கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 4,257 
 

பாகம் 1 | பாகம் 2

நீலகிரி மலை பச்சை பசேல் என தேயிலைத் தோட்டங்களையும் அழகிய ஆழமான பள்ளத்தாக்குகளையும், அருவிகளையும் தன்னகத்தே கொண்டு கம்பீரமாய் நிற்கிறது. ஹோண்டா சிட்டி கார் ஊசி முனை பென்டுகளில் லாவகமாய் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

“சீனு அண்ணே ஏஸியை அணைச்சுட்டு விண்டோ கண்ணாடியை இறக்குங்க” என டிரைவரிடம் கூறியதும் டிரைவர் சீனு கார் ஓட்டியபடி “ஆகட்டும் தம்பி ” என்றார்.

கார் ஜன்னல் கண்ணாடி கீழ் இறங்கியதும் பரபரவென வீசிய சிலீர் காற்றில் அவன் சுருள் முடி பரக்க கண் மூடி இரசித்தான் கதையின் நாயகன் தீபக்.

தீபக் பார்த்தசாரதி.

காலேஜ் பையன் தோற்றம். எடுப்பான முகம். ஒருமுறை பார்த்த பெண்கள் மறுதடவை நிச்சயம் பார்க்கத் தூண்டும் ஈர்ப்பு இவனிடமிருந்தது. பெரிய கண்கள். கூர்மையான நாசி. சிவந்த இதழ்களையுடைய வாய்‌. மாநிறம். இத்தனை நாள் ஜெர்மனியில் படித்துக் கொண்டிருந்ததால் உடலில் ஒரு மினுமினுப்பு. கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் இறங்கி இதோ இப்போது தான் சுடச்சுட இல்லை..யில்லை குளிரக் குளிர குன்னூரிலிருக்கும் தன் எஸ்டேட் நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.

“அட வசம்பள்ளத்தில் கான்கிரீட் ரோடு போட்டுட்டாங்களே!” தீபக்.

சீனு “பரவாயில்லையே தம்பி நம்ம ஊர் இடம் பேரெல்லாம் நினைவு வச்சிருக்கீங்களே!”

தீபக் சிரித்து “இப்ப கொஞ்ச வருஷம் தானே பாரின். பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கேதானே. மறக்க முடியுமா? நம்ம ஊரில் என்ன விசேஷம் அண்ணே?”

“பெரிசா ஒண்ணுமில்லை தம்பி. ஆட்சி மாறும் போது பல சலுகைகள் நம்ம ஊருக்கு இப்ப கிடைக்குது. இதோ தெருவுக்குத் தெரு சிமெண்ட் ரோடு.டூரிஸ்ட் நிறைய வர்றாங்க.”

தீபக் “காட்டேரி ஏரி இருக்கா? ஏன் கேட்கிறேன்னா இப்ப பல ஊரில் ஏரிகள் பாழாப் போகுது. அதான் கேட்டேன்.”

சீனு “இப்ப தூர்வாரி சரி பண்ணிட்டாங்க.”

தீபக் “என்னிக்கும் மாறாதது இந்த குன்னூர் குளிரும். மலைகளின் அழகும் தான் இல்லே? அதுசரி வீட்டில் என்ன விசேஷம்?”

சீனு “என்ன தம்பி என்கிட்ட கேட்கிறீங்க? அம்மா சொல்லிருப்பாங்க இல்லே? நான் போர்டிகோவுடன் நிப்பவன்.”

தீபக் “என்ன இப்படி சொல்லிட்டீங்க அண்ணே. நீங்க நம்ம குடும்பத்து ஆளு மாதிரி. சின்னப் புள்ளையிலிருந்து பார்க்கிறேன்.நம்ம வீட்டு விஷயம் எல்லாம் தெரியும் உங்களுக்கு. அதுக்காக அட்வாண்டேஜ் எடுத்துக்க மாட்டீங்க. எல்லாம் தெரிஞ்சாலும் தெரியாதவர் போல இருப்பீங்கன்னு அடிக்கடி அப்பா சொல்லுவார். அப்பா இறந்த பிறகு எனக்கு ஜெர்மனி போக வாய்ப்பு கிடைச்சப்ப நான் தயங்கினேன். அம்மா தைரியம் சொல்லி அனுப்பினாங்க.தேயிலை எஸ்டேட் பிஸினஸை அம்மா பார்த்துக்கிறேன்னு சொன்னாங்க. அம்மாவுக்கு தன் சொந்த தம்பி காசிநாதன் கூட இருக்கிற தைரியம். ஆனா எனக்கு என்ன நிம்மதி தெரியுமா?” என பேசுவதை நிறுத்தி பின் தொடர்ந்தான். “நீங்க, சமையல்கார பாண்டி தாத்தா, கணக்குப் பிள்ளை விஸ்வநாதன் என நம்ம பங்களாவில் இருக்கிற விசுவாசமுள்ள பல வேலைக்காரர்களை நம்பிதான் நான் அம்மாவை விட்டுட்டுப் போனேன்.” சர்..ர் என கார் நின்றது. சீனு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னால் திரும்பி கும்பிட்டார். “அண்ணே என்ன இது” என தீபக் கூறியதும் வண்டியை ஸ்டார்ட் பண்ணினார். சீனு “உங்க நம்பிக்கைக்கு மாறா நான் நடக்க மாட்டேன் தம்பி”

“தெரியும் அண்ணே.”

சீனு “நம்ம பிஸினெஸ் நல்லா போகுது. ஆனா…”

தீபக் “காசி மாமா சரியில்லை.அப்படித்தானே”

சீனு ஆச்சர்யமாக “அம்மா சொல்லிருப்பாங்க.”

“ஆமா”

“கொஞ்சம் கணக்கு வழக்குகளை கூர்ந்து பாருங்க தம்பி. விஸ்வநாதன் பாவம் தவிக்கிறாரு. நீங்க வந்ததும் வேலையை விட்டு நின்னுடணும்னு சொல்லுவாரு.”

“புரியுது. நல்லவங்க போயிட்டா நல்லது எப்படி நடக்கும்?”

“மனசுல வச்சுக்குங்க. என்ன பண்ணனுமோ அதப் பண்ணுங்க.” அப்போது குறுக்கே ஒரு பெண் சாலையைக் கடக்க காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினார். தீபக் காரிலிருந்து புயலாய் இறங்கிப் போய் அந்தப் பெண்ணை கோபமாகத் திட்டினான். சீனு வண்டியை விட்டு இறங்கி “தம்பி தம்பி வாங்க வண்டியில் ஏறுங்க. ஏதோ தெரியாம குறுக்கே போயிடுச்சு.”

“தெரியாம போனாலும் சடன் பிரேக் போட்டதுல நமக்கு ஏதாவது ஆகியிருந்தா?” கோபம் குறையாமல் வண்டியில் ஏறினான். சாலையைக் குறுக்கே கடந்த பெண் மிரண்டு நின்றிருந்தாள். அவள், தீபக்கின் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் வேலு கங்காணியின் மகள் வேடுத்தி.

சீனுவிற்கு தீபக்கின் கோபம் கொஞ்சம் மிகையாகத் தெரிந்தது. ‘ஏன் இவனுக்கு இவ்வளவு கோபம்!!? அதுவும் ஒரு பெண் மேல். தீபக் “எல்லா பிரச்சனைகளுக்கும் பெண்கள்தான் காரணம். எந்த சூழ்நிலையிலும் கவனிச்சு பாருங்க பிரச்சனைக்குப் பின் ஒரு பெண் இருப்பா.”

தன் அம்மாவும் ஒரு பெண் என்பதை கோபத்தில் மறந்தே போனான். கார் பங்களாவினுள் நுழைந்தது. போர்டிகோவில் காசி, அவர் மகள் ரேணு, மகன் ஷாம் கணக்குப் பிள்ளை விஸ்வநாதன். சமையல்காரர் பாண்டியன். மற்றும் வேலைக்காரர்கள் நின்றிருந்தனர். தீபக்கின் கண்கள் வேதவல்லியைத் தேடியது. கழுத்து நிறைய தங்கச் செயின்கள் மின்ன, கைகளில் வளையல்கள். பட்டுச் சேலை தோளில் சால்வை. வழுவழுவென்று தலை சீவி கொண்டை போட்டு, காதகளில் வைரத் தோடு மின்ன நெற்றியில் விபூதி பட்டை. பார்க்கத் தோரணையாக வராண்டா சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.

போர்டிகோவில் கார் நின்றதும் வேகமாய் இறங்கி தன் அம்மாவை நோக்கி “அம்மா” என்று ஓடியவனைப் பிடித்து நிறுத்திய காசிநாதன் “தீபக் தீபக் இருப்பா. ஆரத்தி எடுக்கணும். நில்லுப்பா.”

தீபக் நின்றான். “நல்லாருக்கீங்களா? மாமா.”

“உன் புண்ணியத்தில் நல்லாருக்கேன்பா. ஆரத்தி எங்கே?” வேலைக்காரி கொண்டு வர அதை ரேணு வாங்கினாள். “ஹலோ மாமா. எப்படியிருக்கீங்க?”

“ஹாய் ரேணு. ஹாய் ஷாம். நல்லாருக்கேன்.”

ஆரத்தி எடுத்ததும் இரண்டே பாய்ச்சலில் தன் அம்மாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டு “அம்மா எப்படியிருக்கீங்க?”

“நல்லாருக்கேன் கண்ணு.நீ தான் மெலிவா வந்திருக்கே.”

தீபக் சிரித்தபடி ” எந்த அம்மா தன் புள்ள குண்டாகியிருக்கான்னு சொல்வீங்க?”

“நிசமாவே மெலிஞ்சுதான் இருக்கே.”

தீபக் சிரித்து ” ஓகே ஓகே. நம்ம பாண்டி தாத்தா சமையலைச் சாப்பிடாம மெலிஞ்சு போயிட்டேன்.” என்றதும் சுற்றி நின்ற வேலைக்காரர்கள் , பாண்டியன், காசிநாதன் அவர் மகள் மகன் எல்லோரும் சிரித்தனர். வேதவல்லியும் சிரித்தாள்.

“இப்பதான் இந்த பங்களாவில் ஒளியே வந்திருக்கு. சரி குளிச்சிட்டு வா சாப்பிடலாம்”

தீபக் தலையாட்டிவிட்டு மாடியிலுள்ள தன் அறைக்கு வந்தான். பெரிய அறை. மார்பிளால் இழைத்து இழைத்து கட்டிய சுவர்கள். தரை. வட்ட வடிவமான பெரிய கட்டில் அதில் இள ரோஜா வண்ண நிறமுள்ள வெல்வெட் மெத்தை. சுற்றிலும் கொசுவலை. பளிச்சென்று இருந்தது. கொசுவலையைத் தூக்கி கட்டிவிட்டு படுக்கையில் விழுந்தான். ‘ எத்தனை நாளாச்சு! மனம் முழுதும் நிம்மதி. ஜெர்மனியில் உயர்தர வாழ்க்கையை அனுபவித்தாலும் நம்ம வீடு சொர்க்கம்தான்.

குளித்து முடித்து டிராக் பேண்ட் டீ சர்டில் அழகாய் வந்தான். டைனிங் டேபிளில் வேதவல்லி, காசி , ரேணு , ஷாம் எல்லோரும் தீபக்காக காத்திருந்தனர். தீபக் “ஸாரி லேட்டாயிடுச்சு.”

காசி “பரவாயில்லேப்பா. ரேணு நீ மாமாவுக்கு சாப்பாடு பரிமாறு.” என்றதும் ரேணு வெட்கத்துடன் எழுந்தாள். தீபக் உரக்க “வேண்டாம்” என்றதும் எல்லோரும் திகைத்தனர். காசிநாதனின் முகம் மாறியது. வேதவல்லி “என்னாச்சுப்பா?” என்றதும் தீபக் சமாளித்து “ஒ..ண்..ணு ஒண்ணும் இல்லைம்மா. பாண்டி தாத்தா பரிமாறி நாளாச்சு இல்லே. அதான் அப்படி சொன்னேன்.” என்றதும் சமையலறையில் ஒதுங்கி நின்றிருந்த பாண்டி முகம் மலர ஓடிவந்தார். ரேணு முகம் சுருங்கி அவள் இடத்தில் போய் அமர்ந்தாள்.

காசிநாதன் தன் கோபத்தை மறைத்துக் கொண்டு போலியாய் புன்னகைத்து “அவ்வளவுதானே.” என்று சிரித்தார். அந்த சிரிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் வன்மம் புரியாமல் தீபக் மகிழ்ச்சியோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *