கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 8,080 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவித உணர்ச்சிப் பெருக்கு மிதமிஞ்சிய ஒரு சந்தர்ப்பத்தில் ஐம்புலன் களையும் சிதறவடித்து, ஜீவனின் சுயப்பிரக்ஞையை அறவே ஒழித்து. சரீரத்தையே தடைபிணமாக்கக்கூடும் என்பதற்கு என் தோழி ருக்மிணி ஓர் அத்தாட்சி. அதிகம் படித்தவளன்று. ஒரு கிராமப் பெண்: இந்து ஸ்திரி தர்ம வழியில் ‘அடிமை’யாகக் காலங்கழித்தவள்… மூன்று வருஷங்களாகின்றன. அவள் இந்த மாதிரி அன்று முதல் ‘சித்தப் பிரமை’ கொண்டு இருப்பது, வைத்தியர்களுக்கே திகைப்பாக இருக் கிறது. ‘ஹிஸ்டரியா’ எனப்படும் மூர்ச்சை நோயுமல்ல; பைத்தியமு மல்ல. நிலை குத்தலைப் போன்ற உயிரற்ற கண்கள் ஓரிடத்தைப் பார்த்தால் பார்த்தவண்ணமே இருக்கும். முகத்தில் எப்பொழுதும் உணர்வற்ற தோற்றம். இது பொதுவான நிலை.

ஒரு நாள் உட்கார்ந்த இடத்திலிருந்தே, அடி, மாதுவை எங்கோ அனுப்பிவிட்டார்களென்றாயே; அதோ போகிறானே?” என்று வீரிட்டாள். அவள் பிரமையை மாற்றுவது பிரம்மப் பிரயத்தமாய் விட்டது. ஒருநாள் என்னைக் கட்டிக்கொண்டு அகாரணமாக விம்மி விம்மி அழுதான். மற்றொருநாள், ‘அடி, மாதுதான் உயிருடன் இருக் கிறானே? நான் ஏன் நெற்றிக்கு வைத்துக் கொள்ளக் கூடாது?’ என்று பொட்டிட்டுக் கொண்டாள். ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் கண்ணாடி யில் பார்த்துவிட்டு, ‘ஐயையோ, அவர் போனபிறகு எனக்கு ஏன் இந்த மாதிரி புத்தி வந்தது?’ என்று அழித்துவிட்டான்.

நான் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டிருந்த புதிது. கும்பகோணத்தில் முகாம்போட்டிருந்து திரும்பிய மூன்றாவது நாளே என் தோழி ருக்கு விடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.

கும்பகோணம்
4-4-35.

என் அருமைக் கமலம்,

இவ்வளவு வருஷங்களுக்குப் பிறகு என்னை ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தது, புலன் விசாரித்துக் கண்டுபிடித்துக்கொண்டு வந்தது எனக்கு எவ்வளவோ காணததைக் கண்டது போவிருக்கு. கமலம், எட்டு வருஷங்களுக்கு முன் நீயும் நானும் குதிச்சுக்கொண்டு பள்ளிக்கூடம் போனது இன்னிக்குப் போலிருக்கடி. நீயோ படித்துப் பள்ளிக்கூட ‘இன்ஸ்பெக்டர்’ வேலை பார்க்கிறாய், நான் மூடமாய், கிணற்றுத் தவளையாய் எங்கோ ஒரு மூலையில் காலந் தள்ளிக் கொண்டிருந் தேனே; என்னை ஆட்டிவைக்க ஒன்று வந்து சேர்ந்துவிட்டதடி! உன்னிடம் சொல்வதற்கென்ன? வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்!

நேத்து விடியக்காலம். என் அகத்துக்காரர் ஊரில் இல்லை. ‘கேஸ்’ விஷயமாக ஊருக்குப் போவிருந்தார். வீட்டுக்காரியங்களை முடித்து விட்டுக் காவேரிக்குப் போகப் புறப்பட்டு வாசலுக்கு வந்தேன். ஓர் அடியெடுத்துப் படியில் வைத்திருப்பேன், பார்த்துக்கோ, வாசல் வழியாகப் போனான் -யார் தெரியுமா? என் கல்யாணத்தன்று வீட்டை விட்டு ஓடிப்போனானே, ‘மாது’ உனக்கு ஞாபகமிருக்கிறதா? அவன் என்னைப் பார்த்திருக்கக்கூட மாட்டான். எனக்குக் கை கால் பதறி போச்சு. கால் தவறி அடி வைத்துப் படியில் விழ இருந்து சமாளித்துக் கொண்டேன். இந்தத் தடபுடலில் அவன் என்னைப் பார்த்துவிட்டான்.

ஒரு விநாடி-மறுபடியும் ‘விர்’ரென்று ஐந்தாறடி தூரம் போய் விட்டான். என்னமோடி கமலம், என் கஷ்டகாலமோ என்னவோ தெரியவில்லை. நான் வாழ்க்கைப்பட்டு வயசு வந்த பெண் என்பதையே மறந்தேன். நான் அப்பொழுது என்ன செய்தேன். என்ன சொன்னேன் என்பதே எனக்கு ஞாபகமில்லை. அவ்வளவு மெய்மறந்து போய் விட்டேனடி!‘மாது’ என்று கூப்பிட்டிருப்பேன் போலிருக்கிறது. நடந்து கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான்.

வேகமாக என்னை நோக்கிவந்து ‘ருக்கு!’ என்றான். அப்பொழுது தான் எனக்கு என் சுயப் பிரக்ஞை வந்தது. அவனுடைய முகத்தைப் பார்த்தேன். அவன் பார்வை எனக்குப் பயத்தை விளைவித்தது. உடல் நடுக்கம் எடுத்தது. விழுந்தடித்துக்கொண்டு நடைக்கு ஓடினேன். வாஸ்தவமாக, கமலம், இவனை எதற்காகக் கூப்பிட்டோமென்று தோன்றிற்று; நிஜமாய்ச் சொல்லுகிறேன். நானறிந்து செய்யவில்லையடி! நான் என்னடி செய்வேன்.

‘ருக்கு, என்னை அடையாம் தெரிகிறதா?’ என்றான்.

அவனது பரதேசிக் கோலத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு. ‘என்ன அப்படிக் கேட்டாய் மாது?’ என்றேன்.

என்னை அறியாமல் கண்களில் ஜலம் வந்துவிட்டது. நீ சொல், கமலம். நாமாக என்ன செய்து கொண்டாலும் பழக்கம் விடுகிறதா?

குழந்தையிலிருந்து கூடி விளையாடின பாசம்; வேறு புருஷனல்லவா? தூரத்தில் நின்று பேசனும் என்று பார்த்தேன். என்னால் முடியவில்லையடி. என் மேல் குற்றமா அது? என் மனம் தடுமாறுகிறதை அவன் கண்ணாடியில் போல் கண்டுவிட்டான். தைரியமாக என் முகத்தையே பார்த்தான். பேசவில்லை. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அர்த்தமில்லாமல், ‘என் அகத்துக்காரர் ஊரில் இல்லை’ என்றேன். அவன் முகத்தில் ஒரு வெறுப்புக்குறி தோன்றியதைக் கவனித்தேன். ‘மத்தியானம் வருவார்’ என்றேன். அவன் ஒன்றும் சொல்லாமல் திண்ணையில் உட்கார்த்துகொண்டு கொஞ்ச நாழி கழித்து, ‘நாம் சந்தித்தது, உனக்குச் சந்தோஷந்தானே? இல்லையா?’ என்று கேட்டான். எதற்காக அப்படிக் கேட்டானோ தெரியவில்லை. நான் பதில் சொல்ல வில்லை. ‘நான் கேட்டதற்குப் பதில் சொல்’ என்றான்.

‘இல்லை’ என்று மனத்திலிருந்ததைச் சொல்லிவிட்டேன். அவ்வளவுதான், உட்கார்ந்திருந்தவன் சடக்கென்று எழுந்து தெருவில் இறங்கிப்போய்விட்டான். அவன் பின்னால் கூச்சலிட்டேன். அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நான் என்னடி செய்வேன்? உள்ளதைச் சொல்லுகிறேன். நீ என்ன வேணுமானாலும் நினைத்துக் கொள். அந்த நிமிஷம் முதல் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பத்து வருஷமாக, பரதேசியாகத் திரிந்தவனைப் பார்த்த மறுநிமிஷமே இப்படிப்பட்ட துஷ்டவார்த்தையை சொல்லி விரட்டி விட்டேனே! அவன் திரும்பி வருவானோ? நான் என்னசெய்யட்டும்? ஒரு வழி சொல்லேன்?

உன் ருக்கு”

ருக்குவும் நானும் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது ‘மாது’வும் அங்கு இருந்தான். ரொம்ப நல்லவன். எனக்கு நினைவு இருக்கிறது. அவனுக்குத்தான் ருக்குவைக் கொடுப்பதாகப் பேச்சு. நாங்கள் (குட்டிகளெல்லாங்கூட) அவளைக் கேலி செய்வோம். அவன் ருக்குவின் தகப்பனாரின் தமக்கை பிள்ளை. தாய் தகப்பனார் இல்லை. மாமன் வீட்டிலேயே வளர்ந்தான்.

கல்யாணத்தின்போது அவளுக்கு வயசு பதினான்கு நிறைந்து விட்டது. அவன் அவளுக்கு மூன்று வயசு பெரியவன். காலேஜில் படித்துக்கொண்டிருந்தான். ஏது காரணத்தாலோ ருக்குவை மாதுவுக்கு கொடுப்பதில்லை என்று கடைசி நிமிஷத்தில் தீர்மானமாயிற்று. அந்தக் காரணம் அவள் தாய்தான் என்று சொல்லிக் கொண்டார்கள். அவளது சொந்தத்தில் வக்கீல் பரீக்ஷைக்குப் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனுக்குக் கொடுப்பதாக நிச்சயமாயிற்று, ருக்கு, கல்யாணத்தின் நாலு நாளும் அழுதவண்ணமாகவே இருந்தாள். மாதுவோ தாலி கட்டியானவுடன் பந்தலிலிருந்து வெளியேறினவன் தான். பின்பு எங்கே போனானென்று யாருக்கும் தெரியாது.

இந்து ஆசார முறையில் ருக்கு தன் கணவனைத் தெய்வமாகக் கொண்டாள். அவ்வளவுதான். தான் அவனது ‘அடிமை’ என்று சுருதி உழைத்தாள். அவள் கணவனைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? தன் மனைவி என்பவள் ஒரு பெண் என்பதையும், அவளுக்கு ஒரு மனம், இருதயம் உண்டு என்பதையும் மறந்தவன் – அல்லது அலக்ஷ்யம் செய்தவன். நானும் பெண்ணாகையால் அதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. கும்பகோணத்தில் நான் அவனைச் சந்திக்க நேர்ந்தது.

அப்பா! பார்க்கவே பிடிக்கவில்வை எனக்கு: அவள் எப்படித்தான் காலந்தள்ளுகிறாளோ? அவள் தெய்வந்தான்.

மறுநாளும் ஒரு கடிதம் வந்தது.

கும்பகோணம்.
5.4.35.

கமலம்,

என்ன விந்தை இது என்று யோசிக்கிறாயோ? எனக்கு என்னவோ உன்னிடம் சொல்லிவிட்டால் மனம் சமாதானமாக இருக்கும் போலிருக்கிறது. காவேரிக்குப் போகிற வழியில் தபால் பெட்டி இருக்கிறது. நல்லவேளையாக என் பாட்டு தோட்டில் இரண்டு மூன்று கவர்கள் இருந்தன. ஆனால் தான் எழுதுகிறது உனக்கு உபத்திரவமாக இருக்கிறதோ என்னவோ? இல்லையே? அசட்டுப் பிசட்டுனு எழுது கிறேன். யாரிடமும் காட்டாதே. உன் அகத்துக்காரரிடங்கூட. நேற்று முதல் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டேன், போ. என் அகத்துக் காரர் பார்த்து எனக்கு என்ன உடம்பு என்று சீறும்படி அவ்வளவு பட்டவர்த்தனமாக இருக்கிறது என் நிலைமை.

குழந்தைகளாக இருந்தபோது நான் சாப்பிடாமல் அவன் சாப்பிட மாட்டாள். எது தனக்கு அகப்பட்டாலும் என்னிடம் கொடுப்பான். அம்மா, புருஷப் பிள்ளைகளோடு விளையாடினால் காது அறுந்து போகுமென்று இருவரையும் விரட்டுவாள். அவள் பாராமல் கூடி விளையாடுவோம். அவனை என் கல்யாணத்தன்று முதல் தரம் விரட்டினேன் வாய்பேசாமல். நேற்று இரண்டாந்தரம் என்னைத் தேடிவந்தவனை, என் வாயார வார்த்தை சொல்லி விரட்டினேன், பாவி! ஆனால், இப்பொழுது வேறு காலமல்லவா? நான் ஒருவருக்குப் பாத்தியமானவள். அவரறியாமல் நான் மாதுவை எப்படி ‘வா’ என்பது. அவருக்கு அவனைக் காணக்கூட இஷ்டம் இருக்காது; நிச்சயம், சந்தேகப்படுவார். என்னை அடிப்பார். ஆமாமடி எவ்வளவோ தரம் சின்னத் தப்புக்கெல்லாம் அடித்திருக்கிறார். ஒன்றுமில்லை. ஒரு தடவை’பவதி பிக்ஷந் தேஹி’ என்று ஒரு பிள்ளையாண்டான் வந்தான். அவனுக்குச் சாதம் போடுகிறபோது, அவனை ‘எந்த ஊர்?’ என்று கேட்டேனென்று அடித்தார். ஆகாசவாணி பொதுவாக தான் கல்மஷ மில்லாமல்தான் கேட்டேன். பைத்தியக்காரியாட்டமா எழுதியிருக் கிறேன். ஆத்துக்காரரைப்பற்றி இப்படி எழுதுவது பிசகல்லவா? நாள் இதுவரையிலும் ஒன்றும் சொன்னதில்லை. வாழ்க்கைப்பட்ட பிறகு வாய் திறக்கலாமா? மனத்தினால் கூட அபசாரம் செய்தால் பாவமல்லவா? – பாட்டி சொல்லுவள் புருஷனுக்கு அடிக்க ஒரு கை, அணைக்க ஒரு கை என்று-ஆனால் வோகத்தில் எப்படியோ? நான் அடிக்கிற கையைத்தான் கண்டேனடி! – இப்படியெல்லாம் எழுதினால் பிசகு : இதென்ன எனக்குக் கேடுகாலமா இப்படி?

உன்
ருக்கு

இதைப் படித்ததும் என் மனத்தில் அனுதாபம் மேவிட்டது. ருக்குவைப் போல அப்பாவி உண்டா உலகில்? பாவம் என்ன பாடு படுகிறாளோ! பச்சைக் குழந்தை போலல்லவா எழுதுகிறாள்!

மறுநாளும் ஒரு கடிதம் வந்தது.

கும்பகோணம்
6.4.35.

சுமலம்,

நான் என்னடி செய்வேன்! இன்னிக்குச் சாய்ந்தரம் அவனைப் பார்த்தேன். வழக்கம்போல நான் ஜலமெடுக்கப் போனேன். ஊத்தில் கும்பலாயிருக்குமென்று கொஞ்ச நாழி கழித்துப்போனேன். நிலாக் கால் கட்டின சமயமாகிவிட்டது. அவசர அவசரமாக ஊத்து இறைத்து ஜலமெடுத்துக் கொண்டிருந்தேன். தனியாக நான் மட்டும் இருந்தது எனக்குப் பயமாக இருந்தது. இருந்தாப்போலிருந்து ‘ருக்கு’ன்னு குரல் கேட்டது. நல்லவேளையாய் மாது வத்துவிட்டான்னு உள்ளூற ஒரு நினைப்பு. மறுபக்கம், தன்னந்தனியாக ஊத்தங்கரையில் வேறொருத்தனோடு பேசுவது பிசகுன்னும் ஒரு நினைப்பு? ‘என் மேல் கோப மில்லையே?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் நான் சொன்னது இது: ‘மாது, இது பிசகு, நாம் பேசப்படாது இப்படி இங்கே’ – என் உடல் நடுக்கமெடுத்தது. ஒருத்தரும் காணோம் காவேரிலே. வலையில் அகப்பட்டவள்போல நினைத்துக் கொண்டேன். எதுக்கு அப்படி நினைத்தேன்னு இப்பொ தெரியவே இல்லை. மாது தூரத்தில் நின்னுண்டிருந்தான்.

‘ருக்கு, இத்தனை நாழி கழிச்சு இங்கே ஏன் வந்தே-என்னை ஒரு வேளை இங்கே பார்க்கலாம்னுதானே? என்று ஆவலோடு கேட்டான். ‘இல்லை. நாழியாயிடுத்து’ இன்னேன். அவன் முகத்துலே ஒரு மாறுதலைக் கண்டேன். எனக்குப் பயமாயிருந்தது. ‘மாது’ நீ போயிடு! இன்னேன். ‘பின் ஏன் என்னைக் கூப்பிட்டேன்னு கோபமாகக் கேட்டான். உடனே கோபத்தை அடக்கிண்டுட்டான்.

“தெரியாமல் செஞ்சுட்டேன்’.

‘இல்லை.ருக்கு,நீ பொய் சொல்றே’ என்றான். எனக்கு ஒண்ணுமே சொல்லத் தெரியல்லெ. ஒரு நிமிஷம் அப்படியே நின்னேன். நொடிக் கெல்லாம் குடத்தை எடுத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டேன். ‘ருக்கு, நாளைக்கு ஆத்துக்கு வருகிறேன்’ன்னு சொன்னான்.

‘என் பின்னாலே வராதே’ன்னு ஜாடை காட்டிவிட்டு வீட்டுக்குவந்து சேந்துட்டேன். ‘அவன் வருவானா’ இருந்தது. இப்போ, ‘ஐயோ. வந்துவிட்டால்?’ என்று நடுங்கினேன். அதுவும் மாது முரடன். அவர் ஆத்தில் இருக்கும்போது வந்துவிட்டால் என்ன செய்வது ? எனக்கு ஒண்ணுமே தெரியல்வே.

உன்
ருக்கு

இந்தக் கடிதத்தைப் படித்ததும் ‘ருக்குவுக்கு ஏதாவது ஆபத்து நேரும்’ என்று எனக்குத் தோன்றிற்று. அவளும் சாமர்த்தியமாக நடந்து கொள்ள அந்தச் சமயத்தில் திறமையற்றவன். புருஷன் அசூயைகொண்ட பதர். மாதுவோ உணர்ச்சி வேகத்தில் தன்னை மறந்தவன். வினை வேறு வேண்டியதில்லை அல்லவா?

அன்று சாயந்தரம் வண்டியில் என் புருஷனுடன் புறப்பட்டுக் கும்பகோணம் போனேன். சுமார் எட்டரை மணிக்கு ருக்குவின் வீட்டு வாசலில் போய் இறங்கினோம். வாசலில் ஒரே கூட்டம். உடனே எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கூட்டத்தை விலக்கிக்கொண்டு நாங்கள் இருவரும் வேகமாக உள்ளே சென்றோம். ருக்கு ஒரு பக்கம் திக்பிரமை பிடித்து உட்கார்த்திருந்தாள். மாது ஒரு பக்கம் ஸ்தம்பித்து

நின்று கொண்டிருந்தான். ருக்குவின் கணவன் பூமியில் கிடந்தான். அந்தச் சமயம் போலீஸார் உள்ளே நுழைந்தார்கள்.

கேஸ் நடந்தது.

மாது விசாரணையில் முழு விவரங்களையும் சொன்னான். தான் ருக்குவைப் பார்த்துப் பேச, சாயந்தரம் வீட்டுக்கு வத்ததாயும், கூடத்தில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அவள் கணவன் வந்ததாயும், உள்ளே வந்தவன் வித்தியாசமான எண்ணங்கொண்டு மனைவியைத் தாக்கிக் கழுத்தை நெரித்ததாகவும் அதைத் தடுப்பதற்கு தான் அவன் மார்பில் குத்தியதாயும், உடனே அவன் கீழே விழுந்து உயிர் துறந்தான் என்றும் சொன்னான்.

ருக்கு ‘கேஸி’ல் ஒருவிதமாயும் உபயோகப்படவில்லை. பெட்டியில் ஏற்றப்பட்ட போதெல்லாம் மூர்ச்சையானாள். அவ்வளவுதான். மாது தீவாந்தர சிக்ஷை அடைத்தான்.

அன்று மாறாட்டமடைந்தது அவள் சித்தம்.

– மணிக்கொடி. 28:07. 1935

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *