கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 2,014 
 
 

சிவன் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்த இந்திராவை அவள் பெயர் சொல்லி அழைத்தது ஒரு குரல்! “யார் கூப்பிட்டது” என்று திரும்பி பார்த்துவிட்டு, தொலைதூரத்து சிறுவர்களில் யாரோ என்று அனுமானித்து கோயிலுக்குள் சென்றுவிட்டாள் இந்திரா.

இந்திரா – 16/17 வயது கிராமத்தின் பேரழகி. வெள்ளை தாவணியில் உலாவும் வெண்ணை வார்ப்பு. வெள்ளை வெளேர் தேவதை. மின்சாரம் இல்லா நல்லசேலம் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கல்யாணராமனின் உறவுப்பெண்ணாக வந்த இந்திரா, அந்தக் கிராமத்தின் இளைஞர்க்கு 1000 வாட் காதல் மின்சாரம் பாய்ச்சிய பாலக்காட்டு பம்பிளிமாஸ்.

தன் மாமா வீட்டின் மொட்டைமாடியில் உலாவிக்கொண்டே, தான் தவறி விட்டுவிட்ட பள்ளி இறுதித் தேர்வை எப்படியாவது முடிக்க படித்துக்கொண்டிருந்த அந்தப் பெண் எங்கேயிருந்து அந்தக் குக்கிராமத்திற்கு வந்தாள் என்பது புரியாதபுதிர் அந்தக் கிராமத்து மக்கட்கு.

ஓவியம்: தமிழ்

தலைமை ஆசிரியரின் வீட்டிற்கு எதிரே மாடிவீட்டு மாடி அறை. எதிர்வீட்டு ஜன்னலில் இருந்து அவள் அழகை கொள்ளை அடித்தவர் புதிதாக உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த ஓவிய ஆசிரியர் அரவிந்தராஜ். மாடியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்துக் கொண்டதை தெருவில் நடக்கும் மனிதர்கள் கண்டுகொள்ள முடியவில்லை.

பள்ளியில் அரையாண்டுத்தேர்வு முடிந்து விடுமுறைக்காக முசிறி அருகே உள்ள மோகனூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்குப் புறப்பட்டாள் இந்திரா. அந்தக்காலத்தில் (1970களில்) கிராமங்களில் டெலிபோன் வசதி கிடையாது. பஸ் போக்குவரத்தே சொற்பம். நேற்றும் இன்றும் எங்கோ யாரோடோ ஊர் சுற்றிவிட்டு நாளை மோகனூர் சென்று, “இன்று காலைதான் நல்ல சேலத்திலிருந்து வருகிறேன் பாட்டி!” என்று இந்திரா சொன்னால், வயதானப்பாட்டி பேத்தியை நம்பித்தானே ஆக வேண்டும்! அதுவும் கேரளத்துப் பேத்தி காணக்கிடைக்காத தங்கம்.

கிராமம் என்பதால் மாமா வீட்டு வாசலில் பஸ் நிற்கும். மாமா மாமியிடம் சொல்லிக்கொண்டு விட்டு மோகனூர் செல்ல முதலில் துறையூர் செல்லும் பஸ் வந்ததால் “மாமா! போயிட்டு வரேன்! என்று தெருவிலிருந்து இந்திரா உரக்கக் கத்தியது எதிர்வீட்டு மாடிவரை கேட்டது. அடுத்த பஸ்ஸில் ஏறி அரவிந்தராஜும் துறையூர் அடைந்தார். துறையூரில் இருவரும் அங்குமிங்கும் சுற்றிவிட்டு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டே காதலையும் பரிமாறிக் கொண்டனர்.

இரவு 10 மணிக்கு மோகனூருக்கு கடைசி பஸ் என்பதால் அதற்குள் இருவரும் பாரதி டாக்கீஸில் சினிமா பார்க்க முடிவு செய்து, டிக்கட் வாங்கி உள்ளே நுழைந்தனர். அரவிந்தராஜுடன் அதே பள்ளியில் வேலை பார்த்த அட்டெண்டர் வீரப்பன் தியேட்டரில் இருவரையும் பார்த்துவிட்டு திடுக்கிட்டார்.

படம் போனால் போகிறது, பணமும் போனால் போகிறது. ஹெட்மாஸ்டரின் மானம் போகக்கூடாது என்று ஒரு டாக்ஸி பிடித்து, நல்லசேலம் சென்று கல்யாணராமன் தம்பதியிடம் கமுக்கமாக விபரத்தைச் சொல்லி, அதே டாக்ஸியில் மூவரும் துறையூர் வந்து, பாரதி டாக்கீஸில் படம் பார்த்துக்கொண்டிருந்த இந்திராவை மீட்டனர்.

கிராமம் என்பதால் கலவரம் ஏற்படும் என்று மறுநாளில் இருந்து அரவிந்தராஜ் பள்ளிக்கு வரவில்லை செய்தி அறிந்து, மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, அரவிந்தராஜை எங்கோ டிரான்ஸ்பர் செய்தார்.

கார் ஸ்பீட் பேக்கரில் ஏறி இறங்கியபோது, தடம்புரண்டு உருண்டோடிய கடந்த கால நினைவுகளில் இருந்து மீண்டார் அரவிந்தராஜ்!

பிரபஞ்சப்பெருவெளியில் அவரும் ஒரு துளியிலும் சிறுத்துளி என்பதால் வெகு நாட்கள் கழித்து பெற்றோர் நச்சரிப்பு தாங்காமல் தட்டிக்கழித்து தட்டிக்கழித்து, தவிர்க்கமுடியாமல் யாரையோ பின்னாளில் திருமணம் செய்துகொண்டு, மனைவி மஞ்சள் காமாலை நோயில் மரணம் அடைந்து, ஒரே மகள் திவ்யாவின் காதல் திருமணத்திற்கு பச்சை விளக்கு காட்டுவதா… வேண்டாமா… என்ற பிரச்னையில், இதுவரை தன் கடந்த கால கலைந்த காதலை யாரிடமும் சொல்லாது வாழ்ந்த அரவிந்தராஜ் மகளுடன் இப்பொழுது காரில் பயணித்துக்கொண்டிருந்தார் கே கே நகர் நோக்கி தரமணியிலிருந்து.

மகள், வரன் இருவரும் ஒரே ஐ.டி. அலுவலகத்தில் என்ஜினீயர்கள். கைக்கு அடங்கா சம்பளம். ஒரே துறையில் வேலை என்பதால் அன்னியோன்னியம் அதிகமாகி காதலாகி கசிந்து கல்யாணத்திற்கு ஏங்கியது. மாப்பிள்ளைக்கு பெற்றோர் கிடையாது. இருவரும் ஆக்ஸிடெண்டில் அகால மரணம் அடைந்துவிட்டதால் மாமியார், மாமனார் தொல்லை இல்லை. ஒரே பையன் நம் காதல்தான் கலாட்டாவில் முடிந்தது. மகளின் காதலாவது கல்யாணத்தில் முடியுமா என்ற கேள்வி பயணம் முழுவதும் அவரை குடைந்துகொண்டே இருந்தது.

கே கே நகரில் மாப்பிள்ளை பிளாட்டை அடைந்தபோது எதிர்கால மருமகன் வாயிலுக்கு வந்து அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான். ஆள் ஹாண்ட்சம். பிரிட்ஜை திறந்து மூன்று கிளாஸ்களில் ஆரஞ்சு ஜூஸ் நிரப்பிக்கொண்டிருந்தான். டைனிங் டேபிளில் தயாராக மைசூர்பாக், காராச்சேவு, ஒரு எவர்சில்வர் தட்டில்.

அறையில் நிலவிய மகிழ்ச்சி மெளனத்தில் தற்செயலாக சுவரில் மாட்டப்பட்டிருந்த மாப்பிள்ளையின் பெற்றோர் படத்தைப் பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து நின்றார் அரவிந்தராஜ்.

மாலை போடப்பட்டிருந்த போட்டோவிலிருந்து அவரைப்பார்த்து வசீகரமாக புன்னகைத்தாள் இந்திரா!

– 30 ஜனவரி 2024, மங்கையர் மலர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *