காணாது போகுமோ காதல்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 5,525 
 
 

பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஆதிரா வேலையில் சேர வந்துவிட்டாள். ஆபீஸில் எல்லோரும் அவளை ஆவலாகப் பார்த்தார்கள். ‘ஏய் இவளைப் பாரேன் நல்லா அழகா இருக்கா இல்லே?’

‘மேக்கப் போட்டா சினிமா நடிகை போல இருப்பா’

எல்லோரும் கிசுகிசுப்பாய் பேசினார்கள். ஆண்கள் இவளிடம் ஏதும் உதவி வேண்டுமா? எனக் கேட்டனர்.

புன்னகையுடன் மறுத்து விட்டு விஸிட்டர் ஷோபாவில் அமர்ந்திருந்தாள். அப்போது புயலாய் தீபக் வந்தான். தற்செயலாக ஆதிரா அவன் பார்வையில் பட்டாள். ‘பாவாடை தாவணியில் நேற்று வந்த சிறுபெண்ணா இவள்?!! இன்று காட்டன் புடவை ஜாக்கெட்டில், இடுப்பைத் தொடும் ஜடை, பார்க்க பளிச்சென்று நிற்கிறாளே! தீபக் தன் அறைக்கு வந்து அப்பா படத்தைக் கும்பிட்டு சேரில் அமர்ந்தான்.

பிஏ வந்து அன்றைய வேலைகளை சொல்லி முடித்தபோது தீபக் “விஸிட்டர்ஸ் சேரில் இருக்கும் பெண்ணை வரச் சொல்லுங்க.”

சில விநாடிகளில் ” மே ஐ கமின்” என கேட்டு நின்ற ஆதிராவைப் பார்த்து தலையசைத்தான். அவள் அழகாய் நடந்து வந்து நின்றாள்.

“டேக் யுவர் சீட்”

உட்கார்ந்தாள். தீபக் “வேலை கேட்டு வந்திருக்கீங்களா? ஸ்டோர் கீப்பர் வேலை தர்றதாக மிஸ்டர் காசி சொன்னாரே. தரலையா?” நக்கலாக கேட்டான்.

ஆதிரா சிரித்தபடி “யூ ஆர் மிஸ்டேக்கன். வேலைக்கான ஆர்டரை நேற்றே வாங்கிட்டேன். இப்ப அட்டெண்டெண்ஸில் ஸைன் போட்டுவிட்டு உங்களைப் பார்த்து விஷயத்தைச் சொல்லிட்டுப் போகலாம்னு காத்திருந்தேன். அதுக்குள்ளே நீங்களே கூப்பிட்டுட்டீங்க. என்னவெல்லாமோ பேசுறீங்க? எப்பவுமே நிதானமாக பேச ட்ரை பண்ணுங்க ஸார். நான் வர்றேன்.” என்று புயலாய் வெளியேறினாள்.

தீபக் கோபம் தலைக்கேற ‘டாமிட். என்ன திமிர் இவளுக்கு. வரட்டும்’ என்று மனதுள் சொன்னபோது காசி “அறைக்குள் வரலாமா?” எனக் கேட்க தீபக் “வாங்க” என்று உரக்கச் சொன்னான்.

அவன் கோபமாக இருக்கிறான் என்பது புரிந்தது. ஆதிராவை எதிரே பார்த்தார்.

M.D யை பார்த்துட்டு வர்றேன்னு சொன்னாளே. அதன் வெளிப்பாடோ?

தீபக் “ஸ்டோர் கீப்பராக வேலைக்கு வந்திருக்கும் பெண் ரொம்ப பேசுது மாமா”

கோபமாகக் கூறினான்.

காசிக்கு உள்ளூர மகிழ்ச்சி.

‘மவனே வேணும் உனக்கு.’

தீபக் “மாமா” என உரக்கக் கூப்பிட்டதும் நினைவு கலைந்து “யாரு மாப்ளே ?”

“அதான் அந்த ஆதிரா”

‘பேரு நினைவு வச்சிருக்க போல’

தீபக் “என்ன ஒண்ணுமே பேசமாட்டேங்கிறீங்க?”

காசி “நான் சொல்லி வைக்கிறேன் மாப்ளே. அந்த பெண்ணை பேசி ஜெயிக்க முடியாது.”

தீபக் “அவ்வளவு பெரிய ஆளா அவ?”

காசி சிரிப்பை வெளிக் காட்டாமல் “வேலையில் தப்பு கண்டுபிடித்து பேசினா அவ அடங்கிடுவா.”

தீபக் “இந்த மாதிரி ஆளு நமக்கு தேவையா? சம்பளமும் கொடுத்து அவகிட்ட பேச்சும் கேட்கணுமா?”

காசி “சரி சரி நான் பார்த்துக்கிறேன். நீ ஃப்ரீயா விடு.”

காசி தன் அறைக்குள் வந்து அடக்க முடியாமல் சிரித்தார்.

ஷாம் வந்தபடி “ஸ்டோர் கண்ட்ரோல் நம்ம கையை விட்டுப் போச்சு. நீ சிரிச்சு சந்தோஷமா இருக்கியா?”

காசி “ஸ்டோர் நம்ம கையை விட்டுப் போகலை. சிவகுரு, ஆதிரா இருவரும் நம்ம ஆளுங்க தான். இப்ப என் சிரிப்புக்கு காரணம் என்ன தெரியுமா?”

ஷாம் “அந்த தீபக் பாசமா பேசிட்டானா? இருக்காதே. அவனுக்கு நம்ம குடும்பத்தையே பிடிக்காதே.”

காசி “அதான் அதான். இப்ப அந்த ஆதிரா பொண்ணால் தீபக் திண்டாடுறான். அவனுக்கு கோபமா வருது. இனி தினமும் அவனுக்கு நிம்மதி இருக்காது.”

ஷாம் ஆச்சர்யமாக “அப்படியா!? நடக்கட்டும். நீ நம்ம ரேணுவுக்கும் தீபக்கிற்கும் கல்யாணம் பண்ண ஐடியா பண்ணு.”

காசி “நாளைக்கு அக்காகிட்ட பேசுறேன்”.

ஷாம் “தீபக் சம்மதிப்பானா?”

காசி “அக்கா சொன்னா கேட்பான்.”

ஷாம் “நாளைக்கே பேசிடு.”

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ரிலாக்ஸாக காலை டிபனுக்கு டைனிங் டேபிளில் கூடினார்கள். தீபக் வரவில்லை. ரேணுவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

“தீபக் மாமா சாப்பிட வரலையே.” ரேணு.

ஷாம் “எப்ப பாரு தீபக் மேலேதான் கரிசனப்படுறே.”

வேதவல்லி சிரித்து “இன்னும் அவன் எழுந்துக்கலை. இன்னிக்கு ஒரு நாள்தான் ஃப்ரீயா இருப்பான்.அவனுக்கு பசிக்கிறப்ப வரட்டும். அவனை நினைச்சு ரேணு கவலைப்படாம வேறு யாரு கவலைப்படுவா?”

காசி “பிரயோஜனம் இல்லையே.”

வேதவல்லி “என்னடா சொல்ற”

காசி “இவதான் மாமா மாமான்னு உருகுறா. தீபக் இவளைத் திரும்பி கூட பார்ப்பது இல்லை.”

ஷாம் “நாம ஸ்டேட்டஸ் குறைவுன்னு நினைக்கிறான் போல. என்ன இருந்தாலும் நாம அவுட் ஹவுஸில் இருப்பவங்கதானே.”

வேதவல்லி கோபமாக “என்ன பேசுறே ஷாம்? தீபக் அப்படி பார்க்கிறவன் இல்லே ஏற்கனவே நான் சொல்ல நெனச்சேன் “

காசி “என்ன நெனச்சே?”

வேதவல்லி “நீ இனிமே அவுட் ஹவுஸில் இருக்க வேண்டாம். கப்பல் மாதிரி பங்களா இருக்கையில் நீ என் தம்பி ஏன் அவுட் ஹவுஸில் இருக்கணும்? நானும் , தீபக்கும் தனியா இவ்வளவு பெரிய வீட்டில். நாளைக்கே இங்கே வந்துடு.”

மூவர் முகத்திலும் மகிழ்ச்சி. காசி அதை வெளிக்காட்டாது

“அதெப்படி வயசுப் பொண்ணை தீபக் இருக்கிற வீட்டில் வச்சுக்க முடியும்?”

வேதவல்லி “தீபக்_ ரேணு கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கணும். நான் தீபக் கிட்ட பேசுறேன்.”

மறுநாளே காசிநாதன் குடும்பம் பங்களாவில் குடியேறியது. தீபக் “என்ன, மாமா பங்களாவுக்குள்ளே வந்துட்டார்.”

வேதவல்லி “மெதுவா பேசு தீபக். நாம ரெண்டு பேர்தான் இந்த பெரிய பங்களாவில் இருக்கோம். அதனால நான் தான் மாமாவை இங்கேயே வரச் சொல்லிட்டேன்.”

தீபக் “கல்யாணமாகாத ரேணுவும் நானும் ஒரே வீட்டில் இருந்தால் ரேணுவுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்?” வேதவல்லி திடுக்கிட்டு “என்ன சொல்றே தீபக்?” இவர்களின் உரையாடலை அறைக்கு வெளியே இருந்து காசி கேட்டுக் கொண்டிருந்தார்.

தீபக் “வேற வீட்டுக்கு வாழப்போற பெண். இங்கு இருந்தா தப்பா நினைக்கமாட்டாங்களா?”

வேதவல்லி அதிர்ச்சியில் “தீபக், உனக்கும் ரேணுவுக்கும் கல்யாணம் பண்ணணும் என நாங்க எல்லாரும் விரும்பறோம். ரேணுவும் விரும்பறா.”

“என் விருப்பத்தை கேட்க மாட்டீங்களாம்மா?”

வேதவல்லி “சொல்லுப்பா”

“எனக்கு ரேணுவைக் கட்டிக்கிறதில் விருப்பமில்லை. உங்க தம்பிங்கிறதால நான் சும்மா இருக்கேன். எஸ்டேட்டில் அவர் செய்த குளறுபடிகளை கண்டுபிடிச்சுட்டேன். ப்ராஸஸிங்கிற்கும் டெலிவரிக்கும் டிபரெண்ட் இருக்கு கவனின்னு சொன்னீங்களே அந்த குளறுபடிக்கே மாமாவும் ஷாம்தான் காரணம்.”

வேதவல்லி உறைந்து போய்

“எ…ன்..த..ம்பியா?”

“ஆமா”

“உங்க அப்பா காசியை நம்பி எல்லா பொறுப்பையும் கொடுத்தாரு.”

“அதான் நாம்தான் அத்தனை சொத்துக்கும் முதலாளிங்கிற நினைப்பு வந்துவிட்டது. இப்ப பெண்ணைக் கொடுத்து பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ண ஆசைப்படுறாரு.”

காசி கோபத்தில் கொதித்து நின்றார். தன் அக்காவிற்கு சம்மந்தி ஆக விரும்பியது உண்மை ஆனால் தன்னை இவ்வளவு கேவலமாக நினைத்திருக்கிறானே இந்த தீபக்.

அறைக்குள் தீபக் “ரேணுவுக்கு நல்ல பையனாக, காசி மாமா தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணுவோம். நம்ம எஸ்டேட்டில் வேலை பார்த்த எத்தனை ஏழைப் பெண்கள் கல்யாணத்திற்கு பண உதவி பண்ணிருப்போம். ரேணு உங்க தம்பி மகள் என்பதால் நாமே கல்யாணத்தை நடத்தி வைப்போம்.”

காசி வேகமாக தங்கள் போர்ஷனுக்கு வந்து கோபத்தோடு உட்கார்ந்தார்.

ஷாம் “என்னாச்சுப்பா?”

காசி “ரேணுவை கல்யாணம் பண்ண முடியாதாம். நம்ம அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்ப்பானாம். ஆபீஸில் நாம பண்ண விஷயம் அவனுக்குத் தெரிஞ்சு போச்சு. உங்க தம்பிங்கிறதால சும்மா இருக்கேன்னு அக்கா கிட்ட சொல்றான் ரஸ்கல்.”

ஷாம் “இல்லேன்னா கிழிச்சுடுவானா? ரேணு பாவம்பா தீபக்கையே நினைச்சுட்டுருக்கா.”

ரேணு கோபமாக “எனக்கும் தீபக் வேண்டாம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் அவனிடம் கெஞ்சவா முடியும், என்னைத் தூக்கி எறிந்த அவனை நானும் தூர எறிஞ்சுடுறேன்.”

காசி “அதுமட்டுமல்ல பெரிய இடத்தில் உன்னைக் கட்டிக் கொடுக்கணும். அவனே ஆச்சரியப்படணும்.”

ஷாம் “இதோடு அவனை விட்டுடலாமா? அவனுக்கு ஒரு ஏழைப் பெண்ணை திருமணம் முடிச்சு காலம் பூரா வருத்தப்பட வைக்கணும்.”

காசி “ஆமா. இதெல்லாம் பண்ணணும்னா இப்ப நாம கோபத்தைக் காட்டக் கூடாது. கூடவே இருந்துதான் குழி பறிக்கணும்.”

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *