காணாமலே காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 6,008 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மங்கா தேவி அன்று என்னவோ அடங்காத மகிழ்ச்சி கொண்டவளாய், அரண்மனைக்குள் ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாமல் அலைந்து கொண்டிருந்தாள். அத்தை குந்தவையை அன்று தான் முதல்முதலாகச் சந்தித்தாள். குந்தவை அவளை அன்புடன் அணைத்துக்கொண்டு ஏதேதோ கேட்டதற்கு வெட்கத்துடன் அரை வார்த்தையாகவும் குறை வார்த்தையாகவும் பதில் சொன்னாள். பல கலைகளைப் பயின்றதோடு, யானையேற்றம் குதிரையேற்றம் வில் வித்தை முதலியனவும் கற்ற வளுக்கு அத்தையைக் கண்டவுடன் ஒரு சாதாரணப் பெண்போல ஏன் அவ்வளவு வெட்கம் ஏற்படவேண்டும்? அதற்கு முன்னெல்லாம் அரண்மனையில் செல்வச் சிறுமியாக அட்டகாசம் செய்துகொண்டி ருந்தவள் அன்று ஏன் அடங்கி ஒடுங்கி அமரிக்கை உருவெடுத்தாற் போல இருந்தாள்?

அத்தான் ராஜராஜன் கண்ணில் அவள் அதுவரையில் படவில்லை. குந்தவை வேடிக்கையாக அவள் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டு ‘உன் அத்தானைப் பார்த்தாயோ? எப்படியிருக்கிறான்?’ என்று கேட்ட பொழுது அவளை அறியாமல் அவன் மெய்சிலிர்த்தாள். முகம் சிவக்க, மௌனமாகத் தலை குனிந்துகொண்டு நின்றாள்.

அவனுடைய தடையுடை பாவனைகளைத் தன் மனோபாவப்படி கற்பனை செய்து பார்த்துக்கொண்டே இருந்தாள். தன்னைப்பார்த்ததும் தன்னைப்பற்றி அவன் என்ன எண்ணுவான் என்பதையும் எண்ணிப் பார்க்க முயன்றாள். என்றுமில்லாத வழக்கமாக அன்று அம்மங்கா தேவி நிலைக்கண்ணாடியருகில் வெகுநேரம் நின்று தன்னைச் சீர்திருத்திக் கொண்டது தோழிகளுக்குக் கேலிசெய்ய இடம் கொடுத்தது.

ராஜேந்திர சோழன் வடக்கே திக்விஜயம் செய்து திரும்பின பிறகு புதிதாக நிர்மாணம் செய்த சோழ நாட்டுத் தலைநகர் கங்கைக்கொண்ட

சோழபுரத்தில்” அன்று ஒரே கோலாகலம். சோழ தேசத்தையே யாரோ ஒருவர் சம்புடம் போலத் திறந்து அங்கே கொட்டிவிட்டதுமாதிரி ஜன சமூகம் இடங்காணாமல் கூடியிருந்தது. கங்கை கொண்ட சோழீச்சுவரம் என்ற சிவாலயம் கட்டி முடிந்து அன்று கும்பாபிஷேகம்.

சோழ சாம்ராஜ்யத்தின் சிற்றரசர்கள் எல்லோரும் அங்கே வந்திருந்தார்கள். ராஜேந்திரனின் சகோதரி குந்தவையும், அவளுடைய கணவன் வேங்கியரசன் விமலாதித்தியனும் இளவரசன் ராஜராஜனும் வந்திருந்தார்கள்.

மாளிகைக்கு அருகேதான் கோவில். இரண்டிற்கும் சமீபத்தில் சமுத்திரம்போல அவைகொண்டு கொந்தளித்துக் கொண்டிருந்தது ராஜேந்திரனால் புதிதாகக் கட்டப்பட்ட சோழ கங்கம் அல்லது பொன்னேரி என்ற பெரிய ஏரி. தெற்கே கொள்ளிடக் கரையிலிருந்து வடக்கே உடையார் பாளையம் வரையிலுள்ள பிரதேசம் முழுவதையும் வளப்பம் ததும்பும் வரிசை நாடாக மாற்றியது அந்த ஏரிதாள். அறுபது மைல் நீளமுள்ள வாய்க்கால் ஒன்று கொள்ளிடத்திலிருந்து வெள்ளத்தைக் கொண்டு வந்து அதில் கொட்டிற்று. அதிலிருந்து பல சிறு கால்வாய்கள் பிரிந்து சென்று தாடு முழுவதும் நரம்புகள்போல ஓடின.

மாளிகையைச் சுற்றியிருந்த மதிற்சுவரின் அருகே அகண்ட கால்வாய் ஒன்று வழிந்தோடிக்கொண்டிருந்தது. கரையோரமாக இருந்த விஸ்தார மான அரண்மனைத் தோட்டத்திற்குள்ளும் குறுக்கும் நெடுக்குமாகப் பல சிறு கால்வாய்கள் சென்று கொண்டிருந்தன. அவைகளிலும் புது வெள்ளத்தின் சென்னிறமான ஜலம் மிதந்து சென்று கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நீரும் நிழலுமான தோற்றம்.

ஆனிமாதம். இளவேனில் எங்கும் பரவி கனிந்து நின்ற பருவம். சிறந்த சிற்பிகளைக் கொண்டு, தஞ்சைக் கோவிலைப்போல உருவம் கொண்டதாக ராஜேந்திரனால் கட்டப்பட்ட அந்தக் கோவிலின் சித்திரப் பாடிற்கு இணையற்ற ஒரு பகைப் புவனாக நிற்கவே வந்ததுபோலிருந்தது அந்த இயற்கைக் காட்சி. கோவிலிலும், மாளிகையிலும், நகரிலும் நாட்டிலும் சோழ இலச்சினையுடன், வசந்த காலத்தின் இறுதியில் ஏடுகட்டி நிற்கும் இனிப்பும், கலகலப்பும், ஆனந்தமும் கொடிகட்டிப் பறந்தன. மனிதனும் இயற்கையும் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்ததுபோல அங்கே உயிரும் உணர்ச்சியும் பொன்னேரியைப் போல பொங்கி வழிந்து கொண்டிருந்தன.

ராஜராஜன் அந்த அரண்மனைத் தோட்டத்திலுட்கார்ந்துகொண்டு மெய்மறந்தான். சோழ நாட்டில் சொட்டும் இனிப்பு ஒவ்வொரு புலனிலும் ஏறி அவனை மது மயக்கம் கொள்ளச் செய்தது. அந்த சோழ நாடென்னும் சோலையில் வளர்ந்துவந்த கிளியை அவன் இன்னும் பார்க்கவில்லை. கண்டதும் காதல் என்பார்கள். ராஜராஜன் காணா மலேயே காதல் கொண்டு விட்டான். நாடும், இடமும், காலமும் அம்மாங்காவை அவன் மனக்கண்முன் சித்தரித்து நிறுத்தின. அவன் அவளைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமலிருந்தது.

‘இந்த எழிலின் நடுவே எழிலைத் தவிர வேறென்ன பிறக்க முடியும்? மேகத்தில் மின்னலைத் தவிர வேறென்ன பிறக்கும்? என்னைச் சுற்றி யிருக்கும் இந்த சுகச் சூழ்வின் சாரமாகத்தான் இருப்பாள் அம்மங்கா! அதில் என்ன சந்தேகம்?’ என்று சொல்லிக் கொண்டான் ராஜராஜன்.

அந்த இயற்கை வாவண்யம் அவனுடைய புலன் வாயில்களில் தீ போலத் தாக்கி அவனுடைய பால் உள்ளத்தைப் பொங்கச் செய்தது. அந்தப் பூரிப்பில் அவன் பரவசமானான்.

மங்கள வாத்தியங்கள் எங்கும் கோஷித்துக் கொண்டிருந்தன. ஜன சமூகம் ஒரு கடல் போலக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. எல்லாச் சத்தங்களுக்கும் மேலாக அதிர்வெடிச் சத்தம் அடிக்கடி வரிசை வரிசை யாகக் கிளம்பி இடிபோல எதிரொலித்தது. அவை ஒன்றிலும் அவன் மனது செல்லவில்லை. ராஜேந்திரனுடைய செயற்கையாகிய அந்த ஆடம்பரமான உற்சவத்தின் காம்பீரியத்தில் அவன் மனது ஈடுபட வில்லை. எல்லோரும் கும்பாபிஷேக சமயம் நெருங்கிவிட்டதென்று கோவிலுக்குப் போனார்கள். ராஜராஜன் போகவில்லை. அவன் பின் தங்கிவிட்டான்.

அவன் இருந்தது பிரகிருதியின் கோவில், அதில் தித்தியம் கும்பா பிஷேகம். அதை விட்டுவிட்டு அவன் வேறெங்கு போகவேண்டும்?

பிரகிருதியின் சௌந்தரியம் இச் சோழநாட்டைப் போல வேறெங்கும் இவ்வளவு சோபையுடனில்லை! கோதாவரியும் கிருஷ்ணாவும் அணைத்து வளர்க்கும் என் வேங்கி நாடு கூட இதற்கு அப்புறந்தான். இவ்விடத்தில் தான் பருவம் வந்த மடந்தையிடம்போல அழகு இயற்கையின் தேகத்தில் பூத்து நிற்கிறது. மரம் செடி கொடிகளிலிருக்கும் தளதளப்பின் ஈரம் நித்திய யௌவனத்தின் பசையைக் கொண்டிருக்கிறது. காதலும் அதன் கனிவும் இங்கே நிழல் தட்டி நிற்கின்றன. இந்தச் சௌந்தரியம் என் கண்ணுக்கு அம்மங்காதேவி சாயல் கொண்டது போலத் தென்படு கிறது. இது என்னுடையது! இந்நாடு என்னுடையது! அம்மங்கா என்னுடையவள்! அம்மங்கா!’

ராஜராஜன் மெய் மறந்தவனாய் வாய்விட்டுக் கத்திவிட்டான். கத்தின பிறகுதான் அவனுக்குச் சுய நினைவு வந்தது. வெட்கம் கொண்டவனாய் யாராவது பார்த்து விட்டார்களோ என்று சுற்று முற்றும் கவனித்தான். யாரும் அருகே இருந்ததாகத் தெரியவில்லை.

அவ்வளவு ஜாக்கிரதையாக மரத்தின் பின்னால் பதுங்கியிருந்து கொண்டு அம்மங்காதேவி ராஜராஜன் பேசினதைக் கேட்டுக்கொண்டி ருந்தாள். அவள் மார்பு அடித்துக்கொண்ட வேகம் அவளைத் திடுக்கிடச் செய்தது. சத்தம் செய்யாமல், கைகால் அசைக்காமல் இன்னும், ஒரு நிமிஷம்கூட அங்கே பதுங்கியிருக்க முடியாதென்றும் தோன்றியது. அவளுக்கு.

மனக்கிளர்ச்சியைத் தாங்கமாட்டாமல் அவள் தோட்டத்திற்கு வந்தாள். அரண்மனைக்குள் இருந்தால் கோவிலுக்கு வரும்படி நிர்ப்பந்திப்பார்கள் என்று அவளுக்கு பயம். கோவிலுக்குப் போகக்கூடா தென்பதில்லை. அதன் வேலை நடக்கும்போது அவள் அதில் எவ்வளவோ சிரத்தை எடுத்துக்கொண்டு சிற்பிகளுக்குக்கூட யோசனைகள் கூறியிருக்கிறாள். ஆனால், அவளுடைய மனம் இருந்த நிலையில் கோவிலுக்குப் போவதுகூட பூஜை வேலையில் கரடி ஓட்டுவது போன்றதாகப் பட்டது.

அவ்வளவு நாள் அவள் கண்டறியாத ஒரு உணர்ச்சிப் பெருக்கு அவளை நிலை கொள்ளாமல் செய்தது. அதை அவள் இன்னதென்று நிச்சயமாக நிர்ணயம் செய்ய முடியவில்லை. பரிசீலனை செய்து பார்த்தாள். அன்று கும்பாபிஷேகம் என்பதினாலா அந்த உள்ளக் களிப்பு? இல்லை! அத்தையும் மாமனும் வந்திருந்தார்கள் என்றதனாலா? இல்லை! ராஜராஜன் வத்திருந்ததாலா? எப்படி இருக்க முடியும்? அவனை இன்னும் கண்ணால் கூடப் பார்க்க முடியவில்லையே! அவன் எப்படி இருப்பான் என்று கூடத் தெரியாதே! ஆனால், அவனைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் மட்டும் வெட்கமின்றி தலையெடுத்ததை அவள் உணர்ந்தாள். அத்தை குந்தவையைப்போல இருப்பான் என்று கேள்விப்பட்டிருந்தாள். அத்தையைப் பார்த்ததும் அவள் மனதைப் பறிகொடுத்து விட்டாள் – ராஜராஜனுக்கு. ஆகையால் அவள் களிப்பு கொண்டாள். தன் மனதைப் பறிகொடுத்ததற்காகவா?’

சோலை மலரைப்போல தன் உள்ள இதழ்களை விரித்து மணத்தை வெளியே வீசி எறிந்தாள். அந்தத் தியாகத்திற்குப் பிறகு அவன் மனது பளு குறைந்ததுபோவ லேசாக மிதந்தது. ஆனால், ஒரு கவலையு மிருந்தது. ஒரு பரபரப்பும் துடிப்பும்கூட இருந்தது. அந்த மணம் காற்றில் கலந்து வீணாகாமல் ராஜராஜன் புலனில் போய்த் தாக்குமா என்று ஏங்கினாள்.

‘ராஜராஜன் அம்மங்கா!’ என்று பிரிவாற்றாமை கொண்ட பறவை யைப் போல அலறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மங்காதேவி இனகினாள். அந்தத் தாபம் நிறைந்த அழைப்புக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை அவளால்.

அங்கங்களை மயிர்க்கூச்சல் உதறியெடுக்க அவள் மெள்ள மறைவி லிருந்து வெளியே வந்தாள். அவளுடைய புது ஆடை செய்த சத்தத்தைக்

கேட்டு ராஜராஜன் திரும்பிப்பார்த்தான். அழகு அவன் முன்னே உருவெடுத்து வந்து நின்றதோ என்று பிரமை கொண்டான்.

மாநிறமான உடலில் நன்றாக மஞ்சள் பூசிக் குளித்து நெற்றியில் குங்குமம் இட்டிருந்தாள். நன்றாகக்கூட உலராத கூந்தலை மேலாக எடுத்துச் சொருகி அதில் மலர் வைத்து முடித்திருந்தாள். காதணிகளும் தோள்வளைகளும் கை வளைகளும் மரங்களின் நிழலின் நடுவே பாய்ந்து வந்த சூரிய கிரணங்களில் நவரத்தின காத்தியுடன் ஜொலித்தன. மஞ்சள் பட்டு ஆடை உடுத்திருந்தான். கழுத்தில் சம்பங்கிப் பூமாலை அணிந்திருந்தாள்.

‘அம்மங்கா’ என்றான் ராஜராஜன்.

‘அத்தான்!’ என்று மெல்லிய குரலில் அம்மங்கா தேவி பூ திறந்து பேசுவதுபோல மொழிந்தாள்.

அவ்வளவுதான்! பலஹீனமான வார்த்தைகள் அவர்களுடைய நெஞ்சி லிருந்து கிளம்பி உதடுகளினருகே வந்து வெட்கிப் பின் வாங்கின. இருவரும் பரஸ்பரம் பரவசத்தால் சில நிமிஷங்கள் பேச்சற்று நின்றார்கள். அந்த மகா மௌனத்தில் இருவர் உள்ளங்களும் உரையாடின. அம்மங்காதான் முதலில் பிரக்ஞையடைந்தாள். ‘கோவிலுக்குப் போகவில்லையா?’ என்றாள். ‘கோவிலுக்கா! நாம் நிற்பது கோவிலில் தானே?’

‘கோவிலா’

‘இது பிரகிருதியின் சன்னதி!”

அம்மங்கா பரவசம் கொண்டவள்போலக் கண்ணெடுத்து அந்தச் சோலையைச் சுற்றிப் பார்த்தாள். ஆனந்தம் அதில் எதிரொலித்து நிறைந்திருந்தது.

பட்சிகள் சகல வாத்தியங்களையும் வாசித்தன. ராஜராஜன் அம்மங்காவின் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான்.

– 1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *