கரிசல் காட்டு காதல் கதைகள்! – 14

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,607 
 
 

அல்லி ராச்சியம்!

தன் மகளைப் பார்த்து பார்த்து, சீதா பூரிச்சுப் போனா. கனிஞ்ச எலந்தைப் பழத்தைப்போல ஒரு நெறம். சின்ன செப்புவாய், உருட்டை உருட்டையான காலும் கையுமா.. அது நிமிசத்துக்கொருதரம் அழுறதும் சிரிக்கிறதுமா வேடிக்கை காட்டுறதைப் பார்க்க நிஜமாவே கொடுத்து வைச்சிருக்கணும். ஆனா, அப்பேர்ப்பட்ட அழகை குறை சொல்லிக்கிட்டுருக்காங்க அவ மாமியாரும், புருசனும். மாமியாக்காரி மேல கூட அவளுக்கு கோவமில்ல. பொறுப்புள்ள புருசங்காரனே இப்படி தேள் கொடுக்கா இருக்குறப்ப மாமியாக்காரியை என்ன சொல்றது?

விடிகாலை இருட்டுலயே பிள்ளை வலி ஆரம்பிச் சிடுச்சு. மூத்த ரெண்டு புள்ளைங்களும் வீட்டுல சட்டுனு பொறந்துட, இந்தப் புள்ளையும் அப்படி பொறந்துரும்னுதான் அவ இருந்தா. மருத்துவச்சி செல்லம் வந்து பார்த்துட்டு, ‘இந்தப் புள்ளைக்கு கொடி சுத்தியிருக்கும் போலிருக்கே. நேரத்த கடத்தாம டவுனு ஆசுபத்திரிக்குக் கொண்டு போங்க’னு சொல்லிட்டா. அவ புருசன் அவசரமா மாட்டை வண்டியில பூட்டிக்கிட்டிருக்க, நிலைப்படிக்கு வந்த மாமியாக்காரி சொன்னா..

‘‘ஏலேய் சங்கரு.. இந்தவட்டமும் இவ பொம்பளயப் பெத்து தூக்கிட்டு வந்தா.. இந்த வீட்டு வாசப்படி ஏறக்கூடாது. ஆமா, சொல்லிப்புட்டேன்’’னதும் சங்கர் அவ பக்கத்துல வந்தான். கண்ணு முழி தெறிச்சுப் போற அளவுக்கு வலியில திணறிக்கிட்டிருந்தவகிட்ட, ‘‘ஆத்தா சொன்னதக் கேட்டியா? இந்த வாட்டியாச்சிலும் ஆம்பளப் புள்ளயப் பெத்து, தூக்கிட்டு வா. இல்ல..’’னு அவன் சொல்லி முடிக்கவேயில்ல. சீதா வலியால கத்தித் தீர்த்துட்டா.

‘‘ஆமா.. வவுத்துக்குள்ள புள்ளய செஞ்சு போட்டது நான்தேன்.. உம்ம ஆத்தாதேன் அந்தக் காலத்துப் பொம்பள; விவரமில்லாம பேசிக்கிட்டு இருக்கா. உமக்கு எங்க போச்சி புத்தி? மனுச வாழ்க்கயவும் புள்ளயவும் கடவுளாப் பார்த்துக் கொடுக்கிறது.. தெரிஞ்சுக்கோ. இதுல நானு என்ன செய்ய முடியும்’’னு வலியோட வண்டில ஏறினா.

கூறுகெட்ட புருசனையும் அவன் ஆத்தாவையும் நினைக்குறப்ப வருசத்துக்கொரு பொம்பளைப் புள்ளையா பெத்துத் தள்ளணும்போல இருந்துச்சு. அல்லி ராச்சியம் இருந்துச்சுனு சொல்லுவாங்களே.. அதப் போல இப்பவும் பொம்பளைக ராச்சியம் இருந்தா நல்லா இருந்திருக்குமேனு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டா. இப்படி பேசுற ஆம்பளைகள எல்லா விரட்டி, விரட்டி அடிக்கணும் போல அவளுக்கு கோவம்.. இப்போ ஆம்பளைப் புள்ள பொறந்து டுமோனு பயமா இருந்துச்சு. அப்படிப் பொறந்து அதைத் தூக்கிக்கிட்டு அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டா.. தாயும், புள்ளையும் கிரீடத்தை சுமந்துக்கிட்டு அலைய ஆரம்பிச்சிருவாங்க. அதுக்காகவேணும் பொம்பளைப் புள்ளைதான் பொறக்கணும்னு வேண்டிக் கிட்டா. அவ ஆசைப்படியே மூணாவதும் பொம்பளைப் புள்ளையா பொறந்துடுச்சு.

புள்ளை பிறந்தன்னிக்கு பொறிஞ்ச முகத்தோட சங்கர் வந்து நின்னான். ‘‘எங்காத்தா சொன்னது கணக்கா நீ பொம்பளயத்தான பெத்துட்ட. சரி.. இந்தமான நீ நம்ம வீட்டுக்கு வரவேணாம்! உங்க வீட்டுக்குப் போயிரு. ஆத்தா எரிமலயா குமுறிக்கிட்டு இருக்கா. அவ கோவம் கொஞ்சம் கொறயட்டும்..’’னு புருசன் சொன்னதைக் கேட்டதும் சீதாவுக்கு குமட்டிக்கிட்டு வந்துச்சு. எரிச்சலோட கேட்டுப்புட்டா.. ‘‘ஒரு வேள உம்ம ஆத்தா கோவம் கொறயல்லேன்னா..?’’

‘‘இந்த எடக்குப் பேச்சித்தான வேண்டாங்கேன்’’

‘‘இது எடக்குப் பேச்சு இல்ல. நெசமாவே கேக்கேன். உம்ம ஆத்தா கோவம் கொறயாட்டி பொண்டாட்டிய வேண்டாமின்னு சொல்லிருவீரு.. அப்படித்தான்னா? உம்ம அவருன்னு சொல்லக் கூட அசிங்கமா இருக்கு’’னு முகத்தை திருப்பிக்கிட்டு சொன்னா.

ரேணு குட்டி பிறந்து ஆறு மாசமாகிட்டது. கையவும் காலையும் ஆட்டிக்கிட்டு, தத்தக்கா பித்தக்கானு பேசிக்கிட்டு, வீட்டையே அவ பூஞ்சோலையா மாத்திப் புட்டா. மாமியாளோட நச்சு வாயிலிருந்து தப்பிச்ச சந்தோஷத்துல, சீதா ஒரு சுத்து பெருத்து, புள்ள பெத்த பூரிப்போட, மினுமினுப்பு கூடி அழகா இருந்தா. மூத்த புள்ளைங்க ரெண்டுங்கூட தெளிவா இருந்துச்சுங்க.

அடிக்கடி அதுங்களும் கூட ‘‘அப்பா வீட்டுக்குப் போவ வேண்டாம்மா.. நம்ம இங்கயே இருப்போம்’’னு சொல்லி, உச்சி குளிர வச்சுதுங்க. பெத்தவளுக்குத் தெரி யாம ஒரு தடவை தன் மகளையும் சீதாவையும் பார்த் துட்டு வந்த சங்கரோட நெஞ்சுக்குழிக்குள்ள சதா அதுங்க நெனப்புத்தான்! தன்னோட வீடே அதுங்க இல்லாம வெக்கரிச்சுப் போயிட்டதா அவனுக்குத் தோணுச்சு. நாலு சுவத்தோட வெறுமைய அவனால தாங்க முடியல. அவன் ஆத்தா மட்டும் ஒத்தை ஆளா வீட்டுக்குள்ள அலைய.. அவன் வீடு தங்குறதே இல்ல. அப்படி தங்குற நேரம்கூட ஆத்தா மேல எரிஞ்சு விழுந்தான்.

அன்னிக்கும் அவன் சுவரை வெறிச்சு ஒருக்களிச்சு படுத்துக் கிடந்தப்ப ‘‘ஏலேய் சங்கரு.. இந்தக் கொடுமையும் உண்டா?’’னு கேட்டுக்கிட்டே பதட்டத்தோட அவன் சின்னாத்தா உள்ளே வந்தா.

சீதாவோட பெரியப்பா குரலும் வெளிய இருந்து கேட்டுச்சு.. ‘‘அப்படி என்ன கொடுமைய கண்டுட்டீக!’’னு கேட்டுக்கிட்டே வாசத் திண்ணையில உக்காந்தாரு சீதாவோட பெரியப்பா.

வாரி சுருட்டிகிட்டு எந்திருச்சான் சங்கர். ‘‘வாங்க மாமா!’’னு மாமங்காரனை விசாரிச்சான். உள்நோக்கிப் பார்த்தவாக்குல, ‘‘ஆத்தா யாரு வந்துருக்கானு பாரு!’’னு சங்கரு உருசா உள்ள பார்த்தான். ஆனா அவன் ஆத்தாதான் கடுகடுத்தா.

‘‘யாரு வந்து உம் பொண்டாட்டிக்கு சப்போட்டு பண்ணா லும் சரி.. இந்த வீட்டுக்கு வாருசு பெத்துக் கொடுக்காத மருமவ இங்க வரக்கூடாது சொல்லிப்புட்டேன்!’’னு சொன்னா. பெரியப்பா துரைராசு தன் சட்டைப் பையிலருந்து ஒரு தாளை எடுத்தாரு.

‘‘எக்கா.. சீதா இனிமே இந்த வீட்டுக்கு வர மாட்டா. ஏன்னா, அவள நாங்க அவ மாமன் கோவாலுக்குக் கொடுக்கப் போறோம்.. அவன் அவமேல உசுரயே வச்சிருக்கான். முன்னாலயே அவள கட்டிக்கிறேன்னு பறந்த பயதேன்! நாங்கதேன் ஒண்ணுக்குள்ள ஒண்ணு வேண்டான்னு தட்டிவிட்டு உங்கிட்ட சம்பந்தம் செஞ்சோம். ஆனா எப்படி, எப்பிடியோ போயிருச்சி.

நானு சீதாகிட்ட எம்புட்டோ எடுத்துச் சொன்னேன். ஆனா, அவ ‘பெரியப்பா.. புள்ள பெறுறதுல புருசனுக்கும் சம்பந்தமிருக்கு. ஆனா, என்னை மட்டும் குறை சொல்லிக்கிட்டு இருக்க புருசன் எனக்கு வேணாம். நானு எம்மேலயும், எம்புள்ளங்க மேலயும் பிரியமா இருக்க மாமனுக்கே வாக்கப்பட்டுக்கிடுதேன்’னு சொல்லி, கையெழுத்துப் போட்டுக் குடுத்துட்டா. நீரும் ஒரு கையெழுத்து போட்டுக் குடுத்துட்டா, அப்படியே போலீசு டேசன்ல கொண்டி குடுத்துரலாமில்ல. நாள பின்ன ஒரு குத்தம், கொற வரக்கூடாது பாருங்க’’னு சொல்லி முடிக்கும் முன்ன, ‘‘சீதா!’’னு அலறிக்கிட்டு வெளியே பாய்ஞ்சான் சங்கர்.

புருசனோடயும் தன்னோட மூணு புள்ளைகளோடயும் வீட்டுக்கு வந்த சீதா, வாசல்ல நின்ன மாமியாக்காரியைப் பார்த்ததும் முகம் சுளிச்சா.

‘‘இந்தா பாரும்.. நீரு எங்காலப் புடிச்சி கெஞ்சாத குறயா கெஞ்சப் போயிதேன் நானு உம்மகூட வந்தேன். இப்ப நானு இந்த வீட்டுக்குள்ள நொளயணுமின்னா உம்ம ஆத்தாள வெளிய போவச் சொல்லும். நாலாவதா ஒரு பொம்பள புள்ள நமக்கு பொறந்திருச்சின்னா அப்ப ஒருக்கா போராட்டம் போட என்னால முடியாது’’னு சொன்னா.

உடனே சங்கர் ஆத்தாளைப் பார்க்க.. அவ சீதாவோட கையப் புடிச்சுக்கிட்டு, ‘‘தாயீ.. எம்மவன விட்டா எனக்குப் போக்கிடமில்ல.. நீ எத்தன பேத்தி பெத்துக் கொடுத்தாலும் நானு வளக்கேன்’’னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டா. தன்னோட அதிரடி வைத்தியத்தை நினைச்சு நினைச்சு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டா சீதா.

– ஜூலை 2006

Print Friendly, PDF & Email
அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்...’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந்துவிடும். நாகரிகப் பூச்சு அறியாத வார்த்தைகளும் வர்ணனைகளும் பாரததேவியின் ஸ்பெஷாலிட்டி! களத்துமேடுகளிலும், கண்மாய் கரைகளிலும் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் வகுப்பு வரைதான்! சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கதை கேட்டு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *