ஒரு காதலின் கதை

 

ஒரு காதலின் கதைஇந்தக் கதை நடக்கிற காலம் டெலிபோன்கள் மட்டுமே இருந்த காலம். பேஜர் அறிமுகமாயிருந்த காலம். அவளுடைய சில கவிதைகள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன. அவளுக்கு நிறைய கடிதங்கள் வரும். பெரும்பாலான கடிதங்கள், ஒரு பெண் பெயரைப் பார்த்தாலே, பெண் பெயருடன் ஒரு முகவரியைப் பார்த்தாலே வருகிறவை. சில, ‘உங்கள் கவிதை இப்படியிருந்தது அப்படியிருந்தது’ ரகம். சில மிரட்டும் ‘நீ என்ன பெரிய இவளா..? ரதியா? நல்லா எழுத மாட்டியாடி நீ…’ இப்படி.

இவை எதிலும் சேராமல், எங்கிருந்து என்று புரியாமல், திடீரென்று அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. இதயம் தொடுவதாக இருந்தது. அவளை நன்றாக, மிக நன்றாகத் தெரியும் என்று தெரிந்தது. அவள் கூடவே பயணிக்கிற ஒருவர் எழுதியதைப் போல இருந்தது. முதல் மூன்று கடிதங்கள் எந்த பதில் கடித எதிர்பார்ப்புகளும் அற்று வந்தன. அவ்வளவு அழகியல் அந்தக் கடிதங்களில். ஒரு மடிப்பில் கூட அவ்வளவு கவனம். நாம் மிகவும் நேசிக்கிற, மிக மிக நேசிக்கிற ஒருவருக்கு எப்படி பார்த்துப் பார்த்து எழுதுவோம்… ஓர் அடித்தல் இல்லாமல் திருத்தம் இல்லாமல், சிறு சிறு ஓவியங்களைக் குவியலாக்கி எழுதினது போல, தனிக் கவனத்துடன், இவள் மேல் பிரத்யேக அன்பு கொண்டு அவை எழுதப்பட்டிருந்தன.

சிலசமயம் சிற்சில கோட்டோவியங்களும் வரும். சில சமயம் புகைப்படங்கள். மிக அழகாக ஒளியும் இருளும் கை கோர்த்த புகைப்படங்கள். ஒரு முறை ஒரு சிலையைப் படமெடுத்தது வந்திருந்தது. ஓவியம் போல இருந்தது. அவளுக்கு வர வர தெருவில் நடப்பதே யாரோ தன்னை மெல்ல தோளணைத்துக் கூட்டிப் போவது போல இருந்தது. யாரோ தன்னோடு சதா 24 மணி நேரமும் உடனிருப்பதாக. அந்த யாரோ தனக்கே தனக்கென சிந்திப்பதாக. தன்னை மட்டுமே சிந்திப்பதாக. இந்தக் கற்பனை அவளுள் ஒரு குளுைமயான சந்தோஷத்தைக் கொடுத்தது.

பிறகு ஒருநாள் கடிதம், அவனது முகவரியுடன் வந்தது. அவன் பெயரைக் கையெழுத்திட்டிருந்தான். இனியும் தாங்கமுடியாது என்கிற ஒரு கணத்தில் பதில் எழுதத் தீர்மானித்தாள். இதற்குள் அவன் இன்னும் நாலைந்து கடிதங்கள் எழுதியிருந்தான். அவ்வளவு ப்ரியத்தைக் கொட்டியிருந்தான். ஒரு தகப்பனைப் போல. நண்பனைப் போல. காதலனைப் போல. கண்ணாமூச்சி விளையாட்டின் புதிர் புரியாமல் அவளும் விளையாடத் தொடங்கினாள். அவள் ரொம்ப சம்பிரதாயமாக, எப்படி முகவரி கிடைத்தது என்று கேட்டு எழுதியிருந்தாள்.

அவன் சொன்னான் ‘வானத்திலிருந்து…’என்று. சிரிப்பாயிருந்தது. கவிதை எழுதுகிற தன்னிடமேவா என்று நினைத்துக் கொண்டாள். ‘மேகங்கள் நலமா?’ என்று கேட்டெழுதினாள். அவளின் சிறிய சுணங்கலுக்கும் பெரிதாக வருந்தினான். ஒரு தாய்க்கோழி தன் சிறகுகளுள் தன் குஞ்சுகளைப் பொதிந்துகொள்வதை ஒத்திருந்தது அது. அவன் யாராக இருந்தாலும் அற்புதக் கலா ரசிகன். அவன் எழுத்து, ஓவியம் போல. புள்ளி எழுத்துகளில் புள்ளியை வட்டமாக வரைய அவனிடம் கற்றாள். அவனெடுத்த புகைப்படங்கள் ஒளி ஓவியமாய் ஒளிர்ந்தன. தனது கவிதைகள் புத்தகமாய் வந்தால், அவனுடைய புகைப்படம்தான் அட்டைப் படமாக வேண்டும் என்றாள். ‘உனக்காக வானத்தையே பரிசளிப்பேன்; இது என்ன ஃப்பூ…’ என்றான்.

‘வானம் வேண்டாம்; அது ஏற்கனவே எனக்கிருக்கிறது; எங்கள் ஊரில் இல்லாத கடல் வேண்டும்…’ என்றாள். துளி மணலைக் கடலாக்கி, கடிதத்தில் அனுப்பினான். அவளது கவிதைகள் தொகுப்பாகின. தொகுப்பு அட்டை, அவன் ஒளிப்படம் அனுப்பாததால் வெற்று நீலமாய் வெளிவந்தது. அதுபற்றி அவளுக்கொன்றும் புகார்கள் இல்லை. கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அவன் வருவதாக வாக்களித்தான். தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகவும் சொன்னான். பெருநகரத்தில் வெளியீட்டு விழா. அவனை அழைத்திருந்தாள். ஆனால், அவன் வரவில்லை. ஏன் என்றதற்கு, அன்று அவள் அணிந்திருந்த சுடிதாரின் நிறத்தை சரியாகச் சொன்னான்.

பேசிய நாலே வரி நன்றியுரையை அவள் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்ததிலிருந்து சொன்னான். அவள் நடையைக் கிண்டலடித்தான். ஏன், வந்திருந்தும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்று கோவித்துக் கொண்டாள்.செல்லச் சண்டைகள். முறியும் மவுனங்கள். பிறகொரு நீண்ட கடிதம் எல்லாவற்றையும் சமன் செய்தது. அவளுக்கு கதவு திறந்ததும் கடல்; ஜன்னல் திறந்து உள்வரப் பார்க்கும் கடல்; சில சமயம் அலைகளின் வீச்சில் மீனாய் இருப்பாள். அவனுக்கு பெருநகரத்தில், கனவுப் பட்டறையில் வேலை. அவனது மேசையில் டம்ளரிலிருந்த கடல் கொட்டி, வாழ்க்கை சிதறியது. மீன்கள் பறந்தன.

அவளுக்கு அவனை, அவன் வார்த்தைகளை அவ்வளவு புரிந்தது. மின் விசிறி சுழலும் வானம் அவனது என்றால், இவளுடையது விரல்கள் டைப்படித்தே முனை மழுங்கிய, வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிக்க முடியாத வாழ்க்கை. இருவரும் கனவுகளில் வாழ்க்கையைத் துரத்தினார்கள். கடிதங்களில் கண்டடைந்தார்கள். வார்த்தைகளிடம் சரணடைந்தார்கள். எங்கும் பொழிந்த அன்பின் மழை இவர்களையும் நனைத்தது; ரகசியமாய் நனைந்தார்கள்; தன்னுள் கனன்று குளிர் காய்ந்தார்கள்.ஒருநாள் வார்த்தைகள் தீப்பற்றி எரிய, ‘நீ வேண்டும்’ என்றான். ‘இந்தா, நீ பிடித்துக் கொள்ள என் சுண்டுவிரல்’ என்று வரைந்தனுப்பினாள். சுடராய் இருந்தது, காடெனப் பற்றி எரிந்தது. காதலிப்பதாகச் சொன்னான்; தானும் என்றாள்.

நிஜத்திலும், தான் பற்றி எரிவதைக் கண்டாள். அவன் தனக்கே வேண்டும் என்றாள். திருமணம் செய்ய விரும்புவதைச் சொன்னாள். முதல் காதல். முதல் விருப்பம். நீண்ட மவுனம். வெகு நீண்ட மவுனங்கள். சில வரிகளில் காரணங்கள் வந்தன. அவன் அவளை விட மிக மூத்தவன் என்றொரு காரணம்; அவன் வாழ்க்கைக்கே போராடுகிறான் என்றொரு காரணம்; பார்க்காமல் காதலிக்க முடியும் – திருமணத்திற்கு சந்திப்புகள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றேழு காரணங்கள்; மிகக் கடைசியாக, அவனுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், அது அவனது பால்ய காதலி என்றும், மிகச் சில நாட்களில் திருமணம் என்றும் சொல்லியிருந்தான்.

அது அவனுடைய பிறந்த தினம். அவனுக்கென ஓர் ஓவியம் வரைந்தாள். அவள், அவனது பேஜர் நம்பர் தவிர எதுவும் அறியாள். சந்திக்க வேண்டும் எனத் தகவல் தந்துவிட்டு, பெருநகரை நோக்கிப் பயணித்தாள். அந்த நகரில் ரயிலடியைத் தவிர வேறு எதையும், யாரையும் அவளுக்குத் தெரியாது. சென்றாள். காத்திருந்தாள். காலையிலிருந்து, இரவு வரை. இரவு முழுக்க. அவன் வரவில்லை. வந்திருந்தாலும் அவனை, அவளுக்குத் தெரிந்திருக்காது. அவளை நோக்கி வருவதும், விட்டுச் செல்வதுமாக ரயில்கள். அவள் அன்று இறந்திருந்தால் ஒரு கதை; இருந்திருந்தால் இன்னொரு கதை.

- ஆகஸ்ட் 2019 

தொடர்புடைய சிறுகதைகள்
கோவிந்தசாமி
அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாமியறை. அடுத்து உக்கிராண அறை. பிறகு தட்டு முட்டு சாமான்கள் வைக்கிற அறை. வலப்புறம் படுக்கை அறை. ...
மேலும் கதையை படிக்க...
கோவிந்தசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)