ஆளுகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 22,684 
 
 

கதை ஆசிரியர்: ஜெயகாந்தன்.

1

அவன் அவளுடைய படத்துக்கு நேரே படுக்கையை விரித்து, மல்லாந்து படுத்திருந்தான். படத்துக்கும் அவனுக்கும் நடுவே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அமைதியான இரவில், ஓசையிட்டவாறு சுவரிலிருந்த கடிகாரத்தில் மணி அப்போது ஒன்றேகால் . . அவன் விழிகள் அந்தப் படத்தையே வெறித்துக் கொண்டிருக்க, அவன் உதடுகளில் புன்னகையும் அவளோடு பேசுகின்ற தனி மொழிகளும் மௌனமாக நௌ¤ந்துகொண்டிருந்தன.
அவனுக்கு அவளே நினைவாகி, அந்தப் படமே அவளாகிப் பதினைந்து நாட்களாகின்றன.
அவளது இழப்பின் சோக நினைவுகளுடன் முன்நேரத்திலேயே உறங்கிப்போன அவனை, சற்று முன் அவள் வந்து அன்புடன் அவன் தோளை வருடிச் செவியருகே உஷ்ணமிக்க சுவாசத்துடன் குனிந்து, ” என்ன இது, பச்சைக் குழந்தை மாதிரித் தூக்கம் . . .? ம் . . . கண்ணைத் தெறந்து எழுந்து உக்காந்து பாலைக் குடிங்க . . ” என்று எழுப்பினாள்.
“ம் . . . ஹ¨ம் . . ” என்று சிணுங்கியவாறு புரண்டு புரண்டு படுக்கையின் மீது அவன் நௌ¤ந்தபோது அவள் கலகலவெனச் சிரித்து, அவன் பிடரியில் கையைக் கொடுத்து தன் மார்பில் அவனது முதுகைத் தூக்கி அமர்த்துகையில், வளையல்களின் ஒலி அவன் செவியில் ரீங்கரிக்கிறது. மல்லிகையின் போதை மணம் சற்றுக் கலைந்த உறக்கத்தையும் சமன் செய்து கண்களைத் திறக்க வைக்கிறது.
– அவன் உதடுகளில் பால் தம்ளர் அழுந்துகிறது. அரை உறக்கத்தில் பாலின் சுவை உதடுகளில் ஊறி நாவில் படிந்து, வாய்க்குள் வழிந்து தொண்டையில் இறங்கியபோது அவன் ஒரு மடங்கு விழுங்கினான் … ”அப்பா . . . போதும், போதும் . . எனக்குக் குழந்தையில்லாத கொறையே உங்களாலேதான் தீருது . . ம், ஒரு கொழந்தையும் வந்துட்டதோ, ரெண்டு பேரும் சேர்ந்து மனுஷி உயிரை வாங்கிடுவீங்க . . .” என்று அலுத்துக்கொண்டே அவன் நெற்றியில் சரிந்த முடியை ஒதுக்கி, அவனை உட்காரவைத்துப் பால் தம்ளரைக் கையில் கொடுத்து, “உம் . . தம்ளரைப் பிடிங்க . . நான் போயி அடுக்களையைச் சுத்தம் பண்ணணும் ” என்று அவசரப்படுத்துகிறாள்.
‘நீ போயி . . . நீ தான் போயிட்டேடி பட்டு . . . நீ செத்துப்போயிடல்லே? மறுபடியும் பொழச்சு வந்துட்டியா?’ என்று கேட்கும்போது நெஞ்சில் பெருகிய இன்ப உணர்வு உடனே வடிந்து வரண்டது. ‘அது எப்படி? உன் உடம்பைத்தான் கொளுத்தியாச்சே; நான் தான் பக்கத்திலே இருந்துப் பார்த்தேனே . . . .’ என்று தூரத்து நினைவோட்டம் மனவெளியில் கானல் போல் அலைகிறது . . .
அப்போது இரண்டு முறை மணியோசை கேட்கவே அவன் துயில் கலைந்தான் . . . . அதாவது கண் திறந்தான். தூக்கத்திலிருந்து விழிக்கும்போது, படுக்கையில் தான் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கென அச்சமுற்றான். விளக்கு எரிகிறது. கடிகாரம் ஓசையிடுகிறது. படுக்கைக்கு நேரே அவள் படம் அவனைப் பார்த்து சிரிக்கிறது. அது அவள் சிரிக்கும்போது எடுத்த படம் தான் . . .
‘ .. . . .அதென்ன உதடுகள் அசைந்து மௌ¢ள மௌ¢ள புன்னகை விகசிக்கிறதே!
– அவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
அறையின் ஒரு மூலையிலிருந்து லேசான ‘களுக்கு’ச் சிரிப்புச் சிதறிய ஓசை கேட்டு திரும்பினான்.
அவன் முகமெல்லாம் வேர்த்திருந்தது. கடிகாரத்தைப்போல இருதயத்தின் தாளமும் செவியில் கேட்கிறது.
மீண்டும் படத்தைப் பார்க்கும்போது அவள் முகவிலாசத்தில் உதடுகள் விரிந்து விழிகள் அசைந்து, அந்தப் படம் சிரிப்பது எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது!
அந்த வீட்டின் தனிமையில் இந்த நிசியில் உறக்கம் கலைந்தபின் அவனை யாரோ வேட்டையாட வருவதுபோல், அவன் அஞ்சி, உடல் குறுகிப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தான்.
“பட்டு! நீ எவ்வளவு அழகா சிரிக்கிறே தெரியுமா?” என்று அவன் எத்தனையோ முறை அவளிடம் கூறியதுண்டு. ஆனால் பட்டு இல்லாமல் அவள் படம் மட்டும் சிரிப்பதென்றால்?
அதோ . .
உள்ளறையிலிருந்து மல்லிகைப் பூவின் மணம் எப்படிப் பெருகி வந்து நெஞ்சைக் கவ்வுகிறது!
‘டக் . . . டக் . . ‘ கென்ற அவளது மெட்டியின் சப்தம்.
வளைகள் குலுங்கும் கிண்கிணியோசை . . . .
பட்டுப் புடைவையின் சரசரப்பு! . . .
இங்கே உட்கார்ந்துகொண்டு எத்தனை முறை உன் கூந்தலிலிருந்து வருகின்ற மணத்தையும், உனது மெட்டியொலியையும், வளையல் குலுக்கையும், பட்டுப் புடவையின் மிருதுத் தன்மையையும் ரசித்திருக்கிறேன் . .
‘நீ இல்லாமல் . . நீ இல்லையென்று அறிவு நம்பிய பின், என் உணர்ச்சிகளை நீ இவ்விதம் ஆளுகை கொண்டிருப்பதன் வேதனை, பயங்கரம், பீதி , யாவும் என் இரவையே ஒரு நரகமாக்குகிறதே பட்டு!’
அவள் தனது அறைக்குள் பீரோவைத் திறப்பதுபோலும், சாவிக்கொத்தைக் குலுக்குவது போலும் ஓசை கேட்கவே, அவன் செவிப் புலனை தீட்சண்யப்படுத்திக்கொண்டு உற்று கேட்டான்.
ஆம்; அதோ, அந்தச் சப்தம் கேட்கிறதே! . . .
‘இது பொய் . . . அவள்தான் செத்துவிட்டாளே, இப்போது நீ மட்டும் தனியாய் இந்த வீட்டில் இருக்கிறாய்! . . வேறு யாருமே இல்லை . .’ என்று பேசுகிறது அறிவு.
‘ஆனால் அதோ கேட்கிறதே அந்தச் சப்தம்! . . மெட்டியின், வளையலின், சாவிகொத்தின் ஓசை! அதோ வருகிறதே மல்லிகையின் வாசனை ‘ என்று தவிக்கிறது உணர்வு.
அந்தத் தனிமையுணர்வின் குரூரத்தைத் தாங்க முடியாமல் தேகாந்தமும் நடுநடுங்கப் படுக்கையில்கூட அவனால் படுத்திருக்க முடியவில்லை.
அந்தப் படுக்கையில், ஸ்பரிசம் இழைய இழைய எத்தனை இரவுகள் அவளுடன் கிடந்திருக்கிறான்! . . .
அவன் முகமெல்லாம் வியர்வை துளித்து நெஞ்சை அடைக்கிறது.
படீரென்று அவளின் அறைக் கதவைப் பாய்ந்து திறக்கிறான். இருள்!
பிறகு வெளிச்சம்!
விளக்கின் வெளிச்சத்தில் . . .
அவளுடைய பீரோ!
கொடியில் அவள் உடுத்திக் களைந்த சேலைகளும் அணிந்து கழற்றிய ரவிக்கைகளும் கிடக்கின்றன.
அந்த பீரோவின் கதவில் அவள் கரத்தால் கடைசி முறையாகத் திறந்து மூடியபின், அப்படியே தொங்கிக்கொண்டிருக்கிறது சாவிகொத்து.
கொடியில் கிடந்த சேலைகளை ஒவ்வொன்றாய் உற்றுப் பார்க்கையில், அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சமயத்தில் உடுத்திக்கொண்டு வண்ண வண்ணக் கோலத்தில் அவன் எதிரில் வந்து வந்து அவள் நின்றதெல்லாம் மனதில் தோன்றிப் பார்வையில் நிழலாடுகின்றன.
‘நினைவாயும், நிழலாயும், கனவாயும், மருளாயும், போய்விட்ட அவள் இனிமேல் இல்லை’ என்ற உணர்வுடன் இழந்துவிட்ட தனது இனிய பாதியை எண்ணும்போது தானே குறைபட்டு தலையற்ற கபந்தனைப்போல் தனித்துத் திரியும் கொடுமையை அந்த நிமிஷம் அவனால் தாங்க முடியவில்லை.
கொடியில் கிடந்த சேலைகளைக் கைகொள்ளாமல் சேர்ந்து முகத்தொடு அணைத்துக்கொண்டான். அவனது தோள்கள் லேசாய்க் குலுங்கின . . .
திடுக்கிட்டவனாய், தன்னை யாரோ பின்னால் வந்து தழுவியது போலிருந்ததால், இமைகளில் படர்ந்த ஈரத்துடன் இருபுறமும் திரும்பிப் பார்த்தான். ஒரு விநாடி அப்படியே நின்று எதையோ யோசித்தபின் கையிலிருந்த புடவைகளை மோப்பம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டு மீண்டும் முகத்தருகே அவற்றை ஏந்திக் கொண்டான்.
‘அவள் இல்லை. அவள் நினைவு என்னை ஆள்வதுபோல், இந்தப் புடவைகளில் ‘அவள் மணம்’ குடிகொண்டிருக்கிறது!’
ஆமாம்; அவளுக்கு ஒரு மணம் உண்டு; அது அவனுக்கு மட்டுகே தெரியும்.
மணி மூன்றடித்தது.
தன்னை நினைக்க அவன் பயம் கொண்டான். தினந்தோறும் இந்தப் பதினைந்து நாட்களாக இரவெல்லாம் விழித்துக்கொண்டு, அவள் நினைவில் பித்தனைப்போல் உழன்றுகொண்டிருக்கும் தனது பரிதாபத்தை எண்ணும்போது தன்னிரக்கத்தால் தானே அழுதான்.
இப்போது அவனுக்குப் பின்னால் சற்று முன் அவன் படுத்திருந்த படுக்கையில் அவள் கிடந்து புரள்வது போல் சலசலப்பும், ‘களுக்கு’ச் சிரிப்பு ஒலியும் கேட்டது.
அவனுக்கு மூச்சு முட்டுவதுபோல் அவள் நினைவே அந்த வீட்டினுள் கவிந்து அவனை அமுக்கிக் கொல்வதுபோல் உயிரே திணரியது.
அவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்து மூடியிருந்த அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்தான். வெளியே இருளும் வானத்தில் நட்சத்திரங்களும், தனிமையில் வாடி வெம்பிபோனதுபோல் ஒலியிழந்த மூளி நிலாவும் தூரத்தில் தெரிந்தன. சில்லென வீசிய விடியற்காலைக் காற்று அவன் முகத்தில் துளித்திருந்த உஷ்ணமான வியர்வைத் துளிகளைப் பனித்துளிகளாக்கியது. அவன் வெகுநேரம் அங்கேயே நின்று அந்த வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் மல்லிகை மணமும், வளையலின் ஓசையும், மெட்டியணிந்த பாதங்களின் டக்டக் ஓசையும், பட்டுப் புடவையின் சரசரப்பும், களுக்குச் சிரிப்பின் குலுக்கலும் ஏகமாய் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.
அசையவும் அஞ்சி உடலும் மனமும் நடுக்கம் கொண்டு நிற்கும் அவனுக்குத் திரும்பிப் பார்க்கவும் தைரியம் வரவில்லை.
வெள்ளி முளைத்த நேரத்தில் வீதிகளில் பால்காரர்கள் மாடுகளை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, தூரத்தே சேவலின் கொக்கரிப்பைப் கேட்ட பிறகு அவன் முகமெங்கும் பயத்தால் பொங்கிப் பொங்கிப் பிரவகித்த வேர்வை சற்று அடக்கம் கண்டது. அவன் தயங்கித் தயங்கி நடந்து வந்து மீண்டும் தனது படுக்கையில் போய்ப் படுத்தான். ஜன்னல் வழியே சூரியனின் வெப்பமான கதிர்கள் முகத்தில் வீசும்வரை தூங்கிக் கொண்டிருந்தான்.
பகல் வந்த பிறகு அவன் தனது தனிமைச் சிறையினின்றும் விடுதலையாகி, வாழ்க்கைச் சந்தடியில் பொதுவியக்கம் கொண்டான்.
ஆனால் மீண்டும் இன்று இரவு வரும் என்ற நினைவிலேயே அவன் மனம் நடுங்கினான்.
‘ஐயோ! இனிமேல் வாழ்க்கை முழுதும் எனக்கு இப்படித்தானோ? இரவெல்லாம் எனக்கு நரகம்தானோ? நான் பயந்து பயந்து இரவு முழுவதும் தவிக்கிறேன் என்று நினைக்கவே பகலில் எனக்கு வெட்கமாயிருக்கிறது. என் பயத்தைக்கூட பகிர்ந்துகொள்ளத் துணையற்ற தனிமையில் எவ்வளவு காலம் ஏங்கிப் புழங்குவது! இதைவிட, என்மீது அவள் இத்தகைய பயங்கரமிக்க ஆளுகைகொண்டு வதைப்பதைவிட, அவள் தன் வழியில், தான் போன பாதையில், தான் இருக்கும் சூன்யத்தில் என்னையும் அழைத்துகொண்டால் அந்த மரணத்தில் பூரணமான நிம்மதியாவது கிடைக்குமே?” என்று அவன் ஏங்கினான்.
2

சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் இரவில் தனது படுக்கையில் உட்கார்ந்திருந்தான்.
படுக்கைக்கு நெரே அவள் படம் இருக்கிறது. நடுவில் விளக்கு எரிகிறது. . . . அவன் உட்கார்ந்து அந்தப் படத்தை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்தவாறு இருக்கிறான்.
அந்தப் படத்தில் அவளது விகஸிக்கும் புன்னகை மாயம் போன்றோ, மயக்கம் போன்றோ இப்போது தோன்றவில்லை. அவளுடைய அந்தப் புன்னகையே பார்க்க பார்க்க விகஸிக்கும் தன்மையது என்று அறிவும் உணர்வும் ஒன்றித் தௌ¤வுறுகின்றன இப்போது.
உள்ளறையிலிருந்து மெட்டியின் ஓசை கேட்கிறது; வளையொலி குலுங்கி உதிர்கிறது . . மல்லிகையின் மணம் மிதந்து வந்து நெஞ்சைத் தழுவுகிறது.
அவன் அச்சம் கொள்ளவில்லை.
ஏனெனில், இவை யாவும் நினைவல்ல, நிஜமே!
– ‘என்ன? . . . அவள் இறந்து ஒரு மாதமாகவில்லை! அதற்குள் இவளா? சீசீ! இவன் என்ன மனிதன்!’
ஊரும் சுற்றமும் இப்படிப் பேசுவதை அவனே கேட்டான்.
‘பட்டு! உலகம் கிடைக்கிறது, தள்ளு! இது என் பிரச்னை . . . என் சம்பத்தப்பட்ட உன் பிரச்னை . . . உணர்வுப் பிரச்னை . . . உலகப் பிரச்னையல்ல . . பட்டு, அவர்கள் சொல்வதைக் கேட்க எனக்கு சிரிப்புதான் வருகிறது . . உன் மேலே எனக்கு ஆசையே இல்லையாம்; அதனாலே நீ எப்ப சாவேன்னு இருந்தமாதிரி ஒரு மாசத்துக்குள்ளே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டேனாம் . . பட்டு, எனக்கு ஹிருதயமே இல்லையாம் . . . அவர்கள் சொல்கிறார்கள்.
‘அடீ, பட்டு! அவர்கள் சொல்வதுபோல் எனக்கு உன்மேலே ஆசையில்லாமலிருந்தால் . . . எனக்கு ஹிருதயமே இல்லாதிருந்தால் . . . இந்தக் கல்யாணமே நடந்திருக்காது!’
‘என் உணர்ச்சிகளிலே, என் ஹிருதயத்திலே உன் ஆட்சி எவ்வளவு சக்திகொண்டு இருந்ததுங்கறது அந்த சிம்மாசனம் காலியாகிப் போனப்பறம்தான் தெரியுது . .ஓ! சில விஷயங்கள் ஆளப்படுவதற்காகவே இருக்கின்றன . . .. . அவற்றின்மீது ஆளுகை அற்றுப்போனால் அவை அர்த்தமில்லாமல் போயிடும் . . அதுபோலத்தான் நான் பத்து வருஷம் உனது ஆளுகைக்கு உட்பட்டு, அதில் சுகம் கண்டு பழகிப்போயிட்டேண்டி, பட்டு! திடீர்னு நீ என்னை அனாதரவாய் விட்டுட்டுப் போயிட்டா, நான் துறவுகொண்டு விடணும்னு சம்பந்தமற்றவர்கள் எதிர்பார்க்கிறாங்க.
‘எவன் ஆளுகிறானோ அவனுக்கே தனது ஆளுகையை உதறிவிட்டுத் துறவு பூணுவதும் சாத்தியம் . . . ஆனால் ஆளப்பட்டவனுக்கு அந்த சக்தி ஏது? . . .
‘பட்டு! . . . தாயின் அரவணைப்பும் அன்பும் எப்படி இருக்கும் என்கிறதை நான் அனுபவிச்சதில்லை. அனுபவிச்சிருந்தால் ஒரு மாற்றாந்தாய்க்கு சிறு வயதில் நான் ஆசைப்பட்டிருப்பேன் . . .
‘மனைவி என்பவளை மிகவும் கொச்சையாக உலகம் புரிந்து கொள்கிறது . . நான்கூட அப்படித்தான் நினைச்சிருந்தேன் . . உடலில் விளைந்த உறவு உடலோடே நின்றுவிட்டால் அது வெறும் விபச்சாரம்தான் . . உடல் ஆத்மாவின் வீடு என்பார்கள் வேதாந்திகள் . . உலகில் மிகப் பலர் தோலிலே சுவைக் கண்டுவிட்டவர்கள் . . தோல் சுளைக்குக் காப்பு என்பதை அறியாதவர்கள் என்றே தோன்றுகிறது . .தாயிடம் பெற்று அறியாத அவற்றை எல்லாம் தாயாகித் தந்தாய் நீ . . . தாய் தரமுடியாத ஒன்றையும் தந்தாய் நீ . . .அந்தச் சுகமெல்லாம் வெறும் வெளி மயக்கமா? ஏமாற்றா? கனவா? மருளா?
‘இல்லை . . இல்லை . . . அவை மெய்யுணர்வுகள்; சத்தியமான சுகங்கள். அதனால்தான் அறிவுக்கு நீ இல்லாமல் போனவளே எனினும், உணர்வுக்கு ஆயிரம்மடங்கு அதிக வேகத்துடன் உனது ஆளுகையின் முற்றுகை எனக்கு வேதனையும் தவிப்பும் அளிக்கிறது . .
‘தாயற்ற பிள்ளை, தாயின் அரவணைப்பையும் சுகத்தையும் அனுபவித்த மதலை, மாற்றுத் தாய்க்கு ஆசைப்பட்டால் அது குற்றமாகுமா? . .
‘தன்னால் தவிக்கவிடப்பட்ட அந்தக் குழந்தையைத் தாயைப்போல் பரிவு காட்டி ஒருத்தி அணைத்து தேற்றுவது காண அந்தத் தாயின் ஆத்மா இந்த மாற்றுத் தாயை வாழ்த்தாதோ? . . போட்டிக்கு இங்கு இடம் உண்டா? . . சொல்லுடி பட்டு!
‘பட்டு! கதைகளில், சினிமாக்களில் கூறுவதுபோல் நான் இறந்துவிட்டால் நீ வேறு கல்யாணம் செய்துகொள், அல்லது என்னைத் தவிர வேறு யாரையும் நினைக்கமாட்டேன் என்று சத்தியம் செய்துகொடு என்று நாம் பரஸ்பரம் வாக்குத்தத்தம் செய்து கொண்டோமில்லை. அப்படிப்பட்ட பைத்தியக்காரர்களாய் நாம் வாழவில்லை. அதுவுமில்லாமல், நீ இறந்தபிறகு நான் உன்னோடு உறங்கிய படுக்கையில் தனித்துக் கிடந்து, நிம்மதியாக உறங்கமுடியுமெனில் உன்னோடு உறங்கிய இரவுகள் எல்லாம் அர்த்தமற்ற இரவுகள் என்றல்லவா ஆகிவிடும் . .? உனது ஆளுமைக்கு ஒர் அர்த்தமில்லை என்றல்லவா ஆகிவிடும்! ஆனால் உண்மையில் உன்னோடு கழித்த இரவுகள் எல்லாம் சுவர்க்கத்தில் கழித்த விநாடிகள் என்றும், உன் மடியில் நான் அனுபவித்த, நீ எனக்கு அருளிய அந்தரங்க சுகமெல்லாம் சகல போகங்களிலும் மகத்தானவை என்றும் நீ இல்லாத போதுதான், உன்னை நான் இழந்த பின் தான் முழுமையாக உணர்ந்தேன். நீ இல்லாமல் உனது நினைவுகளே அவ்விதம் உணர்த்த முடிந்தது என்றால் உனது ஆளுகையின் அர்த்தம்தான் எவ்வளவு மகத்தானது!
‘சுகத்தையும் ஆனந்தத்தையும் தந்த உனது நினைவுகளால் நான் மனம் குலைந்தேன் . . அஞ்சினேன் . . சித்தம்குலையுற்றவன் போலும் பேய்ப் பிடித்தவனைப்போலும் தொடர்ந்து பல இரவுகள் உறக்கமின்றி அலைக்கழிந்து கொண்டிருந்தேன் . . இவைத்தானா உனக்கு நான் செலுத்தும் நன்றி? . .
‘யாரை நினைத்து உடல் புல்லரிப்பேனோ அவளை நினைத்து மெய்விதிர்க்க ஆரம்பித்தது என்ன கொடுமை! எவளுடைய வருகை, எவளுடைய பிரசன்னம், எவளுடைய புன்னகை, எவளுடைய உடல் மணம் எனக்கு சுவர்க்கமோ, அவை எல்லாம் எனக்கு ஒருப் பேய்க் கனவாகவும் அசுர வேட்டையாகவும் மாறுவது எனின், நான் என் ஆத்மாவுக்கே துரோகியாகிறேன் என்பதைத் தவிர வேறு என்ன பொருள், சொல்லுடி பட்டு?
‘இது உனக்குச் சம்மதமாகாது என்பதையும் நான் உணர்ந்தேன் . . .
‘நாம் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆண்டுகொண்டு, ஆள்கிறோம் என்ற உணர்வே அற்று ஆளப்படுகிறோம் என்ற உணர்வு மட்டுமே கொண்டு வாழ்ந்தோம் . . உன் பிரச்னை உனக்குத்தான் தீர்ந்துவிட்டது . . ஆனால் எனக்கு நீ பிரச்னையானாய் . . அது மட்டுமா? . . எனக்கு நானே ஒரு பிரச்னையானேன் . .
‘உன்னை, உன்மீது கொண்ட அன்பை, நீ அளித்த இன்பங்களை வழிபடவும், உனது ஆளுகையிலிருந்து விடுபட்டது ஒரு மகிழ்ச்சிகரமான விடுதலையல்ல என்பதனாலும் மீண்டும் நான் ஆளப்படவே தவியாய்த் தவித்தேன்.
‘நான் இவளை மணந்துகொண்டேன். ஏன், உன்னை நான் காதலிப்பதால் மட்டுமேதான்! ஆம், என் உணர்வின் மீதுள்ள உனது ஆளுகை என்னை நிர்ப்பந்தித்தது; கட்டளையிட்டது. நான் பணிந்தேன் . . திடீரென சகலவற்றையும் வெறுத்து துறவு கொள்ள ஏற்றதான துன்பமிகுந்த இல்வாழ்க்கையை எனக்கு நீ அளிக்கவில்லை . . எனக்கு ஹிருதயம் இருக்கிறதடி, பட்டு! . .
‘இவள் உனது பிரதிநிதி! உனக்கு சமர்க்கப்பட்டுவிட்ட என்னை உனது பிரதிநிதி ஆளுகிறாள் . .
‘உலகம் கிடக்கிறது உலகம் . . இது ஒன்றில் இணையும் இரண்டு இனிய பாதிகளின் பிரச்னை! யாருக்கும் சொந்தமற்ற உலகத்தின் பொதுப் பிரச்னையல்ல! . .
– அப்போது அவன்ருகே மல்லிகையின் போதைமணமும், பட்டுப் புடவையின் சரசரப்பும், மெட்டியின் மெல்லிய ஓசையும் வந்து சூழ்ந்தன.
அவன் கண்களை மூடி அமர்த்திருந்தான்.
‘களுக்’கெனக் குறுஞ் சிரிப்புத் தெறித்து உதிர “என்ன இது குழந்தை மாதிரி உட்காந்தபடி தூக்கம் . . .?” என்று, அடங்கிய குரலில் வினவியவாறு அவன் அருகே அமர்ந்து அன்புடன் அவன் தோளை வருடி, செவியருகே குனிந்து, உஷ்ணமிக்க சுவாசத்துடன் ” ம் . . பாலைக் . . குடிங்க . . .” என்று வேண்டினாள் அவள்.
அவன் மோனமாக உட்கார்ந்திருப்பது கண்டு, ஒரு புன்னகையுடன் கையிலிருந்த பால் தம்ளரை அவன் உதடுகளில் பொருத்தி, அவனது பிடரியில் வளையொலிக்கும் கரத்தைத் தாங்கிப் பாலை புகட்டினாள்.
பாலின் சுவை உதடுகளில் ஊறி நாவில் படிந்து, வாய்க்குள் வழிந்து தொண்டையில் இறங்கியபோது அவன் கண் திறந்து, எதிரிலிருந்த படம் தன்னை நோக்கித் தாய்போல் கனிவுடன் சிரிப்பதைப் பயமற்றுப் பார்த்தான்.
துணையிருந்தால் பயமேது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *