உயிரை உருகவைக்கும் கோடையின் கொளுத்தும் வெயிலிலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் நெரிசலில் மூச்சுத் திணறியது. ”பயணிகளின் கனிவான கவனத்துக்கு…” என்று அறிவிப்பாளரின் குரல் விட்டுவிட்டு ஒலித்தது. மூன்றாவது பிளாட்ஃபாரத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. சி1 ஏ.சி. சேர் காரின் கடைசி வரிசையில் கண்ணாடி ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பார்வதியின் மனம் அமைதி இழந்து அலை பாய்ந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஜோடியிடம் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக உறங்குவதுபோல் விழி மூடிக்கிடந்தாள்.
பிற்பகல் 1.35… ரயில் புறப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்தது. ”காபி… காபி” என்று குரல் கேட்டதும் பார்வதிக்குக் காபி குடிக்க வேண்டும் என்று தோன்றியது. கண் விழித்தால் பேச்சுக்கொடுக்க நேரும் என்ற நினைப்பில் அந்த விருப்பத்தை அவள் கைவிட்டாள். ”கொஞ்சம் காபி குடிக்கிறீர்களா?” என்ற கனிவான குரல் கேட்டு, விருப்பம் இல்லாமல் விழி திறந்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்தவள் குவளையை நீட்டியதைப் பார்த்து ”நோ… தேங்க்ஸ்” என்று மென்மையாக மறுதலித்தாள். ”உங்கள் முகத்தில் சோர்வு தெரிகிறது. காபி குடித்தால் ஓரளவு உற்சாகமாக இருக்கும்” என்று அந்தப் பெண் வேண்டியபோது, பார்வதியால் மறுக்க முடியவில்லை.
காபியைப் பருகியபடி அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்த்தாள் பார்வதி. இருபது வயது இருக்கலாம். மாநிறம், அடர்த்தியாகத் தீட்டப்பட்ட கண்கள்; எண்ணெய்இட்டு இழுத்து வாரிய கூந்தல்; காட்டன் புடைவையில் கட்டுண்டு கிடந்த வாளிப்பான உடல்; கழுத்தில் மெல்லிய சரடுடன் புது மஞ்சள் தோய்ந்த தாலிக் கயிறு: வெண்புள்ளியில் சிறிய மூக்குத்தி; கையில் வளையல்; காதில் அளவான கம்மல். பேரழகியாக இல்லாவிட்டாலும், கோயில் கருவறையில் மங்கலாக ஒளி பரப்பும் அகல் விளக்கின் புனிதம் அவள் தோற்றத் தில் தென்பட்டது.
நாகரிகம் கருதிப் பேச வேண்டி நேர்ந் ததால், ”உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டாள் பார்வதி. ”புனிதா” என்று அவள் புன்னகைத்தாள். ”சமீபத்தில்தான் திருமணம் நடந்ததா?” என்று கேட்ட அடுத்த கணம், புனிதா தன் கதையைச் சொல்லத் தொடங்கிவிட்டாள். ”போன வாரம் பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் திருமணம் நடந்தது. இவருக்கு நான் அத்தை மகள். வாழ்க்கையில் நாம் நம்ப முடியாதபடி எவ்வளவோ நடக்கிறது. உங்களைப் போல நான் அழகு இல்லை. படிப்பும் பெரிசா இல்லை. எங்க கிராமம்தான் என் உலகம். அப்பாவுக்கு இவரை மருமகனாக்கிக்கணும்னு ஆசை. ‘அவனோட அழகுக்கும் அறிவுக்கும் நம்ம பொண்ணு சரிப்படாது. வீணா சம்பந்தம் பேசி அசிங்கப்பட வேணாம்’னு அம்மா தெளிவா சொல்லிட்டாங்க. ஆனா, போன மாசம் இவரே எங்க வீட்டுக்கு வந்து, ‘புனிதாவைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்’னாரு. அம்மா, அப்பாவுக்கு கைகால் பிடிபடலை. எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருந்தது. இப்ப இவர் பக்கத்துல இருக்கிறபோதும் நம்ப முடியாத மாயமா இருக்கு!”
பார்வதி இருவரையும் சேர்த்துப் பார்த்தாள். அவன் அழகுக்கு அவள் பொருத்தமாக இல்லை. ‘இவளை மனைவியாகத் தேர்ந்தெடுத்து, இவனால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? மொசார்ட், பீத்தோவன்பற்றி இவள் அறிவாளா? ஓஷோவையும் ஜே.கே-வையும் இவளோடு விவாதிக்க முடியுமா? அறிவுபூர்வமாகவும், இலக்கியபூர்வமாகவும், கலாபூர்வமாகவும் இந்தப் புனிதாவோடு எதைப் பகிர்ந்துகொள்ளக் கூடும்? சமைப்பதும் கைகால் பிடித்துவிடுவதும்தான் திருமண வாழ்வில் பெண்ணின் பங்கென்று நினைக்கும் ஆணாதிக்கவாதியா இவன்? தன்னைவிட்டால் அத்தை மகளை யார் மணப்பார்கள் என்று தியாகம் செய்தவனா?’ புரிந்துகொள்ள முடியாமல் குழம்பினாள் பார்வதி. அவளுடைய குழப்பத்தைத் தெளிவிப்பதுபோல் புனிதாவின் கணவன் வாய் திறந்தான். ”இவள் அழகில்லாதவள் என்ற தாழ்வுணர்ச்சியோடு போராடுபவள். அழகு கொஞ்ச காலம் வானவில்போல வர்ணஜாலம் காட்டும். இளமையும் அழகும் வில்லில் இருந்து புறப்படும் அம்பைவிட விரைவாகக் கழிந்துவிடும் என்பார்கள். முகத்தில் சுருக்கமும் தலையில் நரையும் வருவதை யார் தடுக்க முடியும்? அழகுக்காக நேசித்தால், அந்த அழகு பறிபோகும்போது நேசமும் பறிபோய்விடுமே. ஒரு பெண்ணின் பரிசுத்தமான பாசமும் பரிவும் அக்கறையும்தான் குடும்பத்துக்கு அழகு சேர்க்கும். புற அழகால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் அர்த்தம் அறிந்தவன் நான். காந்திக்குக் கடைசி வரை கஸ்தூரிபாதான் அழகு. எனக்குப் புனிதாதான் எப்போதும் பேரழகு” என்று சிரித்த அந்த இளைஞனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் பார்வதி.
அவளுடைய மனம் விஸ்வத்துடன் அவனைப் பொருத்திப் பார்த்தது. ‘என் விஸ்வம் ஏன் என்னை அலைக்கழிக்கிறான்?’ என்று யோசித்தாள். அவள் கண்களில் நீர் திரண்டது. நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. மீண்டும் உறங்குவதுபோல் பாவனை செய்தாள். புனிதா கணவனின் தோளில் தலை சாய்த்தாள். வண்டி காட்பாடியைக் கடந்து வேகமாக விரைந்துகொண்டு இருந்தது.
பார்வதியும் விஸ்வமும் கடந்த ஆறு மாதங்களாக ஒரே சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இருவரின் அழகும் காதலில் இணைந்தது. அவர்கள் காதல், பார்வையில் தொடங்கி, பேச்சில் வளர்ந்து, பீச்சில் பெருகியது. ஒரு நாள் மாலை காபி ஷாப்பில் இருவரும் தனியாக அமர்ந்து காபி அருந்தியபோது, ”பாரு… நீயும் நானும் இனிமேலும் ஏன் தனித் தனியாக வெவ்வேறு பகுதிகளில் அறை வாசம் செய்ய வேண்டும்? ஒரு வீடு எடுத்து இருவரும் அதில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று விஸ்வம் கேட்டதும் பார்வதி அதிர்ந்துபோனாள். ”என்ன விசு சொல்கிறாய்? திருமணம் ஆகாமல் எப்படி ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்க முடியும்? ஊர் சிரிக்கும். என்னால் இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என்றாள். விஸ்வம் அவளை விடுவதாக இல்லை.
”பாரு… நம்மைப்போல் படித்துவிட்டுக் கை நிறையச் சம்பாதிக்கும் இன்றைய தலைமுறையினரிடையே இது ரொம்பச் சாதாரண விஷயம். நம்மோடு வேலை செய்யும் ஆனந்தும் உமாவும்கூடக் கல்யாணம் ஆகாமலே ஒரே வீட்டில், ஒரே படுக்கையைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள். இப்ப ‘லிவிங் டுகெதர் கல்ச்சர்’ வேகமாகப் பரவி வருகிறது தெரியுமா?” என்றான் விஸ்வம். ”இவன் ஏன் இப்படி விபரீதமாகச் சிந்திக்கிறான்?” என்று கவலையோடு அவனைப் பார்த்தாள் பார்வதி.
”விசு… எனக்கு இது சரியாகப் படவில்லை. நம் திருமணம்பற்றி யோசிப்போம். பெற்றோ ரிடம் பேசுவோம். அவர்கள் சம்மதிக்காவிட்டால், பதிவுத் திருமணம் செய்துகொள்வோம். உமாவையும் ஆனந்தையும் பார்த்து மனதை அலையவிடாதே!” என்று பார்வதி எழுந்துகொண்டாள். விஸ்வம் மனம் சுருங்கிப்போனான். பத்து நாட்கள் பறந்தோடின. விஸ்வம் பார்வதியைப் பார்க் கும்போது எல்லாம் முகம் திருப்பிக் கொண்டான். விட்டுப்பிடிப்போம் என்று அவளும் பேசுவதைத் தவிர்த்தாள். இனி, பேசாமல் இருக்க வழி இல்லை. எம்.டி. கொடுத்த டிரான்ஸ்ஃபர் ஆர்டர் அவள் கையில் இருந்தது. விஸ்வத்திடம் சென்று, ”முக்கியமான மேட்டர். ஈவினிங் காபி ஷாப்பில் சந்திப்போம். உன்னிடம் பேச வேண்டும்” என்றாள்.
காபி ஷாப்பில் கூட்டமே இல்லை. விஸ்வமும் பார்வதியும் ஒரு மூலையில் இடம் பார்த்து அமர்ந்தனர். வெயிட்டரிடம் ஆர்டர் கொடுத்தான் விஸ்வம். பார்வதி டிரான்ஸ்ஃபர் ஆர்டரை அவனிடம் கொடுத் தாள். படித்துப் பார்த்தான். பெங்களூரு கிளைக்கு அவள் மாற்றப்பட்டு இருக்கிறாள் என்பதை அறிந்து திகைத்தான். ஏ.சி-யின் குளுமையையும் மீறி அவன் முகம் வியர்த்தது. ”என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டான். ”நீதான் சொல்ல வேண்டும் விசு. திருமணத்துக்கு நீ சம்மதித்தால், இந்த ஆர்டரைக் கிழித்துப்போடுவேன். இங்கேயே வேறு ஆபீஸில் வேலை தேடுவேன். வேண்டாம் என்றால், வீட்டில் இருந்து உனக்கு உதவி செய்வேன். என்ன சொல்கிறாய்? ‘லிவிங் டுகெதர்’ கதையெல்லாம் நம் சமூகத்துக்குச் சரிப்படாது!” என்ற பார்வதியை ஏளனமாகப் பார்த்தான் விஸ்வம்.
”பாரு… திருமணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட விபசாரம் என்று ஷா சொன்னது உனக்குத் தெரியாதா? சந்தேகத்தில் உருவான ஓர் அருவருப்பான கட்டமைப்புதான் திருமணம். அதில் ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செய்யவும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம்கொள்ளவும்தான் இடம் உண்டு. பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட சிறை அது. விலங்கு பூட்டப்பட்ட கைதிகளுக்கும், கணவன் மனைவிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நட்பு, சுதந்திரம், மகிழ்ச்சி எல்லாம் அதில் பறிபோய்விடும். கல்யாணமாகிவிட்டால் ஒருவரை ஒருவர் ஒற்றுப் பார்ப்போம். பொறாமை நெருப்பில் கருகிப்போவோம். சண்டையிட்டு அமைதி இழப்போம். நம் முன்னோர்கள்கூடத் திருமணம் இல்லாமல்தான் முதலில் வாழ்ந்தார்கள். ‘லிவிங் டுகெதர்’ இந்த மண்ணுக்கு ஒன்றும் புதிது அல்ல. எல்லாமே சைக்கிள்… ஒரு வட்டம்தான். நேற்று இருந்தது இன்று மாறிவிட்டது. இன்று இருப்பது நாளை நிச்சயம் மாறும். சம்பிரதாயங்களும் சடங்கு களும் நம் முன்னோர்களின் முட்டாள் தனத்தில் உருவானவை. படித்தவள் நீ… கொஞ்சம் புரொக்ரஸிவா யோசி” என்று படபடப்புடன் பேசினான் விஸ்வம்.
காபி ஷாப்பில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் அதிகரித்தது. அடுத்தவருக்குக் கேட்காதபடி மிகவும் மெலிதாகப் பார்வதி பேசத் தொடங்கினாள். ”விசு… நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. பிளேட்டோவில் இருந்து ஓஷோ வரை நானும் படித்திருக்கிறேன். உன் ஷா சொன்னதும் எனக்குத் தெரியும். சரி… ஒரே வீட்டில், ஒரே படுக்கையை நானும் உன்னுடன் பகிர்ந்துகொள்கிறேன். எனக்குக் குழந்தை வேண்டும். திருமணம்தானே என் குழந்தைக்குச் சட்டபூர்வமான அங்கீகாரத்தைச் சமூகத்திடம் பெற்றுத் தர முடியும்? குழந்தையைத் தவிர்த்துவிட்டுக் கூடி வாழலாம் என்கிறாயா? இதுதான் ஷா சொன்ன பச்சை விபசாரம்…” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக வெளிப்படுத்தியவளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று விளங்காமல் குழம்பினான் விஸ்வம். பார்வதி அவனை ஸ்நேக பாவத்துடன் பார்த்தபடியே காபி யைப் பருகினாள்.
”பாரு… ஒன்றைப் புரிந்துகொள். அந்தரங் கம் புனிதமானது. லிவிங் டுகெதரில் மூன்றாவது நபருக்கு இடம் இல்லை. நாம் விரும்பும் வரை மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழலாம். வேண்டாம் என்றால், எந்த வலியும் வேதனையும் இல்லாமல் அவரவர் வழியில் பிரிந்து செல்லலாம். கோர்ட், வழக்கு, விவாகரத்து என்று மற்றவர் மூக்கை நீட்ட அவசியமே இல்லை. சம்பிரதாய வேலிக்கு வெளியேதான் மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கிறது. புரிந்துகொள் ப்ளீஸ்…” என்ற விஸ்வத்தின் நோக்கும் போக்கும் பார்வதிக்குப் பிடிபடவில்லை.
”ஸாரி விசு… குழந்தைபற்றியே சிந்திக்காமல் பேசுகிறாய். வாழ்க்கை என்பது வெறும் படுக்கை சமாசாரம் என்று நினைப்பவர்களுக்கு, உன் சித்தாந்தம் சரிப்படலாம். விரும்பியபோது சேர்ந்தும், கசந்தபோது கைகழுவியும் விலங்கைப் போல் வாழ எனக்கு விருப்பம் இல்லை. நான் நாளை பெங்களூரு புறப்படுகிறேன். நீ என்னை நேசிக்கிறாயா, என் உடம்பை நேசிக்கிறாயா? புரியவில்லை. வாழத் தொடங்குவதற்கு முன்பே விவாகரத்துபற்றி நீ சிந்திப்பது உன் அன்பு குறித்தே என்னைச் சந்தேகப்படச் செய்கிறது. ஐ டேக் லீவ் ஆஃப் யூ. பை!” என்று சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து காபி ஷாப்பில் இருந்து வெளியேறி ஆட்டோவில் ஏறினாள் பார்வதி. அவளுக்குப் பின்னால் விரைந்து வந்த விஸ்வம் செய்வதறியாது நின்றான்.
இரவு 8.30. பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் வண்டி வந்து நின்றது. புனிதாவும் அவள் கணவனும் இரண்டு நாட்கள் பெங்களூரைச் சுற்றிப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டார்கள்.
பார்வதியின் நெருங்கிய தோழி கமலாவும், அவளுடைய காதல் கணவன் ராமநாதனும் அவளை வரவேற்க வந்திருந்தனர். கார் கமலாவின் வீட்டை நோக்கி விரைந்தது. மூவரும் இரவு உணவு முடித்தனர். ராமநாதன் தன் அறைக்குப் போனான். கமலாவும் பார்வதியும் மாடிஅறைக்குள் நுழைந்தனர். கமலாவின் கழுத்தைப் பார்த்த பார்வதிக்குப் புனிதாவின் மஞ்சள் படிந்த தாலிக் கயிறு நினைவில் நிழலாடியது.
”என்னடி கமலா… உன் கழுத்தில் தாலியைக் காணோம். பதிவுத் திருமணத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டீர்களா?” என்று சிரித்தபடி கேட்டாள் பார்வதி. ”எனக்கும் ராமுவுக்கும் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. அன்பில் இணைந்தவர்களுக்கு அடையாளச் சின்னம் எதற்கு? பதிவுத் திருமணம் என்பது சடங்கு அல்ல. சேர்ந்து வாழ்வதற்கான சான்று. குழந்தைக்கான சமூக அங்கீகாரம். கரைக்குள் நடந்தால்தான் ஆறு. இல்லையென்றால் அது காட்டாற்று வெள்ளம். சமூகக் கட்டுப்பாடு என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட ஒழுங்கமைப்பு. அதைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்தக் கல்யாணம் எல்லாம். அதற்காக, தாலியைக் கழுத்தில் தொங்கவிட்டு, கால்களில் மெட்டியணிந்து, ஒன்பது முழம் புடைவையைச் சுற்றிக்கொண்டு, சமையலறைக்கும் படுக்கைஅறைக்கும் இடையில் முடங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆமாம்! உன் விஸ்வம் என்ன சொல்கிறான்?” என்றாள் கமலா.
”அவன் லிவிங் டுகெதர் மயக்கத்தில் இருக்கிறான். அது சரிப்படுமா கமலா?” என்று கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்த்தாள் பார்வதி.
”அடிப் பாவி. இவனையும் இந்த நோய் பிடித்துக்கொண்டதா? பாரு… கனவுப் பூவில் வாசம் வருமா? கனவில் பூ கவர்ச்சி காட்டும். வாசம் தராது. லிவிங் டுகெதரும் அப்படித்தான். எந்தப் பந்தமும் இல்லாத விடுதலை அதில் கவர்ந்திருக்கும். ஆனால் உண்மையான காதல், பாசம், உறவு என்று எந்த வாசமும் அதில் வீசாது. விஸ்வம் வீசும் வலையில் விழுந்துவிடாதே. நன்றாக ஓய்வெடுத்துக்கொள். உனக்கு ஆபீஸ் குவார்ட்டர்ஸ் கிடைக்கும் வரை இங்கேயே இருக்கலாம். எங்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை” என்று சொல்லிவிட்டு, மாடிப்படியில் இறங்கினாள் கமலா.
பார்வதி அறைக்குள் தனியானாள். விரக்தியும் வெறுமையும் கலந்து உணர்வு வாழ்வின் மீது பற்றின்மையை அவளுள் படரச் செய்தது. ஜன்னல்களைத் திறந்துவைத்தாள். வானில் வெண்ணிலா சிரித்தது. நீல விதானத்து நித்திலங்களாக நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டு இருந்தன. அவற்றின் அழகில் ஈடுபட்டு ரசிக்கும் நிலையில் அவள் மனம் இல்லை. அறை விளக்குகள் அனைத்தையும் அணைத்தாள். கட்டிலில் சாய்ந்து படுத்தாள். ‘உன் மீது இருக்கும் நம்பிக்கையில்தான் தனியாக வேலை பார்க்க அனுப்பிவைக்கிறோம். குடும்ப மானத்தைக் கெடுத்துவிடாதே. சரியான வரனை நாங்கள் பார்த்து முடித்ததும் சொல்லுவோம். அப்புறம் நீ வேலைக்குப் போவதும் போகாததும் உன் புருஷன் விருப்பம்’ என்று சொன்ன அம்மாவை நினைத்தாள். ‘எனக்கென்று நியாயமான விருப்பங்கள் எதுவும் இருக்கக் கூடாதா?’ என்று மனம் கசந்தாள். ‘ஆணாதிக்க உலகம்’ என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன.
புனிதாவும் அவள் கணவனும் நினைவில் வந்து நின்றனர். ‘புனிதா பழைய பஞ்சாங்கம். ஆனால், அவள் கணவன் இல்லறத்தின் உன்னதம் அறிந்தவன். கமலாவின் கணவன் மட்டுமென்ன? அவளுக்குப் பூரண சுதந்திரம் தந்திருக்கிறானே! இவர்களை ஆணாதிக்கவாதிகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ‘லிவிங் டுகெதர்’ என்று பிதற்றும் விஸ்வம்தான் பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கவாதியாக இருக்க முடியும் என்று நினைத்த பார்வதியின் இதயம் வலித்தது. நினைவுகளின் நீள்கரங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்க முயன்றபோது அவளுடைய கைபேசி சிணுங்கியது. இந்த நேரத்தில் யாராக இருக்கக்கூடும் என்று யோசித்தபடி அதை எடுத்தாள். விஸ்வம் பெயர் பளிச்சிட்டது. பேசுவதா, வேண்டாமா என்று தவித்தாள். நின்ற கைபேசியின் அழைப்பு அந்த இரவில், ஒளி மங்கிய இருளில் மீண்டும் தொடர்ந்து சிணுங்கிக்கொண்டே இருந்தது.
– ஜூலை 2012
காந்தி 50 வயதில் மாற்றான் மனைவியை அதுவும் விருந்தாளியாகப் போனபோது காதலித்த கதை காந்தியின் பேரன் எழுதியிருப்பதைப் படிக்கவும்.
பேச்சில் போலவே எழுத்திலும் அறியாமையை வெளிக்காட்டுகிறார் அதுவும் அதே அறுவையான nadaiyil