காதல் – சில காட்சிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 9,502 
 

காதல் –
முட்டாள் செய்கிற
புத்திசாலித்தனமான காரியம்.
புத்திசாலி செய்கிற
முட்டாள்தனமான காரியம்!
– ரூ சாமுவேல் ஜான்சன்

சுவாமிநாதன் ஸ்கூட்டரை நிறுத்தினார். ஜிப்பா உயர்த்தி பல்லால் கடித்துக் கொண்டு தளர்ந்திருந்த வேட்டியை இறுக்கிக் கட்டினார். படிகள் ஏறி இரண்டாவது மாடியில் இருந்த தனது ஃபிளாட்டுக்கு வந்தார். அழைப்பு மணியை ஒலிக்கச் செய்துவிட்டு, கண்ணாடியைக் கழற்றி ஊதித் துடைத்தார்.

கதவைத் திறந்த மனைவியிடம் உற்சாகமாக, “ஒரு சந்தோஷமான விஷயம் ஆனந்தி…” என்றார்.

செருப்புகளை விலக்கிவிட்டு, நைலான் வயர் பின்னிய சோபாவில் அவசரமாக அமர்ந்து, “வா, இப்படி வந்து உக்காரு… சொல்றேன்…”

“என்னங்க விஷயம்…? என்று அருகில் அமர்ந்தாள் ஆனந்தி.

“வித்யா எங்கே …”

“கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருக்கா. முடிச்சுட்டு வர்றதுக்கு லேட்டாகுமே….”

“வரட்டும்… வந்ததும் அவவாய்ல சர்க்கரை போடு…”

“விஷயத்தைச் சொல்லுங்களேன் முதல்ல….” என்றாள் ஆனந்தி

“கண்ணுக்கு தெரியற ஒரு நல்ல மாப்பிள்ளையை விட்டுட்டு, ஊரெல்லாம் வித்யாவோட ஜாதகத்தை அனுப்பிட்டிருந்தோம் பாரு…”

“இன்னிக்கு நாடகம் முடிஞ்சதும் துரைசாமி ரொம்பத் தயங்கி, என்கிட்ட பேச்சை ஆரம்பிச்சான்…”

“எந்த துரைசாமி….?”

“எத்தனை துரைசாமியை உனக்குத் தெரியும்…? இருபது வருஷமா என்னோட நாடக ட்ரூப்புல நடிச்சிட்டிருக்கான். ரெண்டு மூணு தடவை வீட்டுக்கு வந்து, உன் கையால சாப்பிட்டிருக்கான்… கேள்வி கேக்கறே….?”

“சரி, சொல்லுங்க….”

“அவனோட பையன் ராஜேஷ் எலெக்ட்ரிகல்ஸ் கடை வெச்சு நல்லா வியாபாரம் பண்ணிட்டு இருக்கான். எனக்கு நல்லா தெரியும். ரொம்ப மரியாதையான பையன். ஒரு பல்பு வாங்கினா கூட அவன் கடையிலதான் வாங்குவேன். ரொம்ப நேரம் ஏதேதோ பேசிட்டு, உன் பொண்ணை என் பையனுக்குக் கொடுக்கிறியா?’ன்னு கேட்டான் துரைசாமி…”

“நீங்க என்ன சொன்னீங்க.. ?”

“அவன் கேட்டதும் சந்தோஷமாயிடுச்சு. இப்படி ஒரு யோசனை எனக்கு வராம போச்சேன்னுதான் நினைச்சேன். வீட்ல கலந்துகிட்டுச் சொல்றேன். நல்ல நாள் பார்த்து உன் குடும்பத்தோட வா… அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சுன்னா, சந்தோஷமா பண்ணி வெச்சிடலாம்னு சொன்னேன்…”

“ஏங்க… துரைசாமி என்ன சாதி…?”

“எந்த காலத்தில் இருக்கே நீ…? சாத்தியமா சொல்றேன்… இருபது வருஷமா பழகறோம். அவன் என்ன சாதின்னு எனக்குத் தெரியாது. சாதியை எதிர்த்து மூணு நாடகம் போட்டிருக்கேன் ஆனந்தி. நீ கேட்கலாமா இப்படி…?”

“அப்போ ஜாதகம்….”

“உன்னோட வற்புறுத்தலுக்காகத்தான் வித்யாவோட ஜாதகத்தை எடுத்தேன். மனசு பொருந்திப் போச்சுன்னா, வேற எதுவும் தேவையில்லைம்மா…”

“ராஜேஷ் நல்ல பையன்தானா…?”

“தங்கமான பையன். நான்தான் பழகிட்டு இருக்கேனம்மா… ஒரே பையன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. இவனுக்கு வெளிநாட்டுல ஒரு வேலை கிடைச்சது. துரைசாமி கூட போறியாப்பா?ன்னுதான் கேட்டான். அம்மாவுக்கு முடியலை. உங்களுக்கும் வயசாயிடுச்சு. உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு நான் போகலைப்பா’னு சொல்லிட்டு, இங்கேயே தொழில் ஆரம்பிச்சவன்மா… சொல்லப்போனா, வித்யா கொடுத்து வெச்சிருக்கணும். ஆளும் சும்மா செவசெவன்னு ஜம்முன்னு இருப்பான்…”

“பின்னே என்னங்க…. எனக்கும் சம்மதம். வித்யாகிட்ட பேசுங்க”, என்றாள் ஆனந்தி.

“என்னை மன்னிச்சிடுங்கப்பா…” என்றாள் வித்யா

சுவாமிநாதன், ஆனந்தி இருவரும் அதிர்ந்து போனார்கள்.

தன் பின்னலின் முனையைத் திருகியபடி தரையைப் பார்த்துக் கொண்டிருந்த வித்யாவின் அருகில் வந்தார் சுவாமிநாதன்

“இவ்வளவு பிளஸ் பாய்ண்ட்ஸ் நான் எடுத்துச் சொன்னேனம்மா… அப்புறம் ஏன் ராஜேஷை வேணாங்கறே….? நேர்ல பார்த்துட்டு அப்புறம்….”

“இல்லைப்பா… என்னை மன்னிச்சுங்க. இனிமேயும் மறைக்கிறது தப்பு. நான்… நான்… விவேக்குன்னு ஒருத்தரை விரும்புறேன்ப்பா …”

தளர்ந்துபோய் நாற்காலியில் அமர்ந்தார் சுவாமிநாதன்.

ஆத்திரமான ஆனந்தி, வித்யாவின் தோள்களைப் பற்றி உலுக்கி, “ஏண்டி, உன்னை கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸ், கம்ப்யூட்டர் கிளாஸ்னு சுதந்திரமா வெளில் அனுப்புனதுக்கு…. எங்களுக்குத் தண்டனையாடி இது…? யாருடி அவன்..? எத்தனை நாளாக நடக்குது இந்தக் கூத்து…? என்றாள்.

“ஆனந்தி, அவளை விடு!” என்று உத்தரவாகச் சொன்ன சுவாமிநாதன்.

“வித்யா, இப்படி வாம்மா… உக்காரு…” என்றார்.

தயங்கி நடந்து வந்து அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“எங்களைக் கல்யாண வேலைகளைப் பார்க்கச் சொல்லிட்டு, முகூர்த்தத்துக்கு முதல் நாள் ஓடிப்போகாம, கல்யாணப் பேச்சை எடுத்ததுமே தைரியமா சொன்னியே…. ரொம்ப நிம்மதியா இருக்கும்மா …”

எச்சில் விழுங்கிய வித்யாவுக்கு வியர்த்தது.

“நான் காதலைப் பத்தியும் பல நாடகங்கள் போட்டிருக்கேன். காதலிக்கிறது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லை. காதலிக்கிறவன்தான் தப்பா இருந்துடக் கூடாது…”

“விவேக் ரொம்ப நல்லவருப்பா…”

“விவரமா சொல்லும்மா… என்ன பன்றான் அவன்…?”

“பாங்க்ல கிளார்க்ப்பா …”

“பரவால்ல… நல்ல உத்தியோகம் தான். குடும்பம்…?”

“சுமாரான குடும்பம்தான். ஒரு தம்பி , ஒரு தங்கை, அப்பா, அம்மா இருக்காங்க. அவங்க எல்லாம் தஞ்சாவூர் பக்கத்துல, ஒரு கிராமத்துல இருக்காங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. அங்கே சொத்து வீடு இருக்கு. அப்பா விவசாயம் பார்த்துக்கறார். இவர், இங்கே மூணு பேரோட சேர்ந்து ஒரு வீடு எடுத்துத் தங்கியிருக்கார்…”

“எவ்வளவு நாளா பழக்கம்…?”

“ஆறு மாசமாதான்… ரொம்ப டீசண்டா பழகிட்டிருக்கோம். என்மேல உயிரையே வெச்சிருக்காருப்பா….”

“அப்பா…. எனக்கு அசைவம் சாப்பிடற பழக்கமில்லைனு தெரிஞ்சதுலேர்ந்து, இந்த ஆறு மாசமா அவர் முட்டை கூட சாப்பிடறதை நிறுத்திட்டார். இவ்வளவுக்கும் அவர் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன்.. அவ்வளவு ஸ்டெமினா வேணும். ஆனாலும், இனி ஜென்மத்துக்கும் அசைவம் தொடறதில்லைன்னுட்டார்…”

“எல்லா ஸ்டெமினாவும் சைவ உணவுல இருக்கும்மா… அதுசரி, அவர் எந்த ஸ்போர்ட்ஸ்ல இருக்கார்….?”

“கிரிக்கெட்டர்… தமிழ்நாடு அணில இருக்காருப்பா. ரஞ்சி ட்ரோபிக்கு விளையாடிருக்கார். கூடிய சீக்கிரம் இந்தியன் கிரிக்கெட் டீம்ல செலக்ட் ஆகிடுவாரு. அப்புறம் அவரோட அந்தஸ்தும் புகழும் எங்கேயோ போயிடும். அவரோட லட்சியமும் அதுதான். எங்களைச் சேர்த்து வெச்சிடுங்க அப்பா…”

சுவாமிநாதன் சிந்தனையில் ஆழ்ந்தார்.

தவிப்புடன் தன் பதிலுக்குக் காத்திருக்காம் மகளின் முகத்தைப் பார்த்தார். தள்ளி நின்ற மனைவியைப் பார்த்தார்.

“நீங்க பேசிட்டு இருக்கீங்களேனு நான் எதுவும் பேசலை! அவளுக்கு என்ன தெரியும்னு இப்படிச் சரிசம்மா உட்கார வெச்சு, உலகப் பிரச்னையைப் பேசற மாதிரி விவாதம் பண்ணிட்டிருக்கீங்க….? அவ கிடக்கறா! அவளுக்கு என்ன தெரியும்? காதல் மயக்கத்துல எல்லாமே நல்லதா படும். இதெல்லாம் சரியா வராதுங்க… நீங்க ரொம்ப வருஷமா பார்த்துப் பழகின அந்த ராஜேஷுக்குக் கட்டி வைக்கிறதுதான் சரின்னு எனக்குப் படுது…” என்றாள் ஆனந்தி.

“இல்லை ஆனந்தி….. நான் பார்த்துப் பழகின ஒரு பையனை, நான் சிபாரிசு பண்றேன். அவ பார்த்துப் பழகின ஒரு பையனை, அவ சிபாரிசு பண்றா.. இதுல வறட்டுப் பிடிவாதம் அவசியம் இல்லை . பள்ளிக்கூடம் போற பொண்ணுன்னா பருவச்சலனம்னு சொல்லலாம். இது பக்குவப்பட்ட வயசு. புரிஞ்சுக்கற வயசு. உலகம் தெரியாதுன்னு சொல்லாதே…. உன்னையும் என்னையும் விட அவளுக்கு அதிகமாகவே தெரியும்… ”

“அதுக்காக யாரு, என்னனு தெரியாம கண்ணை மூடிக்கிட்டு சரின்னு சொல்லப்போறீங்களா….?”

“யாரு, என்னன்னுதான் சொல்லிட்டாளே ஆனந்தி…. எல்லாத் தகுதியும் இருக்கே. வாழப்போறது அவ. அவ மனசு முக்கியம் இல்லையா….? காரணம் இல்லாம எதுக்கு எதிர்க்கணும்? வித்யா, அந்தப் பையனுக்கு எப்ப செய்கரியமோ, அப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வாம்மா…. பேசலாம்…” என்ற அப்பாவின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, கண்ணீர் பொங்கிய முகத்தோடு வார்த்தைக்குத் தவித்தாள் வித்யா

அந்த மைதானத்தில் நெட் பிராக்டீஸ் செய்து கொண்டு இருந்தான் விவேக்.

தூரத்தில் பல இரண்டு சக்கர வாகனங்களுக்குத் தள்ளி, ஒரு டாடா சியாரா நின்று கொண்டு இருந்தது. அதன் அருகில் வெள்ளை யூனிஃபார்ம் அணிந்த டிரைவர் நின்று கொண்டிருந்தான்.

விவேக் பிராக்டீஸ் முடித்துவிட்டு, பொங்கிய வியர்வையுடன் புல்வெளியில் அமர்ந்தான்.

அருகில் வந்து அமர்ந்த முரளி, “ரொம்ப நேரமா அந்த வண்டி நிக்குது…. யாரு வந்திருக்கிறது அதுல….? என்றான் சுட்டிக்காட்டி.

“தெரியலை, அதைவிடு… கூடிய சீக்கிரம் உங்களுக்குகெல்லாம் கிராண்ட் பார்ட்டி தரப்போறேன். என் காதல் நைன்ட்டி பர்சன்ட் சக்சஸ்! வித்யாவோட அப்பா கிட்டத்தட்ட சம்மதிச்சுட்டாராம். வர்ற ஸண்டே அவர் வீட்டுக்குப் போய்ப் பேசறேன்.”

“வெரிகுட்… கைகொடு மாப்ளே!”

இப்போது அந்த டிரைவர், இவர்களை நோக்கி வந்தான். விவேக்கிடம் வந்து, “ஐயா உங்க கூட பேசணும்னு சொன்னார்… ஒரு நிமிஷம் வாங்க…” என்றான். இப்போது டாடா சியாராவிலிருந்து கோட், டை அணிந்த நபர் இறங்கி நின்றிருக்க…. எதுவும் புரியாமல் அவரை நோக்கி நடந்தான் விவேக்.

“ஹலோ மிஸ்டர் விவேக்… ஐயாம் பூபேஷ் குப்தா…” என்று கைகுலுக்கின அவரின் விரல்களின் வைரங்கள்.

“என்ன சார் விஷயம்…?”

“நான் ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட்.. ஏழு கம்பெனி இருக்கு. நீங்க பிராக்டீஸ் பண்றப்போ தொந்தரவு பண்ண வேணாமேனுதான் வெயிட் பண்ணேன். நான் உங்ககிட்ட பர்சனால பேசணும் மிஸ்டர் விவேக் இது என் வீட்டு அட்ரஸ். ஏழு மணிக்க நான் உங்களை எதிர் பார்க்கறேன்….” என்று விசிட்டிங் கார்டு கொடுத்தார்.

“என்ன விஷயம் சார்….? இப்பவே சொல்லுங்களேன்….”

“நோ! நீங்க டயர்டா இருக்கீங்க… நிறுத்தி நிதானமா பேசணும். உங்களைக் கடத்தி வெச்சுக்கிட்டு யாருக்கும் லெட்டர் அனுப்பப் போறதில்லை . உங்க எதிர்காலம் பத்திதான் பேசணும். அவசியம் வாங்க…”

புன்னகைத்து அவன் தோளில் தட்டி விட்டு டிரைவரைப் பார்க்க, அவன் கதவைத் திறந்து விட்டான்.

கார் சென்ற பிறகும் குழப்பமாக நின்றிருந்தான் விவேக்

விலாசத்தைச் சரிபார்த்துக் கொண்டு அந்த பிரம்மாண்டமான பங்களாவைப் பார்த்து மிரண்டான் விவேக்

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, கேட் அருகில் இருந்த கூர்க்காவை நெருங்கித் தகவல் சொன்னான்.

கூர்க்கா தனது கூண்டுக்குள்ளிருந்த உள் தொலைபேசியில் பேசிவிட்டு வந்து உள்ளே அனுமதித்தான்.

போர்ட்டிகோவில் அவனை டை கட்டிய இளைஞன் வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

தரை முழுக்க மார்பிளும் திரும்பிய பக்கமெல்லாம் கிரானைட்டுமாக பல விவேக்குகளைப் பிரதிபலித்துக் கொண்டு இருக்க….

பங்களாவின் பின்புறத்தில் இருந்த சிறிய நீச்சல் குளமருகில் புல்வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த அவரை நெருங்கிய விவேக் அறிமுகப் புன்னகையுடன், “குட் ஈவினிங் சார்…” என்றான்.

“குட் ஈவினிங் விவேக்!” என்று கை குலுக்கி நாற்காலி காட்டி, “ஸாரி, நான் டிரிங் பண்ற சமயம் இது…” என்று கையிலிருந்த கோப்பையைக் காட்டி, “ஜாய்னிங் வித் மீ…” என்றார்.

“நோ சார்… கோக் போதும்…”

அவர் பார்வையில் டை ஆசாமி விலகினான்.

“விவேக். ஸ்ட்ரைட்டா வந்துடறேன். என்னோட ஒரே டாட்டர் ஸ்வாதி. எம்.பி.ஏ. படிச்சிட்ருக்கா . என் எல்லா கம்பெனிகளோட நிர்வாகத்தையும் அவதான் பொறுப்பு எடுத்துக்கப்போறா… முதல்ல அறிமுகப்படத்திடறேன்…”

அவர் கார்ட்லெஸ் போன் எடுத்து, “டாட் பேசறேன்… ஸ்விம்மிங் பூல் பக்கத்துல வாம்மா… யெஸ்! விவேக் வந்திருக்கார்…” என்றார்.

யூனிஃபார்ம் அணிந்த பணியாள் வந்து பவ்யமாக கோக் டின்னை விவேக் முன்பாக வைத்து, சில டிஷ்யூ காகிதங்களும் வைத்துவிட்டு விலகினான்.

விநாடிகளில் ஒரு வாசனைப் பூங்கொத்து ஏந்திய தென்றலாக அங்கே வந்த ஸ்வாதி, “ஹலோ!” என்ற புன்னகைத்தது கவர்ச்சியாக இருந்தது.

“இவளைத்தான் உங்களுக்கு அறிமுகப்படுத்தணும். உங்களை இவளுக்கு நல்லா தெரியும்….”

“மூணு வருஷம் முன்னால் பெங்களுர் ரஞ்சி ட்ரோபிக்கு நீங்க ஆடின முதல் மாட்ச்லேர்ந்து தெரியும்!” என்றாள் ஸ்வாதி.

விவேக் ஆச்சரியப்பட்டான்.

“ஓ.கே! நீ போம்மா… நான் பேசிக்கறேன்… என்று அவர் சொன்னதும் அவள் மீண்டும் புன்னகைத்து “பை பை, ஸீ யூ லேட்டர்!” என்ற சிக்கனமாக விரலசைத்து சென்றாள்.

“மிஸ்டர் விவேக். என் பொண்ணு ஆசைப்பட்டு, நான் எதையும் நிறைவேத்தாம இருந்ததில்லை . எனக்குத் தெரியாத வி.ஐ.பீ-ஸ் இல்லை. டெல்லி போனா , எந்த மினிஸ்டர் வீட்ல டின்னர் சாப்பிடறதுன்னு சங்கடமா போயிடும். இப்போ என் பொண்ணுக்கு ரெண்டு ஆசைகள். ஒண்ணு… நல்ல திறமைசாலியான உங்களை இண்டியன் டீமுல சேர்க்க வைக்கணும்…”

விவேக்கின் கண்கள் பிரகாசத்தில் அகன்றன.

“இன்னொரு ஆசை… உங்களைக் கல்யாணம் செய்துக்கணும்….”

சின்னதாக அதிர்ந்து, “சார்!” என்றான்.

“இருங்க…. அவசரப்பட்டு எதுவும் சொல்ல வேணாம். நான் பேசி முடிச்சிடறேன். அவளோ முதல் ஆசையை ரொம்பச் சுலபமா என்னால நிறைவேத்திட முடியும். ரெண்டாவது ஆசைக்கு , உங்க சம்மதம் தேவைப்படுது. நீங்க, ‘சரினு ஒரே ஒரு வார்த்தை சொன்னா போதும்…”

“இல்லை சார். வந்து… நான்… ஏற்கனவே…”

“விவேக். எந்த பதிலா இருந்தாலும் நாளைக்குச் சொல்லுங்க… உங்களுக்கு இதுல எந்தப் பிரச்சனை இருந்தாலும் என்னால சரிபண்ணிட முடியும். எனக்கு ஸ்வாதி முக்கியம். ஸ்வாதிக்கு நீங்க முக்கியம். அதனால, இப்ப நீங்க எனக்கு முக்கியம். காலைல உங்களை மைதானத்துல மீட் பண்றேன்…” என்றவர். ஒலித்த போனை எடுத்துப் பேசத் துவங்கினார்.

அலைகளை அலைகள் துரத்த…

திடுக்கிட்டு, “என்ன சொல்றீங்க விவேக்…” என்றாள் வித்யா நம்ப முடியாமல்.

“தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சுக்கோ வித்யா… பெரிய கிரிக்கெட்டரா வரணுங்கறது என்னோட வாழ்க்கை லட்சியம். அதுக்கு ஒரு கோல்டன் வாய்ப்பு கிடைச்சிருக்கிறப்போ… அதைப் பயன்படுத்திக்கலைன்னா நான் முட்டாள் இல்லையா…?”

“அப்போ என்மேல வெச்சிருந்த காதல்….?”

“கஷ்டமாத்தான் இருக்கு வித்யா… என்ன பண்றது….? ஒண்ணை இழந்தாதான், ஒண்ணை அடைய முடியும். என்னை மன்னிச்சிடு…”

வித்யா அழத்துவங்க. விவேக் மெதுவாக விலகி நடக்கத் துவங்கினான். விவேக் பைக்கை நிறுத்திவிட்டு பங்களாவின் கேட்டை நெருங்க…. இப்போது வேறு வாட்ச்மேன் உள்ளே அனுமதிக்க மறுத்தான்.

“உள்ளே ஷுட்டிங் நடந்துக்கிட்டிருக்கு சார்…. யாரையும் விடக்கூடாதுன்னு டைரக்டர் சொல்லி இருக்காரு…”

“ஷூட்டிங்கா…? நான், மிஸ்டர் பூபேஷ்குப்தாவைப் பார்க்கணும். போய்ச் சொல்லுப்பா. நான் யாரு தெரியுமில்லை? இந்த பங்களா ஓனர் பூபேஷ்குப்தாவோட மருமகனாகப் போறவன்…”

“என்ன சார் உளர்றீங்க…? இந்த பங்களாவோட ஓனர் கஸ்தூரிரங்கன்… அவருக்குப் பொண்ணே கிடையாது. இது ஷூட்டிங்குக்கு வாடகைக்கு விடற் பங்களா…தப்பா வந்துட்டீங்க….”

விவேக் குழப்பத்துடன் தன் பையிலிருந்து விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்க்க…

“அது உங்களுக்காக பிரிண்ட் செஞ்ச கார்டு விவேக்..” என்ற வித்யாவின் குரலுக்கு அதிர்ந்து திரும்பிப் பார்த்தான்.

அவனருகில் வந்த வித்யா, “நேத்து நைட்டுதான் எங்கப்பா எல்லாம் சொன்னார். நீங்க என்மேல வெச்சிருக்கிற காதல் எவ்வளவு தூரம் அழுத்தமானதுனு தெரிஞ்சுக்கிறதுக்காக, எங்கப்பா இந்த பங்களாவை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்துத் தன்னோட நாடக ட்ரூப்புல உள்ளவங்களை வெச்சு நடத்திப் பார்த்த நாடகம் இது” என்றாள்.

“வித்யா!” என்றான் அதிர்ச்சியுடன்.

“காதலுக்காக அசைவத்தை விட்டுக் கொடுத்தீங்க. நம்பினேன். ஆனா, லட்சியத்துக்காக காதலையே விட்டுக் கொடுத்தீட்டீங்களே! எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாத விஷயம் தான் விவேக் காதல்! உங்களைச் சரியா எனக்குப் புரிய வெச்ச எங்கப்பாவுக்கு நான் ஆயுள் முழுக்க நன்றி சொல்லணும்…. வர்றேன். குட்பை!”

வித்யா விலகி நடந்தாள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *