ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 20,037 
 
 

உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் . அப்போதும் ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் விபரீதத்துடனே.

மைதிலி என்று வாய் விட்டுதான் அலறியதாக அவனுக்குத் தோன்றியது.ஆனால் அலறல் சப்தம் கேட்டு நடந்து கொண்டிருந்தவர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் எதுவும் நின்று விடவில்லை. புகைக் காற்று அதன் திசையை மாற்றிக் கொண்டு அலறவில்லை. அப்படியானால் குரல் சரியாக எழும்பி அடையாளம் காட்டவில்லையா. அப்படியெல்லாம் நிகழ இன்னும் கொஞ்சம் வாயைத்திறந்து அலற வேண்டும் என நினைத்தான் சேதுபதி.

” மைதிலி.. மைதிலி ..”

” மைதிலி என்னைக்காதலி ” படத்தை எதேச்சையாய் தொலைக்காட்சியில் மைதிலியைப் பெண் பார்க்கப் போன அன்றுதான் பார்க்க வாய்த்தது சேதுபதிக்கு…அதனால் பெயர் குழப்பம் என்று எதுவும் வராமல் மனதில் கல்வெட்டுப் பெயர் போல் மைதிலி என்கிற அந்தப் பெயர் நிலைத்து நின்று விட்டது. நிச்சயமாய் எல்லாம் சுமூகமாக நடக்கும் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் வழக்கமாய் செவ்வாய், ஏழாமிடத்தில் புதன் என்று ஏதோ காரணம் காட்டி அந்த ஜாதகமும் கை கூடவில்லை. ஆனால் முடிவு தெரிய தாமதமான மூன்று மாதங்களில் அவன் அவளுடனான இன்ப காதல் ஜீரத்தில் இருந்தான்.படு வேகமான ஜீரம். ஜீரம் வடிய பின் ஆறு மாதங்களாகி விட்டன.

ஆறு வருடம் கழித்து மைதிலி கண்ணில் தட்டுப்படுகிறாள். இதற்குள் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகளுக்கு அவளின் இனிசியலை வித்தியாசமாய் வைத்திருப்பாளா. குடும்பஸ்திரி என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருப்பாளா. உடம்பு கொஞ்சமும் கட்டுக் குலையவில்லை. முகத்தில் எந்த சுருக்கமும் இல்லை.இதுவும் வேறு ஊர்தான். கண்ணில் தட்டுப்பட்டவளை கண்டதும் எந்தக்கூச்சமும் இல்லாமல் அவள் பெயரை உரக்கவேச் சொல்லத் தோன்றி விட்டது சேதுபதிக்கு. அவன் கையிலிருந்த “ சுலபமாக ஆங்கிலம் பேசுவது எப்படி” நூல் அவனின் கையிலிருந்து நழுவுவது போலிருந்தது. இறுக்கிப் பிடித்துக் கொண்டான். நுனிநாக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆசை அவனுக்கு இந்த வாரத்தில் வந்து விட்டது. யுனிவர்சல் திரையரங்கு சாலை இம்ரான் பழைய புத்தகக் கடையில். அதற்காக அதை வாங்கியிருந்தான் . அந்தப் புத்தகம் அவனை எங்கோ ஒரு படி மேலேதான் கொண்டு போகும் என நம்பினான்.

தொண்டையிலிருந்து குரல் கிளம்பவில்லை என்றுதான் தோன்றியது. மைதிலி மொழிப்போர் தியாகிகள் நினைவுச் சின்னத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தாள். டவுன் ஹால் நிறுத்தத்தில் இறங்கியவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தான். குறுக்கிடும் வாகனங்கள், மனிதர்கள் எல்லாம் மறைந்து போக மைதிலி மட்டும் அவன் பார்வையில் இருந்தாள்.ஒரே இலக்காய் அவள் முகம்.

மைதிலி ..சரியான பெயர்தான்.அப்படியொன்றும் மாறி போயிருக்காது. சரியான பெயரைச் சொல்லியும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பெயருக்குரியவளே திரும்பிப் பார்க்காத போது வேறு யார் திரும்பிப் பார்ப்பார்கள். ஆனால் பெண்ணின் பெயரை சொல்வதைக் கேட்டு திரும்பிப் பார்க்காதபடி இவர்களுகெல்லாம் அப்படி என்னதான் வேலை இருக்கிறது. ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றி அடைத்துக் கொண்டார்களா என்ன .காது உயிர் போகும் வெயிலில் அடைத்துப் போயிற்றா என்ன..

குமரன் நினைவகத்தைத் தாண்டி அன்னாபூரணா விடுதி சந்தில் தனிமையில் விடப்பட்டவள் போல் அவள் நடந்து கொண்டிருந்தாள்.ஆண்களையும் அவர்களின் பார்வைகளையும் விலக்கிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறாள்.நடையின் விரைசல் அவனின் வேகத்தைக் கூட்டச் சொன்னது. அவனும் உடம்பின் சிரமம் மீறி நடையை விரசலாக்கிக் கொண்டான். இந்த முறை பெயரை உரக்கச் சொல்லி விடவேண்டியதுதான். தொண்டையைச் சரிசெய்து கொண்டான்.

அவள் திரும்பிப் பார்த்தமாதிரி அவளின் கழுத்து 45 டிகிரி கோணத்தில் திரும்பியது. ஆனால் நடையை காதர்பேட்டையின் வீதிக்குள் முடக்கிக் கொண்டிருந்தாள். இன்னும் உடம்பில் லாவகத்தில் எந்த விதச் சுனக்கமும் ஏற்பட்டு விடவில்லை. அப்படியே இருக்கிறாள். திருமணமாகி இருந்தாலும் உடம்பை அப்படியே வைத்திருக்கிற கலையைச் சரியாகத்தான் கற்றிருக்கிறாள். அம்மா காலத்துப் பெண்ணாக இருக்க வேண்டியவள்.. உடம்பை சரியாக வைத்துக் கொள்வதில் அம்மாவிற்கு இணையாக எளச்சிபாளையம் பெரிய சித்தியைத் தான் சொல்லவேண்டும்.

அதற்கப்புறம் தானா மைதிலி நீ.. நல்லதுதான்.

இந்தப்பகுதி எப்போதும் கலவரப்பட்ட பூமிதான். ஏதாவது மதக்கலவரங்கள், அரசியல் போராட்டங்கள் , சிரமங்கள் நாட்டில் எங்காவது ஏற்படுகிற போது இந்தப்பகுதிக்கு காய்ச்சல் வந்தது போலாகிவிடும். எங்காவது நின்று யாராவது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள்.உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.குமரன் நினைவகம் தொடங்கி நெரிசலாய் வழியும். இப்போது சேதுபதிக்கு காய்ச்சல் வந்து விட்டது போலிருந்தது. தொண்டை கிழியக் கத்துவது போல் மைதிலி பெயரைச் சொல்லிக் கத்தி விட்டேனே. இன்னும் திரும்பிப் பார்க்கவில்லையே. பெண்கள் கல் மனதுக்காரர்கள் என்பதைத் திரும்பத் திரும்ப நிருபித்துக் கொண்டிருக்கிறார்களா என்ன.. மைதிலியின் ஜாக்கெட்டில் கை விரல்கள் போல் விரிந்த பூவைத்து முதுகு தெரிய பார்டர் சீரமைக்கப்பட்டு நவிருசாக அவள் அணிந்திருப்பது தெரிந்தது, அவனுக்குப் பிடித்த மஞ்சள் நிறத்தில் அந்த ஜாக்கெட்.

கொஞ்சம் விரைசலாய் போய் எதிரிலே நின்று மைதிலி என் அழைப்பு வார்த்தைகள் காதில் விழவில்லையா என்று கேட்டு விடவேண்டியது போல் நடையை விரசலாக்கினான். இரண்டு சக்கர வாகனம் தொடர்வண்டி நிலைய இருப்பிடத்தில் இருந்தது. காங்கயம் போய் விட்டுவந்தவன் பேருந்திலிருந்து இறங்கி இரட்டைச் சக்கர வாகனத்தை எடுக்க நடந்து கொண்டிருந்தவனின் கண்களில் தான் அவள் விழுந்தாள். வெள்ளக்கோவில்காரிக்கு இங்கு என்ன வேலை என்று முதலில் அவனுள் கேட்டுக் கொண்டான். திருப்பூரே காங்கயம் வரைக்கும் என்று விரிவாகி விட்ட பின் வெள்ளகோவிலும் உள்ளூர்தான். இந்த உள்ளூரில் கூட வாழ்க்கைப்பட்டிருக்கலாம். இங்கு அவளுக்கு வேலை அமைந்திருக்கலாம். எப்படியும் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் போகிறேன்.

அவள் தொலை பேசி நிலையத்தைக்கடந்து இராயபுரம் பகுதிக்கு நகர்ந்து கொண்டிருந்தாள். இரட்டைச் சக்கர வாகனத்தை எடுத்து வந்து அவளைப் பின் தொடரலாமா. அதற்குள் அவள் மின்னலென மறைந்து விட்டால் சிரமமாகி விடும்.பின் தொடர்ந்துதான் பார்க்கலாம். வேறு வழியில்லை. நடு ராத்திரி படங்களில் பெண்களை, ஆவிகளை விரட்டிப்போகும் ஆண்களின் கதியில் அவன் இருந்தான்.

” குழந்தைகளைப் படிக்க வையுங்கள் இடையில் நிறுத்தாதீர்கள். குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் ” ஜெய்வாய்பாய் பெண்கள் பள்ளி எதிரில் பதாகைகளுடன் பள்ளிக் குழந்தைகளின் ஊர்வலம் அப்போதுதான் புறப்பட்டது என்பது போல் சிறு குழுக்கள் தென்பட்டு அவளைத்தடுமாற வைத்து விட்டது . அவள் நடை மெதுவாகியிருந்தது. கோஷங்கள் சிலருக்கு எதைஎதையோ சொல்லிக் கொண்டிருந்தன.கோஷங்களூடே மைதிலி என்று கத்தலாமா என்று நினைத்தான். அவனின் தற்போதைய கோரிக்கை அவளை அடையாளம் கண்டு கொள்வது. அப்புறம் சில நிமிட நேர பேச்சு.இந்தப் பள்ளியின் ஆறாயிரம் பெண் குழந்தைகளில் எத்தனை பேருக்கு மைதிலி என்ற பெயர் இருக்கும். இப்போதெல்லாம் ரேஷ்மா, சுஷ்மா, திரிசா என்று பெயர் வைக்கிற காலத்தில் மைதிலி போன தலைமுறை பெயர்தான்.ஆனால் இந்தத் தலைமுறைக்கும் எப்போதும் சுலபத்தில் இருக்கும் பெயர்.

கிருஷ்ணன் கோவில் முகப்பிலிருந்த நகராட்சிப் பூங்காவிறகுள் அவள் நுழைந்து விட்டது தெரிந்தது.

அவன் உள்ளே நுழைந்து வாசலில் தலையை 180 டிகிரி கோணத்தில் அசைத்து பார்த்தான். அவள் பெஞ்சொன்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.முழு உடம்பையும் பெஞ்சில் சிரம்த்துடன் சாய்த்திருந்தாள்.அவளின் கண்கள் அவனையேப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இதென்ன பார்வை. உடம்பு முழுக்க மின்சாரம் தாறுமாறாய் பாய்ந்து நிலைகுலைய வைக்கிறதே.

அவள் பார்வையை விலக்கவில்லை. அதீதமில்லாத முகப்பூச்சில் இரவு நேரத்து நிலவாய் அவள் முகம் மின்னியது. அவள் புங்கமரமொன்றின் கீழ் குளுமையை அனுபவிப்பவள் போல் கண்களை மூடித் திறந்து பார்த்தாள். அவள் வாயெடுக்கும் முன்பே அவன் கதறுவது போல் கேட்டான்:

மைதிலிதானெ நீங்க

இல்லெ.

கண்களுக்குக்கீழ் அரும்பியிருந்த வியர்வையை ஆட்கட்டி விரலால் சுண்டினாள். அவளின் பிரகாசத்துக்குள் அவன் திணறிக் கொண்டிருந்தான்.

எதுக்கு என் பின்னால வர்றீங்க

நீங்க மைதிலிதானே

இல்லன்னு சொன்னல்லியா.

இல்ல.. என்னாலே நம்ப முடியலேல

வேற என்ன பண்ணனும். ..எம்பேரை மாத்திக்கணுமா

மைதிலின்னு..

டவுன்ஹால்ல இருந்து பாலோ பண்றீங்க . யாராச்சும் பாத்து ஏதாச்சும் கேள்வி கேட்டா எவ்வளவு அசிங்கமாயிரும்.

அவள் கண்கள் துளிர்க்க ஆரம்ப்பித்தன. வேர்வைத்துளிகளிலிருந்து மாறுபட்டது இந்தத் துளிர்ப்பு.

ஒரு பொண்ணெ பாலோ பண்றது….. எவ்வளவு சங்கடமா இருக்குது தெரியுமா

கண்களில் கண்ணீர் தளும்பி திரிந்தது அவளுக்கு. கன்னக்கோடுகளில் தாரைகள் விழுந்தன.

சாரி , நான் உங்களெ மைதிலின்னு நெனச்சு

அதுதா இல்லன்னு சொல்லிட்டனே.

மைதிலி

அதுதா இல்லியே.. வுடுங்க.. பாலோ பண்ணாதீங்க

அவள் விடுவிடுவென இராயபுரம் பூங்காவின் வெளி வாசல் பக்கம் சென்றாள். இதை அவனிடம் சொல்வதற்காகவே இங்கு நுழைந்தாளா. இடதுபக்கமிருந்து காவலாளி போல் தென்பட்டவன் விரைசலாக சேதுபதியை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் நெருங்குவதற்குள் பூங்காவின் குளுமையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்பது போல் வாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்த அவளைப் பார்த்தான்.அந்தப் பூங்காவில் போன வாரம் நடந்த கூட்டம் பற்றி அவன் கேட்டுத் தெரிந்திருந்தான்.

உள்ளுரில் இருக்கும் பனியன் தொழிலுக்காக வந்துத் தங்கியிருக்கும் நைஜீரியர்களுக்கு இனி யாரும் வீடு தரக்கூடாது. இருக்கிறவர்களும் காலி செய்ய வேண்டும். நைஜீரியர்கள் வெகு சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இரவுகளில் கூட நேரம் காலம் இல்லாமல் திரிகிறார்கள். போதை வாசத்துடனே இருகிறார்கள். நைஜீரியப் பெண்களும் இப்போதெல்லாம் அவர்களுக்கு ஜோடியாகத் தென்படுகிறார்கள்.இல்லையென்றால் ராயபுரம் அம்மன் நகர் பெண்களுடன் சுற்றுகிறார்கள்.கலாச்சார அதிர்ச்சி அலைகளை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நைஜீரியப் பெண்களுடன் இறுக்கமான உடை, அபரிமிதமான லிப்ஸ்டிக் என்று திரிந்த போது கொஞ்சம் சுலபமாகவே எடுத்துக் கொண்டார்கள். உள்ளூர் பெண்களுடன் அவர்கள் சுற்றுவது அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது. அவர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் அந்த பூங்காக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். காவலாளி நெருங்கி வந்து ஏதோ விபரீதம் என்று அவனை வெளியேறச்சொல்வான். அதற்குள் தப்பித்து விடவேண்டும் என்று நடையை விரசலாக்கினான். நைஜீரியாக்காரர்களின் இருட்டு முகம் தனக்கு வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.தன்னைப் பின் தொடர வேண்டாம் என்று புறங்கையில் தள்ளி விட்டுப் போய் விட்டாள். இனி தொடர முடியாது.

இராயபுரம் பகுதிக்கு வரும் போதெல்லாம் ஓஎப்சி உணவுவிடுதிக்குப் போக அவன் தவறமாட்டான். நம்ம பட்ஜெட்டூக்கு இதெல்லாம் தாங்காது என்று நினைத்தபடியேதான் அவன் முதல் முறைஓஎப்சிக்குள் நுழைந்திருந்தான்.

முதல் முறை ஓஎப்சிக்குள் :

கட்டிடத்தின் உள்புறம் முழுக்க மெல்லிய சிவப்பு வர்ணமே மேலோங்கியிருந்தது. நின்று கொண்டு சாப்பிடும் விதமாய் சாய்ந்து கோணலாக எட்டு வட்ட மேசைகள் இருந்தன. அவனை நோக்கி சிரித்தபடி வந்த பெண் அட்டையை நீட்டினாள்.. தலை கேசம் தவிர எல்லாமே பழுப்பு சிவப்பு நிறத்தில் இருந்தன.அவனுக்கு அட்டையில் நெளிந்த புழுக்காய் எண்களும் வார்த்தைகளும் மிதந்தன. அதிலிருந்த விலைதான் அவற்றையெல்லாம் புழுக்காளாக்கி விட்டன. அபரிமிதமான விலை. அரை பிளேட் பிரியாணி 60 ரூபாய் என்பதையே அதிகம் என்று நினைத்துக் கொண்டிருப்பவன் அவன். அவ்வளவு சிக்கனக்காரன். பனியன் கம்பனியில் வேலை செய்பவன் இதற்கு மேல் எப்படி செலவு செய்ய என்று திடமாய் நம்புபவன்.

“ என்ன ஆர்ட்ர் பண்றீங்க “

“ என்ன பண்றதுன்னு தெரியலெ”

“ என்னென்ன அயிட்டமுனு சொல்லட்டுமா “

“ அதில்லெ வெலைதா..நூறு ரூபாய்க்குள்ள ஏதாச்சும் “

“ ஒரு சிக்கன் லெக் பீஸ் . ஒரு கப் கூல் டிரிங்க்ஸ் 105 ரூபா “

“ செரி ..இதுதா நம்ம பட்ஜெட்.. கொண்டு வாங்க”

“ அவ்வளவுதானா “

“ போதும் இன்னிக்கு. போனஸ் வங்கறப்போ மனசிலெ வெச்சுக்கறன் “

“ எப்போ போனஸ் “

” தீபாவளிக்கு “

“ அதுக்கு ரொம்ப நாள் இருக்குதே “

60 ரூபாய் பிரியாணி என்றால் ருசித்துச் சாப்பிடுவான். ரொம்ப நேரம் அந்த கார நெடி வாயில் இருக்கும். எண்ணெய் பிசக்கு விரல்களில் மாட்டிக் கொண்டிருக்கும். 105க்கு ஒரு லெக் பீஸ் மட்டும்தானா.

“ வேற ஏதாச்சும் ”

“ இன்னிக்கு இது போதும். மொதல்தரம் இப்பத்தா வர்றன் “

லெக் பீஸ் சுவையாகத்தான் இருந்தது. நின்று கொண்டே சாப்பிட்டான்.சுற்றிலும் பார்த்தபோது அங்கிருந்த சுவரொட்டிகளில் ஏதோ பாடகர்களின் முகங்கள் இருந்தன. அவனின் ஆங்கில அறிவில்ஓஎப்சிக்கு திரும்பத் திரும்ப அவர்கள் வரவேற்பது தெரிந்தது. வெளிநாட்டுப்பாடகர்களும் அதையே செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. பணம் வாங்குகிறவன் தவிர எல்லோரும் பெண்களாகவே இருந்தார்கள். சிவப்பு பேண்ட், சட்டை, சிவப்பு தொப்பி என்று எல்லாம் சிவப்பாக இருந்தன.இளமையான பெண்கள் என்பது அவனை உறுத்தியது.மூன்று நாள் தாடியைச் சொறிந்து கொண்டான்.

அங்கு பலதரம் சென்றிருக்கிறான். குறைந்த பட்ஜெட்டை எப்போதும் அவன் தாண்டியதில்லை. ஜெயமணியை ஒரு தரம் கூட்டிக் கொண்டு வர நினைத்திருந்தான். அவளின் பனியன் கம்பனி அலுவலகத்தில் ஞாயிறு மட்டுமே விடுமுறை. ஞாயிறுகளில் திருமுருகன் பூண்டி சிவன் கோவில் காங்கயம் சிவன் கோவில், அழகுமலை முருகன் கோவில் என்று அவனின் இரட்டைச் சக்கர வாகனம் திரியும். நொய்யல் கரை வெள்ளி விழா பூங்கா பக்கம் சாதாரணமாய் சென்று திரும்புவதே பாக்யம் என்பது போல் நான்கு வீதிகளுக்குள் விடுமுறை தினம் அடைபட்டுப் போகும். தினமும் இரவு எட்டு மணிக்கே வீடு திரும்பும் பனியன் கம்பனி வேலை அவளுக்கு. நின்று கொண்டு வேலை செய்து சலித்திருந்தாள். அவள் பிரிவு அப்படி.

ஓஎப்சியின் சிகப்பு நிறக்கட்டிடத்தைப் பார்த்தான். மைதிலி தந்தது நான் அவளில்லை என்ற நோஸ்கட்டா… மறுப்பா. இல்லை மைதிலியே இல்லையா அவள். அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

பெண் பார்க்கும் படலத்தில் அலுத்துப் போயிருந்தான். பல்லடம் சித்தப்பா கல்யாண புரோக்கர்தான். அவரே அலுத்துப்போனார். “ எம் மகனுக்கு ஒரு பொண்ணு கெடைக்க மாட்டீங்குதே. நான் பாத்து ஊர் முழுக்க நிச்சயார்த்தம் பண்ணி வக்கறனே. இவனுக்குன்னு ஒண்ணு வாய்க்க மாட்டேங்குதே “

அம்மா புலம்பித் தீர்த்தாள்.“ டேய் வயசாகிட்டே போதுதடா. ஏதாச்சும் தாலியை அறுத்தது, விவாகரத்து பண்ணுனதுன்னு கெடச்சாலும் பண்னிக்கடா . நானும் உனக்கு சமச்சுப் போட்டு சலிச்சு போயிட்டன். ரொம்பவும் லேட் ஆகுதடா “. சேதுபதியும் மிகையான முகப்பூச்சு, டாலடிக்கும் சட்டைகள் என்றுத் திரிந்தான். அம்மா அடையாளம் கண்டு கொண்டாள்.

“ எப்பிடியும் தேடிக் காதலிச்சு கண்டு புடுச்சு உங்க கவலையைப் போக்கிடறன் “

“ பாத்துடா.. மாறுகை, மாறுகால்லுன்னு வெட்டற காலம் மறுபடியும் வந்திட்டிருக்கு. கலப்பு ஜாதியின்னு கை, காலுக்கும் , உடம்புக்கும் பிரச்சினை வந்திரப்போகுது “

ஜெயமணியைப் பார்த்த போது சம வயது என்றார்கள். ஜாதகம் ஒன்றும் வேண்டாம் என்றார்கள். கொஞ்சம் அவள் பார்வையில் படும்படி திரிந்தான். அபூர்வமாய் தொலைபேசியில் பேசிக் கொண்டான். காதல் என்றான். அவள் இரண்டு மாதம் போகட்டுமே என்று இழுத்தடித்தாள். சிக்கண்ணா கல்லூரி சாலை கொங்கணகிரி முருகன் கோவிலில் பூ பார்த்து சரி என்றதும் ஒத்துக் கொண்டான். கொஞ்சம் அதிகம் படித்தவளாய் ஜெயமணி இருந்தாள் என்பது அவன் அம்மாவுக்கு சங்கடமாய் இருந்தது. சேதுபதி பிளஸ்டூ. ஜெயமணி டிகிரி . ஆரோக்கியநாதன் சேதுபதியுடன் மெர்சண்டைசிங்கில் வேலை பாப்பவன் “ எங்காளுகள்லே கூட ஈகுல் ஏஜிதா நிறைய இருக்கும். குற்றவுணர்வா இருக்காதே “ என்றான். ஜெயமணியின் நினைவாய் மூன்று மாதங்கள் காத்திருந்து தினமும் பலமுறை காதலிக்கிறேன் என்று மனசிலும் தொலைபேசியிலும் சொல்லி சாதித்தான். அவன் அம்மாவிற்கு அவர்கள் சாதியிலேயே ஜெயமணியை தேடிக் கண்டு கொண்டதில் ஏக சந்தோசம். ஆத்மா சாந்தியடைய சரியான வழியைக் கண்டு கொண்டாள்.

ஓஎப்சியின் உள்ளில் இருந்த குளுமையை உள்வாங்கிக் கொண்டவன் போல் உட்கார்ந்தான் சேதுபதி . கண்களைத் திறந்த போது மேசையின் கிறிச்சிடலுடன் மைதிலி நின்றிருந்தாள்.

“ மைதிலி .. நீங்களா… இங்கே”

“ நான் மைதிலி இல்லே. ஆர்ட்ர் பண்னுங்கோ. என்னைப் பாலோ பண்ணி வந்திருக்க மாட்டிங்குன்னு நெனைக்கிறன் “

“ இல்லே.. பாலோ பண்ணலே ..எப்பவாச்சும் வருவன் இங்க “

வழக்கமான பட்ஜெட்டை விட 50 ரூபாய் அதிகம் இருக்கும் அயிட்டத்தைத் தேடினான்.லெக்பீஸ்சை தாண்டி அவன் கண்களை நகர்த்திக் கொண்டு போவது சிரமமாக இருந்தது அவனுக்கு.. மைதிலியிடம் கஞ்சனாகக் கட்டிக் கொண்டு விடக்கூடாது.

சேதுபதி 185 ரூபாய் பணத்தை எடுத்து நீட்டியபடி மைதிலியைத் தேடினான். இந்த முறை வறுத்த எட்டு உருளைக்கிழங்கு நறுக்குகள் அதிகம் இருந்தன. வாயையும் கையையும் துடைத்துக் கொள்ள கொஞ்சம் அதிகமான ட்டிஸ்யூ தாள்களைப் பயன்படுத்தி இருந்தான். மைதிலியைக் காணவில்லை . எங்கோ ஒளிந்து கொண்டிருக்கலாம். இன்னும் நான்கு ட்டிஸ்யூ தாட்களைக் கசக்கி எரிச்சலில் எறிந்தான்

கல்லாவில் இருந்தவர் இன்னொரு பணிப் பெண்ணிடம் உரத்த குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள். சேதுபதி கல்லாவின் அருகில் பில்லுடன் செல்லவே அவள் நகர்ந்து விட்டிருந்தாள். சிவப்பு மேசையில் அவனின் கை விரிந்து பில்லுடன் கிடந்தது.

” கல்யாணமான பொண்ணுகன்னா கொழந்தைக, ஆஸ்பத்திரின்னு அடிக்கடி லீவு கேப்பாங்கன்னு கல்யாணமாகாதவங்களெப் போடறம். இதுகளெ மேய்க்கறதுக்கு நாலு ஆள் வேண்டியிருக்கு. . உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுக இருந்தா சொல்லுங்க சார்”.

ஏதேச்சையாய் அவனிடம் ஒரு விண்ணப்பம் . அவனுக்குப் பெருமிதமாய் இருந்தது.அவனின் விண்ணப்பங்களை நிராகரிக்க ஆயிரம் பேர். அவனுக்கே ஒரு விண்ணப்பம்.

அப்படியென்றால் மைதிலி திருமணமாகாதவளா. இன்னுமா ஆகவில்லையா. அவளின் தெறித்த உடம்பில் இளமை மினுங்கிக் கொண்டிருந்ததே.

“ கல்யாணமாகாதாதாத்தா வேணுமா “

“ கல்யாணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லெ. ரெண்டும் மிச்சிங்கா இருக்கட்டும். அதுவும் பாக்கலாம் “

“ வயசு..”

“ வயசு வெளிய தெரியக்கூடாத மாதிரி இருந்தா செரி . கொஞ்சம் இங்கிலீஷ் நுனி நாக்குலே பேசணும். போதும் “

அவன் கையிலிருந்த ” சுலபமாக ஆங்கிலம் பேசுவது எப்படி “ நூலை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.நுனி நாக்கு ஆங்கிலத்திற்கு இது போதுமா .போதும்

“ ஒன்லி லேடிஸ் “

சேதுபதி ஒய்யெம்சிஎ ரவுண்டானாவை கடந்த பின்னால் ஓஎப்சி அவன் கண்களில் இருந்து மறைந்தது.

அவள் கல்லாவின் அருகில் வந்து நின்றாள்.

” ரெண்டு கல்யாண விளம்பரம் பாத்து குறிச்சு வச்சன் மைதிலி. இது செட் ஆகுமா பாரு. விடோ, டைவரிசின்னு கேட்டிருக்காங்க . வொர்க் அவுட் ஆகலாம் மைதிலி . டிரை பண்ணு “ காகித நறுக்கை மைதிலியிடம் தந்தார் கல்லாப்பெட்டிக்காரர்.

அன்றைக்கு ஜெயமணி வெகு தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தாள். ஹேண்ட் பேக்கை தூக்கி எறிந்து விட்டு இந்த பனியன் கம்பனி வேலையே ஆகாது என்றாள். “ நேரம் காலம்ன்னு ஒண்னுமில்லாமெப் போச்சு “

” 20,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணின்னா சும்மாவா “

“ அது எத்தனை குடும்பத்துக்கு… நம்மள மாதிரி கூலிகளுக்கு வாரகூலியும் அபூர்வமா வருஷாந்தர போனசும்தான் “

“ வேற வேலைக்கு மாத்திக்கறைய காதலி ..”

“ ஒன்னு புடுச்சு குடுதா காதலா “

“ செரி ஏற்பாடு பண்ணிடுவம்.எட்டு மணி நேரந்தா உன் குறிக்கோளா”

“ ஒரு ஷிட்டுங்கறது பத்து பனிரெண்டு மணி நேரமாகிப் போன ஊர் இது . கொஞ்சம் ஓயவு தேவை . அது மாதிரி வேலை “

“ இந்த புக்கெ இன்னையில இருந்து படிக்கறே “ அவன் கையிலிருந்த ” சுலமாக ஆங்கிலம் பேசுவது “ எப்படி நூலைக் காட்டினான்

“ டிகிரி படிச்சதுக்கு இதெல்லா தேவையில்லெ. உன்னோட் பிளஸ் டூக்கு வேணுமுன்னா படி “

“ பிராக்டிகலா தேவைப்படும் .படி..”

“அப்புறம் வேறே என்ன பண்றது வேலை மாத்திக்கறதுக்கு ..’

திருப்பூர் திருப்பதி கோவிலில் ஒரு சனிக்கிழமையில் அவள் சுண்டல் பிரசாதமும் இலவச இனிப்புப் பொங்கலும் கிடைத்த சந்தோசத்தில் இருந்தபோது அவன் ஜெயமணி உடம்பை இளைக்க வேண்டிய அவசியம் பற்றிச் சொன்னான்.சந்தோசத்திற்குக் காரணம் அன்றைக்கு சீக்கிரம் பிரசாதம் கைக்கு வந்து விட்டதும் அதற்கான வரிசை சீக்கிரம் நகர்ந்து விட்டதும் கூட.

“ இந்த இனிப்பை கொஞ்சம் கொறைக்கணும் “

“ சாமி பிரசாதமில்லையா “

“ கொஞ்சம் கொறைக்கணும். உடம்பு வெயிட் கொறைக்க மலமிளக்கி டேபிளட் மொதற்கொண்டு போடணும் “

“ கொஞ்சம் கொள்ளு., சுடுதண்ணின்னு குடுச்சுக் கொறைக்க முடியாதா “ “ அது ரொம்ப லேட்டாயிரும் .கெழவியாயிருவே “

“ செரி . எதுக்கு இது ..”

“ வேற எடத்துக்கு.. வேற வேலைக்கு “

“ பியுட்டி பார்லருக்கா வேலைக்கு போகப்போறன். “

“ இல்லே .. ஆனா பியூட்டியா இருக்க வேண்டாமா. செரி ..இப்போ கொஞ்சம் ருசியா சிக்கன் சாப்புடுடலாமா “

“ கோயில் பிரசாதம் சாப்புட்டு சிக்கனா..”

” சிக்கன் சாப்புட்டுதா கோயிலுக்குப் போகக் கூடாது…. பிரசாதம் நெய் பொங்கல் சாப்புட்டு சிக்கன் சாப்புடலாமே.. என்ன தீட்டு வந்திருது “

“ ரொம்ப தூரமா…”

“ சபாபதிபுரத்திலிருந்து ராயபுரத்துக்கு….. அவ்வளவுதா..”

“நெய் பொங்கலுக்கும் சிக்கனுக்கும் உள்ள தூரம்.. “

ராயபுரம் ஓஎப்சிக்குள் நுழைந்து சிவப்பு வர்ணம் மேலிட்டக் கட்டடத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். லெக்பீஸ் சிக்கனும், கோக்கா கோலாவும் அவளுக்குப் பிடித்திருந்தன.பனியன் கம்பனி வேலையிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்பவள் போல் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

” ஹோட்டலுக்குப் போகத் தோணற போது இங்க வர்லாங்க..”

“ சிக்கன் ருசி புடிச்சிருக்கா..”

“ இந்த சுத்தமும் புடிச்சிருக்கு..பனியன் குப்பைக்குள்ளியே பத்து மணி நேரம் இருந்தவங்களுக்குத்தா இந்த சுத்தம் சொகம்ன்னு புரியும் ”

“ இங்க வேலை செய்யறது புடிக்குமா..”

“ எட்டு மணி நேரந்தானா”

“ அப்பிடித்தா சொன்னாங்க .. சம்பளமும் கொஞ்சம் கூடுதலா இருக்கும் .பஸ் வுட்டு எறங்குனா ஓஎப்சி ..”.

இரண்டு நாள் யோசித்து ஓஎப்சிக்கு ஓகே சொன்னாள். ஜெயமணி வேலைக்குச் சேர்ந்து விட்டால் சிக்கனும், லெக் பீசும் சலுகை விலையில் கிடைக்கலாம். அவளுக்கும் ருசியாய் சாப்பிட அவ்வப்போது ஏதாவது கிடைக்கும். சமையலில் அவ்வளவு கெட்டிக்காரியில்லை ஜெயமணி. அதுவும் லெக்பீஸ், பிரைடு சிக்கன் என்பதெல்லாம் அவளுக்கு வெகு தூரம். மைதிலியை அடிக்கடி பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். அது அவனின் மைதிலிதானா.. அவள் இல்லவே இல்லை என்கிறாள். மைதிலிதானா என்று கண்டு பிடிக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் ஆவலாக இருந்தான். எப்படியும் கண்டுபிடித்து விடவேண்டும். மைதிலி எப்படி அப்படியே இருக்கிறாள். ஆறு வருசத்திற்கு முன்பு கண்ணில் பட்ட அதே பார்வை வசீகரம். அல்லது அப்படியே இருப்பதாய் அவன் கண்ணுக்குத் தெரிகிறாள்.

உடம்பை குறைக்கவென்று சாப்பிட ஆரம்பித்த மலமிளக்கி மாத்திரைகள் ஜெயமணியை பின்னால் இம்சைப்படுத்தி விட்டன. . முகத்திற்கு பொலிவு இல்லாமல் சிறுத்துப் போய் விட்டது தெரிந்தது. அடர்த்தியாய் பவுடர் போட்டு மினுங்கலை ரசித்தாள்.

ஓஎப்சி வேலை அவளுக்குப் பிடித்திருந்தது.. சிவப்புத் தொப்பி, சிவப்பில் மேலாடை, பேண்ட் , எட்டு மணி நேர நேர வேலை, கணிசமான சம்பளம், ருசியான பார்சல்.. எல்லாம் இருவருக்கும் பிடித்திருந்தன. பனியன் கம்பனி வாழ்க்கையிலிருந்து அவள் விடுபட்டதற்கு அவனுக்கு பலமுறை நன்றி சொன்னாள்.முத்தங்கள் மூலமும் நன்றி சொன்னாள்.

ஆனால் உடம்பைக்குறைக்க அதிகப்படியாய் மாத்திரைகள் சாப்பிட்டதால் முதுகுவலியும் கர்ப்பப்பை கோளாறும் அவளை முடக்கின.படுக்கையும் ஓய்வும் அவள் உடம்பு கெஞ்சிக் கேட்டது.

“ என்னை வேறாளா மாத்தறதுக்கு முயற்சி பண்ணுனீங்க . மொதல்லே சந்தோசமாத்தா இருந்துது.. அப்புறம் மெல்லதா சந்தேகம் வந்துது “

“ என்ன சந்தேகம் “

“ நான் இயல்பா இல்லாமெ எதுக்கு இப்பிடி பட்டினி கெடந்து, மாத்திரைக சாப்புட்டு உடம்பை எளைக்க வக்கறன்னு. என்னை எங்க தள்றங்கன்னு “ “ அங்க அதுதா கேட்டாங்களே. ஒல்லியா இருக்கனுமுன்னு “

“ நுனி நாக்கு இங்கிலீஷ் சுலபமா வந்திருச்சு. மெலிஞ்ச உடம்பு வர்றதுக்கு எதை எதையோ தியாகம் பண்ணியிருக்கேன்னு இந்த முதுகு வலி சொல்லிட்டிருக்கு. டாக்டர் உடம்பு இளைக்க தேவையில்லாமெ அதிகமாத்திரை சாப்பிடிருக்கேன்னு கணக்கு போட்டுச் சொன்னார்”

“ உடம்பைத் தேத்திக்கலாம் “

“ லெக் பீஸ் சிக்கன் உடம்பைத் தேத்துமான்னு தெரியலே . விபரீதமாக் கூடத் தெரியுது”

“ தேறிரும். நிறைய புரோட்டின் இருக்கு அதிலெ ”

“ உடம்பு தேறலே. என் சிரிப்பு இயல்பா கஷ்டமர்கிட்ட இல்லாமெ செயற்கைத்தனமா இருந்தா, வலிஞ்சு உடம்பு வலியில் கஷ்டப்பட்டுச் சிரிக்கறதா இருந்தா அங்க இருக்க முடியாது . வெளியேத்திருவாங்க. பிளசண்ட் ஸ்மைல்தா அவங்களுக்கு வேணும்”

“அதை போலியாவாவது மாட்டிக்க”

“ ரொம்ப சிரமம்தா. செயற்கையா சிரிக்கறதுக்கு அழுகறது மேல்”

” எல்லாம் செரியாயிரும்.. ஆமா கொஞ்ச நாளா ஒன்னு கேக்கணும்ன்னு இருந்தேன். உங்க ஹோட்டல்லே மைதிலின்னு யாராச்சும் இருக்காங்களா”

“ தெரியலையே. மாடி சர்வீஸ் சேத்து இருபது லேடிஸ் இருக்கம். கேள்விப்பட்ட பேரா தெரியலெ.வெளிய போறது வர்றதுன்னு நெறையப் பேரு வருவங்க போவாங்க . அதில போனவங்கள்லெ இருப்பாங்களோ என்னமோ. அவங்க யாரு . எப்பிடிப் பழக்கம். “

மருத்துவர் ஜெயமணிக்கு முதுகு வலியால் பத்து நாள் கட்டாய ஓய்வும் வைத்தியமும் தேவை என்று சொல்லி விட்டார். வீட்டில் ஜெயமணி முடங்கிக் கிடக்க வேண்டியதாகிவிட்டது. விடுமுறை சொல்ல சேதுபதி ஒஎப்சிக்குச் சென்றான்.கல்லாவில் இருந்தவர் சிவப்பு மாறாத புன்னகையுடன் இருந்தது ஆறுதல் தந்தது. இடையில் வந்து சென்ற நாலைந்து தடவைகள் மைதிலி கண்ணில் தட்டுப்படவில்லை. வெவ்வேறு ஷிப்ட்டுகளில் இருந்திருப்பாளோ… அல்லது அவள் மைதிலியே இல்லையா.. பெயர் வேறையா..

“ லீவா …. நெறந்தரமா ”

“லீவுதாங்க.. இருந்த பனியன் கம்பனி வேலையையும் இதனால வுட்டுட்டு வந்தாங்க. “

“ நீங்க பனியன் கம்பனியில் இருக்கீங்கல்லே”

“ இருக்கன். ரெண்டு பேர் சம்பாதிச்சாலும் சிரம்ப்பட வேண்டியிருக்குது இந்த டாலர் சிட்டியில ..ஆமா… இங்க மைதிலின்னு ஒருத்தர் இருந்தாங்களா .இப்ப இருக்காங்களா “

“ போயிட்டவங்க லிஸ்ட்லே அவங்க பேரும் இருக்கு “

“ ரொம்ப நாளாச்சா “

“அவங்க போன எடத்திலெதா உங்க ஜெயமணி வந்தாங்க ”

“ என்ன காரணம் “.

“ கல்யாணமாகாத பொண்ணுகன்னா அவங்களுக்கு கஷ்டமரா நிறைய சின்ன வயசு காதலர்கள் கெடைச்சிர்ராங்க. மைதிலி மாதிரி வீடோன்னா அவங்களுக்குன்னு வர்ற கஷ்டமர் எல்லா வயசியிலும் இருக்காங்க. அது பெரிசா தொந்தரவாயிருச்சு.”

“ அவங்க விடோவா “

“ எப்படியோ கஷ்டமர் மோப்பம் புடுச்சு எல்லாம் தெரிஞ்சுக்கறாங்க”

“ அவங்க விடோவா “

“ கல்யாணமாகி பத்து நாள்லியே புருசன் ரோடு ஏக்சிடண்லே செத்துப் போனார். எனக்கே லேட்டாத்தா தெரிஞ்சிது. அவங்க இங்க சேந்தப்போ கல்யாணமாகாதவங்கன்னுதா சேர்த்தன். இங்க சேர்ரப்பவே அவங்க புருசன் செத்து நாலு வருசம் ஆகியிருந்தது அப்புறம்தா தெரிஞ்சுது பாவம்…. பரிதாபப்படலாம். நானே சில புரபோசல் தந்தேன். எதுவும் தேறலெ”

சேதுபதிக்கு நான்கு விசயங்கள் ஞாபத்தில் அலைமோதின. ரொம்பவும் இம்சித்தன.

1. அவன் அம்மா உயிருடன் இருக்கும் போது சொன்னது:

“ டேய் வயசகிட்டே போதுதடா. ஏதாச்சும் தாலியை அறுத்தது, விவாகரத்து பண்ணுனதுன்னு கெடச்சாலும் பண்னிக்கடா . நானும் உனக்கு சமச்சுப் போட்டு சலிச்சு போயிட்டன். “

2. ஓஎப்சியிலிருந்து வெளியேற்றப்படும் பட்டியலில் ஜெயமணியும் இருக்கிறாளா. மைதிலி வெளியேற்றப்படும்போது எப்படி உணர்ந்திருப்பாள். கதறி அழுதிருப்பாளா.என்ன காரணமாக இருந்திருக்கும்.. ஜெயமணி அப்படி வெளியேற்றப்படும் போது என்ன வசவைத்தாங்கி அவள் வெளியேறுவாள். அல்லது வெளியேற்றப்படுவாள்.

3. அவனின் காதலிகள் கவுரவப்படுத்தப்பட்டதில்லை

4. கவிதைகள் எழுதுவது, படிப்பது போல் காதலிப்பதும் கால விரையமான பொழுது போக்கா..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *