காதலினால் காதல் செய்வீர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 31,693 
 
 

புவனேஷ்வரில் ஒரு மொட்டைமாடியில் மூன்றாவது பியரின் முதல் கிளாஸை, கண்களை மூடி சுவைத்து ஒரு க்ளுக் முடித்து கீழே வைத்ததும், புன்சிரிப்பு தானாக வந்தது. நிச்சயம் இது பியர் வரவழைத்த புன்சிரிப்பு அல்ல. இன்னும் மூன்று பத்திகளுக்குப் பிறகு, பியர் வரவழைத்த ஏப்பம் வரும். இரண்டு கைகளையும் சோம்பல் முறித்தபடி புத்துணர்ச்சியுடன் வானத்தைப் பார்த்தான். வானம், ‘பொறுமையா, ஜாலியா குடி’ என்றது. 11 மணிக்கு நண்பன் கீழே இறங்கிச் சென்றுவிட்டான். நண்பனின் மனைவி சமைத்த டின்னர். ‘இப்ப வேணாங்க, மேல போய் சாப்பிட்டுக்கிறேன்’ எனச் சொல்லி எடுத்து வந்திருந்த ஹாட்பேக்கினுள் எறும்புகள் நுழைய முயற்சித்து சுற்றிச் சுற்றி வந்தன. தொடர்ந்து தனியே பியர் குடிக்க போர் அடிக்கும். லேப்டாப்பைத் திறந்து மூலையில் ஓர் அமுக்கு அமுக்கிவிட்டு, இன்னொரு க்ளுக்.

காதலினால் காதல் செய்வீர்1லாக்-இன் ஸ்கிரீன் வருவதற்குள் அவசரமாக ஒரு சிகரெட் பற்றவைத்தான். மானிட்டர் ஆபரேட்டிங் சிஸ்டம் பாஸ்வேர்டு கேட்டது. பாஸ்வேர்டு டெக்ஸ்ட்பாக்ஸில் சிகரெட் புகையை ஒருமுறை ஊதினான். பாஸ்வேர்டை அடித்தான். நிக்கோட்டின் புகைக்குப் பின்னால் ஸ்டார்கள் உருவாகின. டெஸ்க்டாப் மலர்ந்தது. ஆன்லைனில் வெட்டிவேலை பார்ப்பதற்கு முன், கடமைக்கு அஃபிஷியல் மெயில் பார்ப்பது சடங்காகி இருந்தது. இந்தச் சடங்கு, குற்றவுணர்ச்சியை ஓரளவேனும் குறைத்தது. ஒரே ஒரு மெயில்தான் வந்திருந்தது.

‘‘Hello sir… how r u? hope things r going good. how ur kids doing. Its been a while so just thought of saying hello. I called you, when I was in India. looks like you were busy, but didn’t get a chance to call u later. When the busy bee is free, pls reply. take care… bye.

indhu’’

Sent from my iPhone

இந்த இந்து இப்படித்தான் நான்கு மாதங்களுக்கு முன் ஒரு மெயில் அனுப்பி இருந்தாள். இவன் ரிப்ளை அனுப்பி இருந்தான். அவளிடம் இருந்து பதில் இல்லை. இதைப்போல கடந்த நான்கு வருடங்களில் அவள் மெயில் அனுப்புவாள். இவன் ரிப்ளை அனுப்புவான். அதற்குப் பதில் எதுவும் இருக்காது. சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு மெயில் வரும். ‘என்ன சார்… பிஸியா? மெயிலுக்கு ரிப்ளையே பண்ண மாட்டேங்கிறீங்க?’

ஏப்பம்!

‘இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துடணும்’ என்றது, மூன்றாவது பியரின் மூன்றாவது க்ளுக். இந்துவின் நம்பர், மொபைலில் இல்லை.மெயிலில் தேடி எடுத்தான். இங்கே நள்ளிரவு என்றால், யு.எஸ்-ஸில் பகல்தானே எனத் தெம்பாக அடித்தான். ஃபுல் ரிங் போய் கட் ஆனது. இந்தியாவில் இருந்து எவனும் வெளிநாட்டுக்கு போன் பண்ணமாட்டான் என்ற நினைப்பிலேயே இன்னும் இந்த என்.ஆர்.ஐ-க்கள் திரிகிறார்கள். இந்தியர்கள், மிஸ்டுகால் பார்ட்டிகள். அவர்களுக்கு இந்தியர்களை போனில் அழைத்துப் பேசுவது ஏதோ பெருங்கருணை என்ற நினைப்பு.அவர்களும் என்ன செய்வார்கள்… அவர்களால் அதிகபட்சம் செய்ய முடிந்ததே போனில் அழைத்துப் பேசுவதுதானே!

கடுப்புடன் பாட்டிலில் இருந்து பியரை கண்ணாடிக் குடுவையில் ஒழுகவிட ஆரம்பிக்கும்போது, இந்துவிடம் இருந்து போன்.கிளாஸ் முழுவதும் நிறைய நிறைய… பின்னணி இசைபோல ரிங்டோன் ஒலித்துக் கொண்டு இருந்தது.

போனை எடுத்த வேகத்தில், ”இந்து, நான் அனுப்புற மெயிலை எல்லாம் படிக்கிறீங்களா… இல்லையா?” என்றான்.

”இல்ல சார்… எனக்கு இதுவரைக்கும் எந்த மெயிலும் வரலை. நல்லா இருக்கீங்களா சார்?”

”ஃபைன் இந்து. என்ன எழவு கம்பெனியோ… அஃபிஷியல் ஐ.டி-யில் இருந்து மெயில் அனுப்பினா ஸ்பாமுக்குப் போகுதுபோல. இதுவரை நாலு மெயிலுக்கு மேல அனுப்பிருப்பேன்.”

”ஸாரி சார், நான் ஸ்பாம் பாக்கிறது இல்லை. எப்படி இருக்கீங்க? இப்பவும் அதே மாதிரி ஊர் சுத்திண்டுதான் இருக்கீங்களா?”

”ஆமா இந்து… அதைவிட அதிகமா. இப்பகூட புவனேஷ்வர் வந்திருக்கேன். இங்க வராமலேயே இந்த வேலையை முடிச்சிருக்க முடியும்.”

”அப்படியே இருக்கீங்க சார். குரல்கூட மாறவே இல்லை.”

”உங்க குரல் மாறிடுச்சு இந்து. அய்யர் பாஷை வேற பேசுறீங்க!”

”என்ன பண்றது சார்? இங்க வீட்ல மட்டும்தான் தமிழ் பேச முடியறது. வீட்ல இவன், இவனோட அப்பா, அம்மா எல்லாரும் இந்தப் பாஷைதான் பேசுறாங்க. கேட்டுக் கேட்டு, எனக்கும் அது தொத்திண்டுடுத்து சார்.”

” ‘சப்பை மேட்டர்’, ‘குவாட்டர் பிரியாணி’னு சொன்ன இந்துவா, இப்படிப் பேசுறது?!”

”சார், அதை எப்படி இன்னும் ஞாபகம் வெச்சிருக்கீங்க? ஆச்சர்யமா இருக்கு.”

”நீங்க ஹைதராபாத் வந்து இறங்கினதில் இருந்து எல்லாம் ஞாபகம் இருக்கே இந்து. எனக்கு குட் மெமரி.”

”அப்படியா சார், நிஜமா ஆச்சர்யமா இருக்கு. உங்களுக்கு எதுவும் ஞாபகம் இருக்காதுனு நினைச்சேன். எனக்கு சென்னைல இருந்து ஹைதராபாத் டிரான்ஸ்ஃபர் போட்டதும், எல்லாரும் பயமுறுத்தினாங்க. ஜெயப்ரியன் சார்தான் ஹைதராபாத் இன்சார்ஜ், பயங்கரக் கோவக்காரர், ரொம்ப ஸ்ட்ரிக்ட், அது… இதுனு செம பில்டப். நான் ஏதோ வயசான கோவக்காரக் கிழம்னு நினைச்சிட்டே வெறுப்போடு ரயில் ஏறினேன். அதுக்கு ஏத்த மாதிரியே நீங்க என்கிட்ட முதன்முதலில் போன்ல பேசினது ஞாபகம் இருக்கா சார்?”

********

ஹைதராபாத்தில் சனிக்கிழமை மாலை வீக் எண்டு கொண்டாட்டத்துக்காக, ப்ரியன் பக்கா பிளான் போட்டு குஷியாகத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒருவார வேலை உருட்டி, புரட்டி, கும்மாங்குத்து குத்திவிட்டது. அலுவலகத்தில் இருந்து மாலை 5 மணிக்கே கிளம்பத் தயாராக இருந்தான். ஒரு பெரிய உல்லாச விடுதிக்கு இரண்டு மணி நேர டிரைவிங்கில் செல்ல வேண்டும். சென்னை தலைமையகத்தில் இருந்து மொபைலில் அழைப்பு. ப்ரியனின் பாஸ் பேசினார்… ”ப்ரியன்… இந்துனு ஒரு புது ஸ்டாஃப் ஹைதராபாத்துக்கு ரயிலில் வந்துட்டு இருக்காங்க. டிக்கெட்டைத் தொலைச்சிட்டாங்களாம். டி.டி.ஆர் இப்ப பக்கத்தில்தான் இருக்காராம். இப்பதான் டென்ஷனா போன் பண்ணாங்க. நான் ‘கவலைப்படாதம்மா, ப்ரியனை உங்கிட்டப் பேச சொல்றேன். அவர் பார்த்துப்பாரு’னு சொல்லிருக்கேன். கொஞ்சம் பார்த்துக்கங்க ப்ரியன். நல்ல பொண்ணு. நான் சொல்லித்தான் ஹைதராபாத் டிரான்ஸ்ஃபருக்கு சரி சொல்லிட்டு வர்றாங்க” என்று சொல்லிவிட்டு, இந்துவின் நம்பர் கொடுத்தார்.

வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு, அந்த எரிச்சலிலும், பாஸ் என்பது மூளையில் உறைத்தும், ”இந்து எப்படி இருப்பாங்க சார்?” எனக் கேட்டேவிட்டான்.

”ஸ்டைலிஷான பொண்ணு. ரொம்ப பிரில்லியன்ட்” என்றார் பாஸ்.

எப்பேர்ப்பட்ட பெண்ணாக இருந்தாலும் வீக் எண்டு பார்ட்டிக்குத் தொந்தரவு தருவதை மன்னிக்க முடியாமல், இந்துவின் மொபைல் எண்ணை கடுப்பாக அழுத்தினான்.

”ஹலோ” என்றாள் இந்து.

********

காதலினால் காதல் செய்வீர்2”நல்லா ஞாபகம் இருக்கே இந்து , ‘டி.டி.ஆர் கிட்ட போனைக் குடுங்க’னு சொன்னேன்!”

”ச்சே, ஒரு ஹலோகூட சொல்லாம சுள்ளுனு ‘டி.டி.ஆர்-கிட்ட போனைக் குடு’னு சொல்றானே இந்த ஆளுன்னு கடுப்பாயிட்டேன் சார்.”

********

இந்துவை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர ஓர் ஊழியரை நியமித்து, இந்துவை எங்கே தங்கவைக்க வேண்டும் எனத் தொடங்கி அனைத்து அறிவுரைகளையும் கொடுத்துவிட்டு வீக் எண்டு பார்ட்டிக்கு ஓடினான் ப்ரியன். நண்பர்களோடு சேர்ந்து அடித்த கூத்தில் இந்துவைப் பற்றி பெரிதாக எதுவும் ஞாபகம் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை மதியம் அஃபிஷியலாகக் கேட்டாக வேண்டும் என்பதைப்போல, ”சேஃபா வந்து சேர்ந்து செட்டில் ஆயிட்டீங்களா?” என்று மட்டும் கேட்டுவிட்டு மொபைலை அணைத்தான். ‘புடவை, சுடிதார், ஜீன்ஸ்… எனப் பல்வேறு உடைகளிலும் இந்து எப்படி இருப்பாள்!’ – சில நொடிகள் சிந்தித்துத் தாவினான்.

திங்கட்கிழமை வழக்கமான அறிமுகத்துக்குப் பின் இந்துவுக்கு வேலைகளை விளக்கிவிட்டு கேபினைச் சுட்டினான். மாலை ப்ரியனை அறையில் சந்தித்து, தங்கியிருக்கும் விடுதி வசதியாக இல்லையென்றும், மாற்றித்தர வேண்டும் எனக் கேட்டாள். காலையிலேயே இந்துவைப் பார்த்துத் திருப்தியடைந்திருந்தாலும் திங்கட்கிழமை காலை டென்ஷனில் முழுதாக ரசிக்க முடியாது என்பதால் தள்ளிப்போட்டிருந்தான். ஃபார்மல் பேன்ட், ஃபார்மல் ஷர்ட் அணிந்திருந்தாள். லிப்ஸ்டிக் இன்னும் கலையாமல் இருந்தது. அவள் கண்களில் இருந்து ஆயிரம் கேள்விகள் வெடித்துச் சிதறி இறந்து கொண்டிருந்தன. கைகளை இறுக்கமாக உடலோடு ஒட்டி, உள்ளங்கைகளை மடியில் வைத்து அமர்ந்திருந்தாள்.

”மாத்திடலாம்” என்றான். ‘இவள் ஒரு புரொஃபஷனல் அழகி’ என நினைத்துக்கொண்டான்.

”தேங்க் யூ சார்!” எனக் கிளம்பினாள்.

மறுநாள் இந்துவுடன் சேர்த்து நான்கைந்து பேருடன் லஞ்ச். மதியத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டிய வேலைகள் சில இருந்தன. அதெல்லாம் முடிந்து டீ குடிக்க ப்ரியன் அண்டர் கிரவுண்டு கார் பார்க்கிங்குக்குச் செல்லும்போது, இந்துவும் பின்னாலேயே கோப்பையுடன் வந்தாள்.

டீ குடித்துக்கொண்டே, ”சார், நான் உங்களை ரொம்ப வயசானவர்னு நினைச்சிட்டு வந்தேன்” என்றாள். முகத்தில் அழகும் குறும்பும் கொப்பளித்தன.

”நீங்க ரொம்ப அழகா இருப்பீங்கனு நான் நினைச்சிட்டு இருந்தேங்க.”

”அழகா இருப்பேன்னு நினைச்சிட்டு முதல்முதலா போன்ல பேசறப்ப என்கிட்ட எதுவும் பேசாம, டி.டி.ஆர்-கிட்ட போனை கொடுக்கச் சொன்னீங்களா? ‘ஒரு ஹலோகூடச் சொல்லாம சுள்ளுனு பேசுறானே இந்த ஆளு’னு கடுப்பாயிட்டேன் சார்.”

********

”அதைத்தான் ஹைதராபாத் வந்த ரெண்டாவது நாளே சொல்லிட்டீங்களே இந்து!”

”அதை என்னால மறக்கவே முடியலை சார். யாரும் என்னை அப்பிடி உதாசீனப்படுத்தியதே இல்லை. அதான் திரும்பவும் சொன்னேன்.”

”அதை விடுங்க… அதான் அன்னிக்கே விளக்கம் சொல்லிட்டேனே. துணி துவைக்கும்போது கால் மரத்துடும்னு சொல்வீங்களே… இப்பவும் மரத்துப்போகுதா?”

”சார், எப்படி சார்… எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருக்கீங்க?”

”ஏன் இந்து, சாதாரணமா எனக்குச் சின்னச் சின்ன விஷயம் எல்லாமே ஞாபகம் இருக்கும். உங்க அம்மா உங்களுக்கு ஃப்ராக்கை அவங்களே தைச்சுக் குடுக்கிறது, நீங்க என்னைப் பிடிவாதமா பஞ்சாரா ஹில்ஸில் ஒரு பியூட்டி பார்லருக்குக் கூட்டிட்டுபோனது…”

”பார்லருக்குக் கூட்டிப்போனது ஞாபகம் இருக்கு. ஆனா, பஞ்சாரா ஹில்ஸானு ஞாபகம் இல்லை. நீங்க சொன்னதும் ஞாபகம் வந்துடுத்து.”

”திரும்பி வர்றப்ப கிளைமேட் செமையா இருந்துச்சு. நீங்ககூட, ‘ச்சே! இங்கெல்லாம் பாய் ஃப்ரெண்டுகூட வரணும்’னு சொன்னீங்க.”

********

அதற்குப் பிறகு எப்போது டீ குடிக்க அண்டர் கிரவுண்டு போனாலும் இந்துவும் உடன் வந்தாள்.

”ரொம்ப தம் அடிக்காதீங்க சார்.”

”எனக்கே பிடிக்கலை இந்து. ஆனா, இப்ப தேவையா இருக்கு. சின்னச்சின்ன, தனித்தனிப் பொழுதுகளை இது கனெக்ட் பண்ணிக்கிட்டே இருக்கு. இது இல்லைன்னா அந்த பிளாங்க்கான டைமை எப்படி கிராஸ் பண்றதுனு தெரியலை. இது இல்லைன்னா, லைஃப்ல கலரே போன மாதிரி ஆயிடுது.”

”உங்களால் முடியும் சார். நீங்களே விட்டுடுவீங்க.”

ஆழமாக இழுத்துவிட்டான்.

முகம் கொஞ்சம் சுருங்கி, பின் வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன் முகம் மலர்ந்தாள். ”சார், ஒண்ணு கேக்கட்டுமா?” – இந்துவின் முகத்தில் வெட்கம் உருவாக ஆரம்பித்து, உடல் முழுக்க வழிந்தோடி, பாதத்தின் வழியாக வெளியேறி ப்ரியனின் கால்களை வந்து நனைத்தது. முகத்தை மறைக்க அப்பிக்கொண்ட பாவனைகள் எல்லாம் உருகி வழிந்து உண்மையான முகத்தை வேறு வழியின்றி காட்டியபடியே பாவமாக நின்றாள் இந்து.

ப்ரியனுக்கு அவள் அந்த நிலையில் இருப்பது பிடிக்கவில்லை. அவள் என்ன கேட்கப்போகிறாள் என்பதும் ப்ரியனுக்குத் தெரிந்துவிட்டது. ”ம்… கேளுங்க!” என்றான்.

”நீங்க யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கீங்களா சார்?”

”அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை இந்து. ஆறாவது படிக்கிறப்ப டீச்சரை லவ் பண்ணேன். அவங்க பையன் என் கிளாஸ்மேட். அவன்கிட்டயே, ‘உங்க அம்மாவை நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்’னு சொல்லி, பஞ்சாயத்து ஸ்டாஃப் ரூம் வரைக்கும் போச்சு. டீச்சருங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே வார்ன் பண்ணி அனுப்பினாங்க. ஆனா, டீச்சர் முகம் இப்பவும் ஞாபகம் இருக்கு. அவங்க முகம் அப்ப சந்தோஷமாவும் பூரிப்பாவும் இருந்துச்சு!”

இதைச் சொல்லிவிட்டு சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்து அணைத்துவிட்டு, ஏதோ மறந்துவிட்ட பாவனையில் கடகடவெனப் படி ஏறி உள்ளே ஓடிவிட்டான் ப்ரியன். பின்னாலேயே வந்து ப்ரியன் அறைக்குள் நுழைந்தாள். கையில் நியூஸ் பேப்பர்.

”சார்… இன்னிக்கு சாயங்காலம் ஏதாச்சும் வேலை இருக்கா?”

”இல்லை.”

”சரி கிளம்புங்க. இந்த பியூட்டி பார்லர் போறோம். உங்க முகத்தை அழகுபடுத்துறோம்.”

”எனக்கு அதெல்லாம் புடிக்காது இந்து.”

”சரி, ஓப்பனா சொல்றேன். அழுக்கை எல்லாம் எடுக்கணும் சார். வாங்க” எனக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச்சென்றாள்.

அலுவலகத்தில் கதைகட்டுவார்கள் என ப்ரியனுக்கு நன்றாகத் தெரிந்தது.

ஃபேஷியல் முடிந்து வெளியே வந்தனர். பஞ்சாரா ஹில்ஸ். சுத்தமாக இருந்தது. அழகான சாலையில் பிரமாண்டமான மரங்கள். சற்றே மலைப்பாங்கான இடம் என்பதால், சாலை வாளிப்பான பெண் போல நெளிந்தும் ஏற்ற இறக்கத்தோடும் கிண்ணென இருந்தது. இருவரும் இணைந்து நடக்கும்போது செயற்கையான விலகலும் இல்லை; இயற்கையான ஒட்டுதலும் இல்லை. கையும் கையும் உரசிக்கொள்ள எக்கச்சக்க சாத்தியக்கூறுகள் இருந்தும், இந்துவின் சுடிதார் துணியில் மட்டும்தான் ஒருமுறை ப்ரியனின் சுண்டுவிரல் உரசியது. அந்த உரசல்கூட சுடிதார் இந்துவிடம் கம்யூனிக்கேட் செய்யும் அளவுக்கு இல்லை.

”கிளைமேட் செமையா இருக்கு இந்து” என்றான்.

”ச்சே! இங்கல்லாம் பாய் ஃப்ரெண்டுகூட வரணும் சார்” என்றாள் இந்து.

********

‘பாய் ஃப்ரெண்டுகூட வந்திருக்கணும்னு சொன்னது ஞாபகம் இருக்கு சார். நான் ஏதோ புத்திசாலித்தனமாப் பேசுறதா நினைச்சு உளறிட்டேன் சார் அப்ப. நீங்ககூட கொஞ்சம் கடுப்பான மாதிரி தெரிஞ்சது.”

”கடுப்பாகலை. அதுக்கு என்னா ரியாக்ட் பண்றதுனு தெரியலை. உடனே ஆட்டோ பிடிச்சிட்டோம். அப்புறம் ஒரு தடவை உங்களை போன்ல திட்டிட்டேன். நீங்ககூட அழுதீங்க. நீங்க அழுவீங்கனு என்னால் கற்பனைகூட செய்ய முடியலை. அதுக்கு அப்புறம் நாம பேசிக்கவே இல்லை.”

”ஆமா சார். நான் ஹைதராபாத்ல இருந்து திரும்ப சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆனதுக்கு அப்புறம், அடிக்கடி போன்ல பேசுவேன். அதுக்கும் கடுப்பாகித் திட்டினீங்க.”

”இல்ல… உங்க தம்பிகூட லைன்ல வந்து, ‘அக்கா அழறாங்க. இதுவரைக்கும் அவங்க அழுததே இல்லை. என்னன்னு சொல்லுங்க சார்’னு கேட்டார். ரொம்பக் கஷ்டம் ஆகிடுச்சு எனக்கு. அவரைச் சமாதானப்படுத்தி ஏதோ சமாளிச்சுட்டேன். உங்களை உடனே கூப்பிட்டேன். ‘தோ பாருங்க இந்து, நமக்கு என்ன பிரச்னை வேணா இருக்கலாம். தம்பியை இந்த மாதிரி விஷயத்துல கஷ்டப்படுத்தக் கூடாது. தம்பிக்கு அக்கா மேல மிகப்பெரிய மரியாதை இருக்கும்; அன்பு இருக்கும். அதை தயவுசெய்து கெடுத்துடாதீங்க. அவருக்கு அது வாழ்க்கை முழுக்க ரணம் ஆயிடும்’னு சொன்னேன்.

நீங்க, ‘ஸாரி சார். என் பிரச்னையும் என் தம்பி பிரச்னையும் நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னீங்க. குட்நைட் சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டேன். அதான் நாம கடைசியா பேசிக்கிட்டது. அதுக்கு அப்புறம், உங்களைத் திட்டினதுக்கு ஸாரி சொல்லணும், உங்களைப் பிடிக்காம இல்லைன்னு சொல்லணும், இன்னும் என்னென்னவோ சொல்லணும்னு நினைச்சேன். சரியா டைம் அமையலை!”

”நான் நாலு நாள் அழுதுட்டே இருந்தேன் சார். அப்பல்லாம் யோசிச்சேன், ஏன் இவர்கூட இவ்ளோ நேரம் போன்ல பேசறோம்னு? ஒரு தடவை நீங்க திருவனந்தபுரம் போயிட்டு இருந்தப்ப, விடிய விடியப் பேசிட்டு இருந்தேன் சார்!”

”ஆமா ஒரு தடவை ஹைதராபாத் போறதுக்கு முந்திகூட உங்களை உங்க சென்னை வீட்ல வந்து பார்த்துட்டுப் போனேன். நீங்க வெஜ்பிரியாணி சமைச்சு வெச்சிருந்தீங்க. அன்னிக்குகூட பஸ்ல போறப்ப விடிய விடிய விட்டுவிட்டுப் பேசிட்டு இருந்தீங்க.”

********

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹைதராபாத்தில் இருந்து சென்னை அலுவலகத்துக்கு வந்தான் ஜெயப்ரியன். வழக்கத்துக்கு மாறாக டிசைனர் புடவை அணிந்து, செமத்தியான மேக்கப்பில் கல்யாணப் பெண்போல வந்திருந்தாள் இந்து. ஜெயப்ரியன் தெருப்பொறுக்கிபோல அழுக்கு ஜீன்ஸுடனும் பயணக் களைப்பை கண்களில் தேக்கியும், முடிகளை பறக்கவிட்டும் ஸ்டைலாக உள்ளே நுழைந்தான். டாய்லெட் கழுவும் அம்மாவைத் தவிர அனைவருக்கும் தெரிந்தது இந்து, ஜெயப்ரியனுக்காகத்தான் இப்படி சீவி சிங்காரித்து வந்திருக்கிறாள் என்று. ஜெயப்ரியன் இதைப்போன்ற பொதுக் கிசுகிசு நுண்ணுணர்வு கொண்டவன் என்பதால், உள்ளே நுழைந்தவுடன் அந்தக் கிசுகிசு உணர்வை மோப்பம் பிடித்துவிட்டான். இந்துவைக் கண்டுகொள்ளாமல் பாஸ் அறைக்குச் சென்றுவிட்டான்.

ஆரவாரமாக பிசினஸ் பேசி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் தம் அடித்தான். இந்து வந்தாள்.

”போலாமா?” என்றான்.

”போலாம் சார்” என்றாள்.

காரில் செல்லும்போது, ”எங்கே போகணும் இந்து?” என்றான்.

”காபி ஷாப் போலாம் சார்.”

”நான் இதுவரைக்கும் காபி ஷாப் போனதே இல்லை இந்து… நீங்களே சொல்லுங்க.”

”இஸ்பஹானி சென்டர் போங்க சார்.”

அவளையே ஏதோ ஆர்டர் செய்யச் சொன்னான். டிப்டாப் ஆசாமி ஒருவர் வந்து, இன்று இரவு நடக்க இருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில், ஜோடிகள் கலந்துகொண்டால் 50 சதவிகிதம் ஆஃபர் என, ஒரு நோட்டீஸ் தூண்டிலை மூளையில் செருகினான்.

”ஐ ஹேவ் அனதர் புரோகிராம்” எனச் சிரித்துக் கொண்டே ஜெயப்ரியன் சொன்னதும் இந்துவுக்கு சோகப்படுவதா, கோபப்படுவதா எனத் தெரியவில்லை. இந்துவைத் திரும்ப டிராப் செய்ய காரில் செல்லும்போது, முதல்முறையாக காரில் ஏ.சி வேலை செய்யவில்லை. காரின் கண்ணாடியைக் கீழே இறக்க வேண்டியதாகிவிட்டது.

”எங்க சார் உங்க நியூ இயர் புரோகிராம்?”

”ஃப்ரெண்ட்ஸோடு போறேன். ஒரு குட்டித் தீவு மாதிரி. ஒரு வசதியும் இருக்காது. ஒண்ணுமே இருக்காது. யாரும் இருக்க மாட்டாங்க. தீப்பெட்டி, விளக்குக்கூட நாமதான் எடுத்துட்டுப் போகணும்!”

”அய்யோ… ஏன் சார் அதுமாதிரி இடத்துக்குப் போறீங்க?”

”இந்து, காத்துல உங்க முந்தானை விலகி இருக்கு, கொஞ்சம் சரிபண்ணிக்கோங்க.”

”ஸாரி சார்” என்றபடி சரிசெய்து கொண்டாள்.

டிராப் செய்துவிட்டு நியூ இயர் களேபரம் எல்லாம் முடித்து, ஹைதராபாத் செல்லும் அன்று, இந்து வீட்டுக்கு அழைத்திருந்தாள். சென்றான்.

வெஜ் பிரியாணி சமைத்து வைத்திருந்தாள்; பரிமாறினாள்.

”சார், இதுவரைக்கும் இப்படி யாருக்கும் செஞ்சது இல்லை.”

”தம்பி எங்க இந்து?”

”ஆபீஸ் போயிருக்கான்.”

”நான் வர்றது தெரியுமா?”

”தெரியும் சார்… இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிகூட போன் பண்ணி, ‘சார் வந்துட்டாரா?’னு கேட்டான்.”

சாப்பிட்டு முடித்து பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளாமல், சரேலெனக் கிளம்பினான்.

”கிளம்பறேன் இந்து, பஸ்ஸுக்கு டைம் ஆயிடுச்சு.”

”என் மேல ஏதாவது கோபமா சார்?”

”உங்க மேல என்ன கோபம் இந்து? பை.”

அன்று இரவு ஹைதராபாத் பேருந்தில் செல்லும் போது இரவு முழுக்க சிக்னல் கிடைக்க கிடைக்க, விட்டுவிட்டு பேசியபடியே இருந்தாள் இந்து.

********

”ஆமா சார், விடிய விடியப் பேசிட்டு இருந்தது ஞாபகம் இருக்கு. நீங்ககூட திருப்பதியில் சாப்பிடப்போறேன். கொஞ்சம் நேரம் கழிச்சு கூப்பிடுங்கனு சொன்னீங்க. நீங்க ஹைதராபாத் கிளம்பிப்போன மறுநாள் சாயங்காலம் திரும்ப உங்களைக் கூப்பிட்டுப் பேசினேன். அன்னிக்குத்தான் உங்ககூட போன்ல பேசறப்ப முதல் தடவையா செல்லமா உங்களை, ‘ராஸ்கல்’னு சொன்னேன்.”

”அப்ப எனக்கு ஏதோ சரியாத் தோணலை. நான் அதைக் கண்டுக்காத மாதிரி, ‘சொல்லுங்க இந்து… என்ன சொல்றீங்க… புரியலை’னு சொன்னேன். நீங்க உடனே, ‘ஸாரி சார்’னு சொல்லிட்டீங்க. அதோட போனை கட் பண்ணிட்டோம்.”

”கட் பண்ணிட்டு அன்னிக்கு நைட் ஃபுல்லா எனக்குத் தூக்கம் வரலை சார். அன்னிக்கு நைட் 12 மணிக்குத் திரும்ப போன் பண்ணப்பதான் செமையா திட்டிட்டீங்க!”

”இல்லீங்க… அன்னிக்கு ஃப்ரெண்ட்ஸோடு தண்ணி அடிச்சிட்டு இருந்தேன். நீங்க கூப்பிடீங்க. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், ‘என்னா மச்சி… ஃபிகரா? நைட் 12 மணிக்கு கால்… மச்சம்டா’னு கிண்டல் பண்ணானுங்க. ரூமைவிட்டு வெளியில வந்து திட்டிட்டேன் உங்களை.”

”அப்படித் திட்டினதுக்குத்தான், அப்புறம் நான் கல்யாணப் பத்திரிகை வைக்க என்னோட சென்னை ரூமுக்குக் கூப்பிட்டப்ப, நீங்க வந்து ஒரு மாதிரி சமாதானப்படுத்தினீங்களே சார். ஸாரிகூட சொன்னீங்க!”

********

ஜெயப்ரியனின் அலுவலகம் வந்து, காரில் இந்துவை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். காபி போட்டுக் கொண்டிருந்தாள். ஜெயப்ரியனும் கிச்சனில் சாய்ந்து நின்றுகொண்டு, ‘கல்யாணம், எப்படி மாப்பிள்ளை பார்த்தது’ எனப் பேசிக்கொண்டு இருந்தான். காபி போட்டு எடுத்துக்கொண்டு இருவரும் கிட்டத்தட்ட லேசாக உரசிய வண்ணம் கிச்சனில் இருந்து வெளியேறினர். ஒரு நொடி இருவரும் அந்தத் தருணத்தில் தாமதித்தார்களா? தெரியவில்லை. காபி கொட்டிவிடும் என்பதால்கூட, இருவரும் மெதுவாக நடந்திருக்கலாம். எதிரெதிர் சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

”எப்படி இந்து, மாப்பிள்ளை பார்த்தீங்க?”

”நானேதான் சார் பார்த்தேன். வீட்ல பார்க்கிறவன் எல்லாம் நேரோ மைண்டட். நானே மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணி, இவனை பிரேசில்ல சந்திச்சேன் சார்.”

”இந்தியனா?”

”ஆமாம் சார்.”

”ஒண்ணும் இல்லை இந்து. நான் போன்ல ரொம்ப நாளுக்கு முன்னால திட்டியிருப்பேன் உங்களை. அது வேற சூழ்நிலை. உங்க மேல எரிச்சல்லாம் இல்லை. இப்பவும் இதை ஏன் சொல்றேன்னா, உங்க மைண்ட்செட்ல எந்தக் குற்றவுணர்வும் இருக்கக் கூடாது. அதனாலதான். உங்க மேல எந்தத் தப்பும் இல்லை. ஐ’ம் ஸாரி.”

”அதை விடுங்க சார். நான் அதை அப்பவே மறந்துட்டேன்.”

காபி குடித்து வாழ்த்திவிட்டு, ‘பை இந்து’ என, கொஞ்சம் சாஃப்ட்டாகவே சொல்லி மெதுவாக வெளியேறினான் ஜெயப்ரியன். காரை பொறுமையாக ரிவர்ஸ் எடுத்து கிளம்பிச் செல்லும் வரை, புன்முறுவலோடு மொட்டை மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து. பொறுமையாகச் சென்ற ப்ரியன், இந்துவின் தெரு முடிந்ததும் சரேலென வேகத்தைத் தூக்கினான்.

********

”ஸாரி சொன்னது நல்லா ஞாபகம் இருக்கு இந்து. அப்படிச் சொன்னதும்தான் எனக்கும் கொஞ்சம் திருப்தி. நான் உங்க ரூமுக்கு வந்தது மாதிரி, நீங்க அதுக்கு முந்தியே என் பெங்களூர் ரூமுக்கு வந்தீங்களே… ஞாபகம் இருக்கா இந்து.”

”ஸ்கூட்டர்லதானே சார்? ஞாபகம் இருக்கு. நீங்க திட்டினதுக்கு அப்புறம், பெரிய பிரேக். ரொம்ப நாள் கழிச்சு, அங்கதான் உங்களைப் பார்க்க வந்தேன்.”

”ஆமா இந்து, நான்கூட உங்களை மெயின் ரோட்லேயே நிக்கச் சொல்லிட்டு, ரூமில் இருந்து நடந்து வந்தேன். திரும்ப உங்களை ரூமுக்குக் கூட்டிட்டுப் போறப்ப, ஸ்கூட்டர் பின்னால ஆம்பளை யாரையும் ஏத்த மாட்டேன்னு சொன்னீங்க. நடந்தே போனோம் ரூமுக்கு.”

********

ரூமுக்குள் கீழே பாய் போட்டு அமர்ந்து இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜெயப்ரியன் திட்டியதற்கு ‘ஸாரி’ கேட்டிருக்கவில்லை. இருவரும் அந்த மேட்டரைப் பற்றி பேசவே இல்லை. வேறு ஏதோ பேசியபடி இருந்தனர். ஒருகட்டத்தில் ஜெயப்ரியன் மொபைலை எடுத்து இந்துவை போட்டோ எடுத்தான். கேமரா மொபைல் ஃப்ளாஷ் அடித்த காலம் அது. போட்டோ எடுத்ததும், இந்து திடீரென அந்த மொபைலை ஜெயப்ரியன் கையில் இருந்து பிடுங்கப் பாய்ந்தாள். கடைசி நேரத்தில் சுதாரித்த ஜெயப்ரியன், மொபைலை மறைத்துக் கொண்டான். இந்து அந்த மொபைலை ப்ரியன் கையில் இருந்து தொடர்ந்து பிடுங்க, சிரித்தபடி விளையாட்டாக முயன்று கொண்டிருந்தாள்.

தானாக இருவரும் கட்டி அணைத்துக்கொள்ளும் சூழ்நிலைதான். இருவரின் கைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டும், அவளின் மார்பு லேசாக இவன் மீது பட்டு ஒதுங்க, இருவரின் முகங்களும் அருகருகே வர, கட்டி அணைத்துக்கொள்வதோ முத்தமிடுவதோ நடக்க ஏதோ ஒன்று குறைந்தது அந்தக் கணத்தில். அந்தக் கணத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரியாமல், இந்து பரிதாபமாக மொபைலைப் பிடுங்கியபடியே இருந்தாள். அந்தக் கணத்தின் முடிவுரைக்காக ஜெயப்ரியன் மொபைலை அவளிடம் விட்டுவிட்டான்.

”இந்து, அதுல என் ஃப்ரெண்ட்ஸ் நியூடு போட்டோஸ்லாம் இருக்கு. டூர் போயிருக்கும்போது குடிச்சிட்டு டிரஸ் இல்லாம கலாட்டா பண்ணதை எல்லாம் எடுத்துவெச்சிருக்கேன். பார்க்காதீங்க” என்றான்.

உடனே அந்த மொபைலை அவனிடம் கொடுத்துவிட்டாள் இந்து.

கோயிலில் பிரசாதம் வாங்கித் தின்றுவிட்டு பிராகாரத்தில் அமைதியாக அமர்ந்திருப்பதைப்போல, இருவரும் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தனர்.

”இந்து, நான் ஸ்மோக் பண்ணட்டுமா?”

”நானும் கிளம்பறேன் சார்!”

ஸ்கூட்டி நின்று கொண்டிருக்கும் மெயின் ரோடு வரை கொண்டுபோய் விட்டு வந்தான். பை சொல்லிவிட்டு வேகமாகப் பறந்தாள். திரும்ப ரூமுக்கு நடந்துவரும்போது, மூணு ஃபைவ் தௌஸண்டு!

********

”ஆமாம் சார்… நடந்து போறதுக்கு முன்னாடி, ‘பைக்கை இங்க நிறுத்தினா சேஃபா இருக்குமா?’னு உங்ககிட்ட கேட்டேன். ‘பொண்ணுங்களைவிட பைக் சேஃபா இருக்கும் பெங்களூரில்’னு சொன்னீங்க. அதுக்கு முன்னாலேயே ஹைதராபாத்தில் இருந்தப்பவே உங்க ரூமுக்கு ஒரு தடவை வந்திருக்கேன் சார்.”

”ஆமாம், ஷில்பா ராமம்னு கைவினைப் பொருட்காட்சி. நாட்டுப்புற விளையாட்டு எல்லாம் நடக்குமே, அதைப் பார்க்கப் போறதுக்காக வந்திருந்தீங்க.”

”நீங்க குடிச்சிட்டுவெச்சிருந்த வாட்69 விலையைப் பார்த்துட்டுக் கடுப்பானேன் சார்.”

”ஆமா! ‘இந்த விலைக்கு நான் ஒரு டிசைனர் சுடிதார் வாங்கியிருப்பேன் சார்’னு சொன்னீங்க. அன்னைக்கு அந்தப் பொருட்காட்சியில் மட்டும், இப்ப சொல்றதுக்கு எனக்கே காம்ப்ளக்ஸாதான் இருக்கு. கொஞ்சம் ரெண்டு பேரும் கிட்டக்கிட்ட நின்னு உரசிகிட்டோம்.”

”ஆமா சார், நானும் உங்க கையைப் பிடிச்சுக்கிட்டேன்.”

”ஞாபகம் இருக்கு.”

”அப்ப ஏன் சார், லவ் யூ சொல்லலை… திட்டினீங்க?”

”இல்ல இந்து, அப்ப எனக்கு லவ் எல்லாம் தோணலை. ‘கரியர்ல எப்பிடி செட்டில் ஆகலாம், அதுக்கான வழி எது?’னு பல குழப்பங்கள் இருந்துச்சு.”

”இல்ல சார், அதுக்கு அப்புறம் ஆறு மாசத்துக்குள்ளயே கல்யாணம் பண்ணிட்டீங்க சார். அதுக்குள்ள குழப்பம் எல்லாம் தீர்ந்து, கரியர்ல செட்டில் ஆயிட்டீங்களா?”

”இல்ல இந்து, அது அப்ப ஒரு மாதிரி, திடீர்னு ஏதேதோ சேஞ்சஸ் வந்து…”

”சரி விடுங்க சார். எவ்வளவோ சான்ஸ் கிடைச்சது. ஒரு கிஸ்கூட நாம அடிச்சுக்கலை. கொஞ்ச நாள் முன்னால் ஹைதராபாத் வந்திருந்தப்ப, ‘இந்த பார்க்லதான் என் லவ்வரை ஃபர்ஸ்ட் கிஸ் பண்ணேன்’னு என் ஹப்பி சொல்றான். எனக்கு சொல்ல அப்பிடி எதுவும் இல்லை. நீங்க ஏதாவது பண்ணியிருந்தா நானும் பதிலுக்கு இங்கதான் ஃபர்ஸ்ட் என் லவ்வரை கிஸ் பண்ணேன்னு காட்டியிருப்பேன்.”

”இல்ல இந்து… நானும் ஏதோ ரொம்ப வயசுக்கு மீறி, பெரிய கிரிப்பா மெச்சூர்டா தேவையில்லாம இருந்திருக்கேன். நீங்க சொல்ற மாதிரி, பஞ்சாரா ஹில்ஸில் இருந்து நடந்து வந்தப்பவோ, பொருட்காட்சியிலயோ அட்லீஸ்ட் கிஸ் பண்ணிருக்கலாம். மிஸ் பண்ணியாச்சு. ஆனா அதுக்காக, அப்படியே கிஸ் பண்ணியிருந்தாலும், உங்க ஹப்பிகிட்ட சொல்ல முடியாதுங்க. பொண்ணுங்க ஜாலியா எடுத்துக்குற மாதிரி ஆம்பளைங்க எடுத்துக்க மாட்டாங்க.”

”இல்ல சார், என் ஹப்பி அப்பிடி இல்லை! சாதாரணமா எடுத்துப்பான்.”

”ஓ… ஓ.கே-ங்க, ஸாரி.”

”போகட்டும் சார், நாம அடுத்த ஜென்மத்துல பார்த்துக்கலாம். இப்பவே ரிசர்வ் பண்ணி வெச்சிக்கலாம். ஹா… ஹா… ஹா!”

”ஓ.கே இந்து. ரொம்ப லேட் ஆயிடுச்சு. டேக் கேர். பை.”

போனை கட் செய்துவிட்டு சத்தம்போட்டுச் சொன்னான், ”இந்த ஜென்மமே, நீ சொன்ன அடுத்த ஜென்மம்தான் இந்து.”

நான்காவது பியர் பாட்டில் கூலிங் இறங்கிப்போய் காத்துக்கொண்டு இருந்தது.

இந்த உரையாடல் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு, இந்துவை போனில் அழைத்தான் ஜெயப்ரியன்.

”இந்து, நாம கடைசியா ஒரு மாசத்துக்கு முன்ன போன்ல பேசினோமே?”

”ஆமா சார்.”

”அதுக்கு முன்னாடி நாலைஞ்சு தடவை பேசிருப்போம். டிப்ளமேட்டிக்கா பேசியிருப்போம். ஆனா, போன தடவைதான் கொஞ்சம் ஃப்ராங்க்கா பேசினோம்!”

”ஆமா சார், கரெக்ட்தான்.”

”அப்ப, எனக்குக் கொஞ்சம் தெளிவா இல்லை. மறந்துட்டேன். சாதாரணமாப் பேச ஆரம்பிச்சு, எப்படி அந்த டெம்ப்ளேட்டாப் பேசறது போயி, கரெக்டா எந்த இடத்துல இதைப்போல பேச ஆரம்பிச்சோம்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

”கரெக்ட்டா உடனே ஞாபகம் வரலை சார்.”

”இதுவா சார், இப்பவா சார்…” எனப் பல தருணங்களைச் சொல்லிப் பார்க்கிறாள் இந்து.

”இல்லைங்க இல்லைங்க, இதுக்கெல்லாம் முன்னாடி, எங்கேயோ, எப்படியோ ஸ்டார்ட் பண்ணோம்” என்று சொல்லியபடி இருந்தான் ஜெயப்ரியன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த உடைந்த தருணத்தைத் தேடியபடி இருந்தனர் இருவரும். கடைசி வரை அந்தத் தருணம் கிடைக்கவே இல்லை!

– நவம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *