இறந்தவனின் அலைபேசியிலிருந்து வரும் அழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 19,992 
 
 

ஏம்ப்பா மணி ஒன்பதரை ஆச்சு ஒன்பது மணின்னு டிக்கெட்ல போட்டு இருக்கு எப்பத்தான் எடுப்பீங்க? ஏழு மணிக்கு மேல சிட்டிக்குள்ள பஸ்சை விடமாட்டான் தெரியுமில்ல.

அஞ்சு நிமிஷம் சார் ஒருத்தர் வந்துக்கிட்டு இருக்கார்.

பழனி பேருந்து நிலையத்தில் வெளிப்புறமாக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் அமர்ந்திருந்தேன்

ரெண்டு ரோஸ்ட் ஒரு முட்ட புரோட்டா ரெண்டு கலக்கி தள்ளுவண்டி ஹோட்டல் ,பேருந்து ஆட்டோ ஹார்ன் சத்தங்களின் பின்னணியில், பௌர்ணமி ஒளியில் வையாபுரி குளத்தின் நீர் அசைவற்றிருந்தது.

பேருந்தின் முன் வந்து நின்ற பைக்கில் இருந்து இறங்கிய ஒருவர், பின்னால் உட்கார்ந்திருந்தவரிடம் வண்டியைக் கொடுத்து, அவசரமாக பேருந்தில் ஏறியதும், படியில் நின்றிருந்தவர்,போலாம்ப்பா என்றார்.

கீழே நின்றிருந்தவர்கள் ஜன்னல் வழியே கையசைக்க உறுமிக் கொண்டிருந்த பேருந்து நகர்ந்தது.

இருக்கையை தளர்த்தி சாய்ந்து அலைபேசியை உயிர்ப்பித்த போது லோ பேட்டரி 9% என்றது உடனே வீட்டிற்கு போன் செய்து கிளம்பியாச்சு சார்ஜ் இல்ல காலைல பேசுறேன் என்று சொல்லி அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்தேன் உறக்கம் வரும் வரை கேட்பதற்காக இளையராஜா பாடல்களை காலையில்தான் டவுன்லோட் செய்தேன் சார்ஜ் போட்டேனே, ஒருவேளை சுவிட்சை போடவில்லையா?.

நாளை சென்னையில் செய்யவேண்டிய வேலைகள் பற்றி ஏதேதோ யோசித்தபடி இருந்தவன், எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. சட்டைப்பையில் வைத்திருந்த அலைபேசி அதிர்ந்துகொண்டிருந்தது.

பேருந்தில் இருக்கிறேனென்று உணர சிறிது நேரம் ஆனது சுளீரென்று,கன்னத்தில் அறைந்தது போல் உறக்கம் விலகியது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தேனே, எப்படி அழைப்பு வரும் ஒருவேளை தவறுதலாக ஆன் செய்து விட்டேனா

பதட்டத்துடன் அலைபேசியை எடுத்தேன். நீல வர்ணத்தில் ராதா காலிங் என்று மின்னிக்கொண்டுஇருந்தது சில வினாடிகளுக்கு உயிர். உறைந்து இளகியது ராதா இறந்து இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டது இந்த நள்ளிரவில் ராதாவின் எண்ணிலிருந்து யார் அழைக்கிறார்கள்.அலைபேசி உயிரிழந்தது.அப்படியானால் அலைபேசி அணைக்கப்பட்டுத்தான் இருக்கிறது.பிறகு எப்படி அழைப்பு வந்தது?ஏதாவது பிரமையா?.

பேருந்தில் கிட்டத்தட்ட எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க ஒருவர் மட்டும் அலைபேசியை பார்த்தபடி இருந்தார் முழுவதும் மூடப்படாத ஜன்னலின் வழியே பீறிட்டுக் கொண்டிருந்தது குளிர்காற்று.

ராதா என்கிற ராதாகிருஷ்ணன் என் பள்ளித்தோழன் பழனி குரும்பபட்டியில் எங்கள் வீடு இருந்தாலும் அடிவாரத்தில் ராதாவின் டீக்கடையில் தான் பெரும்பாலும் இருப்பேன் ராதா பழனியாண்டவர் கல்லூரியில் பண்பாடு படிக்க நான்,பொருளாதாரம் படித்தேன்.

ஒரு படம் தவற விடாமல் பார்ப்பது டயமண்ட் டீ ஸ்டாலில் ப்ரியா படப் பாடல்களை சலிக்காமல் ரெகார்ட் பிளேயரில் கேட்பது, பாண்டி வீட்டின் முன், சந்திரன் கடை முன் உட்கார்ந்து பாலிடெக்னிக் போகும் பெண்களை பார்ப்பது தீப்பொறி ஆறுமுகம் முதலானவர்களின் அரசியல் கூட்டங்களை நள்ளிரவு வரை பாலசமுத்திரம் ஆயக்குடி அ.கலையம்பத்தூர் கீரனூர் என்று அலைந்து கேட்பது அடிக்கடி சிகரெட், எப்பவாவது மது குடிப்பது, நண்பர்கள் வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய் விட்டால் டெக் கேசட் வாடகைக்கு எடுத்து கூட்டமாக சாமி படம் பார்ப்பது என எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது ஜானகி வரும் வரை.

ஜானகி பக்கத்து வீட்டில் புதிதாக குடிவந்த வாத்தியாரின் இரண்டாவது பெண் பாலிடெக்னிக்கில் சேர்ந்திருந்தாள்.தேர்ந்த சிற்பி ஒருவன் ரசித்து ரசித்துச் செதுக்கிய அம்மன் சிலை போல இருக்கும் ஜானகியை பார்க்கும் யாரும் தடுமாறத்தான் செய்வார்கள் நான் மட்டும் விதிவிலக்கா என்னஅவளிடம் என் காதலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தயங்கிக் கொண்டிருந்தேன்.

லேசாக மழை தூறிக் கொண்டிருந்த ஒரு மாலையில் ராதா மாப்ள உனக்கு ட்ரீட்.எங்க போகலாம்? என்றான்.

எதுக்குடா?.

இந்த மூஞ்சியையும் ஒருத்தி லவ் பண்றாடா இதை படிச்சு பாரு சட்டைப்பையிலிருந்து எடுத்து நீட்டினான்.

பிரியமுள்ள கிருஷ்ணனுக்கு என்று ஆரம்பித்த கடிதம் உங்கள் ஜானகி என்று முடிந்திருந்தது.

ஏமாற்றத்தை பொறாமையை மறைத்துக்கொண்டு எப்படிடா எனக்கே தெரியாம என்றேன்.

அடிக்கடி பார்த்து சிரிப்பா. காலையில திருஆவினன்குடி கோயில்ல பார்த்தேன்.பிரகாரத்தில் இதக் கொடுத்தப்ப என்னாலேயே நம்ப முடியலடா அப்படியே மிதக்குற மாதிரி இருக்கு.

ராதாவின் மீது மிகக் கடுமையான வெறுப்பு பரவியது.

சந்ததோஷம்டா. நான் அவசரமா ஆயக்குடி போறேன். இன்னொரு நாளைக்கு வைச்சுக்கலாம் என்றபடி நகர்ந்தேன்.

இந்தக் காலம் மாதிரி எல்லாம் அப்போது ஆணும் பெண்ணும் பொது இடங்களில் நின்று பேசிவிடமுடியாது அதுவும் பழனி போன்ற ஒரு சிறிய ஊரில் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள்.என்றாலும்,வரதமாநதி அணை,கண்ணாடி பெருமாள் கோயில் வள்ளுவர்,சினி வள்ளுவர் தியேட்டர் என அவர்களின் காதல் வளர்ந்து கொண்டுதான் இருந்தது

உன் பிரண்ட, ஜானகியோடு நேத்து பெரிய ஆவுடையார் கோயிலில் பார்த்தேன் என்று பாண்டி சொன்ன போது என்னுள் சீறின மிருகத்தின் வெறியை துல்லியமாக என்னால் உணர முடிந்தது

இப்போதெல்லாம் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு வெறுப்பு கசிவதை என்னால் தடுக்க முடியவில்லை. பெரிய நாயகி அம்மன் கோவில் பக்கத்துல ஒரு பெண்,கொஞ்சம் வித்தியாசமாக நடந்து போய்க் கொண்டிருந்தது நான் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்க ராதா பின்னால் உட்கார்ந்து இருந்தான் அடிக்கடி பின்பக்கம் கையால் இழுத்து விட்டு கொண்டே நடந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்க்கையில் ஜானகியின் நினைவு வந்தது.அவள் அருகில் சென்று ஏன்,துணி …………….. ச்சா? என்று கேட்டேன் அதிர்ந்து போன அந்தப் பெண்,உலகத்தின் அத்தனை வெறுப்பையும் முகத்தில் தேக்கி உங்க அம்மா கிட்ட போய் கேள்றா நாயே என்று துப்பினாள். ஏண்டா இப்படி பண்ண என்ற ராதா அந்தப் பெண்ணிடம் சாரிங்க என்றான்.

வேறெதும் வேணுமா சார் என்றவனிடம், ரெண்டு ஆம்லேட் என்று சொல்லிவிட்டு பொன்னிற திரவத்தை டம்ளர்களில் ஊற்றிய போது கேட்டேன்.

என்னடா ஆச்சு?.

ஒரே மூச்சில் குடித்து நிமிர்ந்தவன் கண்கள் கலங்கி இருந்தன.

மாப்ள,எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?.

சொல்றா.

என்னனு தெரியலடா லெட்டர்ஸ், கிப்ட் எல்லாத்தையும் திருப்பி கொடுத்திட்டா, இனி என் முகத்திலேயே முழிக்காதீங்க.மீறி தொந்தரவு பண்ணீங்கன்னா,நான் சூசைட் பண்ணிக்குவேங்கறா. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குடா அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நெனச்சு கூட பாக்க முடியல. நீ அவகிட்ட பேசி பாக்குறியா ஏன் இப்படி நடந்துக்கறான்னு கேளுடா என்னால தாங்கமுடியலடா.

பேசினேன்.

அண்ணா! ஒரு பொண்ணுகிட்ட எவ்வளவு கேவலமா பேசினார்ன்னு நீங்கதான சொன்னீங்க நினைச்சுப் பார்க்கவே அருவருப்பா இருக்கு. இந்த மாதிரி ஒருத்தர் கூட எப்படி வாழ முடியும் இனிமே அந்த கேடு கெட்ட ஜென்மத்தோடு முகத்தில் கூட முழிக்க மாட்டேன்ன்னு,ஜானகி சொன்னதை சொல்லாமல் பேசி பாத்தேன்டா என்னன்னு சொல்ல மாட்டேங்கறா. எனக்கென்னவோ வீட்ல வசதியான மாப்பிள்ளையா பார்த்து முடிவு பண்ணி இருப்பாங்கன்னு தோணுது என்றேன்.

என் வாக்கு பலித்து ஜானகி திருமணமாகி பெங்களூருக்கு சென்றதும் ராதாவுக்கு சொந்தத்திலேயே ஒரு பெண்ணுடன் திருமணம் பின்னாட்களில் நடந்தது.

இத்தனை நாட்கள் தலை வலி,காய்ச்சல் என்று கூட படுத்திராத ராதா, ஒரு மாதத்திற்கு முன் அதிகாலை உறக்கத்திலேயே இறந்து விடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை

ஏதோ மோட்டலில் வண்டி நின்றது நிறைய பேர் உறக்கத்தில் இருக்க, என்னோடு சேர்த்து நாலைந்து பேர் இறங்கினார்கள் சூடாக ஒரு டீ குடித்து, ஒரு சிகரெட்டை பற்ற வைத்ததும் கொஞ்சம் படபடப்பு அடங்கின மாதிரி இருந்தது.

பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் அலைபேசி அதிர்ந்தது நடுங்கும் விரல்களால் தடவி ஹலோ என்றேன்.

மாப்ள,எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?.

மறுமுனையில் ராதாவின் குரல் தெளிவாய் கேட்டது.

உயிரின் ஆழம் வரை அதிர வைத்தது அந்தக் குரல்.

ராதா இறந்தது,ராதாவின் முகத்தோடு முகம் வைத்து கதறிக் கொண்டிருந்த ஜமுனாவை போராடிப் பிரித்தது,மின் மயானத்தில் எரித்தது,சண்முக நதிக் கரையில் காரியங்கள் செய்தது எல்லாம் கனவா? இல்லை,இந்த நிமிடம்,இன்னமும் முடியாத கனவொன்றில் விழித்திருக்கிறேனா?

இறங்கி ஏறியவர்களில் இருவர் அலைபேசியில் இருந்தார்கள்.பேருந்து சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.

மாப்ள என்னால ரொம்ப நேரம் பேச முடியாது.அடுத்த வாரம் யமுனாவோட பர்த்டே.அதுக்காக அஞ்சு பவுன் செயின் சாரங்கபாணி கடையில ஆர்டர் பண்ணியிருக்கேன்.ஸர்ப்ரைஸா இருக்கட்டும்னு அவகிட்ட சொல்லல.அந்த ரெசிப்ட்,ஆபீஸ்ல என் ட்ராயர்ல,டைரிக்குள்ள இருக்கு. அதை எடுத்து அவள்ட்ட கொடுத்திர்றா.

அவன் பேசப் பேச,எதிர்பாராத ஒரு கணத்தில், திகிலின் உச்சத்திலிருந்த என்னை,மிகப் பெரிய குற்ற உணர்வொன்று அறைந்து தள்ளி மிதித்துச் சிதைத்தது.

உதடுகளைக் கோணியபடி,அடக்க முடியாத அழுகையோடு ராதா, ராதா,என்று பேச முடியாமல் திணறினேன்.

சாரிடா நான் தான் ஜானகிட்ட போயி உன்னை பத்தி தப்பா சொல்லி,,,

தெரியுன்டா.இங்க வந்ததும்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.இங்க எந்த ரகசியமும் கிடையாது.பரவால்லடா, நாமெல்லாம் சாதாரண மனுஷங்கதான ஆனா….

நீண்டதொரு பெருமுச்சு மறு முனையில் வழிந்து பரவியது.

நீ சொன்னதற்காக இவ்வளவு நாள் பழகிட்டு என்னை நீ சொன்னயான்னு ஒரு வார்த்தை கூடக் கேட்காம அறுத்தெறிஞ்சிட்டுப் போனாளே, அத நினைச்சாத்தான் மனசு ஆற மாட்டேங்குது.

என்னுள் இத்தனை ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த வேதனை,கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் வழிந்து கொண்டிருந்தது.

அப்புறம், அந்த டைரியில ஜானகியோட லெட்டர்ஸ் எல்லாம் இருக்கு அதை எல்லாம் ஜமுனா பார்த்திறக் கூடாது அத எல்லாம் எரிச்சிடு.ஜமுனா ரொம்ப பொஸசிவ் அவளால தாங்க முடியாது.நான் இல்லைங்கறதிலையே அவ ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா.

முடிச்சிட்டேன்.தயவு செய்து,ஒரே ஒரு நிமிஷம் அனுமதிங்க.சந்தோஷம்.நன்றி.

மறுமுனையில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.மனித வாழ்வின் உன்னதமான நம்ப முடியாதவொரு நிகழ்வில் பங்கேற்பாளனாக இருக்கிறேனென்ற உணர்வின் சுழலில் முழ்கிக் கொண்டிருந்தேன்.

மாப்ள, இனிமே நான் பேச முடியாது.நான் சொன்னத மறந்துராத.

ஸாரி ராதா,நான் ஏதோ ஒரு வெறில செஞ்சிட்டேன்.

விடுறா உன் இடத்துல நான் இருந்தாலும் இதைத்தாண்டா செஞ்சிருப்பேன்

வரட்டுமா என்றவன் சிரித்தபடி சொன்னான்.

மாப்ள,,ஜானகி ரொம்ப அழகு. இல்லடா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *