ஆதிமந்தி ஆட்டனத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 26,540 
 
 

ஆதி மந்தி கண்களில் காவிரி ஆறு புகுந்து கொண்டது போலும் . அவள் உள்ளம் வேதனையால் வெதும்பிக்கொதித்துக் கொண்டிருந்தது. அவளால் ஆட்டனத்தியை ஒருகணப் பொழுது கூட நினைக்காமல் இருக்க முடியவில்லை,

ஆட்டனத்தி பேரழகன். மலையை ஒத்த தோள்களையுடையவன் அவன் ஊர்த்திருவிழாவின் போது மள்ளரோடு கழல்கள் அணிந்த தன் கால்களால் சுழனறு சுழன்று ஆடிய அழகு கண்டு மலைத்து நின்றாள் ஆதிமந்தி..அன்று அவன் நினைவால் அவளால் துணங்கைக் கூத்தில் கூட சரிவரப் பங்குகொள்ள முடியவில்லை. ஓரத்தில் நின்று துணங்கைக் கூத்தினை இரசித்துக் கொண்டிருந்த ஆட்டனத்திக்கு ஆதிமந்தி தன்மீது தனிக்கவனம் கொண்டுள்ளால் என்பதை உணர்வது கடினமாகவில்லை . மூங்கிலின் பளபளப்போடு அமைந்த தோள்களும் காந்தல் கண்களும் சிறுத்த இடையுமாய் அழகோவியமாய் ஆடும் அவளின் கடைக்கண் பார்வைக்காக் அங்குள்ள இளைஞர்கள் ஏங்கியிருக்கையில் அவள் தன் மீது காதல் பார்வையை எறிந்தது அவனுக்குப் பெருமையைத்தந்தது.

இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன. முதல் சந்திப்பிலேயே தாம் யுகம் யுகமாய் காதலராய் இருந்தவர்கள் என உணரத்தலைப்பட்டனர்.

அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது-அன்றில் பறவைகளைக் காணாதவர்கள்கூட இவர்களை அன்றில் பறவைகளுக்கு உதாரணமாகக் கூறினர். காதலால் அன்பின் எல்லையைக் தொட்டுவிட துடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் அந்தக் கொடுமையான நாள் அவர்கள் வாழ்வில் குறுக்கிட்டது.

அன்று ஆடிப் பெருக்கு. காவிரி அன்னைக்கு சோழன் கரிகால் வளவன் பெருவிழா எடுக்கிறான்.கழாஅர் என்ற காவிரிக் கழிமுகத்தை அண்டி அமைந்த ஊரில் இந்திர விழா கொண்டாடப்பட இருந்தது. அதில் கரிகாலன் முன், நீரில் நடனமாடும் வாய்ப்பு ஆட்டனத்திக்குக் கிடைக்கிறது. அவனுக்கு இணையாக காவிரி என்ற நடன மாது ஆடுகிறாள்.

கரிகாலன் ஆரவாரமிக்க தனது சுற்றத்துடன் காவிரிக்கரையில் வீற்றிருக்கிறான். பாணரது இசை எட்டுத்திக்கும் முழங்குகிறது,

அழகிய கச்சினை உடுத்தியவனாய் தனது கழல்கள் நீரின்மேலே தெரியுமாறும் இடுப்பில் கட்டியிருந்த பொன்னாலான மணி ஒலிக்கவும் தனது உடலைப் பலவாறு வளைத்து காண்பவர்கள் மகிழுமாரு தன் இணையான காவிரியுடன் இணைந்து நடனமாடுகிறான் அத்தி. அவன் ஆட்டத்தின் சிறப்பால் ஈர்க்கப்பட்டு அவனை தன்னுள் அடக்கிவிடத் துணிந்தது போல காவிரி திடீரென மிகுதியாய் பெருக்கெடுக்கிறது. அத்தியையும் காவிரியையும் புது வெள்ளம் அடித்துச் செல்கிறது.

ஆதிமந்தியால் கணவனின் பிரிவைத் தாங்கமுடியவில்லை. அவளும் அத்தியும் உயிரால் முழுமையாக இணைந்தவர்கள்.அதனால் அவள் உள்ளுணர்வு தன் கணவன் உயிருடன் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனாலும் அத்தி அவளைத்தேடித் திரும்பவில்லை.

“என்னை அவன் மறந்தானோ…”

அவளால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை. அவன் மறந்தால் என்ன அவனை நான் மறவேன். எவ்வாறாயினும் தேடி அடைவேன் எனத்தீர்மானித்துக் கொண்டாள்.

அவள் நாடு நாடாகச் சென்றாள். ஊர் ஊராக நடந்தாள். துணங்கை கூத்து நடக்கும் இடங்களிலும் மள்ளர் தழுவியாடும் ஆட்டக் களத்திலும் அவள் தேடுதல் தொடர்ந்தது. கண்டவர் நின்றவர்களிடம் எல்லாம் தன் காதல் கணவனைக் கண்டீரோ என வினாவினாள். பித்துப் பிடித்தவள் போன்று கலங்கி நிற்கும் இவள் நிலை பார்ப்பவர்களிடத்தில் பேரிரக்கத்தை ஏற்படுத்தியது.இவளின் காதலின் பரிதவிப்பு கண்டவரைக் கலங்கவைத்தது.

அப்படித்தான் அந்தக் கடற்கரை ஊருக்கும் அவள் வந்தாள்.

காவிரி நதி அத்தியோடு இணையாக ஆடிய காவிரியை தன்னுள் இழுத்துக்கொண்டாலும் அத்திமீது இரக்கம் கொண்டு கரை ஒதுக்கிவிட்டது.கரையில் ஒதுங்கி இருந்த அத்தியை மருதி என்ற மீனவப் பெண் கண்டாள். நதியின் இழுப்புக்கெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு உடலெல்லாம் புண்ணாகத் தன்னினைவற்றுக் கிடந்த அத்தியை தன் தோழியரின் உதவியுடன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றாள்மருதி..

தன் குடிசையில் வைத்து அவனுக்கு சிகிச்சை அளித்தாள் உடல் வேதனையால் தவிக்கும் அத்தியிடம் அவன் பெயரையோ அவன் வரலாற்றையோ கேட்க மருதிக்கு மனம்வரவில்லை.அத்தி மணமானவனா இல்லையா எனவெல்லாம் ஆராய அவள் முற்படவில்லை.

ஆனால் மெல்ல மெல்ல அத்தி பால் அவள் மனம் ஈடுபடத்தொடங்கியதை அவளால் தடுக்கவும் முடியவில்லை. அத்தி தன்னினைவற்ற நிலையில் “மந்தி மந்தி என் அன்பே” எனப் பிதற்றிய போது மட்டும் மருதி கவலையில் ஆழ்ந்தாள்.

அவனுக்கு உணவூட்டி மருந்து இட்டு சேவை செய்யும் போதெல்லாம் தன் காதலனுக்குச் செய்யும் சேவையாகவே கருதிச் செய்யளானாள். ஆனாலும் தன் மனக் கிடைக்கையை அத்தியிடம் சொல்லும் துணிவுமட்டும் அவளுக்கு வரவில்லை.

மருதியும் அழகிதான். கருத்த கற்சிலையின் நேர்த்தியான அழகு அவளுடையது. அவள் அருகாமையும் அவள் தன் மீது காட்டும் அளவு மீறிய அன்பும் அத்தியை என்னவோ செய்தன. மருதி வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும் அவள் தன்னைக் காதலிக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது.. சிலசமையம் தானும் அவள்மீது காதலில் வீழ்ந்துவிடுவேனோ என்ற பயமும் அவனுக்கு உண்டாகிற்று. அவனுக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது..

ஆதிமந்தி மீது அவன் கொண்ட காதல் அளவில்லாதது. அதுபோல் ஆதிமந்தியும் தன்மீது கொண்ட காதல் இந்த வானிலும் பெரிது. கடலிலும் ஆழமானது என்பது அவனுக்குத் தெரியும்.. தான் இல்லாது ஆதிமந்தி அளபரிய துன்பமும் தவிப்பும் அடைவாளே என எண்ணும் போது அசைக்க முடியாது கிடக்கும் தனது உடலை உதறிவிட்டு காற்றில் பறந்து அவளிடம் செல்லவேண்டும் என மனம் தவிக்கும்.இந்த மனத் தவிப்பின் போது தான் அவன் தனது காதல் வாழ்வு பற்றி மருதிக்கு சொல்லியிருந்தான். மருதி இப்படியொரு கதை அவனிடமிருந்து பிறக்குமென்று எதிர்பார்த்தவள் போலக் காணப்பட்டாள். ஆமை தன் ஓட்டுக்குள் தன்னை மறைத்துக் கொள்வதுபோல தன் காதலையும் மறைக்க முயன்று அவள் ஓவ்வொரு தடவையும் தோற்றுப் போகிறாள்.

இந்தத் போராட்டத்துடனேயே மாதம் ஒன்று கடந்துவிட்டது. அத்தி கோலூன்றி நடக்குமளவுக்குத் தேறிவிட்டான். அவனை வீட்டிலிருக்கவிட்டு மருதி பொது மன்றுக்குப் போயிருந்தாள்.

அங்கேதான் அவள் ஆதி மந்தியைக் கண்டாள். கண்களில் கலக்கமும் முகத்தில் ஏக்கமுமாய் அவள் ஆட்டனத்தியை தேடிவந்திருப்பதையும் மருதி கண்டாள்.பெரும் தவிப்புடன், “நானும் ஆடுகள மகளே என்னை வருத்ததில் ஆழ்திப் பிரிந்த எனது காதலனும் ஆடுகளமகனே. அவனைக் கண்டீரோ ” என மருதியையே வினவியபோது ஒருகணம் அவள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானாள்.

அத்திமீது காதல் கொண்ட மனம் இல்லை எனக் கூறச் சொன்னது. அனால் மனட்சாட்சியோ உண்மையை உரை என வற்புறுத்தியது. இந்தப்போராட்டத்தில் அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். இறுதியல் மனச்சட்சியே வென்றது .

மருதி பதில் கூறாது ஆதிமந்தயைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

அங்கு அத்தியை கண்டாள் ஆதிமந்தி.தன் காதலே தன் கணவனைத் தன்னுடன் சேர்த்துவைத்தது என அவள் உறுதியாக நம்பினாள். மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் பெருக அவனை அணைத்துக் கொண்டாள் பிரிந்தவர்கள் கூடிவிட்டார்கள்.அணைத்தது அணைத்தபடியே இருக்க சில கணங்கள் நழுவிச்செல்கிறது.

மருதி செருமி தன் இருப்பை உணர்த்தியபோதே அவர்கள் இவ்வுலகுக்கு வந்தனர். அதிமந்தி வெட்கத்துடன் புன்னகத்துக் கொண்டாள்.

அத்தி, மருதியின் கைகளைப் பற்றி அவளுக்கு நன்றி கூறினான். அவன் கண்களில் இருந்து ஒருசொட்டுக் கண்ணீர் அவள் கையில் விழுந்து அவள்கையைச் சுட்டது. அத்தி தன் மீது கொண்ட காதலை எரித்துவிட்டான் என்றும் அதன் சாம்பலின் சூடு தான் அது என்றும் மருதி எண்ணிக்கொண்டாள்.அந்த எண்ணம் அவள் உள்ளத்தையே வெடித்துவிடச் செய்துவிடும் போல இருந்தது.

“எனது பொக்கிசத்தை இதுவரை காத்து என்னிடம் ஒப்படைத்துள்ளாய். உனக்கு என்ன கைமாறு நான் செய்யமுடியும் “: என்றுகூறி நன்றிப் பெருக்குடன் அவளை அணைத்துக் கொண்டாள் ஆதிமந்தி.

இருவரும் விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.

மருதி தன்காதலை மறக்க முடியாதவளாக தகிக்கும் வெறுமையைப் பொறுக்கமுடியாதவளாக தமையனின் வள்ளத்தை தனியே எடுத்துச் சென்றதாகவும் புயலில் அவ்வள்ளம் அகப்பட்டதாகவும் அதன்போது அவள் இறந்ததாகவும் சிலர் கூறினர்.

சிலர் மருதி வேண்டுமென்றே கடலில் சென்று தன்னை மாய்த்துக் கொண்டதாகவும் கூறினர்.

எது எவ்வாறிருப்பினும் காதல் மட்டும் அழியாது வாழ்ந்துகொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *