காதலைச் சொல்லிவிடு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,989 
 
 

நாளை காதலர் தினம். கிரீஷ் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். நாளைக்கு அவளிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டியதுதான்.

கிரீஷ் யோசித்துப் பார்த்தான். கடந்த வாரத்தின் நிகழ்வுகள் மனதில் நிழற்படம் போல் ஓடியது. போன வாரம் வைத்தியுடன் இதைப் பற்றிப் பேச ஆரம்பித்ததையும் ஒரு வாரத்திலேயே தன் எதிர்பார்ப்பையும் மீறி இந்த அளவுக்கு வளந்திருப்பதையும் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டான். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த உரையாடல் இப்படித்தான் ஆரம்பமானது.

மச்சி ! நான் ஒண்ணு சொல்லுவேன். சொன்னா சிரிக்கக் கூடாது ! என்றான் கிரீஷ்

என்னடா ! மொழி படத்துல வர பிரகாஷ்ராஜ் மாதிரி பில்ட்-அப் குடுக்குற ? அந்த மேட்டரா ? என்றான் வைத்தி

ஆமாண்டா ! அதேதான் !

யாருடா அந்த பாவம் செஞ்சவ ?

“மது” டா !

யாரு நம்ம மதுமிதாவா ? எவ்வளவு நாளாடா ஓடுது ?

இப்பதான்டா பீலிங்கே ஆரம்பிச்சிருக்கு. இன்னும் அவ கிட்ட சொல்லக்கூட இல்லை ?

போடா…..ங்…..க…. நான் கூட கல்யாண‌த் தேதி சொல்லுவேன்னு பாத்தா நீ இப்பத்தான் எல்.கே.ஜி. பையன் மாதிரி அப்ளிகேஷனோட நிக்கிறயே !

மச்சி ! நான் அந்த விஷயத்துல கத்துக்குட்டிடா ! எப்படிடா அவ ?

“கிழிஞ்சுது போ ! அடுத்தவன் கிட்ட ஒபீனியன் கேக்குற லெவல்லயா இருக்க ?. மாப்ளே ! நீ இன்னும் அரிச்சுவடியிலேயே நின்னுக்கிட்டிருக்கடா. அதுனால நான் ஒண்ணு சொல்றேன் கேளு. அவசரப்படாதே ! ஒரு வாரம் அவளை அப்சர்வ் பண்ணு. புடிச்சிருக்கான்னு பாரு . ஓ.கே ன்னா அடுத்த வாரம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்னைக்கு நேரா போய் புரபோஸ் பண்ணிடு”

கிளிக் ஆயிடுங்கிறேயா ?

வைத்தி இப்போ குரு ஸ்தானத்தை ஏற்றுக் கொண்டான். “மாப்ளே இங்கே வாடா” ன்னு சொல்லி ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்தான். “நான் ஒரு ஐந்து அம்ச திட்டம் சொல்றேன் எழுதிக்க” என்றான்.

1. அழகு. ஆளை அசத்தும் அழகு
2. கண்கள். நட்சத்திரம் போல ஜொலிக்க வேண்டும்.
3. அறிவு : எல்லோராலும் பாராட்டப் பட‌ வேண்டும்
4. ந‌கைச்சுவை உணர்வு : உன் ஜோக்கை ரசிப்பவளாக இருக்க வேண்டும்
5. .திறமை : தான் வேலை செய்வதை விட மற்றவர்களை வேலை செய்ய வைப்பவள்.

ஒரு வாரம் அவளை கவனி. ஒவ்வொரு அம்சத்துக்கும் மார்க் போட்டுக்க. 75 மார்க் வாங்கிட்டா ஃபிகரும் ஓ.கே டீலும் ஓ.கே

அந்த பேப்பரை எடுத்து முதல் முதலா வந்த லவ் லெட்டர் மாதிரி பத்திரமா மடிச்சு டைரிக்குள் வைத்தான் கிரீஷ்.

ஏண்டா ! காதலிக்கணும்னா கையில பேப்பரையும் பேனாவையும் வச்சுக்கிட்டு தெருத் தெருவா கிறுக்கன் மாதிரி அலையனுங்கிறயா ?

மாப்பு ! சும்மா எதுவும் கிடைக்காது. நான் சொன்னத மட்டும் கேட்டுக்க ! ஐயா சொன்னா பலிக்கும் ! அடுத்த வருஷம் இன்னேரம் சவீதாவே கதின்னு கெடப்ப !

அவ‌ யாருடா சவீதா ?

நம்ம வீட்டுக்கு பக்கத்தில இருக்க பிரசவ ஆஸ்பத்திரி.

கிரீஷும் வைத்தியும் ஒரே ஐ.டி. கம்பெனியில் ஒரே நாளில் சேர்ந்து ஒரே டீமில் வேலை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் ஒரே ஃபிளாட்டிலும் இருப்பவர்கள். சனிக்கிழமையானால் ஒரே பீரைக் குடிப்பவர்கள். வைத்தி அனுபவசாலி. ஏற்கனவே லவ்வி, ஊர் சுற்றி, இப்போது கல்யாணம் வரை வந்து விட்டான். அடுத்த மாதம் கல்யாணம். அதனால்தான் அனுபவசாலியான வைத்தியிடம் அட்வைஸ் கேட்டு நிற்கிறான் கிரீஷ்.

அவர்கள் வேலை பார்க்கும் அதே கம்பெனியில், அதே டீமில் வேலை பார்ப்பவள் மதுமிதா. இதுவரை யாரிடமும் சிக்காத அழகான, அம்சமான, குல்ஃபி ஐஸ். அதனால்தான் வைத்தி தொடர்ந்து தூபம் போட்டுக் கொண்டே இருந்தான் “உன் பெர்சனாலிட்டிக்கு மதுமிதாதான் சரியான ஜோடி” என்று.

சொல்லி வைத்தாற்போல் அந்த வாரக் கடைசியில் அவர்களது பீட்டா டீமில் உள்ள ஆறு பேரும் கிஷ்கிந்தாவுக்கு அவுட்டிங் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். கிரீஷ் யோசித்தான். மதுவுடன் பழகவும், புரிந்து கொள்ளவும் இதுதான் சரியான சந்தர்ப்பம்.

முன்னேற்பாடாக கிரீஷ் மதுவிடம் போன் செய்து சொல்லி விட்டான் ஞாயிறு காலை அவளை தன் காரிலேயே பிக்கப் செய்கிறேன் என்று. கிரீஷ், வைத்தி, மதுமிதா மூன்று பேரும் ஒரு காரில், மற்ற மூன்று பேரும் வேறொரு காரில். அதுதான் திட்டம்.

ஆனால், ஞாயிறு காலை எட்டு மணிக்கு மது போன் அடித்தாள். “கிரீஷ் ! நீ என் ஹாஸ்டலுக்கு வர வேண்டாம் பத்து மணிக்கு சந்தோஷ் ஆஸ்பத்திரிக்கு வந்துரு. நான் அங்கே ரெடியா இருப்பேன்”னு சொல்லி, கிரீஷ் விவரம் கேட்பதற்குள் போனை வைத்து விட்டாள்.

சொன்னபடியே பத்து மணிக்கு சந்தோஷ் ஆஸ்பத்திரி வாசலில் மதுமிதா காத்துக் கொண்டிருந்தாள். மஞ்சளும் கறுப்பும் கலந்த சுடிதாரில் தேவதை போல் இருந்தாள். கொஞ்சமாகப் போட்டிருந்த ஐ லைனரும் தீட்டியிருந்த புருவங்களும் அவள் கண்களை நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்றி வைத்திருந்தன. வைத்தி கிரிஷின் கைகளை லேசாக அமுக்கினான். மச்சி முதல் இரண்டு அம்சமும் தூள் ! ஃபுல் மார்க் போட்டுக்க !

மதுமிதா, ஹாய் ! ஒரு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சுப்பா ! அதான் … என்று இழுத்தாள்.

அடிப்பாவிகளா ! முன்னெல்லாம் சும்மாத்தான் இடிச்சிட்டிருந்தீங்க ! இப்பல்லாம் காரை ஏத்தியே கொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா ? என்றான் வைத்தி .

“மொக்கை போடாதே ! அடிபட்ட ஒருத்தருக்கு ரத்தம் தேவைபட்டுச்சு அதான் வந்தேன்” என்றாள்.

ரத்தம் குடுத்துட்டியா மது ?

அட ! நான் குடுக்கலைப்பா ! சுப்ரஜா உள்ளே இருக்கா அவதான் ரத்தம் குடுத்துட்டு இருக்கிறா !

பேசிக்கொண்டிருக்கும் போதே ” ஒரு பெரிய மனுஷியைக் கேக்காம அவ பேரை என்ன டேமேஜ் பண்ணுறீங்க” என்றபடியே சுப்ரஜா வந்தாள். அவளும் அதே கம்பெனிதான் ஆனால் ஒமேகா டீமில் இருந்தாள். பார்த்தால் நட்போடு புன்னகைப்பாள். அளவான பரிச்சயம்தான் அவளுடன்.

சுப்ரஜா, நீங்க எப்படி இங்கே வந்தீங்க ? என்ற கிரீஷின் கேள்விக்கு மதுமிதாவே முந்திக் கொண்டு பதில் சொன்னாள். ‘ரத்தம் வேணும்னு கேள்விப்பட்டவுடனேயே எனக்கு இவ ஞாபகம் தான் வந்தது. இவதான் எப்பப் பாத்தாலும் ரத்தம் குடுக்கறேன் பேர்வழின்னு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலையுவா. அதான் உடனே போன் அடிச்சிட்டேன்”.

சுப்ரஜா சொன்னாள் ” அதனாலதான் இதுங்க எனக்கு வச்சிருக்கிற பட்டப் பேரு ரத்தக் காட்டேறி” என்று கலகலத்தாள். “சண்டேங்கிறதால நல்லா தூங்கிட்டிருந்தேன். இந்த ராட்சஷி விடியக்காலை ஒன்பது மணிக்கே எழுப்பி உடனே வாடீங்கிறா. குளிக்கக் கூட நேரம் தர மாட்டேங்கிறா. சும்மா சென்ட்டை அடிச்சிட்டு கெளம்புங்கிறா. தாம்பரத்திலே ஏறி பரங்கிமலையிலே இறங்குறேன் அங்கே காயத்ரி ஸ்கூட்டியிலே நிக்கிறா எள்ளும் கொள்ளும் வெடிக்க. இவ அவளையும் விடலை. எழுப்பி ஸ்டேஷனுக்கு அனுப்பிச்சிட்டா ! வழி முழுக்க எனக்கும் இவளுக்கும் ஒரே திட்டுதான், கழுவிக் கழுவி ஊத்திட்டா”

“சாரிடீ ! உன் சண்டேயைக் காலி பண்ணிட்டேன்” என்றாள் மது.

சுப்ரஜா கிரீஷைப் பார்த்து சொன்னாள் ” மது இருக்காளே ! இவ ஒரு விஷயத்தை கையிலே எடுத்துட்டா அதை முடிக்கிற வரைக்கும் சும்மா விட மாட்டா. சுத்தி இருக்கிறவங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா. ஆனா இதை எல்லாம் செய்யறதுக்கும் ஒரு நல்ல மனசு வேணுமே” என்றவள். “சரி ! சரி ! உங்களுக்கு லேட்டாகுதே கெளம்புங்க” என்றாள்.

சுப்ரஜா ! நீங்களும் வரலாமே கிஷ்கிந்தாவுக்கு ! என்றான் வைத்தி.

“இல்லை வைத்தி ! சண்டே அன்னிக்கு நான் ரெகுலரா பார்வையற்றோர் பள்ளிக்கு போறது வழக்கம். அடுத்த தடவை பாக்கலாம்” என்றாள் சுப்ரஜா.

“வாடி ! உன்னை போற வழியிலே இறக்கி விடுறேன்” என்ற மதுவைத் தடுத்து ” ஆளை விடு சாமி ! உன் கூட வந்தா ஒரு கிட்னியை எடுத்தாலும் எடுத்துடுவே. நீ அந்தப் பக்கம் போ. நான் இந்தப் பக்கம் போறேன். ஒரு மந்தையில் இருந்து ….. இரண்டு ஆடுகள் ….. வெவ்வேறு பாதையில் ….. என்று சொல்லி மதுவின் கன்னத்தை ஒரு கிள்ளு கிள்ளி விட்டுப் போய் விட்டாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மதுமிதா ” சுப்ரஜா ரொம்ப நல்லவ. நிறைய சோஷியல் வொர்க் பண்ணுவா. எப்பவுமே கலகலப்பா இருப்பா “ என்றாள்.

அன்றைய தினம் அவுட்டிங்கையும், டின்னரையும் முடித்து வீட்டுக்கு திரும்பி வரும் போது இரவு பத்து மணி. அந்த களைப்பில் படுத்ததும் தூங்கி விட்டார்கள் கிரீஷும் வைத்தியும். கிரீஷ் அடுத்த‌ வாரம் ரொம்பவே பிஸியாக இருந்தான். வாரக் கடைசியில் வைத்திதான் ஞாபகப் படுத்தினான். மாப்பிள்ளை ! நாளைக்கி பிப்ரவரி 14 மறந்துடாதே !

கிரீஷ் சென்ற வார நினைவலைகளில் இருந்து வெளிவந்து மீண்டும் நிகழ் காலத்தில் அடியெடுத்து வைத்தான். வைத்தி சொன்னது போலவே கடந்த ஒரு வாரமாகவே, தான் வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கப் போகும் பெண்ணை இடைவிடாது கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

கிரீஷ் அந்த ஐந்து அம்ச திட்டம் கொண்ட பேப்பரைக் கையில் எடுத்தான். நாளைக்கு அவளிடம் தன் காதலை புரபோஸ் செய்ய வேண்டுமே ! நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்தவன் பேனாவை எடுத்து சில மாற்றங்களை செய்தான்.

1. அழகு : ஆளை அடிக்காத குத்துவிளக்கைப் போன்ற ஒரு ஒரு அழகு
2. கண்கள் : நிலவின் குளுமையுடன் கூடிய கனிவான கண்கள்.
3. அறிவு : பாராட்டப்படும் அறிவை விட மற்றவரைப் பாராட்டும் பண்பு
4 ந‌கைச்சுவை உண‌ர்வு : ஜோக்”கடி”ப்பவள் மற்றும் ஜோக்கை ரசிப்பவள்
5. திறமை : செய்யத் தூண்டும் திறமையை விட தானே செய்து முடிக்கும் நல்ல மனம்.

எல்லா அம்சங்களுக்கும் மார்க் போட்ட கிரிஷ் மொத்த மார்க் 90 ஆக‌ இருந்ததால் சந்தோஷமாக விசிலடித்தான்.

மறு நாள், காதலர் தினத்தன்று, கிரீஷ் தன் காதலை புரபோஸ் செய்தான். மதுமிதாவிடம் அல்ல சுப்ரஜாவிடம்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “காதலைச் சொல்லிவிடு

  1. ஹாஹா கடைசில இப்படி மாத்திடீங்களே ஆள ..
    நல்ல இருக்கு .. இருந்தாலும் ஒருத்தர நேசிச்ச இதயம் வேற ஒருத்தர நினைக்குமா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *