கரிசல் காட்டு காதல் கதைகள்! – 15

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,556 
 
 

விருந்து

‘‘இன்னைக்கு உன் அயித்தயும், அவ மவனும் நம்ம வீட்டுக்கு வராகளாம். ஆனா, அவுக வாரது நமக்கு தெரியக் கூடாதுனு ரொம்ப ரகசியமா வச்சிருக்காகளாம். ஆனாலும், எம் மேல உருத்தா (பிரியமா) இருக்கற ஆளு வந்து சொல்லிப் போடுச்சி”னு ஆத்தா பஞ்சு சொன்னதைக் கேட்டதுமே, குறிஞ்சிக்கு வானத்துல இருக்கற வெள்ளிகள்லாம் அவளைச் சுத்திக்கிட்ட மாதிரி நெஞ்சு அலைமோதுச்சு. ‘அவரைப் பார்த்து எம்புட்டு நாளாச்சி? ஒரு வருசமிருக்குமா?’னு விரலால கணக்குப் போட ஆரம்பிச்சிட்டா.

போன வருசம்வரைக்கும் இவங்க குடும்பமும் சொந்த ஊர்லதான் இருந்துச்சு. குறிஞ்சிக்கு மூணு அத்தைகள் இருந்தாங்க. அவங்களுக்கு ஆளுக்கு ரெண்டு, ரெண்டு ஆண் பிள்ளைங்கனு ஆறேழு பேர் இருக்க, இவளுக்கு மூத்த அத்தை மகன் கருணன் மேல அம்புட்டு பிரியம்.

ஆள், கருப்பணசாமி மாதிரியே ஒசரமா இருந்தான். கருத்த மீசைக்குள்ள அடங்கிக் கெடந்த அவனோட முகத்தில எப்பவுமே சிரிப்பு பொங்கி வழிஞ்சுச்சு. கருத்தப் புருவக் கட்டுக்கு கீழ கண்ணுமுழிக்குள்ள நிறைய வசியம் வச்சிருந் தான். அந்த வசியத்துக்குள்ள விழுந்த குறிஞ்சி சொக்கிப் போனா. அவ மட்டும் என்ன அவனுக்குக் குறைஞ்சவளா?

சிரிச்ச முகம்.. சீதேவியா, கறந்த பால் நெறத்தில நுங்கும் நுரையுமா பொங்கிப் போயிருந்தா. ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் உசுருக்குள்ள உசிரை வச்சிருந்தாங்க. காடு, கரைனு ரெண்டு பேரும் சோடி போட்டுக்கிட்டு பச்சைக் கிளிகளா பறந்து திரிஞ்சாங்க. இவங்க இருப்பைப் பார்த்த பெரியவங்க, ‘‘ரெண்டும் சின்னஞ்சிறுசுக. ஒண்ணுக்குள்ள ஒண்ணு பின்னிப்போயி உசுரா அலையுதுக. ஏதும் ஒரு ‘சொட்டச்’ சொல்லு வரமின்ன கல்யாணத்தை முடிச்சிருவோம்’’னு பேசிக்கிட்டிருந்தப்பதான் அந்த ‘தீ’ பஞ்சம் வந்துச்சு.

வெயிலு போட்ட உக்கிரத்துல காடுகரையெல்லாம் கானல்ல மிதந்துக்கிட்டிருந்துச்சு. வயித்தை நிரப்புறதுக்கு வழியில்லையாம்.. பெறகு கல்யாணமாவது, காட்சியாவது. ஒவ்வொருத்தரா ஊரைவிட்டு, செழிப்பான இடத்தைத் தேடி போய்க்கிட்டிருந்தாங்க. குறிஞ்சியோட அய்யாவும் குடும்பத்தோட கிளம்பிட்டாரு. போகுறப்ப தங்கச்சிகிட்ட வந்தவரு, ‘‘சீதா.. ஏத்தா.. நாங்க இந்த ஊருல இருந்தா பட்டினி கெடந்து செத்துப் போவோம். அதனால செழிச்ச எடம் பாத்து போறோம். நாலு துட்டு கையில சேத்தப் பெறவு வந்து கல்யாணத்த முடிச்சிக்கிடுவோம்’’னு சொல்லிட்டு ஊர் மாறி வந்தவங்கதான்.

வருசம் ஒண்ணாயிருச்சு. இன்னும் மழை பெஞ்ச பாடுல்லை; ஊர் செழிச்ச பேச்சுமில்லை. பாவம்.. குறிஞ்சி, கருணனை நெஞ்சுக்குழிக்குள்ள வச்சுக்கிட்டு தகிப்பா தகிச்சுக்கிட்டிருந்தா. கும்பாவுல கஞ்சியை வச்சா, அதுக்குள்ள சிரிச்சுக்கிட்டு நின்னான் கருணன். படுக்கிறதுக்காக பழஞ் சீலையை விரிச்சா, அதுக்குள்ள கசங்கலா தெரிஞ்சான்.

இங்க கருணனோட ஆத்தாளும் அய்யாவும் அவன்கிட்ட பொடுபொடுத்துக்கிட்டிருந்தாங்க. ‘‘இந்தா பாருடா.. உம்மாமன் இந்த ஊர விட்டுப் போயி வருசம் ஒண்ணாச்சி. என்ன, ஏதுன்னு ஒரு தாக்கலு இல்ல. நம்மள அயத்துப் போனா கன்னு நெனைக்கேன். அங்கிட்டு, அங்கிட்டு செழிச்ச எடத்துலருந்து உனக்கு கோடி பொண்ணு தாரேங்காக. பேசாம அங்கிட்டுப் போயி ஒரு பொண்ணப் பாத்துருவோம்’’னு பேசுனா. தீப்பட்டவனா துடிச்சுப்புட்டான் கருணன்.

‘‘என்னத்தா இப்படி சொல்லுதே. எனக்கு வெவரம் தெரிஞ்ச நாளையிலிருந்து ‘குறிஞ்சி தேன்டா உனக்குப் பொண்டாட்டி’னு என் நெஞ்சுக்குள்ள பச்சய குத்திட்டு.. இப்ப இப்படி பேசுதீக. நானும் அவளும் ஒருத்தருக்கு மேல ஒருத்தரு உசுரா கெடக்கோம்.’’

‘‘உசுராக் கெடந்தாப் போதுமா? துட்டு, துக்காணின்னு எதுவும் வேணாமா? உனக்கு ஒரு வேள கஞ்சி ஊத்தக் கூட உன் அயித்தைக்கு விதி இல்ல. அவள நம்பிக்கிட்டுருந்தா உனக்கு வயசாயிக்கிட்டுப் போவுதுல்ல.’’

‘‘ஆத்தா! நீ என்னதேன் சொன்னாலும் மாமனயும் அயித்தயவும் ஒருக்கானாச்சிலும் பாக்காம நானு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன். அப்படி கல்யாணம் முடிச்சிதேன் ஆவணுமின்னு நீங்க என்ன பாடா படுத்துனீ கன்னா.. நானு எங்கிட்டும் கண்காணாத தேசத் துக்குப் போயிருவேன்’’னு சொல்லவும், வாய டைச்சுப் போனாங்க அவனைப் பெத்தவங்க.

‘கண்ணோ, பொன்னோனு ஒரே ஒரு புள்ளை யிருக்க.. அதையும் இந்த கல்யாண விசயத்தில எழந்திருவோம் பொலுக்கோ’னு பதறிப்போன ஆத்தா சொன்னா..

‘‘சரிடா.. நாள உன் மாமன் வீட்டுக்குப் போவோம். ஒரு பானச் சோத்துக்கு ஒரு சோறு பதமின்னு அவ உனக்கும் எனக்கும் நல்ல முறை யில விருந்து சாப்பாடா போட்டு, நம்ம வவுத்த குளிர வச்சி அனுப்புனான்னா நீ குறிஞ்சிய கட்டிக்க. அதுல ஒரு மாத்து, மருவு இல்ல. ஆனா, கேப்ப கூழவும் கானப்பயத்து தொவயலயும் வச்சானு வச்சிக்க. நீ மறுபேச்சி பேசாம நாங்க சொல்லுத ரக்குல பொண்ணக் கட்டிக்கிடணும்’’னு சொல்ல, கருணன் தலையை ஆட்டினான்.

கேப்பைக் களியைக் கிண்டிக்கிட்டிருந்த ஆத்தா மேல குறிஞ்சிக்கு இச்சலாத்தியா இருந்துச்சு.

‘‘என்னத்தா.. மச்சானும், அயித்தயும் வாராகனு சொன்னவ களிய கிண்டிக்கிட்டுருக்கே..’’

பஞ்சுக்கு தொண்டை கமறுச்சு.. ‘‘பெறவு நானு என்ன செய்யட்டும் மவளே? வார விருந்தாளிக்கு சோறும் கறியும் ஆக்கிப் போடத்தேன் எனக்கும் ஆசயா இருக்கு. எல்லாம் வவையா வேணுமில்ல’’னு ஆத்தாக் காரி சொல்ல, கொஞ்ச நேரம் யோசிச்சா குறிஞ்சி.

பெறகு ‘‘நீ களியக் கிண்டி அப்படியே மூடி வையி’’னு தன் சேத்திக்காரி யான ராமு வீட்டுக்கு வந்தா. ராமு நேத்துத்தேன் மூங்கிச் சம்பா நெல்லை அவிச்சு, சாணி மொழுவுன திண்ணை நெறைய கிண்டி இருந்தா. அவளோட பேசுற மாதிரி நாலைஞ்சு தடவை புழுங்கல்ல உட்காந்துட்டுப் போனா. அப்பிடி உட்காந்தப்ப அவ கட்டுன கண்டாங்கி சீலையில புழுங்கலும் ஒட்டிக்கிட்டு வந்துச்சு. கூடவே வந்த புழுங்கலை சொளகுல தட்டித் தட்டி சேர்த்ததுல நாழி நெல்வரையிலும் சேர்ந்துடுச்சு.

மேலத் தெரு கீதாரி வீட்டுக் கொல்லையில எப்பவும் கயித்துல காய்ஞ்சுக்கிட்டிருக்குற உப்புக் கண்டத்துக்கும் அதை கொத்திக்கிட்டு போக அலையுற காக்காக்களுக்கும் பஞ்சமிருக்காது. குறிஞ்சி விடுவிடுனு கீதாரி வீட்டு கொல்லைக்கு நடந்தா. இவ மச்சான் கருணனோட வரவு காக்காக்களுக்கு தெரிஞ்சுட்டதோ என்னம்மோ! அதுக கொக்களிப்பும், கும்மரிச்சமுமா வாயில உப்புக் கண்டத்தோட அலைய.. குறிஞ்சி அதுகள விரட்டி விட்டுட்டு, அதுக வச்சிருந்த உப்புக் கண்டங்கள எடுத்து சீலையில முடிஞ்சுக்கிட்டா. வர்ற வழியிலயே மோர்க்கார வெள்ளை யம்மாளோட வீடு இருக்குறது நெனப்பு வர ‘‘எக்கா, எக்கா’’னு கூப்பிட்டுக்கிட்டே உள்ள நுழைஞ்சா. வெள்ளையம்மா ளுக்கு குறிஞ்சியோட வரவு ஆச்சர்யத் தைக் கொடுக்க ‘‘என்னத்தா.. வராதவ வந்துருக்கே.. வழி, கிழி தப்பிப் போனயா?’’னா பிரியத்தோட.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா..எங்காத்தாளும் அய்யாவும் பாம்புலுக் கும் வெயில்லயே அலையப்போயி, கண்ணு ரெண்டும் சூட்டுல பொங்கி, விடியமின்ன கண்ண தொறக்கவே முடியலயாம். அதேன் கொஞ்சம் வெண்ண வாங்கிட்டு வரச் சொன்னா’’னு குறிஞ்சி சொல்ல, வெள்ளையம்மாவுக்கு அவ மேல பிரியமா இருந்துச்சு.

விளாங்காயளவு வெண்ணெயை உருட்டி ‘‘இந்தா செழிம்பா போடச் சொல்லு’’னு கொடுத்தா.

ஆக, பச்சை வெண்ணெய் மணக்க மணக்க, கறிக்கொழம்பும் சோறும் சாப்பிட்டதில வயிறு மட்டுமில்ல.. மனசும் நிறைஞ்சு போச்சு சீதாவுக்கு. இது போதாதுனு கருப்பட்டி காப்பி வேற.

சந்தோஷத்தோட ஊருக்குப் புறப் பட்டவங்ககிட்ட பஞ்சு, ‘‘வராதவக வந்துருக்கீக.. ரெண்டு நாளு இருந்துட் டுப் போவலாமில்ல மதினி’’னு கேட்டா. அதுக்கு, ‘‘இல்லத்தா.. இந்த மாசமே நம்ம புள்ளைக கல்யாணத்த முடிச்சிர ணும்னு நெனைக்கோம். போயிட்டு வாரோம்’’னு கருணனோட ஆத்தா சொல்லச் சொல்ல.. குறிஞ்சி வெக்கத் தோட கருணனைப் பார்த்துச் சிரிச்சா.

– ஆகஸ்ட் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *