ! இன்னைக்கு ஈவினிங்கே நிச்சயதார்த்தமான்டா. எப்படியாச்சும் அவள அவ வீட்டுக்கு போய் தூக்கிட்டு வரனுன்டா …

டேய், உன் ஆளு என்ன உப்பு மூட்டையா இல்ல உருளகெழங்கு மூட்டையா ? தூக்கிட்டு வர …

ராஜா கிருபாவை முறைத்து பார்க்க, சரி சரி டென்ஷன் ஆகாத என்று கிருபா ராஜாவின் தோளை தட்டினான்.

ஆமாண்டா … கேக்க மறந்துட்டேன் ! உன் ஆளோட அப்பா என்ன பண்றாரு ?

அந்த ஆளா ? அந்த ஆளுக்கு ஏகப்பட்ட பிஸ்னஸ்டா கிருபா. க்ரானைட், ஹோட்டல், ட்ராவெல்ஸ்ன்னு நெறய தொழில்.

டேய் ராஜா, நீ ஏன்டா யமுனா அப்பா கிட்ட போய் பேசி பாக்க கூடாது ?

டேய் கிருபா அந்த ஆளு சரியான சாதி வெறி புடிச்சவன்டா ! யமுனாவ வெட்டி போட்டாலும் போடுவானே தவற எனக்கு கல்யாணம் பண்ணி தர மாட்டாண்டா….

கிருபாவோ, அது எப்புட்றா லவ் பண்ற எல்லாருமே தேடி புடிச்சு கரெக்ட்டா வில்லனோட பொண்ணயே லவ் பண்றீங்க ?

ஹ்ம்ம்… சரி, யமுனா கிட்ட எப்ப பேசுன கடைசியா ?

இன்னைக்கு காலைல மச்சி ! அதுவும் வீட்டுக்கு வந்த யாரு ஃபோனையோ வாங்கிதா கால் பண்ணாடா. அவ அப்பங்காரேன் ஃபோன கூட புடிங்கி வச்சுட்டானாண்டா..

இதுவேறயா !

ஹ்ம்ம்…… சரி வா வந்து வண்டில ஏறு !

ஆமா உன் ஆளு வீடு ஜீவா நகர்தான ?

ஆமாண்டா மச்சி !

கிருபாவின் கார் பாண்டி டீ கடையிலிருந்து கிளம்பி ஜீவா நகரை நோக்கி புறப்பட்டது. கிருபா, இடது கையில் கியர் ராடை பிடித்து, வலது கையில் ஸ்டேரிங்கை திருப்பியபடியே.. மச்சி என்ன பிளான், யமுனாவ கூப்டு எங்க போக போற ? என்று ராஜாவிடம் கேட்டான்.

அதற்கு ராஜாவோ .. மச்சி அத மட்டும் கேக்காதடா !

ஏன்டா ?

இல்ல, ஸ்கூல் படிக்கும்போது பிட் அடிச்சு நீ மாட்டுனப்ப அடி தாங்க முடியாம என்னயும் சேத்து மாட்டி விட்டுட்ட ! யமுனாவோட அப்பனுக்கு வேற அடியாளுங்க நெறய பேரு இருக்கானுங்க. ஒரு வேல அடிதாங்க முடியாம நீ ஒளறிட்டேனா ? அதான் மச்சி …சாரிடா…

அடப்பாவி ! எப்ப நடந்தத எப்ப சொல்லி காட்றா பாரு..

சரிடாப்பா சாமி ! சொல்லாத, எங்கயோ போய் நல்லா இருந்தா சேரி.

காரின் சக்கரங்கள் சில டிராபிக் சிக்னலை கடந்த பின்னர் கிருபாவும், ராஜாவும் ஜீவா நகரை வந்தடைந்தனர். ஜீவா நகரின் என்ட்ரன்ஸில் காரை திருப்பி நிறுத்தி, கிருபா காரில் இருந்து மெல்ல கீழே இறங்கினான். கண்கள் நாலா பக்கமும் அலை பாய தெருவை நோட்டம் பிடித்தான்.

டேய் மச்சி ! ஆள் நடமாட்டம் பெருசா ஒன்னு இல்ல… நீ வண்டிய விட்டு கீழ எறங்கிறாத. உனக்கு கால் பண்றே, அட்டென்ட் பண்ணு என்று சொல்லி கிருபா சிறிய ப்ளூடூத் ஹெட்போனை பேண்ட் பாக்கட்டில் இருந்து எடுத்து தன் இடது காதில் தினித்தான்.

மச்சி லைன்லயே இரு ! கட் பண்ணிடாத என்று சொல்லி கிருபா யமுனாவின் வீட்டை தேடி தன் கால்களை செலுத்தினான்.. சில எட்டுகள் வைத்த பின்பு

ஹலோ ! ராஜா .. கேக்குதா ?

ம்ம்ம் சொல்லு கிருபா கேக்குது !

டேய் எந்த கட்டு ? ஃபஸ்டா இல்ல செக்கண்டா..

மச்சி செக்கண்டு கட்டு ! அங்க ஒரு குட்டி விநாயகர் செல இருக்கும் பாரு .. இருக்கா ?

ஆமா இருக்கு !

அத ஒட்டி லெஃப்ட் எடு. எடுத்துட்டியா ?

ம்ம் எடுத்துட்டேன்.

இப்ப ….

போதும் போதும் நீ வழி சொன்னது என்றான் கிருபா..

ராஜாவோ, ஏன்டா என்னாச்சு ?

உன் ஆளு வீடு ரெட் கலர் பெயிண்ட் அடிச்சுருக்குமா ?

ஆமா ! எப்புட்றா கரெக்டா சொல்ற ?

அதான் உன் மாமனாரு முன்னூறு பேரு சாப்புட்ற அளவுக்கு பெரிய பந்தி, வாழமரம், தோரணம், சீரியல் பல்புன்னு ஏரியாவையே கலக்கு கலக்குன்னு கலக்குறாரே…

டேய் கிருபா பாத்துடா ! மாட்டிக்காத.

சரி சரி ! நீ டர்ர் ஆகாத. நா பார்த்துகிறேன்..

ஆமா யமுனாவுக்கு பாத்த மாப்ள பேரு என்ன ?

எதுக்குடா கிருபா ?

டேய் சொல்றா வெண்ண !

நித்தீஷ் டா ….

ஓகே ஓகே … நீ லைன்லயே இரு என்று சொல்லி கிருபா யமுனாவின் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் இடதுபுறம் எழுப்பியிருந்த பந்தலில் உணவு தயாராகிக்கொண்டிருந்தது. தடிமாடுகளாட்டம் ஏலெட்டு ஆசாமிகள் வீட்டை சுற்றி சுற்றி ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருந்தனர். கிருபா அந்த தடிமாடுகளை பார்த்தும் பார்க்காதவாறு யமுனாவின் வீட்டு வாசலை கடக்கும் தருணம்..

தம்பி யாரு நீங்க ? என்றது அந்த தடித்த குறல்.

அதிர்ச்சியில் கிருபா மெல்ல அவன் உடலை திருப்ப, அவனுக்கு சற்று நேர் எதிரில் கதர் வேஷ்டி, கதர் சட்டை, கழுத்தில் கிட்டத்தட்ட ஐந்து பவுன் எடை இருக்கும் தடிமனான தங்க சங்கிலி, இடது கையில் தங்க வாட்ச், வலது கையில் தங்க பிரேஸ்லெட், கட்டை விரலை தவிர்த்து மற்ற விரல்கள் அனைத்திலும் தங்க மோதிரம் என்று மன்னர் கால வில்லனாட்டம் ஒரு ஆசாமி.. அவனைக் கண்டவுடன் கிருபா வாயடைத்து நின்றான்.

தம்பி உங்களத்தா ! யாரு நீங்க ? என்றது மீண்டும் அந்த தடித்த குரல்..

ஹாய் அங்கிள் ! நா…. நித்தீஷ்ஷோட ஃபிரெண்ட்.

மாப்ளயோட ஃபிரெண்டா ? மாப்ள வீடு ஏழு மணிக்குத்தான வர்றதா சொன்னாங்க, நீங்க எப்டி தம்பி அதுக்குள்ள ?

இல்ல அங்கிள், எனக்கு வீடு இங்க லோக்கல்தா.. கே.கே நகர். நித்தீஷ் எனக்கு ஃபோன் போட்டு சொன்னாப்ல, மாமா வீட்டுக்கு போயி அவருக்கு ஹெல்ப் ஏதும் வேணுமான்னு கேட்டு பக்கத்துலேயே இருந்து பார்த்துக்கோன்னு.
அதா அங்கிள் ….

ஓ அப்டியா தம்பி ! ரொம்ப நல்லது. வாங்க தம்பி, உள்ள வாங்க.

அங்கிள், நீங்க யாருன்னு சொல்லவே இல்ல ?

நாந்தா தம்பி பொண்ணோட அப்பா !

ஓ நீதா யமுனாவோட அப்பனா என்று கிருபா மனதிற்குள் நினைத்துக்கொண்டு…ஓ அப்டியா அங்கிள் ? சேரி சேரி..

ஏய் லீலா ! மாப்ளயோட ஃபிரெண்டு வந்துருக்காரு பாரு, கூப்டு உள்ளார ஒக்கார வையு…

தம்பி ! நீங்க உள்ளார போய் ஒக்காருங்க. எனக்கு ஒரு சின்ன வேல இருக்கு, முடிச்சிட்டு இப்ப வந்துட்றே…

அங்கிள், நா எதுவும் ஹெல்ப் பண்ணவா ?

அதெல்லா ஒன்னு வேண்டா தம்பி… நீங்க உள்ளார போங்க.

ஓகே அங்கிள்.

தம்பி ஒங்க பேரு என்ன ?

கிருபா. கிருபாகரன் அங்கிள்.

சேரி சேரி…

யமுனாவின் தாயார் கிருபாவை வீட்டின் உள்ளே அழைத்து வந்து, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர வைத்தார். தம்பி இருங்க ! குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வர்றேன் என்று யமுனாவின் தாயார் கிச்சனுக்கு நகர்ந்தார்.

ஃபோனில், லைனில் இருந்த ராஜாவோ கிருபாவிடம்..டேய் கிருபா என்னடா நடக்குது அங்க ?

டேய் ராஜா, ஒன் மாமனார பாத்தா நல்ல மனுசனா தெரியுது. நம்மதா தேவையில்லாம ரிஸ்க் எடுக்குறோம்னு தோனுதுடா….

என்னடா… கிருபா ! கதர் வேட்டி, கதர் சட்டய பாத்து மகாத்மா காந்தின்னு நெனச்சுட்டியா அந்த ஆள ? அந்த ஆளு ஹிட்லர்டா. டேய் ராஜா, நீ என்ன வேணும்னாலு சொல்லு, உன் மாமனாரு நல்ல மனுஷன் மாதிரிதா தெரியிறாரு. பட் ஒன் மாமியார பாத்தாதா ஹிந்தி சீரியல் வில்லி மாறியே இருக்குடா.
டேய் ரொம்ப முக்கியம்… யமுனா எங்க இருக்கான்னு பாருடா ஃபர்ஸ்டு…
சரி சரி… ஒன் மாமியா வருது, கொஞ்சம் அமைதியா இரு !

இந்தாங்க தம்பி சாப்டுங்க ! என்று தட்டில் ஆவி பறக்க மிளகாய் பஜ்ஜியையும், காஃபியையும் நீட்டினாள் யமுனாவின் தாயார். கிருபா அதை கையில் வாங்கி மேசையில் வைத்து தேங்க்ஸ் ஆன்ட்டி என்றான்.

ஆன்ட்டி ! ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு ?

நேரா போயி வலது பக்கம் தம்பி !

ஓகே ஆன்ட்டி ! தாங்க்ஸ்.

கிருபா, சோஃபாவில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் செல்வது போல் யமுனாவின் அறையை நோட்டமிட ஆரம்பித்தான். இடது கையை தன் இடது காதில் வைத்துக்கொண்டே….

ராஜா ! டேய் ..

சொல்லுடா கிருபா.

டேய் ! யமுனா ரூம் எதுடா ?

எனக்கு தெரியாதுடா கிருபா !

அட போடா …………

கண்களை உருட்டிக்கொண்டே கிருபா ஒவ்வொரு அறையின் கதவாக மெல்ல திறந்து பார்த்தான். தம்பி எங்க போறீங்க ? ரெஸ்ட் ரூம் இந்தப் பக்கம் ! என்றாள் யமுனாவின் தாயார்.

ஓ ! ஓகே ஆன்ட்டி என்று அவளுக்கு கையசைத்துவிட்டு கிருபா வலது புறமாக திரும்பினான். அங்கே மூன்று அறைகள் இருந்தது. அதில் ஏதாவது ஒன்று யமுனாவின் அறையாக இருக்கக்கூடாதா என்று நினைத்துக்கொண்டே கிருபா முதல் அறையை ஓப்பன் செய்தான்.. அங்கே யாரும் இல்லை. அறை காலியாக இருந்தது. பின்னர் அடுத்த அறைக்கு சென்றான். கதவை மெல்ல திறந்து எட்டி பார்த்தான். கண்கள் சிவந்த கோலத்தில் யமுனா கண்ணாடி முன்னே உட்கார்ந்து
அழுதுகொண்டிருந்தாள். அவள் கிருபாவை கண்டவுடன்,

கிருபா அண்ணா ! நீங்க எப்டி இங்க ? என்றாள் ஆச்சர்யத்துடனும், மகிழ்ச்சியுடனும்.

ஆமா, ஒன்னய கூப்டு போக நாந்தா வரணும். பின்ன என்ன கவர்னரா வருவாரு ? சீக்கிரம் வந்து தொல…. வெளிய போக பின்னாடி வழி இருக்கா ?

ம்ம்ம் இருக்கு ணா.

இந்த பணக்காரங்க வீட்ல எதுக்குதா ரெண்டு வாசல் வைக்குறீங்கன்னே தெரியமாட்டுது. சரி நமக்கு வசதியா போச்சு. வா வா சீக்கிரம் என்று யமுனாவின் கையை பிடித்து வீட்டின் பின் புறமாக அழைத்து சென்றான்.

ஹலோ ராஜா !

சொல்லு கிருபா.

யமுனாவ பார்த்துட்டேன்டா !

சூப்பர் மச்சி !

ராஜா நீ கார் ஸ்டார்ட் பண்ணி ரெடியா இரு… நா ஒன் ஆளோட வர்றேன்.

ஓகேடா ! ஓகேடா !

ராஜாவுக்கோ மனதிற்குள் பேரானந்தம்.

கிருபாவும், யமுனாவும் யாரும் பார்க்கா தருணம் வீட்டின் பின்புறமாக வெளியேறி, பூனை எப்படி எலியை புடிக்க பதுங்குமோ அதே போல இருவரும் பதுங்கி பதுங்கி நடந்தனர். அப்போது வீட்டின் இடதுபுற பந்தலில், சமயல் வேலையை கவனித்துக்கொண்டிருந்த யமுனாவின் தந்தையை கண்டவுடன், யமுனாவோ…

ஐயோ ! அப்பா… போச்சு போச்சு மாட்டுனா அவ்ளோதா ணா. ரெண்டு பேரையும் வெட்டி போற்றுவாரு…

ம்ம் நம்ம என்ன வாழ மரமா ? வெட்றதுக்கு.. வா பேசாம.

இருவரும் யமுனாவின் அப்பாவை பார்த்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர, யமுனாவின் தந்தைக்கு ஃபோனில் அழைப்பு வந்தது. போனை எடுத்து தனக்கு வந்த அழைப்பை அட்டென்ட் செய்தார்.

அலோ ! யாரு…

அங்கிள் நாந்தா நித்தீஷ் !

ஓஹ் மாப்ளயா… சொல்லுங்க சொல்லுங்க, என்ன கெளம்பிடீகளா?

ம்ம்ம் ஜஸ்ட் நௌ அங்கிள். இப்பதா கெளம்புனோ, அதா உங்களுக்கு கால் பண்ணே.

சரிங்க மாப்ள ! பாத்து சூதானமா வாங்க. அப்ரோ மாப்ள ஒங்க பிரெண்டு வந்துருக்காரு…

ஃபிரெண்டா ? யாரு அங்கிள் …. பேரு

கிருபாகரே மாப்ள. அவருக்குகூட இந்த ஊராம்ல.

டோன்ட் பி சில்லி அங்கிள். எனக்கு உங்க ஊர்ல யாரையுமே தெரியாது. கிருபாகரன்னு எனக்கு எந்த ஃபிரெண்டுமே இல்ல அங்கிள்.

என்ன மாப்ள சொல்றீக ? அப்டியா ……

எஸ் அங்கிள்.

அங்கிள், எனிதிங் சீரியஸ் ?

இல்ல மாப்ள ஒன்னுமில்ல ! நீங்க பார்த்து வாங்க என்று சொல்லி யமுனாவின் தந்தை ஃபோனை கட் செய்துவிட்டு திரும்ப, கிருபா யமுனாவை அழைத்துச் செல்வதை கண்டுவிட்டார் யமுனாவின் தந்தை.

டேய்…. நம்ம பொண்ண எந்த பொறம்போக்கோ கூட்டிட்டு ஓட்ராண்டா ! புடிங்கடா, புடிச்சு அவன கண்டந்துண்டமா வெட்டுங்கடா என்று ஹிட்லர் கூச்சலிட, வீட்டை சுற்றி வேலை செய்துகொண்டிருந்த ஏலெட்டு தடிமாடுகள் கிருபாவயும், யமுனாவையும் துரத்த ஆரம்பித்தனர்.

டேய் மச்சி பார்த்துட்டாங்கடா……… கார ஸ்டார்ட் பண்ணி ரெடியா இருடா என்று கிருபா ராஜாவை ஃபோனில் அலார்ட் செய்தான். வா வா…. சீக்கிரம் என்று யமுனாவின் கையை இறுக பிடித்துக்கொண்டே கிருபா காரின் அருகில் வந்து,
ஏறு ஏறு… சீக்கிரம் என்று யமுனாவை காரின் பின்புறமாக ஏறச்செய்தான். ராஜா ! தள்ளு தள்ளு என்று டிரைவர் சீட்டில் இருந்த ராஜாவை நகரச்செய்து, கிருபா வண்டியை புழுதி பறக்க கிளப்பினான்.

பின் சீட்டில் இருந்த யமுனாவோ காரின் பின்புறம் திரும்பி பார்த்து, கிருபாண்ணா வேமா போங்க ! கிட்ட வந்துட்டாங்க … என்று படபடத்தால். கிருபாவும் வண்டியை வேக வேகமாக ஓட்டச்செய்தான். கார் 90 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்தது. காரின் வேகத்தை தடை செய்யும் வண்ணம், அவர்கள் செல்லும் வழியில் ரெட் சிக்னல் விழ,

ராஜாவோ, டேய் கிருபா ! சிக்னல் போட்டாங்கடா…என்றான்.

சிக்னல்ல வண்டிய நிறுத்துனா நம்ம சிக்னல கட் பன்னிருவானுங்க…. என்று கார் சீறிப்பாயும் அதே வேகத்தில் கிருபா சிக்னலை கடந்தான். செல்லும் வழியில் சில தடுப்பு கேட்டுகள் காரின் பம்பரில் சிக்கி அங்கொன்றும், இங்கொன்றுமாக தெறித்து சிதறியது. அதிலும் ஒரு நல்லது, உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கிருபா, சிக்னலை கடந்து காரை நிறுத்திவிட்டு எறங்குங்க சீக்கிரம் !

ஆட்டோ … ஆட்டோ …

ஆட்டோ நின்றது. மூவரும் ஆட்டோவில் ஏறினார்கள். அண்ணே ! ஜங்ஷன் போங்க கொஞ்ச சீக்கிரமா… என்றான் கிருபா.

ராஜா, டேய் கிருபா ஏன்டா ஆட்டோல கூட்டு போற எங்கள ?

டேய் அந்த தடிமாடுக நம்ம வண்டிய தா ஃபாலோவ் பண்ணிட்டு வரானுங்க, அதான்டா..

மூவரும் பதட்டத்தில் மௌனமாக வர, சில நிமிடங்களில் ஜங்ஷனும் வந்தது. இரண்டு நூறு ரூபாய் நோட்டை டிரைவர் பையில் திணித்துவிட்டு கிருபா டிக்கெட் கவுண்ட்டரை நோக்கி ஓடினான். ஓடிக்கொண்டிருந்த கிருபா சட்டென்று திரும்பி,

டேய் ! வந்து தொலங்கடா வேமா… உங்க ரெண்டு பேரையும் என்ன சினிமால வர்ற மாதிரி கைய புடுச்சு இழுத்துட்டு போணுமா என்று கிருபா டென்ஷன் ஆக, யமனாவும் ராஜாவும் ஓடி வந்து கிருபாவின் அருகில் நின்றனர். ராஜாவோ தலையை குனிந்து தன் இரு கைகளையும் முட்டிங்க்காலில் வைத்தபடியே மூச்சிழைத்தான்.

கிருபா, பாக்கட் பாக்கட்டா சிகரெட் பிடுச்சா இப்டிதா, அவசர காலத்துல ஓடக் கூட முடியாது. இதுக்குதா சிகரெட் புடிக்காத புடிக்காதன்னு படிச்சு படிச்சு சொன்னே கேட்டியாடா நீ…….? .

யமுனாவோ, கிருபாண்ணா அட்வைஸ் பண்ற நேரமாண்ணா இது?

அம்மா தாயே ! நியாயமா பாத்தா இந்த நாதாரிக்கு நீ அட்வைஸ் செய்யனு. நா செஞ்சிட்டு இருக்கேன்…எப்டியோ போய் தொலங்க.

சரி மச்சி எந்த ஊருக்கு டிக்கெட்டு ?

திருச்சிடா கிருபா !

எங்க போறேன்னு சொல்ல மாட்டேன்னு சொன்ன ? இப்ப சொல்லிட்ட…

சரி நில்லுங்க வர்றேன்….

கிருபா டிக்கெட் கவுண்டரின் வருசையில் நின்று திருச்சிக்கு இரண்டு டிக்கெட் வாங்கி வந்து, வாங்க வாங்க சீக்கிரம் ! ட்ரெயின் கெளம்ப இன்னும் ரெண்டு நிமிஷந்தா இருக்கு… குருவாயூர் எக்ஸ்பிரஸ்.

கிருபா இருவரையும் அழைத்துகொண்டு ஐந்தாம் பிளாட்பாரத்திற்கு ஓடினான். அங்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடி அசைக்க, என்ஜின் ஆபரேட்டர் ஹாரன் ஒலிக்க, ரயில் மெல்ல நகர தொடங்கியது. யமுனாவும், ராஜாவும் பிளாட்பாரத்தில் நடந்தவாறே கம்பார்ட்மெண்டின் படிக்கட்டில் ஏறினார்கள்.

யமுனா, கம்பார்ட்மெண்ட் கதவில் இருந்த தடித்த கம்பியை பிடித்துக்கொண்டே எட்டிப்பார்த்து, கிருபாண்ணா ! தேங்க்ஸ் அண்ணா என்றாள். ராஜாவோ, டேய் கிருபா பார்த்து பத்தரமா இருடா……. என்றான்.

ஓகேடா ! நீங்க பார்த்து போங்க என்று கிருபா கை அசைத்துக்கொண்டே கண்கள் அசையாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். கிருபாவின் பார்வையில் இருந்து ராஜாவும், யமுனாவும், ரயிலும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கினார்கள். ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த க்ராஸ் சிம்பலும் கிருபாவின் பார்வையில் இருந்து மறைந்துவிட்டது. இப்போது கிருபாவின் கண்களுக்கு தெரிவது தண்டவாளத்தில் எரியும் கானல் நீர் மட்டுமே.

கிருபா பெருமூச்சு விட்டு, அவர்கள் சென்ற திசையை பார்த்தவாறே வந்த வழியை நோக்கி திரும்ப, அவனுக்கோ அதிர்ச்சி !

யமுனாவின் தந்தையும்,அவருடன் வந்த ஏழெட்டு தடிமாடுகளும் சினிமாவில் வரும் வில்லன்கள் போலவே, கிருபாவின் முன்பு சுமார் 50 மீட்டர் தூரத்தில், கண்களில் கொலை வெறியுடன் நின்று கொண்டிருந்தார்கள். யமுனாவின் தந்தை, கிருபாவை பார்த்து டேய்…புடிங்கடா அவன என்று கூச்சலிட, தடிமாடுகள் அனைவரின் கால்களும் சிறுத்தையை போல கிருபாவை நோக்கி சீறிப்பாய்ந்து. சேஸிங் இன்னும் முடியவில்லை. இனிதான் ஆரம்பம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *