கரிசல் காட்டு காதல் கதைகள்! – 16

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 15,176 
 

கொலுசுக்காரி!

பெத்த மக ரஞ்சனியை நினைச்சாலே வேதாசலத்துக்கும், அவர் பொண்டாட்டி ராசம்மாவுக்கும் ரொம்பப் பெருமையா இருந்துச்சு. அழகும் அறிவும் ஒரு எடத்துல சேந்தமான இருக்காதுனு சொல்லுவாங்க. ஆனா, ரஞ்சனி பொட்டுவம் கணக்கா அம்புட்டு அழகா இருந்தா. கனிஞ்ச மாம்பழம் கணக்கா நெறமும், மல்லிகைப்பூவ அடுக்கி வச்சாப்பல பல்வரிசையும் உருண்டை முகமுமா அப்படி அழகா இருந்தா. அறிவு அதுக்கும் மேல. அவ ஒரு வார்த்த பேசினாலும் நாலு பேருக்கு பொருந்தும்படியாத்தான். அதோட காடு, கர, நக, நட்டுனு நிறைய சொத்துவேற இருக்கப் போயி, அவள கட்டிக் கிறதுக்கு நீ, நானுன்னு நித்தமும் ஒண்ணுக்கு ரெண்டுனு உள்ளூர்ல இருந்தே கேட்டு வந்தாங்க. உள்ளூரு மாப்பிள்ளை காணாதுனு வெளியூர்ல இருந்தும் மாப்பிள்ளைக கேட்டு வர, வேதாசலமே அவுகளுக்கு பதில் சொல்லி அலுத்துதேன் போனாரு.

ஒரு நாளு அவரு மகள கூப்பிட்டு, ‘‘தாயீ.. உனக்கு இன்னும் ரெண்டு வருசம் சென்னு கல்யாணம் முடிப்போமின்னா இந்த மாப்பிளகாரகளும் அவுகளப் பெத்தவகளும் விடமாட்டாக பொலுக்கோ. அதனால உனக்கு எந்த மாப்பிள்ளை புடிச்சிருக்கினு சொல்லு. அவனுக்கே உன்ன கட்டி வச்சிருதேன்’’னார்.

ரஞ்சனியும் தான் ஆசைப்பட்ட விசயனை மனசுல நெனைச்சுக் கிட்டு, ‘‘எய்யா.. நானு ஒரு ‘ஏழ, எம்போவி’ மேல ஆச வச்சிருந்தாலும் என்ன அவனுக்குக் கட்டி வச்சிருவீரா?’’னு கேக்க, அவருக்கு இச்சலாத்தியும் எரிச்சலும் பத்திக்கிட்டு வந்துச்சு.

‘‘நீ ஒரு வெங்கம் பயலுக்குக்கூட வாக்கப்படுவேன்னு சொல் லுவே.. அதுக்காவ உன்ன அவனுக்குக் கட்டிக் கொடுத்திருவனா?’’

‘‘பெறவெதுக்கு என்ன கேட்டீரு?’’

‘‘எனக்கு இருக்கது நீ ஒருத்திதேன். அதுலயும் செல்லமா வளர்த்துட்டேன். நம்ம பாட்டுக்கு ஒரு மாப்பிளய பேசி முடிச்சிரக் கூடாதே.. உன்கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்கிடுவோமேயின்னு கேட்டா.. நீ எடக்கு, மடக்கா பேசிக்கிட்டு இருக்கே. இனிமே உங்கிட்ட எதுவும் கேக்கக் கூடாது. பொக்குனு ஒரு மாப்பிள்ளயப் பார்த்து உன்ன கட்டிக் கொடுத்திர வேண்டியதுதேன்’’ அப்டீனு கோவமும் வேகமுமா துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு வெளியேற, ரஞ்சனி துடிச்சுப்போய் நின்னா.

அவளுக்கு தன் மேலயே கோவமா வந்தது. உள்ளூர்லயே அயித்த மவன், அம்மான் மவன்னு கோடி மாப்பிள்ளைங்க இருக்க, அனாதரவா ஊரு விட்டு ஊருக்கு பொழைப்புக்காக வந்த விசயன் மேலதான் அவ மனசு பசக்குனு ஒட்டிக் கிடுச்சு. விசயன் இந்த ஊருக்கு வந்து ஒரு வருசம் கூட ஆகல. கருவேலையும் எரிக்கலையும் மண்டிக் கெடந்த தரிசு நிலங்கள்லாம் பூவும் காயுமா நெஞ்சையும் மனசையும் நிறைச்சது. பெரிய பெரிய விவசாயிகள் கூட விசயன்கிட்ட ஒரு ரோசன கேக்கப் போறேன்னு அவனைத் தேடிப் போனாங்க. இவளோட அய்யா வேதாசலமே அவனைத் தேடிப் போக.. அய்யாவைத் தேடி இவ போக.. வேதாசலம் விசயனைப் பார்த்தாரோ? இல்லையோ? ரஞ்சனி நல்லாவே அவனைப் பார்க்க, அவன் இவளைப் பார்க்க.. பார்வையும் பார்வையும் மோதிக்கிட்டதுல இவங்க ரெண்டு பேரோட மனசும் எடம் மாறிப் போச்சு.

இப்போவெல்லாம் விசயனைப் பார்க்காம ரஞ்சனியால இருக்க முடியல. ‘பிஞ்சைக்குப் போறேன்.. வயலுக்குப் போறேன்..’னு ஆத்தாகிட்ட குரல் கொடுத்துட்டு, அவனைத் தேடி ஓடுவா. இவளை நெஞ்சுல சுமந்துக் கிட்டே வேலை பார்க்கற விசயனுக்கு தூரத்துல கொலுசு சத்தம் கேட்டுட்டா போதும்.. கை வேலையைப் போட்டுட்டு வந்துடுவான். சுட்டு எரிக்கற வெயில்ல நிக்கிற மரங்கள் இவங் களுக்குக் குடை பிடிக்க.. ஊரும் உறவும் நெச மாவே இவங்ககிட்டருந்து மறைஞ்சு போய்டுச்சு.

‘‘என்ன தாயீ.. இப்படி வெறுக்குத் தட்டிப் போயி நிக்கே.. உன் அய்யா உங்கிட்ட கல் யாண விஷயமா என்னமோ பேசணுமின்னாரே.. பேசுனாரா?’’னு ராசம்மா மகளோட தலையைத் தடவிக்கிட்டே அன்பா கேக்கவும், ‘‘இருத்தா.. இந்தா வந்துருதேன்’’னு சொல்லிட்டு வெளியே ஓடினா ரஞ்சனி.

வேதாசலம் கோபத்துல குமுறிக்கிட் டிருந்தார்.. ‘‘பார்த்தியா உம்மவள.. நம்ம சொல்லுத மாப்பிள்ளைக்கெல்லாம் வாக்கப் பட மாண்டாளாம். அவ எவனையோ ஒரு தத்தாரிப் பயல நெனச்சிருக்காளாம். அவனுக்குத் தேன் வாக்கப்படுவாளாம்’’னு சொன்னப்போ, ராசம்மா கல்லடி வாங்கினதுபோல நின்னா.

‘‘பாதகத்தி.. ஒரே மவனு அவ தரையில நடந்தா தண்டக் காலு நோவும்.. பூமியில நடந்தா பொன்னுங்கால் நோவுமின்னு தோள்லயும் நெஞ்சுலயும் தூக்கித் தூக்கி வளத்தமே.. இப்ப அவளே புருசன தேடிக் கிட்டு பெத்தவகளயும் எதுத்துப் பேசு தாளா?’’னு வேதனைப்பட்டவ, ‘‘நீரு கொஞ்சம் பொறுமயா இரும். அவ அப்படி யாரத்தேன் நெஞ்சுக்குள்ள நெனச்சிருக்கானு கேப்போம். ஒருவேள நமக்கு சீரான புள்ளயா இருந்தா அவனுக்கே கொடுத் துருவோம்’’னு சொன்னதும் வேதாசலம் தொண்டை நரம்பு புடைக்க கத்தினார்.

‘‘இம்புட்டுத் தூரம் ஆன பெறவு இவ நெனச்ச பயலுக்கு இவள கொடுக்கவே மாண்டேன். அதோட என் உசுரனாச்சிலும் மாச்சிக்கிடுவேன்’’னு சொன்னப்போ, ரஞ்சனி குறுக்கிட்டு அழுகையோட குமுறினா.

‘‘நானு உமக்கு முன்னாலயே பச்சத் தண்ணி பல்லுல ஊத்தாம பட்டினி கெடந்தே செத்துப் போறேன். பெறவு என்னத் தூக்கி குழிக்குள்ள போட்டுட்டு, எல்லாரும் செலாத்தலா (நிம்மதியா) இருங்க..’’ன்னவ வீட்டோட ஒரு மூலையில போய் குப்புற அடிக்கப் படுத்துக்கிட்டா.

ரஞ்சனி குப்புறப் படுத்து விடிஞ்சா நாலு நாளாகப் போகுது. வேதாசலமும் ராசம்மாவும் எவ்வளவோ கெஞ்சி, கொஞ்சி, மெரட்டியும் பார்த்துட்டாங்க. படுத்தவ படுத்தவதேன். கண்ணைக் கூட திறக்கல. அப்படியே ரெண்டொரு தடவை திறந்தாலும் அந்தக் கண்கள்ல உசுரில்லாம கெவிப் பள்ளத்துல கெடக்கவும், பெத்தவங்க பதறிப் போனாங்க. ஆசையா பெத்து, அருமையா வளர்த்த ஒரே செல்ல மகளை உசிரோட பறிகொடுத்துடுவமோனு நெனைச்ச வேதாசலமும் ராசம்மாளும் ரஞ்சனியோட தாத்தா ராமய்யாவை கூப்பிட ஓடினாங்க.

மூணு நாளா ரஞ்சனி பட்டினி கெடக்கிறானு கேட்டதும் அவர் தேகமே ஆடிப் போச்சு. பேத்திகிட்ட ஓடிவந்து குசுகுசுத்தவரு, ‘‘சரி.. அவளுக்கும் வேணாம்.. உனக்கும் வேணாம்.. அவ கொலுசு காணாமப் போயி நாலஞ்சு நாளாச்சாம். அந்தக் கொலுசு யார் கைக்கு அம்புடுதோ அவுகளுக்கு நானு வாக்கப்பட்டுக்கிடுதேன்ங்கா’’னு சொல்லவும், வேதாசலம் பதறிப் போய்ட்டாரு.

‘‘வேணாம்.. வேணாம்.. இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் ஒத்துக்கிட மாட்டேன்’’னார்.

‘‘எதுக்குப்பா அப்படி சொல்லுதே?’’னு தாத்தா கேக்க, ‘‘ஆமா.. அந்தக் கொலுசு ஒரு பண்டாரம், பரதேசினு எவனும் எடுத்துட்டா, என் செல்ல மவள அவகளுக்கு காவு கொடுக்க முடியுமா?’’ன்னார் வேதாசலம்.

‘‘என் தலவிதி எப்படியோ அப்படி இருந்துட்டுப் போவட் டும் சீயான். அதுக்காவ அய்யா விசாரப்பட வேண்டாம்னு சொல்லு’’னு ரஞ்சனி சொல்லி முடிக்கவும், வாசல்ல யாரோ கூப்பிடுறது கேட்டு எல்லாரும் திரும்பிப் பார்த்தாங்க.

விசயன் நின்னுக்கிட்டிருந்தான். அவன் கையில கொலுசு!

‘‘உங்க பிஞ்ச வழியா வந்தேன். வரப்புல இந்தக் கொலுசு கெடந்துச்சி. ஒருவேள உங்க வீட்டு கொலுசா இருக்குமோனு எடுத்துட்டு வந்தேன்’’னு அவன் சொன்னதும், வேதாசலம் பாய்ஞ்சுபோய் அவனைக் கட்டிக்கிட்டாரு.

‘‘யாரு கொலுச எடுக்காகளோனு பதறிக் கெடந்தேன். நீ எடுத்த துல எனக்கு ரொம்ப சந்தோசம். நீ கெட்டிக்காரன். பாட்டாளி. ஒரு பாட்டாளிக்கு எம் பொண்ண கொடுக்கதுல ரொம்ப பெருமப் படுதேன்’’னு சொல்லவும், ரஞ்சனி விசயனை ஆசையோட பார்த்தா. பாவம் வேதாசலம்! இதெல்லாம் தன் மகளோட வேலைதேன்னு அவருக்குத் தெரியாதே!

– செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *