என்னைக் காணவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 6,444 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சந்தியா ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு கையில் குட்கேஸையும் எடுத்துக்கொண்டு வந்து கையிலிருந்த முகவரியைச் சரிபார்த்துக்கொண்டு அந்தக் கதவிலிருந்த அழைப்பு மணியை அழுத்தினாள்.

“கோன்” என்று இந்தியில் முதலில் குரல் கேட்க, கதவைத் திறந்த அந்த வாலிபன், ஒரு பெண் நிற்பதைப் பார்த்து தான் ஜட்டியோடு நிற்பதை உணர்ந்து உள்ளே ஓடினான்.

“டேய்… வாசு. யாரோ ஒரு பெண் வாசலில் வந்து நிற்கிறாள். போய்ப் பார். பால்காரனாகத் தானிருப்பான் என்று இந்த நிலையிலேயே போய்க் கதவை திறந்து விட்டேன்” என்ற வசந்தன் பாத்ருமிற்குள் ஓடினான்.

கையிலிருந்த பேப்பரைக் கீழே வைத்து வீட்டு டவலை எடுத்து மேலே எடுத்துப் போட்டு கொண்டு “கோன்” என்றவாறு கதவைத் திறந்தான்.

“சந்தியா. நீயா எப்போது வந்தாய் ஊரிலிருந்து? வா! வா! பிரம்மசாரிகள் அறை, அப்படி இப்படி இருக்கும்” என்று அவள் கையிலிருந்த சூட்கேஸை வாங்கிக் கொண்டான்.

“மும்பைக்கு எப்போது வந்தாய்? ஒரு போன் பண்ணியிருக்கலாம். அட்லிஸ்ட் ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாம். ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கூட்டிக் கொண்டு வந்திருப்பேன்”

“எல்லாம் ஒரு சஸ்பென்ஸ். ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்ற ஆசைதான். நான் வந்தது உனக்கு பிடிக்கவில்லையா? வாசு”.

“நோ நோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”

“அப்புறம் ஏன் முகத்தை ஒருமாதிரி வைத்துக் கொண்டிருக்கிறாய்?”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது தான் தூங்கி எழுந்தேன். பல்கூட விலக்கவில்லை. அதான் ஒருமாதிரி தெரிகிறது” என்று அவன் வாய்ப்பேசினாலும் – ‘நீ இப்போது சூட்கேஸோடு இங்கு வந்திருக்கிறாய் தெரியாத இடம், தெரியாத பாஷை நண்பர்களோடு தங்கியிருக்கும் நான் உன்னை எங்கே தங்க வைப்பது? இப்படி முன்பின் சொல்லாமல் நீ பாட்டிற்கு ரயிலேறி மும்பை வந்து விட்டாய். நான் என்ன செய்வதென்றுதான் புரியவில்லை’ என மனதிற்குள் கொஞ்சம் எரிச்சல்பட்டுக் கொண்டான்.

பாத்ரூமிலிருந்து லுங்கியும், சட் டையும் போட்டுக் கொண்டு வெளியே வந்த வசந்தனை “இது என் அறை நண்பன் வசந்த், இன்னும் இரண்டு பேர் தங்கியிருக்கிறார்கள். சீக்கிரமாக அலுவலகத்திற்கு கிளம்பி விட்டார்கள். வசந்த், இது சந்தியா. யாருண்ணு”என்று அவன் முடிப்பதற்குள் “எனக்குத் தெரியும். வணக்கம் சிஸ்டர் பேசிக் கொண்டிருங்கள் டீ வாங்கிக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் வசந்தன்.

“இங்கே சமைப்பதெல்லாம் கிடையாதா?”

“அது முடியாது, ஒரு அறை எடுத்துத் தங்கியிருக்கிறோம். வீட்டுக்காரன் மஹாராஷ்டிரியன். பாத்ரூமை வீட்டுக்காரனும் நாங்களும் உபயோகித்துக்கொள்ள வேண்டும். சமையல் அறையில் அவனுடைய குடும்பம் சமைத்துக்கொள்ளும். எங்களுக்கு சாப்பாடு காபி. டீ எல்லாம் மெஸ்ஸிலேயும் ஹோட்டலேயும் தான். சந்தியா என்ன திடுதிடுப்பென்று வந்துவிட்டாய். வீட்டிலே சொல்லி விட்டுத்தானே வந்தாய்?”

“வீணாக மனதை அலட்டிக் கொள்ளாதே வாசு, நான் எங்க சித்தப்பா கூட பாண்ரூப்பில் ஒரு செமினார் புரோக்ராமிற்கு வந்தேன், மும்பைக்குப் போகிறோமே. அப்படியே வாசுவையும் பார்க்கலாமே என்று உன் தங்கையிடம் சொன்னேன். உன்னுடைய துணிமணிகளைக் கொண்டு தரச் சொன்னாள். அதான் சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு வந்தேன்”

“நீ அப்படி இருக்கமாட்டாய் என்று தெரியும். ஒரு வேளை உங்கள் வீட்டில் ரொம்ப விரட்டியிருந்தால்… என்ற பயம்தான் என்னைத் தொற்றிக் கொண்டது”

“சரியான பயந்தாங்கொள்ளி. உன்னைப் போய் காதலிச்சேன் பாரு, என்னைச் சொல்ல வேண்டும். அது சரி, நீ சாப்பிடும் மெஸ், நீ டீ குடிக்கும் ஹோட்டல், நீ போகும் இரயில், நீ அமர்ந்திருக்கும் நாற்காலி, நீ போகும் அலுவலகம் எல்லாம் எனக்குப் பார்க்க வேண்டும்”

“எதற்கு?”

“நினைவுச்சின்னங்கள். மடையா நீ பாட்டிற்கு ஆபீஸ், நண்பர்கள் என்று எப்படியாவது நேரத்தைப் போக்கி விடுகிறாய்.

நான். வாசு, உண்மையிலே சில நேரம் ஏன்தான் காதலித்தோமோ என்று கோபம் கூட வருகிறது.

நான் உன்னைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் வெறுமனே உன் முகம் மட்டுமே தான் நினைவிற்கு வருகிறது. நீ இருக்குமிடம், சாப்பிடும் இடம், வேலை செய்யும் அலுவலகம் எல்லாம் எனக்குத் தெரிந்தால் இப்போது, இங்கே, இப்படி இதைச் செய்துக்கொண்டிருப்பாய் என்று நினைத்துக்கொள்வேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வசந்த் டீ வாங்கி வந்தான்.

இருவருக்கும் கொடுத்து விட்டு “வாசு நான் ஆபிஸ் கிளம்ப வேண்டும்” என்று சொல்ல, “சரி நீ புறப்படு. நான் சந்தியாவிற்கு டிபன் வாங்கி கொடுத்துவிட்டு வருகிறேன்” என்று வெளியே கிளம்ப, வசந்தன் குளிக்கச் சென்றான்.

“சொல்லு சந்தியா. நீ இப்படிப் பேசக்கூடியவளல்ல, என்ன விஷயம்?”

“வாசு நான் கொஞ்ச நாளைக்கு தலைமறைவாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்”
“என்னம்மா சொல்கிறாய்?”

“வாசு. எனக்கு உங்கள் நிலைமைப் புரிகிறது. உங்கள் தங்கைக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்கும்வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது.

அதே சமயத்தில் என் தங்கைகளுக்காக நான் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை..

வாசு கொஞ்ச நாளைக்கு எங்காவது யாருக்கும். உனக்கும் கூட தெரியாத இடத்திற்கு போகப்போகிறேன் என்னைக் காணவில்லை என்ற உடனே உன்னைத்தான் துரத்துவார்கள். உனக்கும் தெரியப் போவதில்லை. உன் தங்கைக்கு திருமணம் முடிந்து விட்டது என்று தெரிந்ததும் கண்டிப்பாக திரும்பவும் வருகிறேன்… அதற்கு முன்னால், முடிந்தால் என் தங்கைகளுக்கும் திருமணம் முடித்து விடட்டும்”.

“சந்தியா வேறுவழியேயில்லையா?”

“என் பெற்றோர்கள், நம் சமூகம் கண்டிப்பாக நான் இருக்கும்வரைக்கும் என் தங்கைகளுக்கு திருமணத்தை அனுமதிக்கப் போவதில்லை. உன் தங்கை திருமணம் முடியும்வரை நீயும் நானும் திருமணம் செய்து கொள்ள முடியாதச் சூழ்நிலை”

“எனக்கென்னவோ இது சரியாக படவில்லை”

“வேறு வழியில்லை வாசு. நான் மறைந்து போவது உனக்குக் கண்டிப்பாக தெரியவேண்டும் என்பதற்காகத்தான் உன்னிடம், ‘நான் டிபன் சாப்பிட வரவில்லை நீ அறைக்குத் திரும்பிப்போ வருகிறேன்’ என்று சொல்லி விட்டு எதிர்ப்பட் ஆட்டோவில் ஏறி “பாண் டூப் ஜாவ்” என்றாள் ஹிந்தியில்.

வாசு அவள் ஏறிப்போன ஆட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தான் எதுவும் சொல்லத்தெரியாதவனாக..

– தினபூமி – ஞாயிறுபூமி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *