தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 25,684 
 
 

சுந்தரமூர்த்தி, டேய் “”சுந்தரமூர்த்தி”… திரும்பத் திரும்ப யாரோ கூப்பிடுவது காதில் விழுவது போலிருக்கிறது. எங்கோ தூரத்தில் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல குரல். எனக்கு நான் படுத்திருக்கிறேனா, உட்கார்ந்திருக்கிறேனா என்று எதுவும் புரியாத ஒரு நிலை. மொத்த உடம்பும் இல்லாததுபோல் இருக்கிறது. இலேசாக அவ்வப்போது ஏதோ பேச்சு சத்தம் கேட்பதும் அது என்ன என்று யோசிக்கக் கூட முடியாமல் மெல்ல அது கனவுபோல களைந்து போவதும்… எத்தனை நாள்களாக என்று நினைவில் இல்லை.

உயிர்வெளிமீண்டும் சுந்தர், சுந்தர் என்ற குரல். யாரோ தொடுவது லேசாகத் தெரிகிறது. “”இம்…” என்ற என்னுடைய குரல் என் வாயை விட்டும் உடலை விட்டும் வெளியே வந்ததுபோல் தெரியவில்லை. அதனால் அந்தக் குரல் மீண்டும் மீண்டும் என்னைத்தொட்டு, “”சுந்தர், சுந்தர்” என்று அழைக்கிறது. ஒரு வாரமாகவே இப்படித்தான் இருக்கிறார் என்று ஒரு பெண் குரல் சொல்வது கேட்கிறது. ஓ… அது என் மருமகள் குரல் என்று லேசாகத் தெரிகிறது. என்னை சுந்தர் என்று அழைக்கும் இந்தக் குரல் யாருடையது என்று என்னால் சட்டென்று உணர முடியவில்லை. ஆனால், அது எனக்கு மிகவும் பரிச்சயமான குரல்தான். என்னோடு பல காலம் உறவாடிய குரல்தான். ஓ… இப்போது எனக்கு நினைவுக்கு வந்ததுபோல் தெரிகிறது. அது என் பால்ய நண்பன், அம்பேத்தின் குரல்தான்.

அம்பேத்தும் நானும் பள்ளி நாள்களில் சுற்றித் திரியாத இடமில்லை. எங்கள் ஊர் ஏரியும் அதில் இருந்த நீர்க்கோழிகளும், என் நினைவுக்கு வருகின்றன. அந்த ஏரியின் அழகை நினைக்கும்போதே என் உடலுக்குள் திடீரென மிகுந்த உற்சாக ஊற்று பிரவாகம் எடுப்பதை என்னால் உணர முடிகிறது. மீண்டும் அதுபோல ஏரிக்கரைகளில் சுற்றித்திரியும் காலம் எப்படி வர முடியும்?

அதற்குள் ஏதோ மீண்டும் பேச்சு சத்தம் கேட்கிறது. “”எல்லோரும் வெளியே போங்க, டாக்டர் வருகிறார்” என்று ஒருவர் கூற, அசையாமல் கிடந்த கைகளைப் பிடித்து ஊசி குத்தும் வலியை உடம்பு உணர்கிறது. அநேகமாய் எனக்கு குளுகோஸ் ஏறிக்கொண்டிருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. இடது கையில் எரிச்சலோடு கூடிய “”விண்விண்” என்ற வலி தெரிகிறது. ஒருவேளை பல நாள்களாக இப்படித்தான் படுக்கையில் நினைவற்றுக் கிடக்கிறேன் போலும். வாழ்நாளெல்லாம் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். முதுமை, நோய், மரணம், மூன்றுமில்லா வாழ்க்கை சாத்தியமேயில்லைதான் என்பதை அறிவு உணர்ந்தபோதும் ஆசை அதை ஏற்பதில்லை. இதற்குள் டாக்டரிடம் யாரோ பேசும் குரல் கேட்கிறது.

“”இப்ப எப்படி இருக்கிறார் டாக்டர்? அதெல்லாம் உறுதியா சொல்ல முடியாதும்மா. வயசாயிடுச்சு, பல்ஸ் ரேட் ரொம்பவும் குறைவாயிருக்கு. இன்னும் ரெண்டு நாள் பார்ப்போம்” என்று டாக்டர் கூறுவது கேட்கிறது. சிறுசிறு சலசலப்புகளுக்கு பிறகு “கிரீச்’ சத்தத்துடன் ஒரு சேரை இழுத்துப்போட்டு என் பக்கத்தில் யாரோ உட்காருவது தெரிகிறது.

உரத்த குரலில் அம்பேத்துதான் பேசுகிறான். எப்போதும் இடம், பொருள் தெரியாமல் சத்தமாகப் பேசுவது அவன் இயல்புதான் என்று என் மனம் சொல்லிக் கொள்கிறது.

“”போன மாசம் போனில் பேசும்போதுகூட சுந்தர் நல்லா உற்சாகமாகத்தான் பேசினான். ஆனால் கூடவே இதையும் சொன்னான். யாருக்கும் சுமையாய் இல்லாமல் இந்த உலகத்தை விட்டு போய்விடுவதுதாண்டா எல்லோருக்கும் நல்லது” என்றான்.

அரை மயக்கமும், அரை உணர்வுமாய் அசைவற்றும், நினைவு தப்பியும் கிடக்கும் இந்த நேரத்திலும் மனம் ஓயாமல், எதை, எதையோ யோசிக்கிறது. உடலை அசைக்க முயன்றும், முடியவில்லை. காலை மடித்துக்கொண்டால் தேவலாம் போலிருக்கிறது. ஆனால் கால்களை மடக்க முயன்றும் முடியவில்லை. இத்தனையும் மீறி மயக்கத்திலிருந்து மீண்டும் லேசாக நினைவு வரும் தருணங்களில் எல்லாம், அலை அலையாய் நினைவுகள், எண்ணங்கள் ஒன்றின்மேல் ஒன்றாய், அடுக்கடுக்காய் ஒன்றை ஒன்று விரட்டியும், துரத்தியும், நழுவியும் போனபடியே இருக்கிறது.

மீண்டும் ஏதோ பேச்சு சத்தம் கேட்கிறது.

“”நிர்மலா சிஸ்டர், இந்த மாத்திரையை எத்தனை வேளை கொடுக்கணும்” என்று ஒரு குரல் கேட்கிறது. இது தூக்க மாத்திரைம்மா, ராத்திரில மட்டும் ஒன்னே ஒன்னு கொடுங்க என்று கனிவோடு சொல்லும் பதில் கேட்கிறது. இந்த நிர்மலா என்ற பெயர் என்னை சின்னதாய் சிலிர்க்க வைக்கிறது.

என் வாலிப வயதில் நான் அழகாய் இல்லை என்ற கவலையோடு வெகுகாலம் திரிந்தேன். கல்லூரி படிக்கும்போது கரும்பலகையில் எழுத்துக்கள் தெரியவில்லை என்று கண்ணாடி போட்டுக்கொண்டது என் ஞாபகத்திற்கு வருகிறது. கண்ணாடி போட்டபின் நான் அழகாகி விட்டதாகவும், எனக்குப் புதுப் பொலிவு வந்துவிட்டதாகவும் எனக்குள் உற்சாகம் பெருகியதை நினைத்துக்கொள்கிறேன்.

என் கல்லூரி நண்பர்களில் மூன்று பேருக்கு அப்போதே காதலிகள் இருந்ததாக தினமும் வகுப்பில் பேசிக்கொள்வார்கள். மோகன், தன்னுடன் கே.கே.நகர் பஸ்சில் வரும் பெண்ணைக் காதலித்து அப்போதே கல்யாணமும் செய்து கொண்டான். என் வாழ்நாளில் யாருமே என்னைக் காதலிக்கவில்லை என்ற பெரும் குறையோடுதான் வாழ்ந்தேன்.

ஆனால் என்னுடைய 50ஆவது வயதில் எனக்கொரு இனிப்பான செய்தி கிடைத்தது. எங்களோடு ரயில்வே காலனியில் வசித்து என்னுடன் பழகிய அந்தப் பெண் நிர்மலாதேவி என்னைக் காதலித்ததாகவும், கடைசி வரை காதலைச் சொல்லச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும், இப்போது அவள் மகள் கல்யாணத்தில் அவளைச் சந்தித்த குமாரவேலிடம் சொன்னதாகவும், குமாரவேல் எனக்கு போன் செய்து அந்தத் தகவலை சொன்னான். என் மகனுக்குக் கல்யாணம் செய்யும் வயதில் எனக்கு இப்படியொரு இனிப்பான சேதியை குமாரவேல் சொன்னபோது, என் வாழ்நாள் கவலை தீர்ந்ததாக நான் மகிழ்ச்சியடைந்தேன்.

திருச்சியில் ஒரு பள்ளிக்கூடத்து தலைமையாசிரியராக இருக்கும் நிர்மலாதேவியைச் சந்தித்து ஏன் அக்காதலை அப்போதே சொல்ல முடியவில்லை, சொல்லவில்லை என்று ஒருநாளாவது கேட்டுவிட வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. குமாரவேல் இச்சேதியை என்னிடம் தொலைபேசியில் சொன்னபோது, அன்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை.

வேறு யாராவது ஒரு பெண் இப்படி சொல்லியிருந்தால் நான் இத்தனை துயருற்றிருக்க மாட்டேன். நிர்மலா அப்படிப்பட்ட பெண்! அது ஆளையடிக்கும் ஓர் அழகு. தி.ஜானகிராமனின் நாவலில் வரும் யமுனா போன்ற பெண் நிர்மலா. அலுவலக நிமித்தமாக ஊர் ஊராய் மாறும் அப்பாவுடன் நான் 8-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் திண்டுக்கல் ரயில்வே காலனிக்கு குடிவந்தோம். வரிசை வரிசையாய் இருக்கும் ரயில்வே காலனி வீடுகளில் எதிர்வீட்டில் இருந்தனர் நிர்மலாதேவி குடும்பத்தினர். அந்த காலனி பிள்ளைகளுக்கு நடுவே, பளிச்சென்ற உருவத்தோடு, கம்பீரமாய் வலம் வந்தவள்தான் நிர்மலாதேவி. காலனி பெண் குழந்தைகளுக்கிடையே நிர்மலாதேவி என்றால் அப்படி ஒரு செல்வாக்கு. அநேகமாய் நாங்கள் குடிவந்தபோது நிர்மலாதேவி, 5-ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தாள் என்று தோன்றுகிறது.

நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த காலம் என்று எண்ணுகிறேன். இப்போதுபோல் அல்லாமல் அன்றைக்கு வேலை கிடைப்பது என்பது ஒரு மிகப்பெரிய காரியமாகக் கருதப்பட்ட காலம் அது. ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா? எப்படியாவது சம்பாதித்து, ஒரு ஆம்புளையா லட்சணமா வலம் வரமாட்டோமா என்று கவலை எல்லா இளைஞர்கள் மனதிலும் ஒரு துடிப்பாய், திகிலாய், பரவி இருந்த காலம் அது.

பள்ளிக்கூட நாள்களிலேயே நிர்மலாதேவி திகுதிகுவென வளர்ந்து, வயதுக்கு மீறிய ஒரு வளர்ச்சியும், வனப்பும் மிக்க பெண்ணாக இருந்தாள். அந்த அழகிய தோற்றத்தின் செழிப்பில் அச்சம் கொண்டு, நான் பலமுறை நிர்மலாதேவியைப் பார்த்தும், பார்க்காததுபோல சென்றதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. உள் மனதில் ஊற்றெடுக்கும் ஆசையை அடக்கிக்கொண்டு, திரும்பிப் பார்க்க தைரியமின்றி, எத்தனையோ முறை அந்த காலனி பகுதிக்குள் நிர்மலாதேவியைத் தாண்டிச் சென்றிருக்கிறேன்.

காலனி பகுதியில் ஒரு கோடியில், ஒரு சின்ன ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. நண்பர்களுடன் எப்போதாவது கோயிலுக்குச் செல்லும்போது கண்கள் நிர்மலாதேவியைத் தேடியதை இப்போது மரணத்தின் வாயிலைத் திறக்கக் காத்திருக்கும் கதவுகளுக்கு அருகில் இருந்தபடி என் மனம் முதன்முதலாக ஒப்புக்கொள்கிறது.

அன்றைக்கு இருந்த சூழலில், காதல் ஒரு பெரும் பாவமாகத்தான் கருதப்பட்டது. அப்படியானால் அன்று யாருமே காதல் கொள்ளவில்லையா? என்று தோன்றும். ஏழையாய், நடுத்தரத்திற்கும் கீழான குடும்பத்தில் அண்ணன் தங்கைகளோடு பிறந்த, பயந்த சுபாவமுள்ள என்னைப் போன்ற ஒரு ஆணுக்கு, அன்றைய சூழலில் காதலிப்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். உண்மையில், நான் அப்படி காதல் கொள்ளவும் இல்லை.

நிர்மலாதேவியின் அழகும், வனப்பும் எப்பொழுதாவது அவளைப் பார்க்கும் தருணங்களில் என்னை மெல்ல சஞ்சலப்படுத்தியது என்பதே உண்மை. பட்டம் முடித்து, நானூறு ரூபாய் சம்பாத்தியத்தில், ஒரு கம்பெனியில் கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நிர்மலாதேவி அப்போது 12-ஆம் வகுப்பு முடித்திருந்தாள் என்று நினைவு.

நான் காலையில் கம்பெனிக்குப் போவதும், இரவு 7, 8 மணிக்கு வீடு வந்து சோறு தின்றுவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடிப்பதுமாக காலம் போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் நிர்மலாதேவி தீக்காயம் பட்டு, அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். தினமும் அந்த மருத்துவமனையைத் தாண்டித்தான், சைக்கிளில் அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் நிர்மலாதேவியின் அம்மா கேட்டுக்கொண்டதற்காக, போகும் வழியில் தினமும் நிர்மலாதேவிக்கு காலை டிபன் கொடுத்துவிட்டு அப்படியே அலுவலகம் போக நேர்ந்தது.

அப்படி டிபன் எடுத்துச் சென்ற பத்து நாள்களும் என் மனதில் என்னையறியாத உற்சாகம் இருந்தது. எனக்கே தெரியாமல் போய்விட்டதுதான் வருத்தம். காலமும், சூழலும் நமது எண்ண ஓட்டத்தை, ஏதேதோ விஷயத்தில் கூட்டியும் குறைத்தும் நம்மையே நம்ப வைக்கும் என்பதெல்லாம் உண்மைதான். அந்த நாள்களில் நிர்மலாதேவியின் கண்களில் தெரிந்த களிப்பும் உவப்பும் அதை அவள் வெளிப்படுத்திய வேகமும், மூடப்பட்ட என் மனக்கதவுகளை மீறி எனக்குள்ளே போகவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தீப்புண்ணினால் ஏற்பட்ட காயத்தின் வலியை மீறி நிர்மலாதேவியின் கண்கள் பளபளத்ததை எத்தனையோ ஆண்டுகள் கடந்து, இந்த கை கால்களை அசைக்க முடியாத இந்த நேரத்தில் என் மனம் எண்ணிப் பார்க்கிறது.

எத்தனையோ ஆண்டுகளுக்குப்பின், நிர்மலாதேவி என்மீது காதல் கொண்ட செய்தியை என் நண்பன், குமாரவேல் சொல்லிய பிறகு, அந்த வாலிப பருவத்தில் நான் பார்த்தும் உணர்ந்த காட்சிகளை மனத்திரையில் பல முறை “ரீவைண்ட்’ செய்து செய்து பார்த்து, உணர முயன்றேன் என்பதுதான் உண்மை. குமாரவேல் ஒருநாள் இரவு என்னிடம் இந்தச் சேதியை போனில் சொன்ன பிறகு, அதாவது அக்காலத்தில் நிர்மலாதேவி என் மீது காதல் கொண்டிருந்தாள் என்ற செய்தியை சொன்னதும், அது மகிழ்ச்சியா? ஆனந்தமா? வருத்தமா? துக்கமா? வெறுப்பா? சுய பச்சாதாபமா? என்றெல்லாம் புரியாமல் நான் என் கல்லூரி நண்பன் பித்தனுக்குப் போன் செய்தேன்.

பித்தன் பேருக்கு ஏற்ற வகையில் எல்லாவற்றிலும் அதிகப் பற்று கொண்டவன். பித்தனுக்கு போன் செய்து நிர்மலாதேவியின் காதல் பற்றி நான் சொல்லியதைக் கேட்டு எப்பொழுதும் சிரிக்கும் வீரப்பா சிரிப்பு சிரித்தபடி, “”அதுக்கு இப்ப என்னடா பண்றது. காலம் ஓடிப்போச்சு, எத்தனையோ விஷயங்களை வாழ்க்கையில் தாண்டி வந்துட்டோம். இருந்தாலும் எனக்கு கூட இதில் ஒரு சந்தோஷம்தான். ஏன்னா காலேஜ் படிக்கிற காலம் பூரா, நீ உன்னை யாருமே காதலிக்கலேன்னு, கவலைப்பட்டில்ல, அக்கவலையை போக்கத்தான் கடவுள் இந்தக் கடைசிகாலத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான சேதியை உனக்கு அனுப்பியுள்ளார், விடுடா, உன் பேத்தி எப்படி இருக்கா? இனிமேல் பழைய கதையைப் பேசி என்ன பண்ணப் போறோம்?” என்றான், பித்தன்.

கல்லூரியில் பித்தன்தான் எனக்கு முதலில் அறிமுகமான நண்பன். கருப்பாக இருக்கிறோம், குள்ளமாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையில், சிவப்பாகவும் நன்றாக இங்கிலீஸ் பேசும் சக மாணவர்களைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப்போன என்னிடம் தானே வந்து நட்பு பாராட்டியவன் பித்தன்தான். பித்தனின் பேச்சில் மயங்கி அவனுடன் நட்பை வளர்த்துக் கொண்டேன். பித்தனின் உண்மைப் பெயர் புத்தன். ஆனால் அரசியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், காதலாகட்டும், பெண்ணாகட்டும், பித்துப்பிடித்தவன் போல ஆக்ரோஷமாகப் பேசக்கூடியவன் புத்தன். அதனாலேயே நண்பர்கள் புத்தனை, பித்தன் என்று அழைக்கத் துவங்கினர். பித்தனின் அப்பா அந்தக்கால தி.க.காரர், பித்தன் வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன.

தினமும் கல்லூரியில் ஆக்ரோஷமாக நண்பர்களுக்கு இடையில் பேசுவான் பித்தன். பித்தனின் பேச்சைக் கேட்ட பலரும் பின்னாளில் நிச்சயம் பித்தன் ஓர் “அரசியல்வாதி’ ஆவான் என்றுதான் நம்பினோம். மொத்தக் கூட்டத்தை வசீகரிக்கும் ஆற்றல் பெற்ற பித்தன், என்னையும் வசீகரித்ததில் ஆச்சரியம் இல்லை.

நிர்மலாதேவி என் மீது காதல் கொண்ட கதையை அன்று நான் பித்தனிடம் சொல்லிவிட்டு, “”இத்தனை வருடம் கழித்து இத்தனை வயதில் இந்தச் செய்தி என்னை ஏதோ செய்கிறது நண்பா” என்று சொல்லி வருத்தப்பட்டபோது, “”சரிதான்டா காதலும், அதனால் கிடைக்கும் அழகிய மனைவியும், மனிதனுக்கு ஒரு வயதில், பெரும் பேறுதான். ஆனா அதுக்கப்பறம் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில்தான் வாழ்க்கையே இருக்கு. நாம இத்தனை வருட அனுபவத்தில எவ்வளவோ தெரிஞ்சுகிட்டோம். காதலிச்சவங்க கொஞ்ச பேர், வெற்றி பெற்றவர்கள் அதைவிடவும் கொஞ்ச பேர்தான். ஆனாலும் நான் ஒத்துக்கிறேன்… காதல் எல்லார் வாழ்க்கையிலும் ஒரு தடவையாவது வந்து போகணும். அந்த பாக்யம் உனக்கு கிடைக்கல. நீ இப்ப அத நெனச்சு என்ன பிரயோசனம்?” எப்பவும் ஆக்ரோஷமா பேசும் பித்தன் ரொம்பவும் அமைதியாக எனக்கு ஆறுதல் சொன்னான்.

நிர்மலாதேவி என்னைக் காதலித்ததையும், அக்காதலை சொல்லாமல் விட்டதையும், நிர்மலாதேவி மறைமுகமாய் சொல்ல முயன்ற காதலை நான் உணர மறுத்ததையும் மீண்டும் ஒருநாள் பித்தனிடம் சொல்லி வருத்தப்பட்டேன். என்றாவது ஒருநாள் நிர்மலாதேவியைச் சந்தித்து இதைப்பற்றி கேட்க வேண்டும் என்று பித்தனிடம் கேட்டேன். “”அதனால் என்ன? நானும் இந்த திருச்சியில் ஒரு சில முறை நிர்மலாதேவியை பார்த்திருக்கிறேன். உறையூரில் உள்ள பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியையாக இருப்பது எனக்குத் தெரியும். நீ திருச்சி வரும்போது, சொல்லு, நான் உன்னை அழைத்துப் போகிறேன்” என்றான்.

சொன்னதுபோல் செய்தான். ஆனால் என்னால்தான் நேரடியாக அப்படி ஒரு கேள்வியை நிர்மலாதேவியிடம் கேட்க முடியவில்லை. நிர்மலாதேவி அதே பழைய ஆர்வத்தோடும், பாசத்தோடும் வரவேற்றுப் பேசி மகிழ்ந்தாள். அந்த நாள்கள் மறக்க முடியாதவை, எத்தனை வருடங்களானாலும் அவற்றை மறக்க முடியாது என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள். ஆனால் எனக்குத்தான் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான் பார்த்த நிர்மலாதேவியும் இன்று பார்க்கும் நிர்மலாதேவியும் வேறு வேறானவர்கள். என் மனதில் பதிந்துபோன நிர்மலாதேவியின் உருவம் வேறு, இன்று நான் பார்க்கும் நிர்மலாதேவி வேறு. சிறு வயதில் என் மீது காதல் கொண்டிருந்ததாக குமாரவேலிடம் சொல்லிய நிர்மலாதேவி, என்னிடம் பேசும்போது, அப்படியான சம்பவம் ஒருபோதும் நடந்ததில்லை என்பதுபோல் சுலபமாய் கலகலப்பாய் பேசினாள்.

நிர்மலாதேவியின் பள்ளிக்கூடம் வரைக்கும் என்னை அழைத்துப்போய்விட்ட பித்தன், இதோ வந்துவிடுகிறேன் என்று எங்களுக்கு ஒரு தனிமையை ஏற்படுத்திச் சென்றான். பள்ளிக்கூடத்தின் கேண்டீனில் உட்கார்ந்து கலகலவென்று அரை மணி நேரம் பேசித் தீர்த்தான். எங்களுடன் திண்டுக்கல் காலனியில் ஒன்றாக வளர்ந்து இன்று சினிமாவில் நடிக்கும் செல்வனைப் பற்றியும், காலனியில் எங்களோடு பழகிய, கணபதி பெரிய மருத்துவராக இருப்பது பற்றியும் எத்தனை எத்தனை கதைகள் ஒவ்வொருவரைப் பற்றிய செய்தியையும் பேசித் தீர்த்தாள்.

அடுத்த வகுப்பு எடுப்பதற்காகச் செல்லும் நேரம் வந்தது. கிளம்பும் தருணம் வந்தபோது “”நிர்மலாதேவி எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் போகிறேன். அரை மணிநேரம் பேசியும் ஒன்றுமே பேசாத வெறுமையுடன் நான் கிளம்புகிறேன். வரவா நிர்மலாதேவி” என்றேன். ஒரு கணம் என்னை உற்றுப்பார்த்து “”அதுதான் வாழ்க்கை” என்றாள் கண்களில் திரண்ட கண்ணீரை வேறு பக்கம் திரும்பித் துடைத்துக்கொண்டே.

பள்ளியை விட்டு வெளியே வந்த நான் வெகுநேரம் பித்தனுக்காக காத்திருந்தேன். அவசரமாக வந்த பித்தன் “”சாரிடா! வேணும்னுதான் லேட்டா வந்தேன். என்ன ஆசை தீர பேசி விட்டாயா? என்றான். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஏன்டா அவ்ளோ ஆசையா வந்த, ஆனா மூஞ்சி வாடிப்போயிருக்கே” என்றான். “”தெரியவில்லை பித்தா” என்றேன். “”நண்பா” என்று என்னைக் கட்டிக்கொண்டான் பித்தன்.

“”உனக்கு இத்தனை வயசாகியும் இதுக்கு இப்படி வருந்துறேயடா… ஒன்னு தெரிஞ்சுக்க… ஆணின் மனம் ஒருநாளும் இதுபோன்ற சங்கதிகளில் திருப்தி அடையாது. அதுதான் ஆணின் பலம் மற்றும் பலவீனமும்கூட. காலஓட்டத்தில் நிர்மலாதேவியை பார்த்தாய், ரசித்தாய், பிரிந்தாய்! 20, 30 வருடம் கழித்து அப்பெண்ணை மீண்டும் பார்த்தாய். அப்பெண்ணை மீண்டும் பார்க்க விரும்பி பார்த்தாய், அவ்வளவுதான். உன் விஷயத்தில் நீ அவளைக் காதலிக்கவே இல்லை என்கிறாய். வீட்டுக்கும் ஊருக்கும் பயந்து நல்ல பிள்ளையாய் அந்தப் பருவத்தைத் தாண்டி வந்தாய். நிர்மலாதேவியும் கூட தன் காதலை அன்றே சொல்லவில்லை. 20, 30 வருடங்கள் கழித்து அன்றைக்கு உன்னைக் காதலித்ததை எண்ணி இன்று நீ இவ்வளவு மன அவஸ்தைபட வேண்டியதில்லை” என்றான்.

“”ஆமான்டா பித்தா! அதுதான் எனக்கும் புரியவில்லை. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாகிவிட்டது. என்றைக்கோ நடந்த சங்கதிதான் ஆனாலும் அச்செய்தி நெஞ்சை அரிக்கிறது” என்றேன்.

உடனே பித்தன் சொன்னான்: “”நான் என்ன சொல்றேன்னா அன்றைக்கு உனக்குள்ளும் அந்த எண்ணம் இருந்திருக்கிறது. எதற்கோ பயந்து அதை நீ மறைத்து, மறந்தும் விட்டாய். இன்று அந்த உணர்வுகள் மேலிட நீ துன்பப்படுகிறாய். சரி விடு” என்று ஆறுதல் கூறினான்.

நிர்மலாதேவி பற்றிய நினைவுகளை அடுக்கடுக்காய் நெஞ்சக் கூட்டிலிருந்து வந்து வந்து போனது. மெல்ல விழிப்பு வருவது போலிருந்தது. மிதப்பது போலவும் ஒரே கும்மிருட்டாக இருப்பது போலவும், தனியாளாய் நான் வேகவேகமாக நடப்பது போலவும், எல்லையற்ற அமைதிப் பெருவெளியை நெருங்குவதுபோலவும் என்னவென்று புரியாத தெளிவற்ற ஒரு நிலை.

யாரோ என் கைகளை உயர்த்தி ஏதோசெய்கிறார்கள். இடது கையில் வலி பொறுக்க முடியவில்லை. யாரோ பேசும் குரல் கேட்கிறது. தொடர்ந்து குளுகோஸ் ஏறியதில் கைவீங்கிவிட்டது. என்னுடைய வலது கையில் குளுகோஸ் ஏற்றுவோம் என்று பேசுகிறார்கள்.

இப்போது எனக்கு மீண்டும் மெல்ல நினைவு திரும்புகிறது. வலது கையில் குளுகோஸ் ஏற்றும் முயற்சியில் அவர்கள் இறங்கி இருப்பது தெரிகிறது. இடது கை வலியோடு, இப்போது வலது கையிலும் வலி. விண் விண் என்று தெறிக்கிறது. கண்களைத் திறக்க முடியவில்லை. இமைகள் முழுவதுமாகப் பசை போட்டது போல் ஒட்டிக் கொண்டுவிட்டது. வாயைத் திறந்து பேச ஆசைப்பட்டும் வாயைத் திறக்க முடியவில்லை. எத்தனை நாளாக என்று எனக்குக் கணக்குத் தெரியவில்லை. புதிதாகப் பேச்சுக்குரல் கேட்கிறது. “”பல்ஸ்ரேட் மெல்ல மெல்ல குறைந்தபடியே இருக்கிறது. நாம் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இன்னும் 24 மணி நேரம் கழித்துத்தான் எதுவும் சொல்ல முடியும்” என்று பேசும் குரல் கேட்கிறது.

இது காலையா மாலையா என்று தெரியவில்லை. புதிதாக குளுகோஸில் ஏதோ மருந்து சேர்த்து இருப்பார்கள் போலிருக்கிறது. உடம்புக்குள் சூடு பரவுகிறது. மெல்ல கை, கால்களை அசைக்க முடிகிறது. ஆனால் கண்களையும் வாயையும் திறக்க முடியவில்லை. கண்திறந்து, பேச வேண்டும் என்ற முயற்சிக்கு நடுவே மெல்ல மெல்ல அதலபாதாளத்திற்குள் செல்வது போன்ற ஓர் உணர்வு, ஒரே இருட்டு, எல்லையற்ற அமைதி.

– சுரேந்திரன் (ஜனவரி 2015)

Print Friendly, PDF & Email

1 thought on “உயிர்வெளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *