யூனிவர்சிட்டிக்குக் காலடி எடுத்துவைத்த முதல்நாளே அப்படியொரு சோதனை எனக்குக் காத்திருந்தது. இயல்பாக நடக்க முடியவில்லை. ஒவ்வொரு அடியையும் மிகச் சிரமத்துடன் எடுத்துவைத்தேன். வலி… சப்பாத்து ஏற்கனவே என் பாதங்களை அமுக்கி பதம் பார்த்திருந்தது.
அப்பாவிற்கு அந்தச் சிரமங்கள் புரிய ஞாயமில்லை. ஸ்கூலில் படித்த நாட்களைப்போல ரப்பர் செருப்புடன் சமாளிக்கமுடியாது.. சப்பாத்து வாங்கவேண்டுமென சொன்னபோது அவருக்கு அது முக்கியமாகப் படவில்லை.
‘தம்பி… குடும்பம் இருக்கிற நிலைமை உனக்குத் தெரியும்… அந்த ஆசையெல்லாம் வேண்டாம்.”
அப்பாவிற்கு அப்படியான பதிலைத்தான் தரமுடியும். படிப்பை மேற்தொடர்வதற்கும் சப்பாத்துக்கும் என்ன சம்பந்தம் எனக் கருதினார். அவரது க~;டநிலைமை காரணமாக அந்த ரீதியில்தான் அவரால் சிந்திக்கவும் முடியும். அப்பா கார் சாரதியாக தொழில் பார்த்தார். ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்ப பாரத்தைச் சுமந்துகொண்டிருக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு. வீட்டிலென்றால் அன்றாடச் சாப்பாட்டுக்கே திண்டாட்டம். நிலைமையறிந்து பசியில்லாதவன் போலப் பாசாங்கு பண்ணியிருக்கிறேன். சாப்பாட்டை அரைகுறையில் முடித்துக்கொண்டு எழுந்துவிடுவேன். அல்லது அம்மா பட்டினி கிடக்க நேரிடும்.
பேசாமல் படிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு ஏதாவது தொழில் செய்தால் என்ன என்று யோசித்தேன். அதனால் அப்பாவின் சுமைகளையும் குறைக்கக்கூடியதாய் இருக்கும். அதை அப்பாவிடம் சொன்னதும் பதறிப்போனார்.
‘நீ… படிக்கக்கூடிய பிள்ளை…. க~;டம் என்னோட இருக்கட்டும்… எப்படியும் சப்பாத்து வாங்கிவிடலாம்…. கவலைப்படாதை….!”
அப்பா அப்படிச் சொன்னதும் சந்தோ~ம் உச்சிக்கு ஏறியது. சப்பாத்து அணிந்து நடக்கப்போகும் கணத்தை எண்ணிப் பார்த்தேன். சில கடைகளுக்குச் சென்று சாப்பாத்துக்களின் மொடல்களைப் பார்த்தேன். என்ன ஸ்டைலில் வாங்கலாம் எனக் கற்பனை செய்தேன். அப்பா சப்பாத்து வாங்கக் கடைக்குப் போகும்போது சேர்ந்து போகவேண்டும்.. அல்லது சீப்பாக இருக்கிறதென்ற காரணத்துக்காக அவர் தரமில்லாதவற்றை வாங்கிவிடக்கூடும்.
அப்பா பகலெல்லாம் அலைச்சல்பட்டு வருவார். இரவில் வெகுநேரம் வெளித்திண்ணையில் உறங்காமல் இருப்பதைப் பார்;த்தால் பணம் கிடைக்கவில்லை என்று தெரியும். பதிவுக் கட்டணப் பணம்.. லைப்பிரரி பீஸ்.. என இன்னோரன்ன தொகைகளைக் குறிப்பிட்டு யூனிவசிட்டி நிர்வாகத்திடமிருந்து கடிதம் வந்திருந்தது. அந்த விசித்திரத்தில் அப்பா சப்பாத்து வாங்கித் தருவதாகவும் உறுதியளித்திருந்தார். அது ஆகக்கூடிய காரியமல்ல என நம்பிக்கையிழக்கத் தொடங்கியபோது.. புறப்படுவதற்கு இரண்டே நாட்களிருக்கையில் அப்பா கையில் ஒரு பார்சலுடன் வந்தார். ‘சப்பாத்து!”
மனசு துள்ளியது. ஆனால்…. கடைகளில் பார்;த்தபோது சப்பாத்துக்கள் நீள்சதுரப் பெட்டிகளில் ‘பக்ட்” பண்ணப்பட்டிருந்தனவே…
அப்பாவின் கையிலிருப்பது ஒரு சோற்றுப் பார்சலைப்போல் தென்பட்டது! அப்பா மிக நிதானமாக அந்தப் பார்சலைப் பிரித்துப்போட்டார்.
நன்றாக உலர்த்தப்பட்ட கருவாடுபோல சப்hத்துக்கள் தம் உயிரை இழந்திருந்தன. எனினும் பொலி~; பண்ணப்பட்டு அவற்றின் முகத்தை அழகூட்டும் முயற்சியும் நடந்திருப்பது தெரிந்தது.
அப்பாவின் முகத்தை பரிதாபமாகப் பார்த்தேன்… ‘பொன்னையா மாமாதான் தந்தவர். போடு! அளவு சரியாயிருக்கோ பார்க்கலாம்.”
பொன்னையா மாமா கச்சேரியில் கிளார்க்காக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அந்தக் காலத்தில் அவர் போட்டடித்த சப்பாத்துக்களைக் கொடுத்தனுப்பியிருந்தார். அவற்றை எடுத்துக் கொள்ளாமல் வன்மம் கொண்டவனைப் போல நின்றேன்.
‘என்ன தம்பி செய்யிறது?….. நானும் எவ்வளவு இடங்களிலை அலைஞ்சு பார்த்தன். கேட்கக்கூடாத இடங்களிலையெல்லாம் வாய்விட்டுக் கேட்டுப்பார்த்தன். கிடைச்ச காசு ஒன்றுக்கும் போதாது. பொன்னையரிட்டையம் காசுதான் கேட்டுப் போனன். அவர்தான் என்ர நிலைமையைப் பார்த்திட்டு இந்தச் சப்பாத்துக்களைத் தூக்கித் தந்தார்.”
அந்தக் கணத்தில் அப்பாவின் தொண்டை அடைத்துக்கொண்டது. தலையைக் கை விரல்களால் கோதிவிட்டார். கண்களை அழுத்தித் துடைத்தார். கண்ணீர்த்துளிகள் என் காலடியில் விழுந்தன.
‘அப்….ப்….பா!” ஓசை வெளிப்படாத கூவல். உயிரணுக்களில் ஓர் அதிர்வு. மறு கதை பேசாமல் சப்பாத்துக்களை எடுத்தேன். அப்பா என் காலடியில் அமர்ந்து ஒருவாறு அதை அணிந்துகொள்ள உதவிபுரிந்தார்.
‘சரி, நட பார்க்கலாம்…!”
இயல்பாக நடக்க முடியவில்லை. நோவைத் தாங்கமுடியாது பாதங்களை அவதானமாக மென்மையாகப் பதிக்கவேண்டியிருந்தது. அதனால் நடை சற்று நொண்டுவது போன்ற அலாதியான தோற்றத்தையளித்தது. அந்த வித்தியாசமே ராக்கிங் செய்யும் சீனியர்களிடம் என்னைக் காட்டிக் கொடுத்தது. அவர்களால் விசே~ கவனிப்புக்குள்ளானேன். கேலிகள்…. சீண்டுதல்…. சிரிப்புக்கள்…. ராமனின் பாதுகையைப் போல இதுவும் ஏதாவது சரித்திரப் பிரசித்தி பெற்ற சமாச்சாரமா எனக் கிண்டலடித்தார்கள்.
‘இப்படிப் பட்டிக்காட்டான் போல வந்து இந்தக் கம்பஸின்ரை மானத்தையே வாங்காமல் முதல்ல புது ~{ஸ் போட்டு டீசன்ராய் வரப் பழகு… பிறகுதான் படிப்பு…!” என அறிவுரை சொன்னார்கள். ‘அட அப்படியொரு சங்கதியும் இருக்கா?….. அதற்காகவது புது சப்பாத்து வாங்கத்தான் வேண்டும். ஆனால் எப்படி….? அதற்கெல்லாம் வசதியற்றவன் என அவர்களிடம் சொல்லிவிடலாமா? சொன்னால் ஏற்கப்படுமா?….. அல்லது புது தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுமோ?”
அடுத்த நாளும் அதே சப்பாத்துக்களுடனேயே போகவேண்டியிருந்தது. அமுக்கப்பட்டிருந்த விரல்கள் பச்சை இறைச்சியாக வலித்தன. குதிக்கால்கள் சிதைந்து புண்ணாகியிருந்தன. கால்களை ஒருவாற இழுத்திழுத்து நடந்தேன். போதாத நேரம் போலும்…. கல்லொன்று தடுக்க, சப்பாத்து கிழிந்து ஆவென வாய் பிழந்துகொண்டது.
அதைத் தைத்துச் செப்பனிடும்வரை அஜஸ்ட் பண்ணி நடக்கவேண்டுமே! அதுவரை அவர்கள் கண்களில் படாமல் தப்பிக்கவேண்டுமே! ஆனால் தப்பிக்க முடியவில்லை.
‘உனக்கு சொன்னால் கேட்கமாட்டியா? திமிர்தானே?” உறுமினார்கள். ‘இதற்கு சரியான தண்டனை தரவேண்டும்.”
‘~_வைக் கழட்டு!”
‘தலையில் வை!”
‘இது காலுக்கு உதவாது… தலையில வைச்சுக்கொண்டு நட, எல்லாரும் பார்க்கட்டும்…!”
இன்னும் சில புது மாணவர்களை என்னுடன் சேர்ந்து அணியாக நடக்கச்சொன்னார்கள். நடக்கும்போது பாடச் சொன்னார்கள்.
‘பாதுகையே துணையாகும்…. எந்நாளும் இந்தப் பாதுகையே துணையாகும்!”
கூட அணிவகுத்து வரும் மாணவர்களுக்கு அது பரவாயில்லைப்போலும். கூட்டாக ராக்கிங் என்ற பெயரில் ஒரு விளையாட்டு நடக்கிறது. அனுபவித்துப் பாடுகிறார்கள். ஆனால் எனக்கு சத்தம் வாயைவிட்டு வெளிவர மறுத்தது. இரு பக்கமும் வேடிக்கை பார்க்கும் விழிகள். கேலிச் சிரிப்புக்கள். தலையைக் குனிந்துகொள்ளவும் முடியவில்லை. குனிந்தால் சப்பாத்து விழுந்துவிடும். விழுந்தால் ராக்கிங் அதிகரிக்கும். யாரையும் கவனிக்காதவன் போல நடந்துகொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராத விதமாக நித்யா எதிர்ப்பட்டாள். நித்யாவை கவனிக்காமல் போவதென்பது என் சக்திக்கு அப்பாற்பட்ட வி~யம்.
அன்றைய இரவு உறக்கம் கெட்டது.
நித்தியாவின் சிரிப்பு நினைவில் வந்து என்னவோ செய்தது. நித்யா புதுவருட மாணவி. மாணவர்களால் அறைகளிலும் பிற இடங்களிலும் நினைத்துப் பேசப்படும் அழகி. அவளுக்கு முன்னே மானபங்கப்பட்டுப் போனதுபோலிருந்தது. புரண்டு புரண்டு படுத்தேன். அதைக் கவனித்த அறை நண்பன் சொன்னான்:
‘அந்த ~_ஸ் சரியில்லைத்தான்…. புதுசா வாங்கலாமே… அதுதான் கவலையா..?”
சப்பாத்து புதிதாக வாங்கத்தான்வேண்டும். இப்படிக் கேவலப்பட்டதே போதும். அப்பாவுக்கு கடிதம் எழுதலாமா? (எப்படியாவது பணம் அனுப்புங்கள் அப்பா) அதற்கு அவர் என்ன செய்வார்? பயணப்பட்டு வந்தபோதுகூட.. தேவையான செலவுகள்.. பீஸ்களுக்கு மேலாக நூறு ரூபா மட்டும் தந்திருந்தார்.
‘தம்பி கண்டபடி செலவு செய்யக்கூடாது. ஆசாபாசங்களிலை மனசைப் பறிகொடுக்கக்கூடாது. நீ…. படிச்சு ஆளாகித்தான் எங்கட குடும்பம் தலையெடுக்க வேணும்.”
அப்பாவிற்கு வேறு வழியில்லை. பணக் க~;டத்தை இப்படி ஏதாவது புத்திமதிகள் கூறிச் சரிக்கட்ட முயன்றார். இந்த நிலையில் எப்படியாவது பணம் அனுப்பிவையுங்கோ என எழுதினால் அன்றாடம் வீட்டுக்கு ஆகும் செலவில்தான் வெட்டு விழுமோ தெரியாது. வயிற்றுக்கு வஞ்சகம் செய்து அரைவயிறு கால்வயிற்றுடன் எழுந்துவிடுகிற நாட்கள் நினைவுக்கு வந்தன. இப்போது தம்பி தங்கைகளுக்கும் அந்தக் கதியாக இருக்கலாம். வேண்டாம்… இப்படியே ஒருவாறு சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான்.
இரண்டு வாரங்கள் கடந்ததும் ராக்கிங் தொல்லை ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின் எனது சப்பாத்துக்களைப் பற்றி யாரும் கவலைப்பட்டதுபோலத் தெரியவில்லை. பாதங்களில் அமுக்கப்பட்ட பகுதியும் மரத்துப்போனதால் வலியுணர்வுகூடத் தெரியவில்லை. ஆக தற்காலிகமாக எனினும் ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்த ஆறுதல் எனக்கு.
ஆனால்.. அந்த ஆறுதல் நீடிக்கவில்லை. நித்யா ஒரு நாள் என்னைத் தேடி வந்தாள். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். எனது கல்லூரி நண்பன் சத்தியகுமாரின் வீட்டுக்கு அண்மையில் நித்யாவின் வீடாம். யூனிவர்சிட்டி அட்மிசன் பற்றி நித்தியாவிற்குக் கடைசி நேரத்திலேயே அறிவித்தல் கிடைத்தது. அதற்கிடையில் சத்தியகுமார் என்னைச் சந்திக்காததால் நித்தியாவைப் பற்றித் தெரிவிக்கவில்லையாம். நித்யாவிடம் சொல்லி அனுப்பியிருந்தான்.
‘உங்கள மீட் பண்ணிக் கதைக்கச் சொன்னார்… நீங்கள் என்ன உதவியும் செய்யக்கூடிய ஆள் என்று உங்கள் ஃபிரண்ட் சொன்னார். அப்படியா?” எனக் கண்களை அபிநயித்துக் கேட்டாள்.
அந்தக் கண்களின் அசைவே என் மன ஆறுதலைப் பறித்துக்கொண்டு போவதுபோலிருந்தது. அவளுக்கு முன்னால் நிற்கும்போது கால்களில் மாட்டியிருந்த சப்பாத்துக்களின் நினைவு வந்து கூச்சமேற்பட்டது. அவளோடு சரியாகப் பேசமுடியாமலும் இருந்தது. இரவு படுக்கையில் கற்பனைகள் விரிந்தன. வீட்டுச் சூழலையும் உறவுகளையும் முதன் முதல் பிரிந்து வந்த தூரத்துத் தனிமையில் ஒரு துணை நித்யாவிற்குத் தேவைப்படுகிறதென்பதை அவளது பேச்சிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது. அதையே சாட்டாக வைத்துக்கொண்டு நித்யாவின் நட்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அவளது மனத்தில் இடம் பிடிக்கவேண்டும். சப்பாத்துக்களைத் தலையில் வைத்துக்கொண்டு அணியாக வலம்போன அந்த கொறிடோரில் நித்யாவுடன் கைகோர்த்துக்கொண்டு நடக்க வேண்டும். ராக்கிங் செய்த சீனியர்கள் எல்லாம் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகட்டும்.
படுக்கையில் புரண்டவாறு திரும்பியபோது ஓரத்தில் கிடந்த சப்பாத்துக்கள் என் பார்வையில் பட்டன. அந்தக் கணத்தில் கற்பனைக் குதிரை ஒரு ‘சடின் பிறேக்” போட்டது. சடசடவென எல்லாம் உடைந்து கொட்டுண்டதுபோல பிரமை ஏற்பட்டது. நித்தியாவுடன் பழகவேண்டுமென இலகுவாகத் திட்டம் போட்டாயிற்று. ஆனால் அந்தச் சப்பாத்துக்களுடனா?
புதிதாக சப்பாத்து வாங்கவேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு வழி ஏதும் இல்லை. ஒருவாறு சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான்.
நித்யா தங்கியிருக்கும் வீட்டுக்கு மாலைவேளைகளில் சென்று பொழுதைப் போக்கும் அளவுக்கு நட்பு வளர்ந்தது. நித்யா ஒவ்வொரு தேவைக்கும் என்னை எதிர்பார்த்தாள். இங்கே போக.. அங்கே போக.. கடைத்தெருவுக்குப் போக என எந்த அலுவல்களுக்கும் எனது துணையை நாடினாள். இது எனக்கு உள்@ர சந்தோ~த்தை அளித்தது. நண்பர்களிடத்தில் எனக்கு ஒருவித மதிப்பும் பெருகியது. நித்யா காரணமாக நான் ஒரு ஹீரோவாக ஆகிவிட்டது போலுணர்ந்தேன்.
நித்யாவின் நினைவுகள் நாளும் பொழுதும் ஆக்கிரமிக்கத் தொடங்கின. லெக்சர் ஹோலில் பாடத்தில் மனசு செல்ல மறுக்கும். நித்யாவின் இருக்கயை நாடிக் கண்கள் போகும். படுக்கையில்… கண்கள் மூட மறுக்கும். கண்களை மூடினாலும் நித்யாவின் முகம் தெரியும். அவள் எனக்கே சொந்தமாகமாட்டாளா எனக் கனவுகள் கண்டேன். அதை அவளிடம் தெரிவிக்கலாமா?
வெள்ளிக்கிழமைகளில் நித்யாவுடன் கோவிலுக்குப் போவதுண்டு. அப்போதுதான் அவளுடன் ஆறுதலாகப் பேசமுடியும் எனத் திட்டமிட்டேன். அந்த எண்ணத்துடன் கோவிலுக்குப் புறப்பட்டபோது மனம் ஒருவித அச்சத்தால் அடித்துக்கொண்டது. நித்யா ஏதாவது சொன்னால் எனக்குப் பேச்சுத் தடுமாறியது. எப்படிப் பேச்சை ஆரம்பிக்கலாம் என எண்ணிப் பார்த்தேன். கோவிலைச் சுற்றி வந்தபோது…. ‘நித்யா இது போலவே வாழ்க்கை முழுவதும் ஒன்றாய் இருக்கலாமா?” என மனதில் வசனம் பேசினேன். அப்படி நிஜமாகவே பேசப்போவதை நினைத்தால் நடுங்கியது. உடல் சூடேறிக் காய்ச்சல் அடிப்பது போன்ற உணர்வு. நித்யாவிடம் என் காதலைத் தெரிவித்துவிட வேண்டுமென்ற ஆசை மட்டும் நர்த்தனம் புரிந்து கொண்டிருந்தது.
கோவிலுக்கு வெளியே வந்து அமர்ந்தபோது நித்யாவின் கல கலப் பேச்சுக்கள் ஈர்த்தது. அவளது முகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன். ‘சொல்லலாமா?….. சொல்லலாமா….?” சொல்லும் துணிவு வரவில்லை.
புறப்பட ஆயத்தமாகி வந்து சப்பாத்துக்களை மாட்டினேன். நித்யா சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
‘ஏன் ஜெயந்தன் இதைக் கைவிட விருப்பமில்லையா?…. புது ~_ஸ் வாங்கலாமே….?”
மூச்சு ஒரு முறை நின்றது. எனக்குப் பேச எண்ணியிருந்த வி~யங்களெல்லாம் மறந்துபோயின.
‘ராகிங்கில… உங்கட தலையில ~_க்களை வச்சு நடக்கச் சொன்னாங்கதானே… அதுதான் நினைவு வந்து சிரிச்சன்… சொறி ஜெயந்தன்…. புது ~_ஸ் வாங்குங்கோ…!”
எனக்கு மறுமொழி பேச முடியவில்லை. அந்த சப்பாத்துக்களைக் கைவிடுவதும் புதிது வாங்குவதும் முடியாத வி~மாயிருக்கும் என்ற வி~யத்தை – எனது நிலைமையை – குடும்ப நிலவரத்தை நித்யாவிடம் சொல்லிவிடலாம் எனத் தீர்மானித்தேன்.
நான் சொல்வதைக் கேட்டு நித்யா அனுதாப்படுவதுபோலிருந்தது. நித்யாவின் இரக்கத்தைச் சம்பாதிப்பதுகூட எனக்கு ஒருவித இதமாகவே இருந்தது.
ஆனால்.. அதற்குப் பிறகு எந்தச் சமாதானமும் வேண்டாம் என எண்ணிக்கொண்டேன். புதிய சப்பாத்து வாங்கியே ஆகவேண்டும். பணம் அனுப்பும்படி அப்பாவிற்குக் கடிதம் எழுதினேன். அப்பா மேல் கோபம் கூட ஏற்பட்டது. சப்பாத்து என் வாழ்க்கைப் பிரச்சினையாகக்கூட ஆகிவிட்டது போலிருந்தது.
கனவுகளில் விதவிதமான சப்பாத்துக்கள் வந்தன. புதிய சப்பாத்து வாங்கினால் எல்லாம் சரியாகும். எழுதிய கடிதத்துக்கு நீண்ட நாளாக அப்பாவிடமிருந்து பதிலேதும் கிடைக்கவுமில்லை. பணத்துக்கு என்ன பாடுபடுகிறரோ? ஆனால் அப்பா கைவிடமாட்டார் என்று நம்பிக்கை இருந்தது. என்னைப் படிப்பித்து ஆளாக்குவதற்கு அவர் என்ன க~;டப்படவும் தயாராயிருந்தார். எப்படியாவது பணம் அனுப்பி வைப்பார்.
சப்பாத்து வாங்குவதென முடிவெடுத்தபின் கம்பஸில் போகிறவர் வருகிறவர்களின் கால்களையெல்லாம் நோட்டமிட்டேன். ஒவ்வொரு விதமான சப்பாத்துக்களையும் அவை நிலத்தில் பதியும்போது எழுப்பும் ஓசை வித்தியாசங்களையும் ரசித்தேன். இது நல்லது… இது சரியில்லை என எனக்குள்ளே விமர்சனங்கள் செய்தேன். சிலரிடம் அவற்றின் விலையை விசாரித்துப் பார்த்தேன்.
ஆனால் அப்பாவிடமிருந்து பணம்தான் வந்தபாடில்லை. நித்யாவை சந்தித்தும் நீண்ட நாட்களாகியிருந்தது. புதிய சப்பாத்துக்களுடன்தான் நித்தியாவின் அறைக்கு இனிப் போவது என ஏற்கனேவே ஒரு குழப்ப நிலையில் எடுத்திருந்த முடிவு மடைத்தனம் போலத் தோன்றிற்று.
நித்தியாவின் அறைக்கு மாலையிற் சென்றேன். அங்கே சுந்தரமூர்த்தி நித்தியாவுடன் பேசிக்கொண்டிருந்தான். சுந்தரமூர்த்தி சீனியர் பட்ஜ் மாணவன். ராகிங் காலத்தில் சப்பாத்தை தலையில் சுமக்கவைத்தவர்களில் ஒருவன். அதனால், அவனிடத்தில் ஒரு இனம்புரியாத கோபம் இருந்தது. எதுவும் பேசாமல் சப்பாத்துக்களை வாசற்படியில் வழக்கம்போல கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.
‘என்ன ஜெயந்தன்?…. இந்த ~_சை விடவே மாட்டியா…? அதில அவ்வளவு காதலா…?” எனக் கேட்டுவிட்டு அட்டகாசமாகச் சிரித்தான் சுந்தரமூர்த்தி. ஒரு தமா~{க்காக அப்படிக் கேட்டானா அல்லது நித்யாவின் முன் என்னை ஏளனப்படுத்தம் எண்ணமா…. எனப் புரியாமல் இருந்தது. அவன் வெளியேறும்வரை மௌனமாக இருந்தேன். பின்னர் நித்யாவிடம் மெதுவான குரலில் சொன்னேன்.
‘அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். காசு வந்ததும் ~_ஸ் வாங்கலாம்.”
‘என்ன இது ஜெயந்தன்?…. அவர் சும்மா விளையாட்டுக்கு ஜோக் அடிச்சிருப்பார். அதை ஏன் பெரிசுபடுத்திறீங்கள்…?”
என்ன சொல்லியும் மனசு அடங்க மறுத்தது. நித்தியாவின் முன் அவமானப் படுத்தப்பட்டதால் ‘மூட்” குழம்பிப்போய் அவளுடன்கூடப் பேசமுடியாமல் இருந்தது. வெளியேறி நடந்தேன். இது தேவைதானா என நிலத்தில் காலை உதைத்தேன். சப்பாத்து கிழிந்து வாய் ஆவெனப் பிழந்துகொண்டது. கடவுளே எனத் தலையில் கையை வைத்தேன். வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. நடையைத் திருப்பினேன்.
அறைக்குப் போனபோது அன்றைக்கு வந்த தபால் காத்துக்கொண்டிருந்தது. அப்பாவிடமிருந்து மணியோடர்! ஐநூறு ரூபாய் அனுப்பியிருந்தார். அதைக் கையில் எடுத்தபோது நெஞ்சில் ஒரு சூடு படத்தான் செய்தது. எனினும் அவ்வுணர்வையும் மீறிய பரவசத்தில் ஆழ்ந்தேன். புதிய சப்பாத்து வாங்கப்போவது நிச்சயமாயிற்றே! எப்போது விடியுமெனக் காத்திருந்து கடைக்குப் போனேன். சப்பாத்து மாட்டிக்கொள்ளக்கூட மனசில்லாதிருந்தது. பிள்ளையைப் போல நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதை அணிந்துகொண்டபோது நடக்க முடியவில்லை…. ஓவ்வொரு அடியும் என்னை நிமிர்த்தியது.
கால்களை அலட்சியமாக எடுத்து வைத்தேன். நடையில் ஒரு கம்பீரம் வந்துவிட்டது போலிருந்தது. முதலில் நித்யாவைக் காணச் சென்றேன்.
‘உண்மையிலேயே…. உங்கள விட எனக்குத்தான் சந்தோ~மாக இருக்கு ஜெயந்தன். இனி உங்கள ஆரும் கேலி பண்ண முடியாதுதானே!”
அந்த வார்த்தை எனக்குப் பிறவிப் பயனையே அடைந்துவிட்ட உற்சாகத்தையூட்டியது. இரவு படுக்க முடியாமல் அந்த வார்த்தை திரும்பத் திரும்பக் காதுகளில் ஒலித்தது. ஒருவேளை நித்யாகூட என்னை விரும்பக்கூடும். அவளிடம் இதுபற்றிப் பேசவேண்டும். ஆனால் நெருங்கிக்கொண்டிருக்கும் பரீட்சைகள் முடியட்டும். இந்த நேரத்தில் நித்யாவைக் குழப்பவேண்டாம் எனக் காத்திருந்தேன்.
பரீட்சைகள் முடிந்து மாணவர்கள் வீடுகளுக்குப் பயணமாகும் நாளும் வந்தது. எந்த அலுவல்களுக்கும் எனது துணையை நாடிய நித்யாவின் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை படிப்படியாக இந்த இடைக்காலத்தில் அவதானித்திருந்தேன்.
ரயில் நிலையத்திற்கும் சுத்தரத்துடன் சேர்ந்து வந்திருந்தாள்.
மாணவர்கள் எல்லோரும் ரயிலில் ஒரு தனி கொம்பார்ட்மென்டில் இடம் பிடித்திருந்தார்கள். நித்யா ஒரு ஓரமாக சுந்தரமூர்த்தியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
ஊருக்குப் போகிறேன் என்றதும் எனக்கு வீட்டு நினைவுகள்… அப்பாவின் க~;டங்கள்.. எப்போது மகன் வருவான் எனக் காத்திருக்கும் அம்மா….
ரயில் புறப்பட்டது.
நண்பர்களுக்குப் பரீட்சைகள் முடிவடைந்த மனநிலை. வீட்டுக்கப் போகும் மகிழ்ச்சி. ஆட்டம்…. பாட்டு… இவற்றிலெல்லாம் மனம் லயிக்கவில்லை. சப்பாத்துக்களைச் சுழற்றி வைத்துவிட்டு ஒரு புத்தகத்தில் ஆழ்ந்தேன்.
நண்பர்கள் சீண்டினார்கள். ‘எக்ஸாம் முடிந்த பிறகு என்னடா…. படிப்பு, வாடா..!” எனக் கையைப் பிடித்து இழுத்தார்கள். நண்பனொருவன் எனது சப்பாத்துக்களிலொன்றை டக்கெனத் தூக்கினான். தலையில் வைத்து ஆடினான். ‘பாதுகையே துணையாகும்….”
கொம்பார்ட்மென்ட் முழுவதும் உடைந்து சிரித்தது. எழுந்து கையை நீட்டினேன்.. ‘தாடா!”
எனது தலைக்கு மேலாக இன்னொருவனிடம் சப்பாத்தை எறிந்தான். நான் அந்தப் பக்கம் போக இந்தப் பக்கம் எறிந்தார்கள். பந்து விளையாடுவதுபோல ஆளுக்காள் எனக்குப் பிடிபடாமல் எறிந்து…. ஏந்தி என்னை ஏய்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நண்பனின் கை தவறியது. ‘கச்” பண்ண முடியவில்லை. திறந்திருந்த யன்னலினூடாக சப்பாத்து வெளியே விழுந்தது.
ரயில் ஓடிக்கொண்டிருந்தது. நான் ஸ்தம்பித்தேன். என்ன செய்யலாம்? எப்படி எடுப்பது?எனது அருமையான சப்பாத்து எனக்கு இனி இல்லையா? செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாமா? இழுத்தால் நிற்குமா? ஒரு சப்பாத்துக்காக ரயிலை நிறுத்துவது சரியா?
இமைக்கும் நேரத்தில் இந்த எண்ணங்கள் மனதிலோட மின்னலென ஒரு பளிச். இருக்கையின் கீழிருந்த மற்றய சப்பாத்தை டக்கென எடுத்து யன்னலினூடாக வெளியே எட்டி முதலில் சப்பாத்து விழுந்திருக்கக்கூடிய இடத்தை நோக்கி எறிந்தேன்.
‘என்னடா?” நணபர்கள் பதறிப் போனார்கள்.
‘எனக்குத்தான் கொடுப்பினை இல்ல…. கிடைக்கிறவனுக்காவது பயன்படட்டும்….” என நிதானமாகக் கூறினேன். எனினும் நித்யாவை இழந்தது போன்றதொரு சோகம் நெஞ்சில்.
வெள்ளவத்தையில்…. வீதியின் மறுபக்கத்தில் போவது நித்யாவைப் போலத் தென்பட்டது. அவள்தானா எனப் பார்க்கும் உந்துதலில் ஓர் அடியெடுத்து வைத்தேன்.
கையில் ஒரு குழந்தையுடன்…. இன்னொரு குழந்தை அவள் பின்னே போக நடந்து போவது நித்யாதான். இட்ட அடியை மேலும் எடுத்து வைக்காமல் அப்படியே நின்றேன். அவளது நடையில் ஒரு தளர்ச்சி தெரிவது போலிருந்தது. எனக்குக் கவலையாயுமிருந்தது. தளர்ச்சிக்குக் குழந்தைச்சுமை காரணமோ அல்லது வேறு ஏதாவது க~;ட நிலையோ தெரியவில்லை….? யாழ்ப்பாணத்தில் யுத்த நெருக்கடி காரணமாக கொழும்புக்கு இடம் பெயர்ந்திருக்கக்கூடும்.
‘ஆரைப் பார்த்துக் கொண்டு நிக்கிறீங்கள்…?” பக்கத்தில் நின்ற என் மனைவி இந்த உலகத்துக்கு என்னைக் கொண்டுவந்தாள்.
‘நித்யா!”
‘அவள் இஞ்ச என்னோட நிற்கிறாளே!” – மனைவி மகளின் கையைப் பிடித்திருந்தாள்.
‘இவளில்லை… இந்தக் கதையில் வருகிறாளே… அந்த நித்யா….”
‘ஓஹோ… அதுதான் உங்க செல்ல மகளுக்கும் நித்யா என்று பெயர் வைச்சனீங்களோ…?” கள்ளனைப் பிடித்துவிட்ட உற்சாகத்துடன் மனைவி என்னை மேலும் சீண்டினாள். – ‘அது சரி…. இவ்வளவு காலத்துக்குப் பிறகும்…. என்ன அப்படிச் சொக்கிப்போய் நிக்கிறியள்?”
புன்முறுவலுடன் அவளுக்குச் சொன்னேன்.
‘அப்பிடி…. ஒன்றும் இல்ல…. சினிமாக்களில் வருமே…. அதுமாதிரி அவளைக் கண்டதும் ஒரு ஃப்ளாஷ் பாக்… அவ்வளவுதான்.”
– மல்லிகை 1998 – காற்றோடு போதல் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு 2002, எம்.டி குணசேன அன் கம்பனி, கொழும்பு