காதல் ஓய்வதில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 37,339 
 

முதலிரவு.

பவதாரிணி சோகமாக கண்ணீருடன் அந்த அறையில் காத்திருந்தாள்.

கதவு திறக்கப்பட சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவளுடைய கணவன் கதிரேசன் அருகில் வந்து அமர்ந்தான்.

“முதல்ல அழுகையை நிறுத்து பவம்… என்மேல் உனக்கு இன்னமும் நம்பிக்கை வரல, அப்படித்தானே?”

“அப்படி ஒன்றுமில்லை கதிர்…”

கதிரேசன் அவள் கண்ணீரைத் துடைத்தான். பின்பு ஆதரவாய் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

“இங்க இருக்கிற யாருக்குமே என்னைய பிடிக்கலை கதிர். அப்புறம் எதுக்காக எல்லாரையும் எதுத்துக்கிட்டு என்னைக் கல்யாணம் பண்ணீங்க?” அவள் குரல் உடைந்தது.

“ஏன்னா நீ என்னுடைய காதல், என் உயிர். என் சொந்தங்களுக்கு அது புரியல பவம். உன்னை யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். உன்னை நான் முதன் முதலாய் சந்தித்தது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோவிலில். அதன் புனிதம் நம்மைக் காப்பாற்றும்..”

அவன் மார்பில் முகம் புதைத்து பவதாரிணி அன்று தூங்கினாள்.

—-

கதிரேசனுக்கு சொந்த ஊர் செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் இலஞ்சி.

பெரிய பணக்காரக் குடும்பம். பி.ஈ படித்து முடித்தவுடன் நில புலன்களை அப்பாவுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

வருடா வருடம் டிசம்பர் மாதம் அவனுடைய நெருங்கிய உறவினர்கள் பலர் ஒன்றுசேர்ந்து உல்லாசமாக வெளிநாடு சுற்றுலா செல்வார்கள். அவர்களுடன் 2015 ம் வருடம் கதிரேசன் ஒருவாரம் ஸ்ரீலங்கா சென்றான்.

அப்போது அனைவரும் நுவரெலியாவின் அழகிய ஏரியில் மின்சார போட்டிங் சென்றுவிட்டு அங்கிருந்து அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அசோக வனத்திற்கு சென்றனர். அங்குதான் அவன் முதன் முதலாக பவதாரிணியைப் பார்த்தான்.

ஓர் அன்னப் பறவைக்கு உரிய எழிலுடன் கோவிலினுள் நுழைந்த பவதாரிணியைப் பார்த்த மாத்திரத்திலேயே ஓர் அபூர்வமான ஜன்னல் அவனுக்குள் மிக விசாலமாகத் திறந்துகொண்டது.

பாவாடை தாவணியில் ஸ்ரீலங்காவிற்கே உரிய அழகிய கருப்பான மினுமினுப்பில் பேரிளம் பெண்ணாக பவதாரிணி ஜொலித்தாள். அவளிடம் ஒரு வாத்ஸல்யம் நிறைந்த பெண்ணுக்குரிய மென்மை இருந்தது.

கதிரேசனின் அற்புதமானதொரு பரிமாணம் அந்தச் ஷணமே தொடப்பட்டு விட்டது. அவனுள் மிக இறுக்கமாக மூடப் பட்டிருந்த; மறுக்கப் பட்டிருந்த ஒரு சதுக்கம் அவனுள் உண்மையாகவே திறந்துகொண்டது. கூண்டு திறக்கப் பட்டுவிட்ட ஒரு பட்சி அவனுக்குள் சிறகுகளை சிலிர்த்து விரித்தது !

பெண்ணின் அருகாமை என்ற உணர்வு பாலை வெளியாக அவனுள் பரந்து கிடந்ததே – அந்தப் பரப்பின் பிரம்மாண்ட சூர்யகாந்தி மலராக பவதாரிணியின் முகம் மலர்ந்து தெரிந்தது.

கதிரேசன் சற்று தைரியத்துடன் அவளைப் பார்த்து சிரித்தான். அவளும் பதிலுக்கு அமைதியாகப் புன்னகைத்தாள். கதிரேசன் சொக்கிப்போனான்.

உடனே அவளின் கைப்பேசி இலக்கத்தை வாங்கி சேமித்துக்கொண்டான்.

வேறு வழியில்லாமல் அவசர அவசரமாக அவளிடமிருந்து விடைபெற்று மற்றவர்களுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஆனால் அன்று அவன் சென்று பார்த்த புத்தர் கோவில்; சுனாமியில் சேதமுற்ற காலே கிரிக்கெட் ஸ்டேடியம்; மூலிகைத் தோட்டம்; ஆமைகளின் அணிவகுப்பு யாவற்றிலும் மனம் ஒட்டவில்லை. பவதாரிணிதான் அவன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.

தமிழகம் வந்ததும் அவளிடம் அடிக்கடி பேசினான். இருவரும் தங்களின் காதலைப் பகிந்துகொண்டனர். அதன்பிறகு யாருக்கும் தெரியாமல் கதிரேசன் ஐந்து முறைகள் நுவரெலியா சென்றான். காதல் தீவிரமானது.

ஆனால் அவன் வீட்டில் அம்மாவைத் தவிர அனைவரும் அவன் காதலை ஏற்க மறுத்தனர். அப்பா அரிவாளை எடுப்பேன் என்று எச்சரித்தார்.

இவ்வுலகிற்கு இயற்கை அளித்த மிகச் சிறந்த சீதனம் பெண்கள். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், பவதாரிணிதான் நிச்சயமாக என் மனைவி. என்னில் பாதி அவள். ஒரு ஆணின் வாழ்க்கையில் முக்கியமான பெண்கள் நான்கு பேர். பெற்ற தாய்; உடன் பிறந்த சகோதரி; மனைவி; மகள். ஒரு ஆண், அம்மாவிடம் மகனாக இருக்கலாம்; அக்காவிடம் தம்பியாக இருக்கலாம்; தங்கையிடம் அண்ணனாக இருக்கலாம்… ஆனால் மனைவியிடம் மட்டுமே எல்லாமுமாக இருக்க முடியும்… மனைவி என்பவள் மனையை ஆள்பவள் மட்டும் அல்ல; குடும்பத்தினர் அனைவரின் மனதையும் ஆள்பவள். வருடங்கள் தேயும்போது, அதே பெண் அம்மாவாக, அத்தையாக, பாட்டியாக என்று வயதாலும், அனுபவத்தாலும், பண்பாலும், பாசத்தாலும் பரிணமித்து ஜொலிக்கிறாள். குடும்பத்தின் அச்சாணியே மனைவிகள்தான். ஆண் குடும்பத்தின் உயிரெழுத்து. பெண் என்பவள் குடும்பத்தின் தலை எழுத்து.’

கதிரேசன் இறுதி முடிவு எடுத்தவனாய் அம்மாவின் முன்னால் போய் நின்றான். அவன் கண்ட முதல் தெய்வம் அம்மாதான்…

அம்மா அவன் நெற்றியில் விபூதி பூசி, “உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம, உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை தைரியமாகச் செய். என் மகனைப்பற்றி எனக்குத் தெரியும். யார் என்ன சொன்னாலும் அம்மா நான் உன் கூடவே இருப்பேன்… சரியா?” என்றாள்.

அம்மாவைத் தவிர யாருக்குமே பவதாரிணியைப் பிடிக்கவில்லை.

அனைவரின் எதிர்ப்பையும் மீறி, குறிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில், ஒரு சின்ன கோவிலில், அம்மா தாலியை எடுத்துக் கொடுக்க, கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டு, அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் கதிரேசன்.

தன் கெளரவம் பறிபோய் விட்டதாக அப்பாவும்; தன் எதிர்காலமே நாசமானதாக தங்கையும்; கூடப் பிறந்தவன் செத்து விட்டான் என்று அண்ணணும் கரித்துக்கொட்ட; இன்னும் எண்ணற்ற உறவினர்களின் சாபங்களோடு கதிரேசனின் புதிய திருமண வாழ்க்கை தொடங்கியது…

அதன்பிறகு அம்மாவின் விடாத அடம் பிடிப்பால் அவர்களின் சாந்தி முகூர்த்தம் இன்று குறிக்கப்பட்டது.

தற்சமயம்…

அமுதாவின் கண்ணீர் கதிரேசனின் நெஞ்சைச் சுட்டது.

“பவம்… டேய், என்னை நிமிர்ந்து பார்.”

மிக மெதுவாக நமிர்ந்து பார்த்தாள்.

“உன் கண்ணுல கண்ணீர் பாக்கவால இப்படி எல்லாரையும் பகைச்சிகிட்டு உன் கழுத்துல தாலி கட்டினேன்? போராட்டம்தாம்ல வாழ்க்கை. நாம ஜெயிச்சுக் காட்டனும்ல…”

அவளை சமாதானம் செய்யும் பொருட்டு, அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டான். அன்று அவள் அவன் மடியிலேயே தூங்கிப்போனாள்.

அடுத்து வந்த நாட்களில் அந்தக் குடும்பத்தினரின் ஜாடை மாடையான குத்தல் பேச்சக்களையும்; ஏச்சுக்களையும் பவதாரிணி வலியுடன் தாங்கிக்கொண்டாள். ஒரு கட்டத்தில் கதிரேசனின் பொறுமை எல்லை கடந்தது. அவனுக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் அனைத்தும் வெளியே வரும் தருணமும் வந்தது…

அன்று ஒருநாள் எதேச்சையாக கதிரேசன் சீக்கிரம் வீடு திரும்ப, அவனுடைய அண்ணியும், தங்கையும் அமுதாவை வார்த்தைகளால் வசை பாடிக் கொண்டிருக்க, பவதாரிணியோ கண்களில் கண்ணீருடன் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள்.

அம்மா அப்போது வீட்டில் இல்லை. எதையுமே கண்டுக்காதது போல் அவனுடைய அப்பா ஊஞ்சலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

இதுவரை வராத கோபங்கள் அனைத்தும் ஒன்றுசேர, கதிரேசன் அவன் தங்கையை அருகே அழைத்து, பளார்னு ஓங்கி அறைந்தான். அவள் பொறி கலங்கி நின்றாள். இத்தனை வருடங்களில் அவளிடம் கதிரேசன் கண்டிப்புடன் கூடப் பேசியதில்லை. அவனிடம் செல்லமாய் வளர்ந்த தங்கை வாங்கிய முதல் அரை.

அப்பா ஊஞ்சலில் இருந்து இறங்கி பதறியபடி ஓடிவர, அண்ணி பயத்தில் நடுங்க, பவதாரிணி அவனின் ஆத்திரத்தை தடுப்பதற்காக குறுக்கே வந்து நின்றாள்.

“ச்சீ நீங்கல்லாம் பொம்பளைங்களா? அவளும் இந்த வீட்டில் குடிபுகுந்த ஒரு சராசரி பொண்ணுதானே? இதுவே உங்ககூடப் பொறந்த பொறப்பா இருந்தா இப்படியெல்லாம் பேச வருமா? ஏற்கனவே காயப்பட்டு வந்து நிக்கறவள எல்லோருமா சேர்ந்து அவ மனச ரணமாக்கி குத்திக் கிழிக்கிறீங்க… உங்க எல்லோருக்கும் இவ்ளோதான் மரியாதை, இதுதான் லிமிட்… இனிமேல் பவதாரிணி கண்லர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும், எல்லோரையும் தூக்கித் தொங்க விட்டுடுவேன், ஜாக்கிரதை.”

“நான் உன் தங்கச்சிடா… நேத்து வந்தவளுக்காக என்னையே கை நீட்டி அடிச்சிட்டீல்ல?”

“நான் உன்மேல எவ்வளவு பாசம் வைச்சிருந்தேன்னு தெரியுமாடி உனக்கு? பவதாரிணியை உன் அண்ணியா நினைக்கலேன்னாக்கூட பரவாயில்லை…. அவள ஒரு மனுஷியாகக்கூட நினைக்காத உன்னை என் தங்கச்சின்னு சொல்றயா?”

“………………………………….”

“இத பாரு நீ என் தங்கச்சி, அவ்ளோதான். ஆனா அவ என்னோட உசிரு. அவ மனச கஷ்டப் படுத்தறது யாராக இருந்தாலும் அவங்கள என்னால இனி மன்னிக்க முடியாது.”

அப்பா கோபத்துடன், “நீங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டுப் போயிடுங்க…ப்ளீஸ்.” என்றார்.

கதிரேசன் சற்றும் தாமதிக்காமல் மொபைலில் ஊபர் கார் புக் செய்தான்.

இறுதியாக அம்மா அங்கு வந்து சேர்ந்தாள். வீட்டில் நடந்த களேபரங்களை அனைவரின் முகபாவங்களை வைத்தே யூகித்து விட்டாள். கண்ணீருடன் அவன் முன்னால் வந்து நின்றாள். அம்மாவின் பார்வையிலிருந்து ஆயிரம் அர்த்தங்கள் கதிரேசன் புரிந்துகொண்டான்.

ஊபர் வந்து நின்றது.

கதிரேசன் கண்களில் நீர்திரள, “அம்மா, இவ எல்லாத்தையும் விட்டுட்டு எல்லாமே நாந்தான்னு என்னை மட்டுமே நம்பி வந்திருக்கா… நீதானே அடிக்கடி சொல்லுவ, உன்னை நம்பி வந்தவங்களுக்காக உயிரையே கொடுக்கலாம்னு… உயிராவே வந்தவள மட்டும் எப்படிம்மா விட்டுக் கொடுக்கிறது? நான் உன் பையன்மா. எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர் தடம் மாற மாட்டேன்.”

கதிரேசனையும், மருமகளையும் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள் அம்மா.

அதன்பிறகு தனிக் குடித்தனத்தில் இருவரும் போராடி வெற்றி பெற்றனர்.

ஆணின் தன்னம்பிக்கையே அவன் மனைவிதான் என்பதை பவதாரிணி ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு நன்கு உணர்த்தினாள். கதிரேசனும் மனைவியை எந்தச் சந்தர்ப்பத்திலும், சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் குடித்தனம் நடத்தினான்.

அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு வருண் என்று பெயரிட்டனர்.

வருடங்கள் ஓடின…

வருண் நன்கு படித்துமுடித்து தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஒரு பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தான்.

அன்று கதிரேசனுக்கு சிட்னியில் இருந்து ஸ்கைப்பில் அழைப்பு வந்தது.

“அப்பா, நான் ரிசர்ச் அசிஸ்டெண்ட்டாக என்னுடன் வேலை செய்யும் பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவள் கனடாவில் வசிக்கும் ஸ்ரீலங்காவிலிருந்து புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண். திருமணம் கனடாவில் நடக்க ஆசைப்படுகிறாள்….”

கதிரேசன் உற்சாகத்துடன், “பவம்…உடனே ஓடி வா. உன் பிள்ளை வருண் சொல்லும் சந்தோஷ செய்தியைக் கேட்டுவிட்டு மற்ற வேலையைப் பார்…” என்றார்.

அங்கு மகிழ்ச்சி தாண்டவமாடியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *