உயிரே உயிரே

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 18,381 
 
 

மனித உயிர்

விலைமதிப்பற்றது…

என்பது கூட

வெறும் வார்த்தைகள் தான்

தனது மரணத்தை

எதிர் கொள்ளும் வரை…

இந்த வரிகளைப் படித்த ராஜுவின் நினைவுகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கிச் சென்றன.

அன்று…

அப்படி ஒரு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது அவனுக்கு. இது கனவா இல்லை நனவா? அவன் கண்ட அந்த காட்சியை அவனால் நம்பமுடியவில்லை.

அவள் தான்…

அவளேதான்… எத்தனை வருடங்களாகிவிட்டது….

அமுதாவை சந்தித்து. தாவணியில் பார்த்த தேவதை… இன்று எவ்வளவு மாறியிருக்கிறாள்!

என்ன ஆயிற்று இவளுக்கு?

உடல் மிகவும் மெலிந்து போய் சிதைந்து போன ஒரு சிற்பத்தைப் போலிருந்த அவளை, ஆச்சரியமாகப் பார்த்தான் ராஜு.

“காலம் மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப்போட்டு விடுகிறது!

சென்னையில் தானிருக்கிறாளா இவள்! இவ்வளவு நாட்கள் எப்படிப் பார்க்க முடியாமலிருந்தது இவளை? இத்தனை வருட இடைவெளிக்குப்பின் இன்றாவது பார்க்க முடிந்ததே இவளை, இந்த மின்சார ரயிலில்…”

உணர்வுகளின் கலவையாய் நின்றான் அவன்.

பேசலாமா அவளிடம், கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஒருவேளை, அவளைச் சந்திக்கும் வாய்ப்பு வாழ்வில் இனி ஒரு முறை அவனுக்குக் கிடைக்காமலும் போகலாம். எனவே பேசிவிடலாம் என்ற முடிவுடன் அவளைப் பார்த்தான்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனை ஏதோ உள்ளுணர்வு தூண்ட திரும்பிப்பார்த்தாள், அமுதா. பார்த்தவுடன் அவனை அடையாளம் கண்டு கொண்டவள் சட்டென்று தன் முகத்தில் தோன்றிய உணர்வுகளை மறைக்க முயன்றாள். தனது பார்வையை வேறுபக்கம் திருப்பமுயன்று தோற்றவளாய் தயங்கி தயங்கி அவ்வப்போது அவனைப் பார்த்தாள்.

ராஜுவும், அமுதா தனியாகத்தான் வந்திருக்கிறாள் என்பதே உறுதிசெய்து கொண்டபின் மெல்ல அவளை நெருங்கிப் பேசினான்.

“எப்படி இருக்கிங்க…?”

மரியாதையுடன் தான் கேட்கமுடிந்தது பிரிந்துவிட்ட முன்னாள் காதலியை நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் சந்தித்தபோது.

“நல்லா இருக்கேன்…” சுரத்தில்லாமல் சொன்னாள்.

“நீங்க எப்படியிருக்கிங்க..?”

ம்.. இருக்கேன்…

ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். பேசிக்கொண்டே இருக்கையில்…

அவள் புடவை தலைப்புக்குள் மறைக்க முயன்ற இடதுகையைக் கவனித்து விட்டவன் அதிலிருந்த அந்தக் கருப்பு நிற ரப்பர் பேண்டை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைத்தான்.

“என்னங்க கையில எதாவது காயமா …?”

“இல்ல… லேசா அடிபட்டடது தான்…”

“இல்ல… நீங்க பொய் சொல்றிங்க..

இத பாத்தா காயம்மாதிரி தெரியல்ல..?

உண்மைய சொல்லுங்க..” என்றான்

தயங்கியபடி அவள்… “அது டையாலிசிஸ் செய்த கட்டு…”

“ஓ..என்ன சொல்றீங்க…?” அதிர்ச்சி அடைந்தவனாய் அவளிடம் கேட்டான்.

“ஆமாம். இப்போதான் ஆஸ்பிடலில் டையாலிசிஸ் முடிந்து வீட்டுக்குத் திரும்பிப்

போறேன்.. வாரத்தில் மூனு நாள் ஆஸ்பிடலில் டயாலிசிஸ் பண்ணிக்கனும்…”

“ஓ காட்… அப்படீன்னா உங்களுக்கு கிட்னி பிராப்ளமா?

ஆமா..

சாரீங்க….

தனியா வேற வந்திரிக்கிங்க…!

கூட யாரும் வரலையா…? இரக்கத்தோடு விசாரித்தான் அவன்.

அம்மா கூட வருவாங்க. இன்னிக்கு அவங்களுக்கு உடம்பு முடியல…

அவளை இந்தக் கோலத்தில் பார்க்கையில் மிகவும் வேதனையாக இருந்தது அவனுக்கு. என்ன நேர்ந்தது இவளுக்கு. எப்படி இருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே…இவளின் கணவன் ஏன் வரவில்லை? மனதுக்குள் கேள்விகள் எழுந்தன.

ப்ளீஸ்.. உங்க கூட கொஞ்ச நேரம் தனியா பேசலாமா…? என்று கேட்டான்.

முதலில் தயங்கிய அமுதா, அவன் மிகவும் வேண்டிக்கொள்ள சம்மதித்தாள்.

இருவரும் பக்கத்து ஸ்டேஷனில் இறங்கி ஒரு ஹோட்டலில் காபி ஆர்டர் செய்துவிட்டுப் பேசினர்.

குடிகார கணவனுடன் அவள் வாழ்ந்த கொடுமையான வாழ்க்கை.மனஉளைச்சலுடன் கழிந்த வாழ்வில் எதிர்பாராமல் அவளுக்கு ஏற்பட்ட சிறுநீரக இழப்பு. இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்து போகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாள் அன்று மட்டும் வந்து பார்த்துவிட்டு போன அவள் கணவன்.

டயாலிசிஸ்,மருந்துகள் எனச் செலவுகள் அதிகமாகிவிட, துணையாகவும் உதவியாகவும் இருக்க வேண்டிய நிலைமையில் அவளைக் கைவிட்டு ஓடி விட்ட கணவன்… என தன் சோகம் முழுவதையும் கொட்டியவளின் விழியோரத்திலிருந்து கண்ணீர் துளிகள் வழிய, கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.

அதே சமயம் தன் பரிதாப நிலையை இது நாள் வரை தனக்குள் பூட்டி வைத்திருந்த அந்தரங்க சோகங்களை பகிர்ந்து கொண்டதில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவளுக்கு. குழந்தை இல்லாத அவள், தன் அப்பா இறந்த பிறகு அவர் பென்சன் பணத்தில் தனியாக வாழும் தன் தாயுடன், தற்போது சேர்ந்து இருப்பதையும் கூறினாள்.

சிறுநீரக தானம் கிடைப்பதன் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கொள்ள வேண்டிய நிலை. அவள் அம்மாவுக்கோ சர்க்கரை நோய் இருப்பதாலும் , வயது அதிகமாகி விட்டதாலும் , சிறுநீரக தானம் செய்ய முடியாமல் போயிருந்தது. ஒரே சகோதரனும் உதவ மறுத்துவிட அவளுக்காகச் சிறுநீரக தானம் செய்வதற்கு குடும்ப உறுப்பினர் எவரும் இல்லாத நிலை. டையாலிசிஸ் சிகிச்சை மட்டுமே தீர்வாகிட வாழ்க்கை முழுவதும் போராட்டமாகி இருந்தது அவளுக்கு.

இத்தனைக்கும் சிறுநீரக தானம் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அவர்களும் சாதாரண மனிதர்களைப்போல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம் சில நாட்களிலேயே… என மருத்துவர்கள் உறுதி அளித்தும் …உறுப்பு தானம் செய்ய முன்வராத நிலை.

பொதுவாக கணவனின் உடல்நிலையில் மிக மோசமாக பாதிப்பு ஏற்படும்போது அவனுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து உதவும் மனைவி… என இருக்கும் குடும்ப அமைப்பில்.. மனைவிக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும்போது இப்படி கைவிட்டு ஓடிவிடுகிற இது போன்ற சில கணவன்கள் இருக்கும் வரை அந்தப் பெண்களின் வாழ்வு நரகமாகிவிடுகிறது, என நினைத்துக் கொண்டான்.

அவளிடம்…மனசைத் தளர விடாதிங்க. எவ்வளவு தைரியமான பெண் நீங்க…உங்களுக்கு என்ன உதவி வேணுமோ நான் செய்யறேன்…என் செல்போன் நம்பரைக் குறிச்சி வைச்சிக்குங்க. எப்ப வேணுமானாலும் தயங்காம கூப்பிடுங்க….என அவளிடம் ஆறுதலாகச் சொல்லி விட்டு வந்து விட்டானே தவிர,

அவளது கதையை கேட்டதிலிருந்து வேதனையால் மனதுக்குள் உடைந்து போனான்அவன். எப்படியாவது அவளுக்கு உதவ வேண்டும், அவள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று அவன் மனம் துடித்தது. இரண்டு நாட்கள் நீண்ட யோசனைக்குப்பின் தான் அவன் அந்த முடிவுக்கு வந்தான். மூன்றாம் நாள் தன் வீட்டிலும் சொல்லாமல் அவளுக்கும் தெரியாமல் அந்த மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தான்.

“டாக்டர் நான் ராஜு . அமுதாவோட தூரத்து உறவு .”

அவளுக்கு நான் சிறுநீரக தானம் செய்யரேன்.

ப்ளிஸ்..எப்படியாவது அவளை காப்பாத்துங்க டாக்டர்… “என்றான்.

“மிஸ்டர் ராஜு. கட்டிய கணவனும் உறவுகளும் கைவிட்ட பின் நீங்க உதவ முன்வந்திருக்கிங்க.

உங்க நல்ல மனசை பாராட்டுறேன்.”

“பட்… விதிகளின்படி நீங்க அவங்களுக்கு உறுப்பு தானம் செய்ய முடியாது….குடும்ப உறுப்பினர்கள் தான் உறுப்பு தானம் செய்ய முடியும். ஐயம் சாரி…” என்றார் .

“அப்போ நோய் பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் இப்படியே இறந்து போகவேண்டியது தானா டாக்டர்…?” என்றான் .

“நோ. மிஸ்டர் ராஜு அவங்க டயாலிசிஸ் சிகிச்சையில் உயிர் வாழலாம்.”

“குடும்ப உறவுகள் யாரவது சிறு நீரக தானம் செஞ்சா டிரான்ஸ்பிளான்ட்

செஞ்சிகிட்டும் நல்லபடியா வாழலாம்” என்றார்.

அவளுக்காக தன்னால் உதவ முடியாத ஏமாற்றத்துடன் வீடு திரும்பியவன், அதற்குப்பிறகு அவ்வப்போது அவளை சந்தித்து தைரியத்தையும் ஆறுதலையும் கூறிவந்தான்.

சில மாதங்களில் அவனுக்கு வேலையில் மும்பைக்குக்கு மாற்றலாகிவிட அவளைச் சந்தித்து விவரத்தைக் கூறிவிட்டு மும்பைக்குச் சென்றான்.

வேலைப்பளுவின் காரணமாகவும் விடுமுறை கிடைக்காததாலும் ஊருக்கு வரமுடியாமலும் நேரில் சந்திக்க இயலாமலும் அவளோடு போனில் மட்டுமே பேசி வந்தான். பணஉதவி செய்வதாக அவன் கூறியதையும் அவள் பிடிவாதமாக மறந்துவிட்டாள்.

தொடர்ந்து சில வருடங்கள் டயாலிசிஸ் செய்து கொண்டு வந்தாள் அமுதா. ஆனாலும் ஏனோ மனம் உடைந்த சூழலில் இருந்தவளுக்கு உடல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட திடீரென்று ஒரு நாள் அவளின் உயிர் பிரிந்தது.

அவள் இறந்து விட்ட அந்த துயரச்செய்தி கேட்டு தான் சென்னைக்கு வந்தது. கடைசியாக அவளை வாடிய ஒரு மலராய் மரணப்படுக்கையில் பிணமாகப் பார்த்த சோகம்…என தன் பழைய நினைவுகளிலிருந்து மீண்டான்.

தான் எவ்வளவு முயன்றும் விலைமதிப்பற்ற ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது அவன் மனதில் ஆறாத வடுவாக நிலைத்துவிட்டது.

4 thoughts on “உயிரே உயிரே

  1. மிகவும் அருமை அன்பானவர்கள் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது ..

    1. தங்களது கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி.
      நிலாரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *