இணைகோடுகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 18,345 
 
 

விநாயகா நகைக்கடையில் சத்தியமூர்த்தி நுழையும்போது “வாங்க சார் வாங்க ! ஒங்களைப் பார்த்த பிறகுதான், எனக்கு ஒண்ணாந்தேதியே ஞாபகத்துக்கு வருது சார்‘’ என்று நகைக்கடையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றும் பையன் வரவேற்றான்.

“ஆமப்பா சம்பளம் வாங்கியவுடன் நகைச்சீட்டுக்கு பணத்தைக் கட்டணும் இல்லையின்னா, எனக்கு மறந்து விடுதுப்பா. “ என்று காரணத்தை சத்தியமூர்த்தி விளக்கிக் கூறினான்.

சத்தியமூர்த்தியின் கண்கள் நகைக்கடையில் பணியாற்றும் கீதாவைத் தேடின. அவள் அப்போதுதான் கடையினுள் நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் கண்கள் மலர்ந்தன. கீதாவும் அவனைப் பார்த்தவுடன் சிறுபுன்னகை பூத்தாள். கீதா அவளது இருக்கையில் சென்று அமர்ந்தவுடன், சத்தியம் அவள் அருகே சென்று “கீதா நான் வழக்கம்போல் நீ கடையை விட்டு புறப்படும்போது வர்ரேன். எனக்கு இப்ப ஸ்கூலுக்கு நேரமாயிட்டது’’ என்று கூறிவிட்டு வேகமாகச் சென்று விட்டான். அவன் மதுரை மீனாக்ஷி உயர்நிலைப்பள்ளியில் இளமையான தமிழ்ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறான்.

அவன் சென்றதையே பார்த்துக்கொண்டிருந்த கீதா, அவன் இன்னும் ஏதேனும் தன்னிடம் பேச மாட்டானா.. என ஒருவித ஏக்கத்துடன், அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியும் ஒரு ஐந்து நிமிடமாவது கீதாவிடம் பேசிவிட்டு வந்திருக்கலாம் நினைத்தான். சத்தியமூர்த்தி கீதாவிடம் விடை பெற்று நகைக்கடையை விட்டு வந்து விட்டாலும், அவனது மனம் அவனை அறியாமல் கீதாவை முதன்முதலில் சந்தித்தது பேசியது எல்லாம் அவனது கண் முன்னால் நினைவலைகளாகச் சுழன்றன.

விநாயகா நகைக்கடையில் கீதா வரவேற்பாளினியாகப் பணிபுரிந்தாலும், கடையில் கூட்டம் அதிகம் வந்துவிட்டால், விற்பனைப் பிரிவில் சென்று நின்று கொள்வாள். சில நேரங்களில் கடையின் வரவு செலவு கணக்குகளைக் கூடப் பார்த்துக் கொள்வாள். அவள் அந்தக் கடையில் ஒரு ‘ஆல் ரவுண்டர்’ என்றால் மிகையாகாது. கீதா அவனை விரும்பி வேண்டியதால்தான் சத்தியமூர்த்தி நகைச்சீட்டு திட்டத்தில் சேர்ந்திருந்தான்.

அன்று அட்சயதிதி. விநாயகா நகைக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு கீதா புன்முறுவலுடன் அனைவரையும் கைகூப்பி வணங்கி வரவேற்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய தோற்றமும் வரவேற்பையும் பார்த்தவர்களால் வேறு கடைக்குச் செல்வதற்கு தோன்றாது. சத்தியமூர்த்தி தன்னோட தங்கைக்கு வளையல் வாங்குவதற்கு விநாயகா நகைக்கடை வாசல் முன் நின்றுகொண்டு கூட்டத்தைப் பார்த்தவன் ’பிறகு வரலாமா அல்லது வேறு நகைக்கடைக்குப் போகலாமா’ என்று நினைத்துக் கொண்டிருந்தவனைக் கவனித்துவிட்ட கீதா, புன்முறுவல் பூத்த முகத்துடன் “வாங்க சார்!’’ என்று அவனை அன்பாக வரவேற்றாள். தேனினும் இனிய குரலுக்குரியவளைப் பார்த்தவன் மயங்கி நின்றான். நல்ல சிவப்பு நிறம். ஒல்லியான உடம்பு. அவள் இடையினைத் தாண்டி தவழும் நீண்ட கருங்கூந்தல். சாந்தமான வசீகரமான முகம். உதட்டில் தவழும் புன்னகையுடன் காணப்பட்டாள்.

“கடையில் கூட்டம் அதிகம் இருக்கும்போல் தெரிகிறது நான் பிறகு வர்ரேன்” என்று சத்தியமூர்த்தி கூறினான்.

“சார் நீங்க கூட்டத்தைப் பற்றியெல்லாம் ஒண்ணும் யோசிக்காதீங்க. நான் வந்து உங்களுக்குத் தேவையான ஜ்வல்சை எடுத்துக் காட்டுறேன் வந்து பாருங்க! உங்களுக்கு வளையல்தான் வேணும் வாங்க சார்” என்று அவனை வளையல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றவள், “சார் வளையல் நெறைய மாடல்கள் இருக்கு. சின்னவங்களுக்கா பெரியவங்களுக்கா இல்ல வளையல் ஒங்க ஒய்ப்க்கா” எனச் சிரித்துக்கொண்டே கீதா கேட்டாள்.

“ஏன் வளையல் வாங்கினா நான் ஒய்புக்குதான் வாங்கணுமா வேற யாருக்கும் வாங்கக்கூடாதா“ என்று அவன் சற்று கோபத்துடனே அவளைப் பார்த்துக் கேட்டு விட்டான்.

“இல்லை சார் ! பெரும்பாலும் அட்சயதிதிக்கு வீட்டில் ஒய்ப் கொடுக்கும் தொந்தரவில்தான், உங்களைப் போன்றவங்க நகைக் கடைக்கு வருவாங்க என்று நினைத்துக் கொண்டுதான் அப்படிக் கேட்டேன். ஸாரி.. நீங்க தப்பா நினைத்துக் கொள்ளாதீங்க.” என்று அவள் தலையை அழகாக சாய்த்து சாய்த்து பேசியவிதம் அவனுக்கு மிகவும் பிடித்தது.

“என்னோட தங்கைக்குத்தான் வளையல் வாங்க வந்தேன். கீதா உங்ககிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன் நான் பேசியதெல்லாம் தமாசுக்குத்தான். அதையெல்லாம் தப்பா எடுத்துக்கொள்ளாதீங்க. எனக்கு இன்னும் மாரேஜ் ஆகல கீதா” என்று கீதாவை சமாதானம் செய்வதுபோல் சத்தியமூர்த்தி கூறினான்.

“அதெல்லாம் நான் ஒண்ணும் உங்களைப்பற்றி தப்பா நினைக்கலே. நீங்களும் சிரித்துக்கொண்டேதானே பேசுனீங்க, கோபத்துடன் நீங்க என்னிடம் எதுவும் பேச வில்லையே.” என்று கோபப்படாமல் அமைதியாக புன்னகை மாறாமல் பேசினாள்.. இப்படித்தான் அவர்களுக்குள் பழக்கம் ஆரம்பமாகியது.

அதற்குப்பின் சத்தியமூர்த்தி விநாயகா நகைக்கடைக்கு அடிக்கடி வரத் தொடங்கினான். சில நேரங்களில் தன்னோட நண்பர்களுடன் வந்து கீதாவை அறிமுகப்படுத்தி அவர்களுக்குத் தேவையான நகைகளை வாங்கும்படி செய்தான். கீதாவும் சத்தியமூர்த்தியும் அடிக்கடி சந்தித்து பேசியது நாளடைவில் இருவரும் ஒருவருக்கொருவர் ஒருமையில் அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு வந்து விட்டார்கள். அன்று கிருஷ்ணஜெயந்தி பள்ளிகூடம் விடுமுறை என்பதால் சத்தியத்துக்கு பொழுதே போகவில்லை. எனவே கீதாவைப் பார்த்துவிட்டு வருவோம் என்று, நினைத்து விநாயகா நகைக்கடைக்குச் சென்றான். கீதா அவள் இருக்கையில் தனிமையில் இருந்தாள். கடைக்குள் சத்தியமூர்த்தியைப் பார்த்தவுடன் “சத்தியம் இப்பதான் உன்னைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீயே வந்து விட்டாய்’’ என்று முகம் மலர கண்கள் விரிய வரவேற்றாள்.

“கீதா, எனக்கு பொழுதே போகவில்லை.. போர் அடித்தது. உன்னோட நினைவு வந்தது அதான் உன் முன்னே வந்து இப்ப நிற்கிறேன் போதுமா “ என்றான்.

“என்ன உனக்கு பொழுதே போகவில்லையா?எனக்கு பொழுதே போதவில்லை என்றவள், சத்தியம் , நீ நாவல் கதை கவிதை போன்ற புத்தகமெல்லாம் படிக்க மாட்டாயா.” கீதா இயல்பாகவே இலக்கியத்தில் ஈடுபாடு உள்ளவள். சிவசங்கரி, ரமணிச்சந்திரன் சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையெல்லாம் அவள் விரும்பிப் படிப்பாள்.

“எனக்கு அதெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லே கீதா!‘’

“என்ன நீ தமிழ்வாத்தியாராக இருந்துகொண்டு புத்தகமெல்லாம் படிப்பதற்குப் பிடிக்கவில்லையா. எனக்கு ஆச்சரியமாக இருக்கு. சத்தியம்! எனக்கெல்லாம் கொஞ்ச நேரம் கிடைத்தாலும், ஏதாவது கதை புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுவேன். சரி நீயும் கதை கவிதை இலக்கியம்ன்னு படிக்க ஆரம்பி, உனக்கும் அதில் இன்ட்ரெஸ்ட் வந்து விட்டால் நீயும் என்னைபோல் புத்தகப்புழுவாக மாறி விடுவாய்.” என்றாள்.

கீதாவின் வற்புறுத்தலுக்காக சத்தியமூர்த்தியும் நாளடைவில் நாவல், கதை புத்தகங்கள் இலக்கியம் என படிக்க ஆரம்பித்தான். நூல்நிலையம் சென்று படிக்கவும் ஆரம்பித்தான். சில நேரங்களில் கீதாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது தான் படித்த கதை கவிதைகளைப் பற்றி விவரித்துக் கூறுவான்; அப்போதெல்லாம் அவள் “என்ன சத்தியம் பரவாயில்லையே நீயும் என்னைப்போல் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டாயே! ‘’என்றாள்

“ஆமா, கீதா என்னிடம் நீ இலக்கியம் கவிதைகள் பற்றி பேசும்போது நான் “ஞே” ன்னு ஒண்ணும் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கக்கூடாது பார்“ என்றான்.

“சரி! எப்படியோ உனக்கும் புத்தகமெல்லாம் படிப்பதற்கு இண்டரஸ்ட் வந்திட்டது. எனக்கு ஹாப்பியா இருக்கு. அதனாலே நமக்கு பேசுவதற்கு இனிமேல் நெறையா விஷயங்கள் உன்மூலம் எனக்கு கிடைக்கும்.”

“கீதா நாம ரெண்டு பேரும் இப்படி பேசுவதை பழகுவதைப் பார்த்து அக்கம்பக்கம் உள்ளவங்க யாரும் உன்னைபற்றி ஒரு மாதிரியாகப் பேசலயே, இல்ல பேசுவாங்கன்னு நீ எதுவும் எதிர்பார்க்கலயே“

“சத்தியம் நம்மைப்பற்றி மத்தவங்க என்ன பேசுறாங்க.. நினைக்கிறாங்க என்பது பற்றியெல்லாம் நான் நினைப்பதே இல்லை கவலைப்படுவதுவும் இல்ல அப்படி நாம நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் நமக்கு ஒரு வேலையும் ஓடாது“ என்று வெளிப்படையாகவே கூறினாள்.

சத்தியம் கீதாவிடமிருந்து வேறு பதிலை, கீதா தன்னை விரும்புவதைப்பற்றி தன்னிடம் மகிழ்ந்து கூறுவாள் என்று அவன் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தான். அவன் தன்னோட ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், “கீதா நம்மைப்பற்றி நம் வாழ்வைப் பற்றி ஒருநாள் இருவரும் கலந்து பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.. இப்ப வேண்டாம் நான் அவசரமாக வீட்டிற்குப் போக வேண்டும்” என்று தன் உள்ளத்தில் உள்ளதை கோடிட்டுக் காட்டினான்..

‘சத்தியமும் இன்றைய இளைஞனைப்போல் சராசரி மனிதனாகத்தான் இருக்கிறான். அவனை இப்படியே காதல் கீதல்ன்னு வளரவிட்டு விடக்கூடாது’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டு “சத்தியம் நாம் வர்ற சண்டே ஈவ்னிங் த்ரீ ஓ கிளாக் ராஜாஜி பூங்காவில் வழக்கம்போல் சந்தித்து பேசுவோம்“ என்று கூறினாள்.

‘தான் அவளிடம் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கீதா நன்கு புரிந்து கொண்டுதான் தன்னை ராஜாஜி பூங்காவுக்கு வரச் சொல்கிறாள்’ என்பதை நினைத்து வருவதாக மகிழ்ந்து சத்தியமூர்த்தி தலையாட்டினான்.

இருவரும் ராஜாஜி பூங்காவில் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தார்கள். முதலில் கீதாதான் பேச்சை தொடங்கினாள். “சத்தியம் நேற்று உன்னோட பேச்சு எனக்கு சரியாய்ப்படலே.” என்று கூறியதும் சத்தியத்தின் முகமே வாடி விட்டது.

“கீதா நீ என்ன சொல்ல வர்றே “ என்றான் பயத்துடன்.

“ஆமா சத்தியம் நான் பேசாமல் இருந்தால், நீ எனக்குத் தாலி கட்டி குடும்பமே நடத்தி விடுவாய் போலிருக்கு”

“ஏன் அப்படி நடந்தாத்தான் என்ன தப்பு கீதா“ என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகவே தெரிவித்தான்.

‘’சத்தியம் நீ பேசுகிற மாதிரி எனக்கு நினைக்கக்கூட முடியாது. எனக்கு வயதான அப்பா அம்மா இருக்காங்க தம்பி தங்கைகள் இருக்காங்க நான்தான் அவங்களை கடைசி வரை காப்பாற்றவேணும்ன்னு நிலையில் அவங்க இருக்காங்க. குடும்பத்தில் ஒரு மூத்த மகன் இருந்து குடும்பத்தை வயதான அப்பாவை அம்மா கவனிப்பதுபோல் நான் அவங்களைக் கவனிக்கணும். உனக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியவளை அவன் இடைமறித்து

“இந்தக் காலத்தில் பெற்ற மகன்களே அப்பா அம்மாவை காப்பாற்றுவது கடமை என்று நினைக்காமல் கவனிக்காமல் சுயநலமாக வாழும்போது, நீ அப்பா அம்மா குடும்பத்தையும் காப்பாற்றவேணும்ன்னு நினைக்கும் உன்னோட உயர்ந்த உள்ளத்தையும் தியாகத்தையும் நான் வரவேற்கிறேன் கீதா’’.

“நிறுத்து சத்தியம்! குடும்பத்தை மகன்கள் கவனித்தால் அவர்கள் கடமை, மகள்கள் கவனித்தால் தியாகமா? மகன்கள் இல்லாத வீட்டில் குடும்பத்தை மகள் கவனிப்பதும் கடமைதான் என்பதை நீ புரிந்து கொள்”

“கீதா உன் இஷ்டப்படியே இருந்து கொள். நான் ஒண்ணும் சொல்லவில்லை. உன் சம்பளம் முழுவதும் உன் குடும்பத்திற்கே இப்ப செலவழித்து கவனிப்பதுபோல் நல்லாக் கவனி. அதுபற்றி நான் உன்னை ஒண்ணும் கேட்க மாட்டேன். முடிந்தால் உன் குடும்பத்தையும் நீ விரும்பினால், நானே கவனிக்கவும் தயராகவும் இருக்கேன்.“ என்று கூறினான்.

“சத்தியம் நீ எதையும் பிராடிக்கலா திங் பண்ணு. எதையும் உணர்ச்சி மிகுதி யில் பேசுவது எளிது. நடைமுறையில் வரும்போதுதான் சிக்கல்கள் வரும். அதை முதலில் நீ புரிந்து கொள். சிக்கல்கள் வரும்போது இப்படி நாம் மனம் திறந்து பேசுவதுகூட குறைந்து விடும். ஏன் சிரித்துப் பேசுவோமா என்பதே சந்தேகம்தான். ஏன் உணர்ச்சி மிகுதியில் நீ பேசிய வார்த்தைகளேகூட மறந்து விடும்“

“கீதா நீ என்னை ஏமாற்றி விட்டாய்…. “என்று கூற வந்தவனை கீதா இடைமறித்து “சத்தியம் நான் உன்னை விரும்புவதாக என்றைக்காவது உன்னிடம் கூறியிருக்கிறேனா? ஏன் அதை நான் உன்னிடம் கோடிட்டுக்கூட காட்டியிருக்கிறேனா அப்படியிருக்கும்போது உன்னை நான் ஏமாற்றி விட்டேன்னு எப்படி கூறுகிறாய். உனக்கு சாதகமாக எதெதோ கற்பனையாக எண்ணி எதிர்பார்த்திருக்கிறாய். எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றவுடன் ஏமாற்றப்பட்டு இருப்பதாக, உனக்குத் தெரிகிறது. நான் எந்த எதிர்பார்ப்புடனும் உன்னிடம் நான் பழகவில்லை. எனவே எனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை. கவலையும் இல்லை. நான் எப்போதும்போல் சந்தோசமாக இருக்கேன். கீதா தொடர்ந்தாள்

ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பாராத கற்பனையில் மூழ்கி விடுகிறார்கள். அந்தக் கற்பனை வாழ்வு கிடைக்கலன்னா உடனே தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து ,ஏமாந்து உன்னைப்போல் இடிந்து உட்கார்ந்து விடுகிறார்கள்”.

”கீதா நீ முடிவாக என்னதான் எனக்கு சொல்ல வர்றே“

“சத்தியம் நான் உன்னிடம் வெளிப்படையாகவே சொல்றேன். உன்னிடம் பேசினால், பேசிக்கொண்டு இருந்தால் எனக்கு ஏதோ ஒரு மன ஆறுதலாக இனம் தெரியாத மகிழ்ச்சியாக இருக்கு. ஆனால் அதை நீ காதல் என்று மட்டும் குறுகிய வட்டத்திற்குள் அதைப் பார்க்காதே. சிலபேருக்கு சிலரிடம் பேசத் தோன்றும். சிலருக்கு சிலரைக் கண்டால் அவர்களிடம் பேசிக்கொண்டே இருக்கணும்போல் தோன்றும். இன்னும் சிலருக்கு சிலரைக் கண்டாலே பேசப் பிடிக்காது இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு புதிராகவே இருக்கு. எனக்கு அப்படித்தான் என்னோட வாழ்நாள் முழுவதும் இப்படி மனம் விட்டு பேசி நல்ல நண்பனாக உன்னிடம் பழகிக் கொண்டே இருக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது.

முடிவாக கீதா சத்தியமூர்த்தியிடம் “நாம் என்றும்போல் நண்பர்களாக இருப்போம். நான் சொல்வது இன்னுமா உனக்குப் புரியவில்லையா சத்தியம். நாம் இருவரும் நட்பு இணைகோடுகளாகவே இருப்போம். இணைக்கும் கோடுகளாக நாம் இருக்க வேண்டாம். சத்தியம் நல்லா என்னைப்பற்றி புரிந்திருப்பாய் என்று நினைக்கிறேன்.”

கீதா பேசுவதையெல்லாம் சத்தியமூர்த்தி கேட்டுக் கொண்டிருந்தவன் திடீரென எதுவும் பேசாமல் எழுந்திருந்து வானத்தையே சிறிது நேரம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். மரத்தின் மேல் பார்த்தான். மரத்தில் பறவைகள் ஒன்றுக்கொன்று கீச்கீச்சென்று கத்திக்கொண்டு சிறகுகளை விரித்து கிளைக்கு கிளை தாவி ஆனந்தமாக விளையாடிக்கொண்டு இருந்தன.

சத்தியமூர்த்தி கீதாவின் அருகில் வந்து “கீதா ஐயம் வெரி ஸாரி நான் உன்னோட மனம் புண்படும்படி ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடு. நீ சொல்வதுபோல் நாம் இப்போது உள்ளதுபோல் நல்ல நண்பர்களாக இருப்போம். கீதா உன்னோட வார்த்தையில் சொன்னால் நாம் இணைகோடுகளாகவே எப்போதும்போல் இருப்போம்.” என்று அவன் கூறியதைக் கேட்டதும் மகிழ்ச்சியுடன் இருவரும் சேர்ந்து பலமாக சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இணைகோடுகளாக நடந்து சென்றார்கள்.

– தினமணி கதிர் இதழில் 3.3.2019 ந்தேதி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது

எழுத்தாளரின் சுய குறிப்பு பெயர்: பூ. சுப்ரமணியன் வட்டாட்சியர் (பணிநிறைவு) வயது: 67 பெற்றோர்: தெய்வத்திரு பூவலிங்கம் பார்வதியம்மாள் சொந்த ஊர்: கீழராஜகுலராமன் இராஜபாளையம் அருகில். வெம்பக்கோட்டை வட்டம் விருதுநகர் மாவட்டம் வசிப்பிடம்: பிளாட் எண் 69, பிளாக் எண்- 1 முகவரி: எஸ்-2, ஆஞ்சநேயர் நகர், கலைவாணர் தெரு, ஜல்லடியான்பேட்டை, பள்ளிக்கரணை (அஞ்சல்),சென்னை 600 100 கைபேசி : 9894043308 மின்னஞ்சல்: psubramanian.family@gmail.com பொது: எனது மானசீக குரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *