விநாயகனே வேழமுகத்தோனே. . . . . .! எங்கோ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது . அப்போது “குட்மார்னிங் பாபு ! “ என்று லதாவும் , மைதிலியும் கோரஸாக காலை வணக்கம் பாபுவுக்கு கூறினார்கள்.
“வெரிகுட்மார்னிங் என்ன ஜோடிப்புறாக்களே, காலேஜ்க்கு புறப்பட்டு விட்டீங்கபோல் தெரியுதே“ என்றான் பாபு சிரித்துக் கொண்டே.
.
“ஆமாம் பாபு ! நீங்க உங்க ஆபீஸ்க்கு கெளம்ப நேரமாகல்லே “ என்றாள், லதா .
“ அவர் என்னிக்கி டையத்துக்கு ஆபீஸ்க்கு போனாரு அக்கா “ என்று பாபுவை வழக்கம் போல வம்புக்கு இழுத்தாள் மைதிலி .
பாபு தேர்தலில் நிற்கும் வேட்பாளர் போல் இருகைகளையும் கூப்பி, “தாய்க்குலமே தயவுசெய்து, நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க. உங்ககிட்ட இப்ப பேச்சுக் கொடுத்தால், நான் மத்தியானம்ந்தான் ஆபீஸ்க்கு போக முடியும். இப்ப ஆளை விடுங்க!“என்று கூறிக்கொண்டே மாடிப்படிகளில் வேகமாக ஏறினான் பாபு.
லதாவும் மைதிலியும் அக்கா தங்கை. லதா அக்கா , அவளது தங்கை மைதிலி . லதா பார்ப்பதற்கு அழகாகவும் ,எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருப்பாள். மைதிலியும் அக்காவைபோல் இல்லாமல், ஓவியர் மாருதி பத்திரிகைகளில் வரையும் இளம் பெண் ஓவியம் போல், அழகாக இருந்தாள். இருவரும் நிறத்திலும் சிவப்பு., உயரம் உருவம் எல்லாம் ஓன்று போல் இருந்தார்கள். தெருவில் அவர்கள் நடந்து சென்றால் இரண்டு பேரில் யார் அக்கா, யார் தங்கை என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். தெருவில் இருவரும் கலகலவென சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் செல்வதைப் பார்த்து பொறாமைப்படாதவர்களே யாரும் அத்தெருவில் இருக்க மாட்டார்கள். மைதிலியின் உதட்டுக்கு மேல் காணப்படும் அழகிய மச்சம்ந்தான், அவளை மைதிலி என அடையாளம் காட்டும்.
இருவரும் மதுரை மீனாட்சியம்மன் கல்லூரியில் படிப்பவர்கள். படிக்கும்போதே, இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள். கல்லூரியில் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெறுவார்கள். இருவருக்கும் அழகைக் கொடுத்த ஆண்டவன் அவர்களுக்கு அறிவையும் அள்ளிக் கொடுத்திருந்தான்.
ஒருமுறை கல்லூரியில் ஓட்டப்பந்தயத்தில் இருவரும் கலந்து கொண்டார்கள். அப்போது லதா முன்னால் ஓடி வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் மைதிலி ஓடி வந்து கொண்டிருப்பதை பார்த்த லதா, வேண்டுமென்றே சற்று நின்று, மைதிலி முன்னால் ஓடிய பிறகே, லதா அவள் பின்னே ஓடினாள். மைதிலிக்காக லதா விட்டுக் கொடுத்தாள் என்றுதான் பார்த்தவர்கள் அனைவரும் அவளிடமே கூறுவார்கள். தங்கை மைதிலிக்காக விட்டுக் கொடுப்பதில், லதாவுக்கு ஓர் இனம் தெரியாத மகிழ்ச்சி.
கல்லூரியில் படிக்கும்போதே இருவரும் எல்லோரிடமும் ஆண் பெண்கள் என வித்தியாசம் பார்க்காமல் சரளமாக கள்ளங்கபடமற்ற முறையில் சிரித்துப் பேசிப் பழகுவார்கள். அவர்கள் பெற்றோர்களும் இருபதோன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்தான். பெண்கள் இருவருக்கும் அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்.
அப்போதுதான் அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடிக்கு பாபு என்ற இளைஞன் குடிவந்தான். அவனை அக்கா தங்கை இருவரும் பார்த்து ரசித்தார்கள். எடுப்பான மூக்கு, சிரிக்கும் கண்கள். சுருள் சுருளான முடிகற்றை அவன் நெற்றியின் முன்புறத்தில் அழகாக விழுந்து கிடந்தது. அவனைப் பார்த்து ஆண்களே பொறாமைப்படும் அளவுக்கு அவன் மிகவும் அழகாக இருந்தான் என்றால் அக்கா லதாவும் தங்கை மைதிலியும் காதலில் அவர்களே மயங்கினார்கள் என்றால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
பாபு மதுரையில் உள்ள ஜெயசக்தி என்ற பெரிய நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மானேஜராக வேலை பார்த்து வந்தான். அவன் மாடியில் உள்ள தனியறையில் தங்கி, அருகே இருக்கும் நிறுவனத்திற்கு சென்று வந்தான். லதாவும் மைதிலியும் தங்கள் வீட்டு மாடியறையில்தான் தினமும் படிப்பார்கள். அவர்கள் வீட்டு மாடியறையின் ஜன்னல் வழியாகப் பார்த்ததால் பாபு இருப்பது நன்றாகத் தெரியும்.
லதாவும், மைதிலியும் கல்லூரியில் படிக்கிறார்கள் என்றும் அவர்கள் எல்லோரிடமும் நன்றாகப் பேசிப் பழகுவார்கள் என்பதையும் பாபு அங்கு வந்த ஒரு வாரத்திலே, அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டான். பாபு ஒரு நாள் மாடியை விட்டு, தெருவில் நடந்து வரும்போது, அவர்கள் இருவரும் எதிர்பாராமல், பாபுவை எதிரெதிரே சந்தித்துக்கொள்ள, பாபுதான் முதலில் சிரித்துக்கொண்டே, அவர்களைப் பார்த்து “குட்மார்னிங் “ என்று கூறியவுடன், அவர்களும் சிரித்துக்கொண்டே “வெரி குட்மார்னிங்” என்று பதிலுக்கு கூறி ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
ஒரு வாரத்தில் அவர்கள் மூவரும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பழகும் அளவிற்கு முன்னேறி இருந்தார்கள் . லதாவும் மைதிலியும் காலை எழுந்தவுடன் தங்கள் வீட்டு மாடியிலிருந்து பாபு எப்போது வெளியே வருவான் என்று ஆவலுட்ன் இருவரும் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
பாபுவுக்கு மைதிலியின் மீதுதான் பிரியம் அதிகம் . தன் காதலை எப்படி மைதிலிக்கு தெரியபடுத்துவது, என்று யோசிக்க ஆரம்பித்தான். அவன் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். கைபேசி மூலம் வெளிப்படையாக தன் காதலை அவளிடம் கூற அவன் விரும்ப வில்லை என்பதை விட பயப்பட்டான் என்றுதான் கூற வேண்டும்.. மற்றொரு காரணமும் இருந்தது. லதாவும் மைதிலியும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தார்கள். எனவே மைதிலியை தனியாக அவனால் சந்தித்துப் பேச முடியவில்லை
ஒரு நாள் லதா காய்ச்சல் என்று அவள் வீட்டு மாடிக்கு வராமல் வீட்டுக்குக் கீழேயே இருந்து விட்டாள் மைதிலி மட்டும் மாடியில் படித்துகொண்டிருந்தாள். இதனை அறிந்து கொண்ட பாபு, தன் அறைக்கு வந்து தயாராக, மைதிலிக்காக எழுதி வைத்திருந்த காதல் கடிதத்தை அவளிடம் கொடுத்து விட்டு வந்து விட்டான்
மைதிலி அவன் கொடுத்த கடிதத்தை பிரித்துப் படித்தாள். கடிதத்தின் ஆரம்பத்தில்………மைதிலி உன் மீது நான் கொண்டுள்ள உண்மையான மேன்மையான எனது அன்பை எப்படி, எந்த வார்த்தைளில் எழுதி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. எனவே நான் உனக்கு எழுதிய கடிதத்தின் ஆரம்பத்தில் புள்ளிகளாகவே வைத்துவிட்டேன்.. அதில் என் அன்பின் ஆழத்தை உணர்த்தும் மிகச் சிறந்த உனக்கு விருப்பமான சொற்களை நீயே நிரப்பிக் கொள். நான் முதன்முதலாக உன்னை, உன் முகத்தைப் பார்த்தவுடன் ‘ நிலவைப் பிடித்து சில கறைகள் நீக்கி, குறுகத் தரித்த முகம் ‘ என்று ஒரு கவிஞன் எழுதிய அந்தக் கவிதைதான் அப்போது தவிர்க்க முடியாமல் எனக்கு நினைவில் வந்தது என்று தன் காதல் கடிதத்தை எழுதி முடித்திருந்தான்.
மைதிலி அவன் எழுதிய அந்தக் காதல் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்து ரசித்து வானிலே பறக்க ஆரம்பித்தாள். அவள்’ அந்தக் கவிதையை மிகவும் ரசித்தாள். அவனுடைய அழகிலும், நல்ல சம்பளத்தில் பணியில் இருப்பதாலும் தன் மனதை அவனிடம் பறி கொடுத்தாள். அந்தக் காதல் கடிதம் வந்ததிலிருந்து , அவள் தன் படிப்பில் கவனம் செலுத்தாமல் ,எதிர் வீட்டுமாடி ஜன்னல் எப்போது திறக்கும் பாபுவை எப்போது பார்க்கலாம் என்று ஏக்கமுடன் பார்க்கவும் ஆரம்பித்தாள்.
பாபு, காலையில் பணிக்குச் சென்று விட்டு, தினமும் இரவில் நேரங்கழித்துதான் வீட்டுக்கு வருவான். மாடிக்கு வந்தவுடன் விளக்கைப் போட்டு விட்டு, அவன் எதிர் வீட்டு மாடி ஜன்னலை பார்ப்பான். மைதிலியும் காத்திருந்து அவன் முகம் பார்த்து மலருவாள். அவனும் யாருக்கும் தெரியாமல், அவளை நோக்கி கை அசைத்து , தன் அன்பை தினமும் வெளிபடுத்துவான். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதுபோல் , காதல் வந்தால் கூச்சம், பயம் எல்லாமே பறந்து போகும்போல் அவனுக்குத் தோன்றியது.
மைதிலியின் அக்கா லதாவிடமும் அவன் பழகி வந்தாலும், அவன் மனம் என்னமோ மைதிலியிடந்தான் சென்றது. ‘ ஓ……. இதுதான் காதலா ? ‘
ஞாயிற்றுக் கிழமை வந்தால் போதும் மூவரும் ராஜாஜி பூங்காவுக்கு சென்று விடுவார்கள். அவர்கள் பொழுது போவது கூடத் தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பவார்கள். பாபு கூறும் ஜோக்குகளுக்கு எல்லாம் லதாவும் மைதிலியும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
பாபுவின் அழகும் படிப்பும் புன்னகையுடன் கூடிய அவனுடைய சிரிப்பும் லதாவையும் கவர்ந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவளும் பாபுவை மனதிற்குள்ளேயே காதலித்தாள். ஆனால் அவள் தன் காதலை பாபுவிடமும் வெளிக்காட்டாமல் தன் மனதிற்குள்ளேயே வைத்து காதல் என்னும் பயிரை வளர்த்தக் கொண்டாள்.
மைதிலியும் தன் காதலை பற்றி தன் அக்காவிடம் கூறவில்லை. கூறுவதற்கு அவளுக்குப் பயம். ஏன் என்றால் பெற்றோரிடம் அவள் உடனே கூறி விடுவாளோ என்ற அச்சம். அக்காவின் திருமணம் முடிந்து விட்டால், பிறகு தன் காதலைப் பற்றி அக்காவிடம்கூற வேண்டும் என்று மனதிற்குள்ளேயே எண்ணியிருந்தாள்.
இதை அறிந்து கொள்ளாத லதா, பாபுவை ஒருநாள் பார்க்க விட்டாலும் எதையோ இழந்ததுபோல் உணர்ந்தாள். அன்று சரியாக சாப்பிடவும்மாட்டாள். அவளுடைய கல்லூரியின் நெருங்கிய தோழிகள் “என்ன லதா ஒரு மாதிரியாக் இருக்கே. சரியாக சாப்பிடாமல் கொண்டு வந்த டிபனையும் கீழே கொட்டறே “ என்று கேட்டார்கள்.
அதற்கு அவள், பாபு மீது உள்ள தன் காதலை தெரிவித்து விட்டு “எனக்கு இந்த வருஷந்தான் கடைசி வருடப்படிப்பு, என்னோட படிப்பு முடிந்தவுடன், என் லவ் பத்தி பாபுவிடம் கூறி ,அவரை நான் மாரேஜ் பண்ணிக்கொள்வேன். அவர் இல்லைன்னா, எனக்கு வாழ்வே இல்லே” என்று சினிமாவில் வரும் கதாநாயகிபோல் கல்லூரித் தோழிகளிடம் மட்டும் பிதற்ற லதா ஆரம்பித்தாள்.
“சரி நீ பாபுவை லவ் பண்ணுவது உன் பாபுவுக்கு தெரியுமா ? லதா ! அப்படி உன் பாபுவுக்குத் தெரியல்லைன்னா, அவரிடம் போனில் சொல்ல , உனக்கு பயமாகவோ கூச்சமாகவோ இருந்தால் லெட்டர் மூலமாவது உன் லவ்வை பாபுக்குத் தெரிவித்து விடு., அவர் உன்னை லவ் பண்ணாரன்னு, லதா! நீ தெரிந்து கொண்டேன்னா உனக்கு நல்லது” என்று எடுத்துக் கூறினாள் தோழி ஒருத்தி.
“ பாபு என்னை லவ் பன்றார்ன்னு நான் நன்றாக உணர்ந்து இருக்கேன். என்கிட்டே நன்றாகவே பேசிப் பழகுறார். அதனாலே என்னை உறுதியாய் லவ் பன்னார்ன்னு, நெனைக்கிறேன். எனக்கும் என் தங்கை மைதிலிக்கும் பொங்கல் க்ரீடிங்க்ஸ்கூட அனுப்பி இருக்கார்ன்னா’ பாரேன் ! என் தங்கையை விட என்கிட்டதான் மதிப்புடனும் மரியாதையுடனும் அன்பா பேசுறார். “ என்று பாபு தன்னை காதலிப்பார் என லதா நம்பிக்கையுடன் கல்லூரித் தோழியிடம் பதில் கூறினாள். .
“லதா ! உங்க லவ்வெல்லாம் உங்க அப்பா அம்மாவுக்காவது தெரியுமா ? “ என்று தோழி விடாமல் அக்கறையுடன் கேட்டாள்.
“ இதுவரைக்கு நான் கூறல்லே. மேலும் பாபுவும் நாங்களும் ஒரே சாதியச் சேர்ந்தவங்க. எங்க லவ்க்கு எந்தவித எதிர்ப்பும் இருக்காதுன்னு நான் நெனைக்கிறேன். எனக்கு எப்போது பார்த்தாலும் பாபு நெனைவாகவே இருக்கு. எப்படியாவது இந்த வருஷம் படிப்பை முடிப்பதுற்குள் என் லவ்வைப் பத்தி எங்க அம்மா அப்பாவிடம் கூறலாம்ன்னு இருக்கேன்” என்று லதா கூறி முடித்தாள்.
லதாவின் காதலைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளாத பாபுவும் மைதிலியும் யாருக்கும் தெரியாமல் சினிமா பீச் என்று சுற்றி, தங்கள் காதலை வளர்த்தார்கள். ஒருநாள் பாபு ஆர்வம் மிகுதியில் மைதிலியிடம் தங்கள் திருமணம் பற்றி பேச்சை எடுத்தான். அதற்கு மைதிலி “ பாபு எனக்காக கொஞ்சம் பொறுத்துங்க . என் அக்கா லதாவுக்கு வரன் பாத்துக்கிட்டு இருக்காங்க. அக்கா மாரேஜ் முடிந்தவுடன் நம்ம மாரேஜ்தான் ” என்று பதில் கூறி அவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்ததாள். மைதிலி தனக்குத் தெரியாமல் தன வாழ்வில் விதி விளையாடப் போவதை அறியாமல்.
லதாவுக்கு தேர்வெல்லாம் முடிந்து விட்டது. மாடி அறையில் புத்தகங்கள் எல்லாம் தாறுமாறாக கிடந்தைப் பார்த்து, லதா அவற்றை எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்தாள். அப்போது மைதிலி வைத்திருந்த புத்தகத்திலிருந்து, ஒரு கடிதமும் ஒரு போட்டோவும் கீழே விழுந்தது. அவள் அதனை எடுத்து படித்துப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தாள். அக்கடிதம் பாபு அவள் தங்கை மைதிலிக்கு எழுதிய கடிதம்., அந்தப் போட்டோவில் அவனும் மைதிலியும் கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட போட்டோ.
‘மைதிலியா ? இப்படி இருப்பாள் என்று லதா கனவிலும் நினைத்துப் பார்க்க வில்லை. இதுநாள் வரை தன்னிடமே அவள் பாபுவைக் காதலித்ததைப் பற்றி கூறவில்லையே. அவள் என்னிடமாவது கூறியிருந்தால், இப்படி நான் பாபுவை என் மனதளவில் அவருடன் மனக்கோட்டை கட்டியிருக்கமாட்டேனே ! ‘ என்று கலங்கி நின்றாள்.
லதாவிற்கு அன்றையிலிருந்து சாப்பிடவோ யாரிடமும் பேசவோ பிடிக்கவில்லை. தன் தோழி கூறியதை தான் அப்போது அலட்சியப்படுத்தியதையும், இப்போது நினைத்துப் பார்த்து லதா வருத்தப்பட்டாள். ஆனால் அவள் வீட்டில் தன் மனநிலையை வெளிக் காட்டாமல் ஏதோ சாப்பிட்டேன் என்ற பேருக்கு சாப்பிட்டாள். தங்கை மைதிலியிடம் எப்போதும்போல் பேசினாள். அவள் தன் காதலை தங்கைகாக விட்டுக் கொடுக்கவும் தன் மனதிற்குள்ளேயே உறுதியாக இருந்தாள்.
. லதா கடைசியாக் பாபுவை பார்க்கலாம் என்று நினைத்து அறைக்கு வெளியே வந்தாள். பாபுவை அவன் பெற்றோர் அவசரமாக சென்னைக்கு வரும்படி போனில் தகவல் வந்து, அவன் சென்னைக்கு சென்றவன் பதினைந்து நாட்கள் ஆகியும் இன்னும் வரவில்லை என்பது அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது.
லதா பெண் புத்தி பின் புத்தி என்பதை தன் செயலில் காட்ட முற்பட்டாள். அவள் அவசரப்பட்டு தூக்க மாத்திரகளை விழுங்கி இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டாள். மைதிலிக்கு தன் அக்காவின் இறப்புக்கு தானும் பாபுவுந்தான் காரணம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அக்காவின் பிரிவு மைதிலியை மிகவும் வாட்டியது. இங்கு இப்போது பாபு இருந்தாலும், தனக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என பாபுவை அப்போது நினைத்துப் பார்த்தாள்.
திடீரென்று ஒருநாள் பாபு மைதிலி வீட்டுக்கு வந்தான். பாபுவைப் பார்த்தவுடன், மைதிலிக்கு அக்கா இறந்த துக்கமெல்லாம் மறந்து முகம் மலர்ந்து அவனை வரவேற்றாள்.
ஆனால் பாபுவோ எந்தவிதமான உணர்வுகளையும் அவளிடம் வெளியே காட்டிக்கொள்ளாமல் “மைதிலி என்னை மன்னித்து விடு ! . என் வயதான அம்மா அப்பாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில், நான் இங்கு இருக்கும்போது எனக்கும் தெரியாமல் என் மாரேஜ்க்கு எங்க ஊர்ல இருந்த என் அத்தை பெண்ணை ஏற்பாடு செய்து விட்டாங்க. என்றவன் மேலும் தொடர்ந்தான்.
“நீயும் உன் அக்கா மாரேஜ்க்குப் பிறகுதான் நம்ம மாரேஜ்ன்னு வேறு நீ உறுதியாக கூறிட்ட , அதனால நான் வேறு வழியில்லாமல் என் மாரேஜ்க்குச் சம்மதித்துட்டேன்..” என்று அழைப்பிதழை மைதிலியிடம் கொடுத்துக்கொண்டே “ இனிமேல் நாம நல்ல நண்பர்களாகவே இருப்போம் என்று கூறிச் சென்றான். மைதிலி அதற்கு எந்தவிதப் பதிலும் கூறமுடியாமலும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும் அவன் செல்வதையே, கண்களில் கண்ணீர் பெருக பார்த்துக்கொண்டே இலவு காத்த கிளியாக் நின்றாள்.