ஊரடங்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 9,087 
 
 

வானத்து சூரியன் மேகத்துக்குள் தன்னை மறைத்துகொண்டிருக்கும் போது பரபரப்பு இன்றி இயங்கி கொண்டிருந்த சாலையில் வேகமாக டூவிலரில் சந்துக்குள் இருந்து வந்தவனை மறைத்தார் முனியாண்டி எங்கடா போற?!. போலீஸ் நிக்குது எங்க பாத்தாலும் நீ எதுக்கு பைக்க எடுத்துக்கிட்டு இவ்ளோ வேகமா போற!.

போங்க ஐயா நான் கடைவரை போய்ட்டு வந்திடுறேன்!.

தேவையில்லாம எங்கேயும் சுத்தாம சீக்கிரம் வா ஊர் கிடக்கிற கிடையில.,

சரி சரி நீ போய்யா நான் வந்திடுவேன்!..

இன்னைக்கு உள்ள புள்ளைக எங்க நம்ம சொல்றத கேக்குதுக என முனுமுனுத்துக்கொண்டே சந்துக்குள் நடந்து போனார் முனியாண்டி.,

சந்தைக்கு பின்னாலே வேகமாக பைக்கை நிறுத்திவிட்டு கருவாட்டுபேட்டைக்கு பின்னாடி வேகமாக நடந்தான், வாடா மாப்பிள்ளை என்னடா இவ்ளோ லேட்டு?!.. நீ வேற வரும்போது எங்க ஐயா வந்திட்டாருடா அவரை சமாளிச்சிட்டு வர லேட்டாயிடுச்சுடா!..

சரி விடு., மாப்பிள்ளை எல்லாம் தயாரா இருக்கு விடியக்காலை 3 மணிக்கு சுதா தயாரா வீட்டு பின் வாசல்ல உனக்காக காத்துக்கிட்டு நிக்கும், நீ சரியா அத கூட்டிக்கிட்டு நேர இங்க வந்திடு நாங்க கார்ல தயாரா இருக்கோம் மத்ததையெல்லாம் போகும் போது பேசிக்குவோம் என்னடா சரியா?!..

இல்லை மாப்பிள்ளை எல்லாம் சரியா நடக்குமா?!..

ஏய் தினேசு, என்னடா எங்க மேலயெல்லாம் உனக்கு நம்பிக்கையில்லையா உனக்காக எல்லா ஏற்பாடும் செஞ்சு வச்சிறுக்கேன் நீ இப்படி சந்தேகமா பேசுற!.

இல்லை மாப்பிள்ளை உன்ன நம்பாமையா, ஆனாலும் என் சூழ்நிலை உனக்கு தெரியும்ல?..

ஏய் வெண்ணை எல்லா தெரியும் அதனாலதான் இப்படி ஒரு பிளானே, நீ நான் சொல்றது மட்டு செய் மீதத்தை நான் பாத்துக்குறேன், சரியா.

சரி மாப்பிள்ளை..

சரி சரி நீ கிளம்பு பதட்டம் இல்லாம போ..சரி வரேன் மாப்பிள்ளை..

என்னடா மாரி, தினேசு இப்படி பயப்புடுறான். எதுக்கும் காலைல நீயும் ஒரு எட்டு சுதா வீட்டுக்கு இவன் பின்னாலையே போடா!..

சரிடா விடு நான் பாத்துக்குறேன்…சக்தி கார்ல சரியா வந்திடும்ல?!. என்னடா நீயும் அவன மாதிரி பேசுதே, அதனாலதான்டா நான் சாயங்காலமே காரை வாங்கியாந்து வீட்டுல போட்டுட்டேன். நான்தான் வண்டியோட்ட போறேன் நீ போய் சொன்னத செய்டா!..

அப்ப ஒரு பிரச்சனையும் இல்ல ரைட்டு.,

இவ்ளோ நேரம் எங்கப்பா போன?!.. காலு கைய கழுவிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்குறேன் .

சும்மா பக்கத்திலதான் அம்மா பசங்ககிட்ட பேசிட்டு வரேன்.,

எத்தனை தடவ சொன்னாலும் உனக்கு ஏறவே மாட்டேனுது லேட்டா சுத்திகிட்டு திரியாதேன்னு..

என்னம்மா இப்ப போய் கஞ்சி ஊத்துற?!.

வேலை முடிஞ்சுவர லேட்டாயிடுச்சுப்பா அதான் ஏதும் சமைக்கல, சரி உனக்குதான் கஞ்சி புடிக்குமேனு வச்சுட்டேன் இரு தொட்டுக்க கருவாடு சுட்டு தரேன்., சரி சரி கொண்டாம்மா.

அப்பாரு இல்லாத தினேசு குடும்பத்தில் அவங்க அம்மா உமாதான் எல்லாமே, அவங்க அப்பாவ பெத்த ஐயா முனியாண்டி கூட நகராட்சியில சுத்தம் செய்ற வேலை பாக்குது அதவச்சுதான் இவனை படிக்க வச்சது, ஒரே பையன் அப்டினு செல்லம் அதிகம் மவன் ,என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்துரும்!.

தினேசு அரசு கல்லூரியில் இளங்கலை தமிழ் முடிச்சிட்டு இப்ப மதுரைல வக்கீலுக்கு படிக்கிறான், இன்னும் ஒரு வருசம் படிப்பு பாக்கியிருக்கு. வாரத்தில ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு வந்துருவான்.

தினேசு அந்த பைக்குள்ள டோர்நெட் இருக்கு எடுத்து சாப்பிடு, உனக்கு புடிக்கும்னு உங்க ஐயா வாங்கிட்டு வந்தாரு, அதுக்குள்ள கருவாடு வெந்துடும்.

பரம்பை பேக்கரி டோர்நெட் சுடச்சுட சாப்பிட தினேசுக்கு ரொம்ப புடிக்கும் தினமும் ஸ்கூல் போற நாளிலிருந்து இது இவனுக்கு பழகிப்போன விசயம்.

நாளைக்கு காலேஜ் போனும்ல தம்பி, எப்பவும் போல டிரெயினுக்கு கிளம்புறியா?!..

இல்லம்மா நாளைக்கு கொஞ்சம் முக்கியமான வேலையிருக்கு அதனால நான் விடியகாலையில கிளம்பிடுவேன்.., அப்ப சரி காசு கேட்டில இந்தா இப்பவே பேக்ல வச்சுக்க!..

தம்பி அடுத்தவாரம் ஐயாக்கு கண் ஆபரேசன் செய்ய சொன்னாக நீ வந்து கூட்டிட்டு போப்பா, எனக்கு திக்கும் தெரியாது திசையும் தெரியாது.,

சரிம்மா நான் வந்துடுவேன்..

லொக்கு லொக்கு என இருமலுடன் வீட்டுக்குள் நுழைந்த முனியாண்டி , காலையில காலேஜ் போனும்ல இந்தா இதை செலவுக்கு வச்சுக்க என சில ரூபாய் நோட்டுக்களை சுருட்டிவாறு கையில் திணித்தார்!.,

ஐயா எங்கிட்ட காசு இருக்கு அம்மா குடுத்துச்சு.,

பரவால இதையும் வச்சுக்க படிக்கிறபுள்ள நல்லதுகெட்டத வாங்கி சாப்புடு ராசா என தன்னுடைய வெத்தலை கறைபடிந்த பற்கள் தெரிய சிரித்துவிட்டு படுக்க சென்றார்.

இந்த கருவாடு சாப்பிட்டு படுப்பா காலைல வேற வேகமா போனும்னு சொன்ன, தம்பி பைக்க உள்ள ஏத்தி வச்சிட்டு போயிடு இப்பவே..

இல்லம்மா விடியக்காலை போனும்ல நான் பைக்க சக்திட்ட கொடுத்துவிடுறேன் அவன் ஏத்தி நிப்பாட்டிடுவான்..

சரிப்பா, நீ சாப்பிட்டு படு எனக்கு தூக்கம் வந்திருச்சு என பாயை விரித்து படுத்தார்.

சாப்பிட்டு முடித்து தானும் விரித்த பாயில் படுத்தான் ஆனால் தூக்கம் வரவில்லை, கடிகாரத்தை பார்த்தான் நேரம் இரவு 11 மணி, காலைல 3 மணிக்கு சுதா வீட்ல இருக்கனும்னா 2 மணிக்கே எழுந்து கிளம்பனும் என நினைத்துக்கொண்டே மொபைலில் அலாரம் வைத்தான்.,

தூக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுத்தான் , நினைப்பு இங்கில்லாமல் சுதாவையே தொடர்ந்தது.

சுதா அவனுக்கு பரிச்சயமானது அரசு கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டிக்காக சென்ற இடத்தில் அவளும் ஒரு போட்டியாளராக வந்திருந்தாள்.

பார்த்தவுடன் ஏற்கனவே பழகிய உணர்வு அவனிடம் அவன் இளமை அவனை மேலும் பதம்பார்க்க, அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்., போட்டிகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தன ஆனால் இவன் கவனம் முழுவதும் அவளை விட்டு விலகவில்லை.

அடுத்ததாக அரசுக்கல்லூரி மாணவர் தினேஷ் என மைக்ல கூப்பிட இவன் கவனமின்றி இருக்கவே, மீண்டும் மீண்டும் இவன் பெயரை வாசிக்க சுய நினைவுக்கு திரும்பியவன் பதறியடித்து வேகமாக எழுந்தான்!..

நீ தான் தினேஷா?!.. எத்தனை தடவ கூப்பிடுறேன் இங்கன உட்காந்திருக்க கேட்கலையா உனக்கு வாப்பா வந்து உன் கவிதையை வாசி என சலித்தவாறு கூறினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.,

சாரி சார் என கூறிவிட்டு வேகமாக மேடையேறியவன் அவள்!.. ஆம் அவள்!..

“அவள் எந்தன்

பெயர்ச்சொல் மட்டுமில்லை

உயிர்ச்சொல்..

அனுதினமும் என்னை

ஆட்கொண்ட ஆழிப்

பேரலை..

புன்னகையாய் பூப்பாள்

மொளனம் காத்து

மறைவாள்..

கோபம் கொள்வாள்

காரணமின்றி அன்பை

பொழிவாள்..

அச்சம் கொள்வாள்

அதிசயமாய் இச்சை

சொல்வாள்..

பாசத்தைப் பொழிவாள்

பலனொன்றும் வேண்டாள்

நேசத்தில்..

அதிகாரம் செய்திடுவாள்

அவளையறியாது அடங்கி

நடந்திடுவாள்..

என்னுடல் கொஞ்சம்

துவண்டால் உயிர்வாடி

துடித்திடுவாள்..

தேய்ந்து மறைய

தேய்பிறையன்றே வளர்பிறை

அவள்”..

என சொல்லி முடித்ததும் அறையெங்கும் ஒரே சிரிப்பு.,

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தலையில் அடித்துக்கொண்டு ஏப்பா தலைப்பு என்ன அப்டினு தெரியாமலே வந்து உன்பாட்டுக்கு நீயா ஒரு கவிதையை சொல்ற போப்பா என கூற, தன்னையறியாமல் சொல்லிய கவிதையையும் அதற்க்கு அனைவரின் சிரிப்பையும் நினைத்து வெட்கத்துடன் தலை குனிந்தவாறு மேடையைவிட்டு வந்தான்.,

உங்கள் கவிதை சூப்பரா இருந்துச்சு என பெண் கூரல் கேட்க நிமிர்ந்து பார்த்து திக்குமுக்காடி போனான், யாரை நினைத்து தன்னையறியாமல் கவிதை சொன்னானோ அவளே அவன் முன்பு புன்னகையோடு!.

ரொம்ப நன்றிங்க!., என்றவனிடம் உக்காந்து பேசலாம் என சொல்லி நடந்தாள் அவனும் பின்தொடர்ந்து அவள் அருகில் உள்ள சேரில் உக்காந்தான். என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருக்க அவளே பேச்சை தொடர்ந்தால், கவிதை நல்லாயிருக்கு ஆனா இங்க ஏன் இந்த கவிதை என கேட்க..

பதில் கூற முடியாமல் தவித்தவன் சமாளித்துக்கொண்டு ஏதோ நினைப்புல மாத்தி சொல்லிட்டேன் என்றான்.

என் பெயர் சுதா, நான் பி.ஏ இங்கிலீஸ் லேடிஸ் காலேஜ்ல படிக்கிறேன் என அறிமுகப்படுத்திக்கொண்டால். நீங்க இராம்நாட் லேடிஸ் காலேஜ்ல படிக்கிறிங்க?!..சரிசரி உங்களுக்கு வீடும் அங்கதானா?!..என்று உளறலுடன் கேட்க.,

இல்லங்க எங்க வீடு பரமக்குடில இருக்கு.. ஒஓ அப்படிபோடு, என்ன?!.. இல்லங்க அப்படியானு கேட்டேன். , உங்கள பத்தி சொல்லவே இல்ல, சாரிங்க மறந்துட்டேன்.. என்னங்க எல்லாத்தையும் மறந்துடுவிங்க போல என கேட்டு சிரிக்க அவனும் சிரிக்க. ,

என் பெயர் தினேஷ் அரசுக் கல்லூரில பி.ஏ தமிழ் படிக்கிறேன், எனக்கும் பரமக்குடி தான். நான் உங்கள பாத்ததே இல்ல நீங்க இராம்நாட்லயே தங்கி படிக்கிறிங்களா?!..

இல்லங்க டெய்லி வீட்டுல இருந்துதான் வரேன், ஓ அப்டியா..சுதா போலாமா, சரிங்க பாக்கலாம் வரேன்.. கண்டிப்பா பாக்கலாம்!..

டேய் மாப்பிள்ளை நேத்து ஒரு பொண்ண பாத்தேன்டா , யாருடா மாப்பிள்ளை ரொம்ப பீல் பன்ற நம்ம ஊர்தேன் ஆனா நேத்துதான் பாத்தேன் இங்கதான் லேடிஸ் காலேஜ்ல பி.ஏ இங்கிலீஸ் படிக்குதுடா !.

அது சரி பேர சொல்லு முழுவிபரம் நான் வாங்கி தரேன், உண்மையாவா?!.. நீ பேர சொல்லுப்பா.., சுதா டா, சரி விடு உனக்கு நாளைக்கு முழு விபரமும் கிடைக்கும்..

மாப்பிள்ளை இன்னைக்கே?!..அது சரி அப்ப கிளம்பு போவோம், எங்கடா?!., லேடிஸ் காலேஜ்க்குதான் , எதுலடா போறது?!..

பொறுமையா இருடா மாப்பிள்ளை வர்ரேன்.., நேராக அடுத்த டிபார்ட்மென்டுக்கு போனான் சக்தி பி.காம் இளங்கலையில் படிக்கும் மாரியிடம் பைக் வாங்க, சக்தி மாப்பிள்ளை என்னடா இந்தபக்கம்?!..டேய் உன் பைக்க தாயேன் நானும் தினேசும் அரண்மனை போயிட்டு வந்திடுறோம்!., எதுக்குடா அரண்மனைக்கு? ..ஒரு முக்கியமான விசயம் , அப்படியா என்கிட்ட சொல்லக்கூடாத விசயமாடா.,

ஒன்னுமில்லடா தினேசு நேத்து லேடிஸ் காலேஜ் ல படிக்கிற பொண்ண பாத்திருக்கான் அதான்!..

ரைட்டு புரியுது. , எந்த ஊராம்?!. நம்ம ஊர்தான்டா., அப்படியா!.. பெயர் எதும் சொன்னானா?!.. ஆமா, சுதாவாம்., ஒ..அப்படி போடு.. டேய் வேணாம்டா அவங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும், விவகாரமான ஆளுங்கடா!.

என்னடா சொல்ற , அந்த பொண்ண உனக்கு தெரியுமா?!..

ஆமா மாப்பிள்ளை அந்த புள்ள எங்க ஏரியாதான்.,அப்ப வசதியா போச்சு.,

மாப்பிள்ளை நீ நினைக்கிற மாதிரி இது ஈசியான விசயம் இல்ல, அவங்க குடும்பமே வேறமாதிரி டா.,

சரி நீ வா தினேசுகிட்ட பேசுவோம்!..

ஏய் தினேசு அது சரிபட்டு வராது., சக்தி எங்கிட்ட எல்லாம் சொன்னா, அது எங்க ஏரியா பொண்ணுதான் அவங்க மோசமான ஆளுங்க மாப்பிள்ளை வேணம் விட்டுறு!.

அமைதியா இருந்தான், சரி மாப்பிள்ளை சரிபட்டு வராதுனு நீயே சொல்ற அப்ப ஏதாவது காரணம் இருக்கும் விட்டுறுவோம் என பேச்சை மாத்தினான் தினேஷ்!..

ஒரு வாரம் கழித்து தெரு பசங்களோடு பஸ்ஸாண்ட்ல நின்று பேசிக்கொண்டிருந்தான், தினேஷ் அங்க பாருடா ஒரு பொண்ணு உன்ன பார்த்து கைகாட்டுது என பசங்க சொல்ல டேய் நக்கலா வாங்கடா போலாம்.. டேய் சத்தியமாடா அங்க பாரு என தினேஷ் தலையை திருப்பினான்.,டிரைவர் சீட்டிலிருந்து நான்காவது சீட்டில் ஒரு தலை இவனை பார்த்து கையசைத்தது. அவனாலையே நம்ப முடியல ஆம் அவளேதான் அவனும் பதிலுக்கு கைகாட்ட.

அப்போதுதான் கவனித்தான் இராமநாதபுரம் போகும் வாஹித் பஸ்ல அவள்., ஒ தினமும் அப்ப இந்த பஸ்லதான் காலேஜ் போறா என தனக்குள் பேசிக்கொண்டான்..சரி வாங்கடா போலாம் என்றான் நண்பர்களிடம் . டேய் யாருடா அவள் சொல்லவேயில்லை என நக்கலடித்தனர் பசங்க., டேய் ஏதாவது கட்டி இறக்கிவிட்டுறாதிங்கடா கூட படிக்கிற புள்ளடா. , நம்பிட்டம்டா ரைட்டு ரைட்டு என சிரித்துக்கொண்டே கலைந்து சென்றனர்.

ஒருவார காலம் இப்படியே தினமும் சாயங்காலம் காலையில் அவளுக்கு கைகாட்டுவது என பொழுது போனது.

ஒருவாரம் கழித்து அதே பஸ்ல அவளுக்கு முந்தி இடம்பிடித்து அமர்ந்திருந்தான், மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்க பரபரப்புடன் காத்திருந்தான்.

வழக்கம்போல தோழிகளுடன் பஸ்சில் ஏறியவள் உக்கார சீட்டை தேடினாள், இவன் ஒரு சீட்ல உக்காந்திரிந்ததை பார்த்ததும் ஒரு சிரிப்போடு அவன் பின்பக்கம் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்தால்.,

தினேஷ் நல்லா இருக்கிங்களா?!..என முன்பக்க சீட்டில் குனிந்தவாறு பாத்து ரொம்ப நாளாச்சு என கேட்க.,

நேத்துதான பாத்து கைகாட்டுனிங்க என்றவன்!.வார்த்தையை முழுங்கியவாறு ஆமாங்க நானும் தான் உங்களை பாக்க முடியல.

என்ன இன்னைக்கு இந்த பஸ்ல? !.

ஏன் நாங்க இந்த பஸ்ல வரக்கூடாதா?!..

ஏங்க உங்களை இதுவரை நீங்க இந்த பஸ்ல வந்து பாத்ததில்லை அதான் கேட்டேன், உங்களை வரக்கூடாதுனு சொல்ல நான்யாரு என நிமிர்ந்து கொண்டாள்! ..

ஏங்க நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன் நீங்க கோவிச்சுகாதிக.,

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே!..என பாடல் ஒலிக்க பஸ் வேகமெடுத்தது.

இராமநாதபுரம் வரும்வரை இருவரும் பேசவில்லை, இறங்கும்போது உங்க காலேஜ் ஸ்டாப் போயிருச்சு இரங்கலையா?!..

இல்லங்க நான் உங்களை பாக்கதான் வந்தேன், அப்ப கேட்டதுக்கு மட்டும் வேகமா நாங்க வரக்கூடாதானு கேட்டிங்க என சிலுத்துக்கொண்டாள்.

நான்தான் விளையாட்டுக்கு சொன்னேனு அப்பவே சொல்லிட்டேன். , சுதா லேட்டாகிடுச்சு போலாம் வாடி என தோழிகள் கூப்பிட நீங்க முன்னால நடங்க நான் வரேன் என்றாள், சொல்லுங்க என்ன பாக்கதானே வந்திங்க அப்புறம் எதுவும் பேசாம கூடவே வந்தா?!..இல்ல சுதா நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்?!.. சொல்லுங்க!..

உங்களுக்கு!..இல்ல எனக்கு உங்கள புடிச்சிருக்கு அதான் உங்ககிட்ட! ..

என்ன இப்ப லவ் பன்றிங்களாக்கும்?!..

அவனிடம் பதிலில்லை.. தினேஷ் உங்கட்டதான் பேசுறேன்.

ஆமாங்க, சரி அப்ப எப்ப கல்யாணம் செஞ்சுக்குவோம் இப்பவே போலாமா?!..

ஏங்க என்ன ஓட்டுறிங்களா? !..நான் எதுக்கு உங்கள ஓட்டபோறேன் நெசமாத்தான் கேக்குறேன் எப்ப கல்யாணம்?!..

படிச்சு முடிச்சு வேலைக்கு போயிட்டு!.. அப்ம அதுவரை நான் உங்ககூட ஜோடியா ஊர் சுத்தனும் அப்டிதானே?!..

ஐயோ. , நான் அப்படியெல்லாம் சொல்லவரலை… சிறிது நேரம் அமைதியாக நடந்தனர்.. மீண்டும் அவளே தொடர்ந்தால்

தினேஷ் எனக்கு உங்கள புடிச்சிருக்கு ஆனா அதுக்காக உங்களோட ஊர்சுத்த முடியாது!. நான் காத்திருக்கேன் நீங்க படிப்பை நல்லபடியா முடிச்சுட்டு வேலையை தேடிட்டு வந்து என்ன கூப்பிட்டு போங்க, எப்படியும் எங்கவீட்ல ஒத்துக்க மாட்டாங்க! ..

ஆனந்தத்தில், எனக்கு இதுபோதும் கண்டிப்பா நான் நீ சொன்ன மாதிரியே நடந்துக்குவேன் என்றான்..

காலேஜ் வாசல் நெருங்கும் நேரத்தில் அவசரமாக பேப்பரில் ஒரு நம்பர் எழுதி அவனிடம் கொடுத்தாள் இது என் காலேஜ் தோழி நம்பர் எதும் பேசனும்னா இந்த நம்பர்ல கூப்பிடுங்க என கூறிவிட்டு முன்னோக்கி நடந்து காலேஜ்க்குள் நுழைந்தாள்!..

ஒருவாரம் கூட ஆகல அதுக்குள் காலேஜ் வாசலில் அவளை எதிர்பாத்து நின்றான், வெளியில் வந்தவள் இவனை பாத்ததும் என்ன சார் ஒருவாரம் கூட ஆகல அதுக்குள்ள வந்து வரிசைல நிக்குறிங்க?!..

இல்ல பாக்கனும் போல தோனுச்சு அதான் சும்மா பாத்திட்டு போலாம்னு வந்தேன், பாத்துட்டிங்கல அப்ப போங்க என நக்கலாக சிரித்தால்..

இல்ல உங்ககிட்ட பேசனும்!.,

பாக்காம இருக்க முடியல அதான் வாரம் ஒருதடவை மட்டும் வந்து பாத்திட்டு போறனே!..

எனக்கு மட்டும் உன்ன பாக்க ஆசையில்லையா என்ன?..உன்ன டெய்லி பாக்கனும் அப்டினு மனசு சொல்லுது ஆனா நடமுறைக்கு ஒத்துவராதே, அதனாலதான் நானே ஒதுங்கி நடந்துக்குறேன்..

ஒன்னு செய்யலாம் மாசத்துல ஒருநாள் அதுவும் நான் போன்ல மொதநாளே சொல்லுவேன் அப்ப வந்தா போதும் சரியா?!..அதுபோதுமே என உற்சாகமானான்.,

படிப்பு எப்படி போது?, அது சூப்பரா போதுல..

அதன்பிறகு மாசத்துல ஒருதடவை இருவரும் சந்திப்பதை வழக்கமாக கொண்டனர்.

சுதா உனக்காக ஒரு கவிதை எழுதியிருக்கேன் கேக்குறியா? !..ஓ அப்படியா சொல்லு தினேஷ்..

“மழைகால ஈசலாய் வாழ்ந்திட ஆசை உன்னோடு சில காலம்

விரும்பிய வாழ்வினை!.

காரணங்கள் இல்லா கரைதனில்

நீயும் நானும் இளைப்பாற

காத்திருக்கிறது காதல்!..

நீயில்லாத இரவுகள்

நீண்டுகொண்டே போகிறது இரயில் தண்டவாளம் போல்!.

இலக்கணம் இல்ல பிழை நீ!.

இலக்கியம் படித்திட நான்!.

குறில் நெடில் ஓசையினிடையே!..

உன்னிடம் உரையாடும் பொழுதுகள்

எனக்குள் மீளாய்வு செய்கிறேன்

என்னை ஆட்கொள்ள செய்தது

உன் கன்னியமான உரையாடலா உடைவாள் கண்களா!..

என்னை ஆட்கொண்ட பேருணர்வு

அவள் அவளதிகாரம் பாடியே

நகர்ந்து செல்கிறது

எந்தன் நாட்காட்டி!..

என் கண் கண்ணாடி

உப்பரித்து போனது உன்

நினைவின் சாட்சியாய் என்

கண்ணீரில் தீர்த்தமாடி!..

காரணமின்றி சண்டையிடுவதில்

அவளை விஞ்சியவர் யாருமிலர்

நானறிவேன் காதலின்

மிகையென்று அவள்!..

உன்மேல் கொண்ட காதலால்

நான் அர்த்தநாரீசுரன் ஆனேன்

என்னில் சரிபாதி நீயானதால்!..

இறைவனின் படைப்பில் அதிசயம்

அவள் தங்கத்தில் செய்தால்

உருகிவிடுமோயென தசைநார்களில்

படைத்துள்ளான்!..

அவள் ஒரு கலகக்காரி

என்னுள் புரட்சி செய்கிறாள் “) :-

நான் கலகக்காரியாடா உனக்கு என விளையாட்டாக அடிக்க பாய, அவன் ஓட …

சான்சே இல்லடா சூப்பரா இருக்குடா..,

உனக்காக நான் உன்னையே நினைச்சு எழுதுனது அப்புறம் எப்படியிருக்கும் என சட்டை காலரை தூக்கிவிட்டான்!.

கவிதைகள், வாழ்த்து அட்டைகள், கடிதங்கள், புகைப்படங்கள், பரிசுப்பொருட்கள் என கைமாறின!..

இப்படியே நாட்களை கடத்தி சென்றனர்..,

இந்த விசயம் சக்திக்கும் மாரிக்கும் தெரியவர, நான் சொன்னதை நீ கேக்கல சரி என்ன நடக்குமோ நடக்கட்டும் எல்லாம் விதிப்படி என்றான் மாரி, டேய் என்னடா நீ ரொம்பதான் பூச்சாண்டி புடிக்கிற அந்தபுள்ளையும் இவன லவ் பன்னுதுடா விடுடா என்னவந்தாலும் பாத்துக்கலாம் மாப்பிள்ளை என தினேஷ் தோளில் தட்டிக்கொடுத்தான் சக்தி!.

இன்று அவளிடம் இருந்து போன் வந்தது , தினேஷ் நாளைக்கு கடைசி எக்ஸாம் நீயும் எக்ஸாம் முடிச்சு வா உங்கிட்ட நேர பேசனும் என்றாள் சுதா.,

வேகமாக தேர்வு எழுதி முடித்துவிட்டு கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தான், பெல் அடித்ததும் அவசரமாக பேப்பரை கொடுத்துவிட்டு மாரி பைக்கை எடுத்துக்கிட்டு அவள் காலேஜ் எதிரக்க இருந்த டீக்கடையில் உக்காந்திருந்தான்.

காலேஜ் முடித்து தோழிகளோடு வெளியில் வந்ததும் இவனை பார்த்துவிட்டு முன்னால் நடக்க அவன் பின்தொடர்ந்தான்.,

எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதிருக்கியா தினேஷ்?!.. நல்லா எழுதிருக்கேன், நீ எப்படி எழுதியிருக்க,. நானும் நல்லா எழுதியிருக்கேன்..

அடுத்து என்ன பன்றதா உத்தேசம்?!..மதுரை லா காலேஜ் ல படிக்கலாம்னு இருக்கேன். , நீ என்ன பன்ன போற?!..

இதுக்கும் மேல எங்க வீட்ல படிக்க அனுப்ப மாட்டாங்க!.,ஏன் என்னாச்சு?!.. நம்ம விசயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சுபோச்சு எங்க அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் ஒரே சண்டை!..

எப்படி அவங்களுக்கு தெரிஞ்சது?!..

உன் போட்டோ என் புத்தகத்தில் இருந்துச்சுல அத எப்படியோ பாத்துட்டாக, இன்னைக்கு ஒருநாள் எக்ஸாம்க்கே கெஞ்சி கெதறிதான் வந்தேன்..

நீ ஒன்னும் பயப்புடாத, நீ லா படிச்சு முடி அதுவரை நான் எப்படியும் சாமாளிச்சுடுவேன், உன் கைலதான் இருக்கு நம்ம வாழ்க்கை நல்லா படிடா என வார்த்தை வராமால் அழுதுவிட்டாள், அழாத சுதா நீ வா நம்ம இப்பவே எங்காது போயிடலாம்!..

போயி என்னடா பன்ன?!..ரெண்டு பேரும் வாழ்க்கையை தொலைச்சு நடுரோட்ல நிக்கவ?!..உனக்காக நான் காத்திருப்பேன் என்னை மீறி அவங்க எனக்கு கல்யாணம் செஞ்சுவைக்க முடியாது நீ பயப்படாம படி..,வீட்ல ஆளுக இல்லாதப்ப உனக்கு நான் வீட்டுபோன்ல இருந்து பேசுறேன் சரியா!..

தினேஷ் உன்னத்தேன் எனக்கு எதுவும் ஆகாது நீ படிப்புல கவனம் செலுத்து சரியா? !..சரி நான் கிளம்புறேன் லேட் ஆனா பிரச்சனை ஆகிடும்..

சரி பார்த்து போ எதாவது பிரச்சனை அப்டினா எனக்கு உடனே கூப்பிடு என அவளை அனுப்பிவிட்டு யோசனையோடு பைக்கை எடுத்தான்.

ஏன்டா மாப்பிள்ளை ஒருமாதிரி இருக்க, தங்கச்சியை பாத்தில?!.. ஏதும் பிரச்சனையா?!..

சக்தி அவுக வீட்டுக்கு எங்க விசயம் தெரிஞ்சு ஒரே பிரச்சனையாம், இனி அவள வெளியில விடமாட்டாங்க!.

இப்பவே நீ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?!.. அவ முடியாதுனு சொல்லிட்டா நான் படிச்சு வேலைக்கு போறவரை காத்திருக்காளாம். ,

தங்கச்சி சொன்னுச்சா?!. அப்பவிடு அது உன்னைவிட ரொம்ப போல்டான ஆளு அது சமாளிச்சிடும் அது சொன்னதுபோல நீ படிப்பில கவனமாயிரு!..

சுதாவின் குடும்பம் கூட்டு குடும்பம் அவங்க அப்பா கூட பிறந்தவங்க நாலு ஆம்பிளைக எல்லாரும் ஒரே வீட்டில்அடுத்தடுத்து இருந்தனர் அவங்க குடும்பத் தொழில் நகைபட்டறையோடு நகை கடையும் வைத்திருந்தனர், சுதா அப்பாதான் அந்த சங்க தலைவரும், கொஞ்ச வசதியான குடும்பம் அவுங்க எல்லாருக்கும் பையங்கதான் சுதா ஒரு ஆளுதான் பொம்பளைபுள்ள அதனால அவுக வம்சத்துக்கே செல்ல புள்ள!..

தினேஷ் மதுரை லா காலேஜ் சேர்ந்து மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்தான். இடையிடையே சுதாவிடம் இருந்து போன்வரும் அதுமட்டுமே அவனுக்கான சந்தோசமாக இருந்தது.

சுதா வீட்டில் அப்பப்ப கல்யாண பேச்சை ஆரம்பிக்க அவள் பிரச்சனை செய்ய, இடையில் ஒருதடவை மருந்தை குடித்ததால் அதன்பிறகு கல்யாண பேச்சையே எடுப்பதில்லை!.

ஆனால் அன்று வழக்கத்திற்க்கு மாறாக சுதாவீட்டில் தூரத்து சொந்தங்கள் வந்திருந்தனர் அவர்கள் பையனுக்கு சுதாவை பெண் கேட்டு, சுதா வீட்டினரும் சம்மதிக்க நேரத்தை எதிர்நோக்கி இருந்தாள் சுதா!.

வீட்டிலிருந்த அனைவரும் கடைக்குபோக தினேசுக்கு போன் செய்தால், அவன் போன் சுவிச்ஆப் எனவர, உடனே சக்திக்கு போன் அடிச்சு முழுவிபரத்தையும் சொல்லி இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாது எப்படியாவது என்னை கூட்டிட்டு போக ஏற்பாடு செய்ங்க அண்ணே என அழுதுவிட்டாள்!..

நீ பயப்படதா நாங்க பாத்துக்கிறோம் நீ தைரியமா இரு, நைட் தினேஷ் காலேஜ் முடிச்சு ஊருக்கு வந்துடுவான் திங்க கிழமை விடியக்காலை 3 மணிக்கு நீ உன் வீட்டு பின்வாசலுக்கு வந்திடு நாங்க கூட்டிட்டு போயிடுறோம், நீ பயப்படாம இரு என ஆறுதல் சொல்லி போனை வைத்தான்.

தினேசுக்கு போன் அடித்தான் போன் சுவிட்ச் ஆப், பிறகு மாரிக்கு போன் அடித்து விசயத்தை சொல்லிவிட்டு எப்படியாவது இத சரியா செய்யனும்டா தினேசு வந்ததும் உனக்கு போன் பன்றேன் நீ வந்திடு சரியா என போனை வைத்தான்.,

வருசத்தில் இரண்டு மாசம் ஊரடங்கு என்பது இங்கு வாழும் மக்களுக்கு பழக்கபட்ட ஒரு விசயம் , ஆமாம் போற்றப்பட வேண்டிய தேசியத்தலைவர்களை ஒருசிலரின் சுயநலத்திற்க்காக சாதிய அடையாளமிட்டு அவர்கள் பெயரை சொல்லி அடித்துக்கொண்டு செத்ததால் அரசாங்கம் வருசம் வருசம் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் இறுதிவரை மாவட்டம் முழுவதும் 144 ஊரடங்கு நடைமுறைபடுத்தியது!.

தினேஷ் சக்திக்கு போன் அடிச்சான் மாப்பிள்ளை எங்கடா இருக்க??!..நீ எங்கடா இருக்க ஏன்டா உன் போன் சுவிட்சு ஆப்ல இருந்துச்சு?!..

டேய் டிரெயின்ல வந்தேன்டா வரும்போது படம் பாத்துகிட்டே வந்தேன் சார்ச் இல்லடா..

சரிசரி சுதா போன் அடிச்சது, நீ வீட்டுக்கு வந்துட்டியா நேர சந்தைக்கு பின்னால வா பேசிக்குவோம்.

தினேசிடம் எல்லா விசயத்தையும் சக்தி சொல்ல, இப்ப என்ன மாப்பிள்ளை செய்யலாம்?!..

என்னடா கேள்வி, நான் தங்கச்சிகிட்ட சொல்லிட்டேன் கண்டிப்பா திங்ககிழமை கூட்டிட்டுபோயிடலாம், நீ ஒன்னும் பதறாத நான் பாத்துக்குறேன்.. பணம் காசு ஏதும் கையில இல்லடா?!.. நான் இருக்கேன் நீ ஏன் பயப்புடுற?!..

சக்தி இளங்கலை படிப்பை முடித்துவிட்டு அவங்க அப்பா தொழிலான டிராவல்ஸ் தொழிலையே பார்த்து வந்தான். சொந்தமா 10 வண்டி வச்சு தொழில், அதனால கையில் எப்போதுமே பணம் பொழங்கும் சிலநேரம் தினேஷ், மாரிக்கு இவன்தான் பைனான்சியர் ஊர்சுத்த படத்துக்கு போக..

மாரியையும் வரச்சொல்லி இருக்கேன் இன்னைக்கு சனிக்கிழமை, நாளைக்கு நைட்டுக்குள்ள எல்லாம் பக்காவாக ரெடியாயிடும். நாளைக்கு இதே நேரத்துக்கு இங்க மாரியும் வந்திடுவான் நீ பயப்படாத!..

சரி மாப்பிள்ளை.,டேய் அம்மா ,ஐயாக்கு தெரியவேணாம் பயப்பட போறாங்க எல்லாம் முடிஞ்ச பிறகு நான் பக்குவமா எடுத்துசொல்லி அவங்கள என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறேன், நீ இப்ப எதும் சொதப்பிடாத சரியா!..

ம் ..என தலையாட்டினான் தினேஷ்!..

அலாரம் சத்தம் கேட்டு எழுந்தவன் வேகமாக கிளம்பி பைக்கை எடுத்துக்கொண்டு தெரு முக்குக்கு வந்தான், தெருவே அமைதியாக கிடக்க தூரத்தில் போலீசார் ரோந்துபணியில் இருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் மற்றொரு சந்துக்குள் நுழைந்து சுதா வீட்டை நோக்கி அந்த ஏரியாக்குள் போக அங்கு மாரி தயாராக இருந்தான், அவன் தெரு முக்கில் நிக்க, சுதாவின் பின்வீட்டு வாசலுக்கு முந்தியே பைக்கை நிறுத்திவிட்டு நடந்துபோய் நின்றான் தினேஷ்!..

அவள் வீட்டு வாசலை எட்டிபார்ப்பதும் தெருமுனையை திரும்பி பார்ப்பதுமாக இருந்தான், ஆனால் நேரமாக நேரமாக சுதா வரவில்லை.

தெருமுக்கில் நின்ற மாரி தினேசை தேடிவந்தான் டேய் மணி 5 ஆகப்போது இன்னும் சுதா வரலையா?!..இனி தெருவில எல்லோரும் எந்திருச்சு வெளியில வந்துடுவாங்க நீ வா நம்ம இடத்தை காலி பன்னுவோம் என அவனை இழுத்துக்கொண்டு போனான்.

ரெண்டு பேரும் கருவாட்டு பேட்டைக்கு பின்னால நின்ற காருக்கு போனார்கள்.,டேய் தங்கச்சி எங்கடா? !..

தெரியலைடா அவ வரவேயில்லை, நீங்க டைம்க்கு போனிங்களாட?!!.. 2.45 லிருந்து இப்பவர அங்கதான்டா இருந்தோம். என்ன ஆச்சுனு தெரியலைடா என கதறினான் தினேஷ், நீ ஏன்டா அழுகுர அதுக்கு ஒன்னும் ஆகாதுடா நீ பொறுமையா இருடா என தேற்றினான் சக்தி.,

விடியக்காலை எழுந்து சத்தமில்லாது கதவை திறந்தாள் சுதா, வாசலில் அவளு சித்தப்பா. , பின்வாசல் வழிய இப்ப எங்க போற என அவள் தலைமுடியை பிடித்து இழுத்து என்ன சொன்னாலும் பொம்பளபுள்ளய அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கமாட்ட ஏண்டி ஓடுகாளி என தள்ள தரையில் நிலைகட்ட தடுக்கி கதவு கைப்புடியில் போய் மல்லாக்க விழுந்தாள்!..

அம்மா என சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவர கைப்புடியில் இருந்து இரத்தம் வழிந்து தரையை தொட்டது. ஐயோ என் செல்ல மகளே என அனைவரும் வாரியணைத்து மடியில் போட.,

ஊர் விடிய ஆரம்பித்தது, ஆனால் அடங்கிப்போனது சுதாவின் உயிர் ஊரடங்கின் நிசப்தத்தில்!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *