இன்னுமொரு காதல் கதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 17,550 
 
 

‘Maths and girls are the two most complicated things in the world… but…
maths,atleast has some logic.’

சுரேஷ் அனுப்பிய செய்தியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். பெண்கள் என்றால் அவனுக்கும் அப்படித்தான் இருந்தது, சித்ராவைப் பார்க்கும் வரை.

அதிகாலை காய்கறிக் கடையைப் பார்த்திருக்கிறீர்களா? செக்கச் சிவப்பாகத் தக்காளி, பச்சைப் பசேல் வெண்டைக்காய், கலர் கலராக கத்திரிக்காய், ரோஸூம் இளஞ்சிவப்பும் கலந்த கேரட், பச்சைப் பசேல் என கோஸ், தண்ணீர் தெளித்து அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும். அனைத்தையும் பார்க்கப் பார்க்க ஒரு ஃப்ரெஷ்னெஸ் இருக்குமே. அப்படித்தான் சித்ரா.

கல்லூரி முதல் வருடத்தில் ஆறேழு மாதங்கள் அவள் போகும் பஸ்ஸில் போனான். அவள் திரும்பிப் பார்க்கும் வரை அவளைப் பார்த்துக்கொண்டு, ஒவ்வொரு ஸ்டாப்பிலும் ஏறி இறங்கி, கண்டக்டரைச் சதாய்த்து, அவளின் பெண்கள் கல்லூரி ஸ்டாப்பிலேயே இறங்கி, மீண்டும் வேறு பஸ் பிடித்து அவன் கல்லூரிக்குப் போவது என ஏதேதோ ஹீரோயிஸம் பண்ணிப் பார்த்தும் பப்பு வேகவில்லை என்று அடுத்த ரூட் பஸ்ஸைப் பார்த்துப் போய்விட்டான்.

இரண்டாம் வருடத்தின் நான்காம் செமஸ்டரின்போதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது.

”ஹலோ…”

”ஹலோ… சொல்லுங்க…”

”என்னை உங்களுக்குத் தெரியாது. உங்களையும் எனக்குத் தெரியாது.”

”ஹலோ…” என்று போனை ஒருமுறை பார்த்தான். எந்த நம்பர் என்று.

”ஹலோ… டக்குனு சொல்லிடுறேன். என் ஃப்ரெண்டு பேரு சித்ரா… உங்ககிட்ட பேசணுமாம்.”

”ஹ…லோ…. சொல்லுங்க அவங்ககிட்ட குடுங்க.”

”அவ இப்ப இல்ல… நாளைக்கு பஸ் ஸ்டாப்புக்கு வருவீங்களாம். காலைல எட்டு மணிக்கு.”

”வர்றேங்க… உங்க பேரு…”

”எதுக்கு? அதான் அங்க லாக் ஆகிப்போச்சே. போங்க, போய்ப் பேசுங்க.”

அதோடுவிட்டாளா? மறுபடியும் மாலையில் ஒரு போனைப் போட்டு ரீ-கன்ஃபார்ம் வேறு.

காலை எட்டு மணிக்கு இன்னும் எத்தனை நொடிகள் இருக்கின்றன என்று கூட்டிக் கழித்துப் பார்த்தான் என்பதைவிட பார்த்துக்கொண்டே இருந்தான் என்பதே சரி.

எல்லா மாலைகளும் தெருமுக்கில் நண்பர் களுடன்தான் தொடங்கும். சிமென்ட் திண்ணையில் கேரம் போர்டு அனல் பறக்கும். ஆட்டத்துக்கு 50 பைசா. தோற்கும் செட் எழுந்துவிட வேண்டும். ஒவ்வொருத்தனும் ஒருவிதத்தில் சாம்பியன் அங்கே. லேசில் எழுந்திருக்க மாட்டார்கள். எங்கேயோ இருக்கும் சிவப்பை எங்கேயோ அடிப்பது போல் அடித்து ‘கன்’ மாதிரி போடுவார்கள். ‘சூப்பி மாப்பி’ என்ற சத்தம்தான் உற்சாக டானிக். அந்த சூப்பி மாப்பி வேறென்றும் இல்லை சூப்பர் மாப்ளையின் சுருக்.

இன்னொரு பக்கம் சீட்டு அள்ளும். எவ்வளவு நெருங்கிய நண்பனாக இருந்தாலும், சீட்டில் பாயின்ட் என்று வந்துவிட்டால், அவ்வளவுதான். கண்ணில்விளக் கெண்ணெய்விட்டுப் பார்க்கப்படும். கடன் கார்டை முறிக்கும். ஆடும்போது அடுத்தவனுக்கு மூவ்மென்ட் சொல்லக் கூடாது. நரேஷ் குப்தாக்களாக மாறிவிடுவார் கள்.

எதிலும் அன்று குமாரின் மனம் லயிக்கவில்லை. ‘சப்பை’ என்ற சிவாவிடம் ”டீ குடிக்கப் போவமா மாப்ள… ஒரு மேட்டர் சொல்லணும்” என்று தூண்டி லைப் போட்டு டீயையும் போன் மேட்டரையும் சேர்த்து முடித்தான்.

”அப்ப நாளைக்கி காலைல மேட்டரா? பார்ட்டி இருக்குடி இதுக்கு.”

”ஏ… பயலுக யார்கிட்டயும் சொல்லாத சப்ப. என்ன ஏதுன்னு பார்த்துட்டுச் சொல்லுவம். அழுக விட்ருவாய்ங்கடா!”

”விடு மாப்ள… ஆல் த பெஸ்ட். ஆமா… அவங்க அண்ணன் அந்த ஜிம்மை இன்னும் வெச்சிருக்கானா… மூடிட்டானா?”

”என்னடா சொல்ற?”

”சும்மாச் சொன்னேன் மாப்ள. இதுக்கே டரியல் ஆகுறியே… என்னத்தக் கரையேத்தப் போற?”

அன்று மாலை முழுவதும் இதைப்பற்றியே பேசிப் பேசி, சாப்பிடாமல் தூங்கிப்போய், அதிகாலை ஐந்து மணிக்கு ரெடியாகத் தொடங்கி… ஏழே முக்காலுக்குப் போய்விட்டான்.

சுற்றும்முற்றும் ஆளைக் காணோம் என்றவுடன் லேசாகச் சந்தேகம் வந்து ரிசீவ்டு கால் லிஸ்ட்டில் அந்த நம்பரைப் பார்த்தான். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வந்துவிட்டாள். ஒன்றரைக் கிலோ இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி புக்கை இரு கைகளால் அணைத்து வந்தாள். புத்தகத்துக்கு அவள் பாதுகாப்பா, அவளுக்குப் புத்தகம் பாதுகாப்பா என்ற ஐயத்தை எழுப்பியவாறே வந்தவள், நின்றிருந்த பஸ்ஸில் ஏறி ஜன்னலுக்கு முன் அமர்ந்துகொண்டாள். இவனுக்கு பேஸ்மென்ட் ஆடத் தொடங்கியது. சைகையில் இவனை பஸ்ஸில் ஏறுமாறு அழைத்தாள்.

ஒரு பெண் பார்க்கும் வரை என்னவெல்லாம் ஆக்ஷன்கள் அரங்கேறுகின்றன. அதே பெண் சின்ன ரியாக்ஷன் தந்துவிட்டால் அஸ்திவாரமே ஆடத் தொடங்கிவிடுகிறது. அவனுக்கும் அப்படித்தான் இருந்தது. தட்டுத் தடுமாறி, இரண்டாம் படி தடுக்கி, சமாளித்து ஒரு வழியாக அவளுக்கு நேராக அமர்ந்தான்.அவள் கண்டுகொள்ளவே இல்லை. கண்டக்டரிடம் ஐந்து ஸ்டாப்பிங்குக்கு அப்புறம் வரும் தெற்கு வாசலுக்கு ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டாள். பஸ்ஸில் கூட்டம் இல்லை. இவன் பாஸ் எடுத்து வர மறந்திருந் தான் பதற்றத்தில். காசும் இல்லை. முதல் நாளே அவளிடம் 1.50 கடன் வாங்கினான்.

ஸ்டாப்பில் இறங்கி, அங்கேயே நின்று…

”அப்புறம்?” என்றான்.

”என்ன அப்புறம்?” என்றாள்.

”இல்ல போன் வந்துச்சு…”

”என்ன போன்?”

”உங்க ஃப்ரெண்டு போன் பண்ணாங்க.”

”என்னோட ஃப்ரெண்டா..? அப்படி யாரும் பண்ணி இருக்க மாட்டாங்களே. என்ன உளர்றீங்க?”

இது என்னடா வம்பாப்போச்சு என்று அத்தனை சந்தோஷமும் அமுங்கிக்கொண்டு இருந்தது ஒருபுறம்.

”ஏங்க… சிம்ப்பிளா எதுக்கு பஸ்ல ஏறச் சொன்னேன்னு கேட்க வேண்டியதுதானே?”

லேசாக மூச்சும் பலமாக நம்பிக்கையும் வந்தது.

”இல்ல… அந்த போன். சரி… எதுக்கு ஏறச் சொன்னீங்க?” என்ற வார்த்தைகளில் அந்த பஸ் ஸ்டாப்பில் தொடங்கிய பயணம் இனிதே தொடர்ந்து வருகிறது… இதோ இன்று ‘அயன்’ பார்த்தது வரை.

நண்டு ஜெகனின் ஒவ்வொரு டயாலாக்குக்கும் ”உங்க அண்ணனும்தான் இருக்கானே” என்று அவளை உசுப்பேத்திவிட்டு இன்டெர்வலில் பாப்கார்னும் ஐஸ்கிரீமும் வாங்கிக்கொடுத்து, படம் முடிய ஒரு ரீல் இருக்கும்போதே தியேட்டரைவிட்டுக் கிளம்பி, யார் கண்ணிலும் படாமல் செவ்வனே அவளை வீடேத்தி விட்டு வந்து அவளின் குறுஞ்செய்திக்குக் காத்திருக் கிறான் குமார்.

”என்ன எருமை, இனிமே படமே பார்க்க வர மாட்டேன்.”

”ஒய், வீட்ல கண்டுபிடிச்சுட்டாங்களா?”

”இல்ல, ஆனா நீ படமா பார்த்தே…”

சிரித்துக்கொண்டே அழைத்தான். கட் செய்துவிட்டு மெசேஜ் பண்ணுடா எருமை என்றாள். ‘மறுபடியும் அயன் பார்க்க வேண்டும்’ என்று அனுப்பினான். ‘யார் கூடவாவது போ’ என்று பதில் வந்தது. இவனும் ‘சரி’ என்று அனுப்பினான். கால் வந்துவிட்டது. பத்து கோப வார்த்தைகளுக்குப் பின் சமாதானப்படுத்தி போனைவைக்க மனமில்லாமல் வைத்தான்.

மாரியம்மன் தெப்பக்குளம். ஓரிரண்டு மாதங்கள் மட்டுமே தண்ணீர் இருக்கும். மற்ற பொழுதெல்லாம் கிரிக்கெட்மைதானம் தான் அது. 12 வாசல்கள். ஒவ்வொரு வாசலிலும் 24 படிகள். பெரிய குளம். நடுவில் அருமையான,அமைதியான மைய மண்டபம். படிகளில் இறங்கி மைய மண்டபம் அடைந்து, அந்தக் குறுகலான படிகளில் ஏறி சித்ரா வரும் வரை அங்கு கிரிக்கெட் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் குமார். அதுதான் அவர்கள் சந்தித்துக்கொள்ளும் இடம்.

அவ்வளவு வெயிலிலும் அந்த இடம் குளுமையாக இருக்கும். யாராவது ஒருவன் இடைவிடாமல் சிரித்துக்கொண்டே இருப்பான். லேசாக

கஞ்சா வாடை வரும். ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ட 10-வதோ 12-வதோ படிக்கும் சிறுமி(?) காலேஜ் பையனுடன் பேசுவதே கேட்காமல் அல்லது பேசவே பேசாமல் அமர்ந்திருப்பாள். அவ்வப்போது அந்தப் பெண்விலகி அவனை ஓர் அடி அடித்து, மீண்டும் பழைய பொசிஷனுக் குத் திரும்புவாள்… ஹூம்.

அதோ… இவன் தேர் வருகிறது. ஐயையோ! இன்று பார்த்தா அந்தப் படிகள் வழியாக வர வேண்டும் இவள்… பெரிய செட்டுப் பசங்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். இவள் மைய மண்டபம் அடையும் வரை பந்தே போடாமல் இவள் நடப்பதையே பார்ப்பார்கள்.

அவளிடம் சொல்லியும் தொலைக்க முடியாது. இப்படித்தான் ஒரு முறை ஏதோ சொல்லி, ”அப்ப நீயும் அப்படித்தான் மத்த பிள்ளைகளைப் பார்ப்பியா?” எனச் சட்டை யைப் பிடித்துவிட்டாள்.

”எப்பப்பா வந்த?”

”ம்…சொல்லு. என்ன திடீர்னு வரச் சொன்ன?”

”சொல்வேன்ல… உனக்கு வேலை இருந்தா போ. ஸாரி… சாரோட டயத்த வேஸ்ட் பண்ணதுக்கு.” ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிந்தது. மௌனமாக இருப்பதே நல்லது.

”ஸாரிடா, வீட்ல நம்ம மேட்டர் தெரிஞ் சுடுச்சு.”

”ம்.. தெரியுது. என்ன ஆச்சு இப்ப?”

”என்ன என்ன ஆச்சு? அசால்ட்டா கேட்குற? பயமா இருக்கு.”

”விடு, நான் பேசுறேன் உங்க வீட்ல.”

”அவ்வளவுதான். என்னைக் கொலை பண்ணிருவாங்க.”

”என்ன பண்ணச் சொல்ற. என்னிக்கினாலும் சொல்லணும் இல்ல.”

”தெரியலயே. பயமா இருக்கு. அப்பா இன்னிக்குத்தான் வர்றாரு ஊர்ல இருந்து.”

”விடு. பயப்படாத… பேசு. ஏதாவதுன்னா போன் பண்ணு. வர்றேன்.”

அவள் கைகளைப் பற்றினான். அவளுக்கும் அது தேவையாக இருந்தது. நம்பிக்கை வந்தது.

ஒரு வாரமாக போனும் வரவில்லை. அவள் நம்பரும் ஸ்விட்ச்டு ஆஃப். அவளின் அப்பனுக்கு நன்றி சொல்லிக்கொண்டான் குமார். இந்த ஒரு வாரப் பிரிவில் அவளின்றி அவனில்லை என்பதைப் புரியவைத்த காரணத்துக்காக. சப்பையை அழைத்துக்கொண்டு அவர்களின் வீட்டுக்குப் போய்விட்டான். ”என்ன தம்பி இந்தப் பக்கம்?”

”இல்ல, உங்களத்தான் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன் சார்.”

”இங்க பாருப்பா… நீ எதுக்கு வந்திருக்க, என்ன வெவரம்னு எல்லாம் தெரியும். நாலு எழுத்து படிச்சுப் புட்டா எல்லாம் தலகீழாத் தெரியுமாப்பா உங்களுக்கு. ஏதோ உங்க அப்பா மூஞ்சிக்காகப் பேசிக்கிட்டு இருக் கேன். புரியும்னு நினைக்கிறேன்… கிளம்புப்பா.”

”சித்ரா எங்க?”

”டேய்!” என சவுண்டுவிட்ட அவளது அண்ணனை (ஜிம் எல்லாம் இல்லை. தொஸ்க் என்று இருப்பான்) அவரே கை அமர்த்தினார்.

”சித்ரா ஊருக்குப் போயிருச்சுப்பா.”

”நல்லவேளையாப் போச்சுங்க. அதுகிட்ட எப்பிடிச் சொல்றதுன்னே தெரியல. எங்க வீட்ல சம்மதிக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. என்ன செய்றதுன்னு தெரியாம இருந்தேன். நீங்க கொஞ்சம் புத்தி சொல்லி வேற எடத்துல டக்குபுக்குன்னு கட்டிவெச்சுட்டீங் கன்னா நான் கொஞ்சம் தைரியமா இருப்பேன்.”

”திகட்டிப் போச்சோ எம் மவ காதல். அரவேக்காட் டுப் பயலுக விசயங்குறது சரியாத்தான் இருக்கு. எம் மகள எங்க கட்டிக்கொடுக்கணும்னு எங்களுக்குத் தெரியும். இனி, இந்த பக்கம் வர வேணாம். அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது.”

”வர்றேன் சார்… இனி நான் எதுக்கு இங்க வரப் போறேன்.”

”என்ன மாப்ள… ஆளத் தூக்குவோம் வச்சுருவோம்னு வந்த..?”

” ……”

”என்னடா பதிலே சொல்ல மாட்டீங்கற?”

மறுநாள் காலை வழக்கம் போல் சித்ரா காலேஜுக் குச் சென்றாள். மாலை வழக்கத்துக்கு மாறாக நேரே குமாரின் வீட்டுக்குப் போனாள். அவ்வளவுதான்…

சரியாக அடுத்த வருடம் அவர்களின் குழந்தைக்குப் பெயரை ”வர்ஷினி” என வைக்கச்சொல்லி அப்பா விடம் குமார் சொன்னான்.

”எதுக்கு அந்தப் பேரைச் சொல்றான்னு தெரியுதா மருமகளே. எம் பையனுக்குச் சங்கீதம்னா அவ்வளவு பிரியம்.”

”ஆமா மாமா, தெரியும்” என்று அவனைப்பார்த்துச் சிரித்தாள் சித்ரா.

அவருக்குத் தெரியாது, போன் செய்த தோழியின் பெயர் ‘வர்ஷினி’ என்று!

– 13-05-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *