திருமண மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாத்தியச்சத்தத்தில் பேசும் வார்த்தைகள் புரிந்தும் புரியாமல் அனைத்திற்க்கும் சிரிப்பாய் உதிர்க்கும் நிலையில் ஒவ்வொரு உறவாக, நட்பாக தேடித்தேடி பேசி வைத்தாள் நீரா.
‘குழந்தைல பார்த்தது. இருபது வருசத்துல பருவத்துக்கு வந்ததும் அடையாளமே சுத்தமா மாறிப்போச்சு. இப்ப வயசு இருபத்தஞ்சு இருக்குமா? அப்பவும் இப்பவும் வெள்ளந்தியா அதே சிரிப்பு ஒன்னு மட்டும் தான் அடையாளம் கண்டு பிடிக்க முடிஞ்சுது’ வெளியூரிலிருக்கும் ஒன்று விட்ட மாமாவின் மகிழ்ச்சி வெளிப்பாடு.
பசி வயிற்றைக்கிள்ளியது. உறவுப்பெண் தீரா வுடன் விருந்து நடைபெறும் பக்கம் தலை காட்டினாள். தன்னைப்பார்து சிரித்தவர்களுக்கெல்லாம் தானும் சிரித்து தலையாட்டினாள்.
அறுசுவை எல்லாம் மறைந்து அறுபது சுவையில் தலைவாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டிருந்தது.’ பூமி வெலை உச்சத்துல இருக்கிறதுனால வித்து பணத்த என்ன பண்ணறதுன்னு தெரியாம குடியானவங்க வாரிசுக காரு, பங்களா வீடு, ஆடம்பர கண்ணாலம்னு பணத்த ரோசன பண்ணாம செலவளிக்கறாங்க’ கிராமத்து பெரியவர்களின் புலம்பல்களை சாப்பிடும் இடத்தில் கேட்க முடிந்தது.
உறவுத்தோழியுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்கு முன் தனது பின்னால் ஒரு பெண் அடுத்த பந்தியில் சாப்பிட இடம்பிடிக்க காத்திருந்ததோடு ‘சீக்கிரம் சாப்பிட்டு விட்டு இடத்தைக்காலி பண்ணு’ என்பது போல அவளின் முக பாவனை, செயல்களும் இருந்தது நீராவுக்கு பிடிக்கவில்லை. திடீரென ஒரு முடிவுக்கு வந்தவளாய் பாதி உண்ட நிலையில் மீதி உணவுடன் இலையை மூடினாள்.
‘ஏண்டி அதுக்குள்ள மூடிட்டே. பிடிக்கலையா? உன்னோட பக்கமா இலையை மூடு. அப்பதான் இவங்களோட உறவு என்னைக்கும் நிலைக்கும்’ என தீரா சொன்னவுடன் வெளிப்பக்கம் மூடியிருந்த இலையை உட்பக்கமாக மூடினாள்.
கைகழுவும் இடத்தில் டீ, காபி, கரும்புச்சாறு, பழங்கள், ஐஸ்கிரீம், இளநீர் பாயாசம், தக்காளி சூப், பாப்கார்ன் என ஏற்கனவே வயிறு நிரம்பியிருந்த நிலையில் இந்த ஐட்டங்கள் ஆசையைத்தூண்டிட, வயிறு உண்ட உணவை இறுக்கி, ஒதுக்கி மீண்டும் சாப்பிட இடம் செய்து கொடுத்தது.
ஐஸ்கிரீம் சாப்பிடும் போது ‘இந்த ஃப்ளேவர விட சாக்லேட் ஃப்ளேவர் சூப்பரா இருக்கும்’ என சம வயதொத்த இளைஞன் தன்னைப்பார்த்து கூறியதும், அவனை ஏறிட்டு பார்த்ததும் அவனது வசீகர முகம் தன் மனதை காந்தமாய் ஈர்க்க, அவனது விருப்பத்துக்காகவும், சொன்னவனை மனதுக்கு பிடித்திருந்ததாலும் அதையும் வாங்கி சுவைத்தாள். அவனை இதற்க்கு முன் எங்கோ பார்த்தது போல் தோன்றினாலும் முழு நினைவு வரவில்லை. சிறு வயது அறிமுகமெனவும் தன் நினைவு சொல்லி நினைவு படுத்தியது.
இருபத்தைந்து வயதிலேயே வயிறு முன்னே சென்று சட்டைப்பட்டனை உடைக்க முயலும் நிலையில் வலம் வரும் இளைஞர்களுக்கு மத்தியில் இவன் வயிறு ஒடுங்கி, மார்பு விரிந்து தினமும் உடற்பயிற்ச்சி செய்பவன் போலிருந்தான்.
இளம்பெண்களைக்கவரும் வகையில் ஆடையணிந்து நன்கு படித்த அறிவாளியாகத்தெரிந்ததால் நீராவின் மனதில் டேரா போட்டு அமர்ந்து விட்டான்.
அவனை யாரென அறிந்திட மனம் அவசரப்படுத்திட “நீங்க…?” என சிக்கனமாகக்கேட்டாள்.
“நான் உங்க…” என்றவன், “இருங்க வந்து சொல்லறேன்” என கூறிவிட்டு சம வயதொத்த இளைஞனிடம் சென்று கைகுலுக்கி விட்டு சிரித்து, சிரித்து பேசியதைப்பார்த்து தூரத்திலிருந்து அவனை ரசித்தாள்.
அம்மா சிலரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினாள். போட்டிருந்த நகை எத்தனை பவுன் என சொன்னவள் ‘ இப்ப வந்த புது டிசைன்’ என பெருமையாக சொன்னதை ஒரு பெண் பொறாமையாகப்பார்த்ததும், மற்றவர்கள் கண்டும் காணாமல் மற்றவர்களுடன் திரும்பி நின்று பேசத்துவங்கியதும் நீராவுக்கு பிடிக்கவில்லை.
மணமேடையில் மணமக்களுடன் புகைப்படம் எடுக்கும் வரிசையில் போய் நிற்கும் போது தீரா இன்னொரு தோழியுடன் பேசச்சென்று விட, அந்த இளைஞன் மீண்டும் தன்னருகே வந்து நின்றது நீராவுக்கு பிடித்திருந்தது.
பெண்ணைவிட மாப்பிள்ளை உயரம் குறைவாக, நிறம் மாறாக இருந்ததால், மணமக்களை பொருத்தமான ஜோடி என சொல்ல முடியாத நிலையில், ‘இவன் தனக்கு மாப்பிள்ளையானால் ஜோடிப்பொருத்தம் எப்படியிருக்கும்?’ என அவனருகே நின்று பார்த்த போது கச்சிதமாக இருப்பதாகப்பட்டது.
இவனைப்பற்றி முழுவதும் விசாரித்து, தனக்கே மாப்பிள்ளையாக்கி விட வேண்டும்’ என மனதில் எண்ணியபடி மணமக்களை நோக்கி நகர்ந்தாள். அவன் நீராவிடம் ஏதேதோ பேசினான். இவளும் பலரின் பேச்சின் இரைச்சலால் அவனது பேச்சு முழுவதும் புரியாத நிலையில் புரிந்தது போல் நடித்து சிரித்துக்கொண்டே இருந்தாள். இவர்களை ‘காதலர்களோ…?’ என அங்கிருந்த அறிமுகமில்லாதவர்கள் நினைத்திருக்கக்கூடும் என நினைந்துக்கொண்டாள். ‘நினைத்து விட்டுப்போகட்டும். அது விரைவில் உண்மையாகப்போவது தானே’ எனவும் எண்ணிப்பூரித்தாள்.
இருவரும் மணமக்களிடம் புகைப்படம் எடுக்கச்சென்றதும் நீராவை மணமகளிடம் நிற்க்கச்சொல்லி விட்டு, மணமகனருகில் சென்ற இளைஞன், “இவங்க பேரு நீரா. என்னோட தாய் வழி சித்தி பொண்ணு. தூரத்துச்சொந்தம். எனக்கு தங்கச்சி முறை. சின்ன வயசுல பார்த்தது. இருபது வருசத்துக்கப்புறம் இப்பத்தான் சந்திச்சேன்” என தன்னை அவன் மணமக்களிடம் அறிமுகப்படுத்தியதைக்கேட்டதும் நீராவின் கண்டதும் காதல் துண்டு, துண்டாகச்சிதறியது.