அவள் வருவாளா?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 14,897 
 

வள் வருவாள் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

தொடக்கத்தில் இருந்தே எங்களுக்குள் சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தாலும் அதை நாங்கள் பெரிது படுத்தவில்லை. அன்று நான் அப்படி நடந்திருக்கக் கூடாதுதான். என்ன செய்வது ஆத்திரத்தில் எழுந்த முன்கோபம் என்னை அப்படிச் செய்ய வைத்து விட்டது. ஒன்றுமே இல்லாத விடையத்திற்கெல்லாம் கொஞ்ச நாட்களாகவே நாங்கள் முரண்டு பட்டுக் கொண்டிருந்தோம். ஒரு நாளுமே யாருக்கும் நான் கைநீட்டியதில்லை. ஒரு விநாடி தாமதித்திருந்தால்கூட அதைத் தவிர்த்திருக்கலாம். கைநீட்டக் கூடிய மாதிரி அன்று அவள் எனக்குள் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாள். ஆத்திரத்தில் அடித்து விட்டேன் என்று உணர்ந்தபோது ‘சொறி’ சொன்னேன். அவள் அதைக் கேட்பதாக இல்லை. இரவு முழுதும் அழுது கொண்டிருந்தாள். ‘அடிச்சுப் போட்டு சொறியா சொல்லுகிறாய்?’ என்பது போன்ற பார்வையிலே என்னைச் சுட்டெரித்தாள்.

நாலு சுவருக்குள் நடப்பதை, குறிப்பாக கணவன் மனைவிக்குள் நடப்பதை வெளியே சொல்லக்கூடாது என்பார்கள். இதைத்தான் ஆண்டாண்டு காலமாய் எம்மவர்கள் கடைப்பிடித்தும் வந்தார்கள். ஆனால் இவளோ மறு நிமிடமே தனது சினேகிதியிடம் சொல்லிவிட்டாள். அவசரப்பட்டு விட்டாள் என்று தான் முதலில் நினைத்தேன், ஆனால் அதுவே எங்கள் வாழ்க்கைக்குக் குழி தோண்டிவிடும் என்ற எதிர்பார்க்கவில்லை. இலவச தொலைபேசி எவ்வளவு சேதம் விளைவிக்கும் என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து வெளியேறிய வார்த்தைகள் அடுத்தகணமே பொதுச் சொத்தாகிவிட்டது.

‘மனுசியை அடிச்சிட்டானாம்’ பொறுக்கி எடுத்தவர்கள் முதுகுக்குப் பின்னால் நிறையவே பேசிக் கொண்டார்கள். குறிப்பாக இவ்வளவு காலமும் எங்கே இருந்தார்கள் என்றுகூடத் தெரியாத உறவினர்கள் சிலர் எங்களைப் பிரித்து வைப்தற்கென்றே காத்திருந்தவர்கள் போல மிகவேகமாகச் செயற்பட்டுக் கதை பரப்பினார்கள்.

வீட்டிலே என்ன நடக்கிறது என்று நான் ஆசுவாசப் படுத்த முன்பே எல்லாம் நடந்து விட்டது. அவரைப்போய்ச் சந்தி, இவரைப்போய் சந்தி என்று ஆளுக்காள் அவளுக்குச் செல்பேசியிலும், ரெக்ஸ் செய்தியிலும் புத்திமதி சொன்னதில், அவள் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்டு தனது சினேகிதியோடு இருப்பேன் என்று இறுமாப்போடு சொல்லிக் கொண்டு போய்விட்டாள்.

அவளைத் தேடிப் போன இடத்தில் அவளது சினேகிதியே உறைக்கும் படியாய் எனக்குப் பதில் சொல்லி அனுப்பி விட்டாள். உழைப்பதால் கையில் காசு வருகிறது, யாருக்கும் அவள் அடிமையாக இருக்க விரும்பவில்லையாம். மனைவியின் மனநிலையை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், அவளது சினேகிதி சொன்னதில் இருந்து அவள் என்னோடு பேசவிரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

என்னதான் வீறாப்பு பேசினாலும் கொஞ்சக் காலம்தான் அவளால் அங்கே தங்க முடிந்தது. யார்தான் ஒரு கர்பிணிப் பெண்ணை வைத்துப் பாதுகாக்க முன்வருவார்கள். மறுபடியும் அவள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு பிறந்த வீட்டிற்கே செல்ல வேண்டி வந்தது. நாட்கள் மாதங்களாய் ஓடி மறைந்தாலும், எனக்குள் குற்ற உணர்ச்சி அப்படியே இருந்தது. அவர்களாகச் சொல்லாவிட்டாலும் பெண் குழந்தை ஒன்று பிறந்ததாக உறவினர் சொல்லிக்  கேள்விப்பட்டேன். ஒரு தந்தைக்குரிய மகிழ்ச்சியைக்கூடப் பறிகொடுத்த நிலையில் அன்று நானிருந்தேன்.

குடும்ப வாழ்க்கையென்றால் அடிமை வாழ்க்கை என்ற எண்ணத்தை யாரோ அவள் மனதில் விதைத்திருந்தார்கள். ஏன் எங்களைப் பிரிப்பதற்குக் காரணமான அவளது சினேகிதியே அதைச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். எனக்குப் புத்திமதி சொன்னவர்களும் நல்லதை எடுத்துச் சொல்லவில்லை.
‘ஒரு பொம்பிளைக்கு இவ்வளவு திமிர் எண்டால் நீ ஏன் அடங்கிப் போகவேணும்? நீ பேசாமல் இரு, இவையெல்லாம் பட்டுத் தெளிய வேணும்’ சந்தர்ப்பம் பார்த்து உறவுகள் என்னை உசுப்பிவிட்டார்கள்.

அவள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியேறியபோது எனக்குள்ளும் அந்த வீம்பு இருந்ததனால்தான் நானும் மௌனமாக இருந்தேன். சந்தர்ப்பம் சூழ்நிலை எங்களைச் சிந்திக்க வைக்கவில்லை. மூன்றாம் மனிதரின் தலையீட்டின் ஆளுமை இருவர் மனதிலும் பதிந்திருந்திருக்கலாம். அவ்வப்போது சாம்பல் பூத்துக்கிடக்கும் நெருப்பை ஊதிப் பெருப்பிப்பதுபோல எங்கள் வாழ்க்கையிலும் விதி புகுந்து விளையாடி இருக்கலாம்.

புரிந்துணர்வு இருந்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது என்று புத்திமதி சொல்லிச் சென்றவர்கள் ஒரு பக்கமும், எவ்வளவு தூரத்திற்கு இப்படி விட்டுக் கொடுப்பது என்று தன்மானப்பிரச்சனையைப் பெரிது படுத்திவிட்டுச் சென்றவர்கள் மறுபக்கமும் இருந்து செயற்பட்டாலும் அவர்களின் நோக்கம் ஒன்றாகத்தான் இருந்தது. இப்படியே இந்தக் குழப்பத்திற்கு நடுவே அகப்பட்டு துடுப்பிழந்த படகாய் நாங்கள் இருவரும் தத்தளித்துக் கொண்டிருந்தோம். இலவசமாக எல்லோரும் ஆலோசனை சொல்லலாம். ஆனால் அதன் வலியும் வேதனையும் அதை உண்மையில் அனுபவிப்பவர்களுக்குத்தானே தெரியும்.

உண்மையைப் புரிந்து கொண்ட நல்ல நண்பர்கள் எங்களை ஒன்றாய்ச் சேர்த்து விடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள்.

‘ஒரே ஒரு வார்த்தை செல்லிவிடு, அதற்கும் அவள் கேட்காவிட்டால் திரும்பி வந்துவிடு.’ என்று அன்புக் கட்டளையிட்டார்கள். நானும் அதற்கு உடன் பட்டுச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.

பனி நிறைந்த குளிர் காலத்தில் ஒருநாள்,

அவள் குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிச் சென்றாள்.

அவளது இந்தத் துயரத்தில், துன்பத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது என்ற உணர்வு என்னை வதைத்தது. அவள் பிடிவாதக்காரியாக இருக்கலாம், ஆனால் எனக்கு நல்ல மனைவியாய் இருந்திருக்கிறாள்.

அவளை எதிரே சந்தித்தபோது ஒரு கணம் தயங்கி நின்றேன். அவளும் விலகிப் போகாமல் எதிரே நின்றாள். யாரே அந்நியரைச் சந்தித்தது போன்ற உணர்வோடு இருவரும் நின்றோம்.

‘ஐயாம் சொறி’  என்றேன் தயக்கத்தோடு.

‘ஏன் மன்னிச்சுடு என்று சொல்ல மாட்டீங்களோ, பெரிய மானஸ்தன்’

அவளது வளமையான துடுக்கான வார்த்தைகள் என்னைக் குத்திக் கிழித்தன. ஆனாலும் பொறுமையாய் நின்றேன்.

‘அதுதான் மன்னிச்சிடு என்று சொன்னேனே.’

‘செய்யிறதைச் செய்து போட்டு இப்ப வந்து மன்னிப்புக் கேட்டால் எல்லாம் முடிஞ்சிடுமோ?’ இயலாமையில் அவளது கண்கள் கலங்கின.

என்னிடம் பதில் சொல்ல வார்த்தை இல்லை. எனவே மௌனம் காப்பது நல்லதென நினைத்தேன்.

‘நான் இவளை வைச்சுக் கொண்டு படுகிற கஸ்டம் உங்களுக்குத் தெரியேல்லையே?’

‘தெரியும் அதுதான் தேடி வந்தனான்.’

‘எல்லாருக்கும் நான் வேண்டாதவளாய்ப் போய்விட்டேன். எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.’ தலையிலே அடித்து அவள் மெல்லச் சிணுங்கினாள்.

வீதியால் போனசிலர் திரும்பிப் பார்த்தார்கள்.

‘றோட்டில வேண்டாம் எங்கேயாவது போய்க் கதைப்போமே’ என்றேன்.

நான் குழந்தை வண்டிலைத் தள்ளிக் கொண்டு செல்ல அவள் அருகே நடந்து வந்தாள். உடம்பெல்லாம் மூடிக்கட்டியிருக்கக் குழந்தையின் முகம்மட்டும் தெரிந்தது.

சின்ன வயதில் எடுத்த என்னுடைய புகைப்படத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. அதில் லயித்துப் போயிருந்த என்னை எதிரே வந்த அவளது சினேகிதியின் குரல் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

‘என்னடி எவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு செப்பிறேசன் வாங்கித் தந்தனான். ஒரு நிமிடத்தில எல்லாத்தையும் உடைச் செறிஞ்சிட்டியே.’ அவமானத்தில் ஏற்பட்ட கோபத்தால் சினேகிதியின் முகம் சிவந்து போயிருந்தது.

இருவரும் சற்றுத் தள்ளி நின்று பேசினாலும், அவர்கள் பேசுவது எனக்கும் கேட்டது.

‘அந்த நேரம் எனக்கு அப்படித்தான் இருந்தது. இப்ப கடந்தகால வாழ்க்கை அனுபவம் என்னை யோசிக்க வைச்சிருக்கு’

‘அப்ப திரும்பி இவனோட போகப்போறியே?’

‘வேறை என்ன செய்யிறது?’

‘நீ அப்ப யோசிச்சிருக்க வேணும், உனக்காக எத்தனை நாள் நான் வேலைக்கு லீவு போட்டிட்டு நிண்டனான் தெரியுமே?’

‘தெரியும். நான் மறக்கேல்லை, இப்ப இவளைக் கையில வைச்சுக் கொண்டு நான் என்ன செய்ய?’

‘ஏன் இவ்வளவு நாளும் இவனே உன்னைத் தூக்கிப்பிடிச்சவன்?’

‘தனிய என்னால ஏலாது’

‘ஓ.. எனக்கு விளங்குது. உனக்கு இப்ப என்ன தேவைப்படுகுது எண்டு.. பனிக்காலமெண்டால் குளிருக்கை தனிய இருக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான், சூடு தேவைப்படுகுதாக்கும்’

அவள் வார்த்தைகளை நீட்டி முழங்கியபோது, அவள் எங்கே அடிக்கிறாள் என்று தெரிந்தபோது, இவள் குறுகிப் போனாள்.

‘அப்படி ஒண்டுமில்லை, என்னால தனிய இவளை வளர்க்க ஏலாது’

‘அப்ப இவனோடதான் வாழப்போறியே?’

‘வேற என்ன செய்ய? வீட்டிலையும் அதைத்தான் சொல்லுகினம்”

‘இவனெல்லாம் ஒரு ஆம்பிளையே, உன்னைக் கைநீட்டி அடிச்சவன்ரி’

‘இல்லை, ஆத்திரத்தில நான்தான் முதல்ல அவரை அடிச்சனான்’

‘என்னடி சொல்லுறாய்?’ சினேகிதியின் முகம் பேயறைந்தது போல மாறியது.

‘அவர் மானஸ்தன். அதுதான் நான் அடிச்சதை வெளியாலை சொல்லேல்லை.’

‘இனியும் உனக்கு அடிக்கமாட்டான் எண்டு என்ன நிச்சயம்?’

‘அவர் அடிச்சதுக்குக் காரணம் நானும்தான், அவரைச் சீண்டி விட்டனான். மற்றும்படி அவராக ஒருநாளும் கைநீட்டவில்லை, நம்பிக்கைதான் வாழ்க்கை எண்டு காலம் தாழ்த்தி எண்டாலும் புரிஞ்சு கொண்டன்.’

‘அப்ப நீ இவனோடதான் வாழ்றது எண்டு முடிவெடுத்திட்டாய்?’

இவள் எதுவும் பேசாமல் நின்றாள். இவளது மௌனம் அவளைச் சினம் கொள்ள வைத்தது.

‘என்னவோ செய், இனிமேல் என்னைத்தேடி மட்டும் வீட்டை வரவேண்டாம்’

‘சொறிடி, உனக்குக் கஸ்டத்தை தந்திட்டன்’

‘இப்பிடித்தான் ரமணியும் சொல்லிப் போட்டுப் போனவள். உங்களைப் பிரிச்சுவிடுறதுக்கு மட்டும் எங்கட உதவி தேவை, எங்களிட்டைச் சொல்லாமலே நீங்கள் ஒன்றாய் சேர்ந்திடுவீங்கள். கெதியாய் திரும்பி வருவியள் என்னட்டை உதவி கேட்டு, அப்ப பாப்பம்.’

இவள் சொல்ல வந்ததைக்கூடக் கேட்காமல், அவளது சினேகிதி சாபம் போட்டு விட்டு விரைந்தாள்.

அவள் முன்னால் செல்ல, நான் குழந்தை வண்டிலைத் தள்ளிக் கொண்டு மௌனமாகப் பின் தொடர்ந்தேன். அவளது சினேகிதி சொன்ன வார்த்தைகள் எனக்குள் குமைந்து கொண்டிருந்தன. இப்படியும் விரக்தியோடு சில பெண்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்று எனக்குள் சமாதானப் படுத்திக் கொண்டேன். அவளது தொடர்மாடிக் கட்டிடத்தை அடைந்ததும் அவள் குழந்தை வண்டிலை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

‘பாய்’ என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போய்விடுவாள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்.

‘உள்ளே வாங்களேன்’ தயக்கத்தோடு கேட்டாள்.

‘தாங்கள், தங்கட குடும்பம் எண்டு அவை கவனமாய் இருந்து கொண்டு மற்றவையை பிரிச்சுவிடுறதிலேயே இவை கவனமாய் இருக்கினம்’  உள்ளே நுழையும்போது அவள் முணுமுணுத்தது அப்படியே அவள் மனநிலையை எடுத்துக் காட்டியது. காலம் தாழ்த்தினாலும் உண்மை நிலையை இப்போதாவது புரிந்து கொண்டிருக்கிறாளே என்பதில் மனம் சாந்தி அடைந்தது.

‘இருந்து ரீவி பாருங்கோ கோப்பி போட்டுக் கொண்டு வாறன்’

தொலைக்காட்சியை இயங்க வைத்தாள். யாரோ கேட்ட நேயர்விருப்பம் போய்க்கொண்டிருந்தது.

விண்ணைத் தாண்டி வருவாயாவில் திரிஷா திரையில் ஏக்கத்தோடு அசைந்து கொண்டிருந்தாள்.

‘ஒருநாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்

உனைநான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. எனை மன்னிப்பாயா..?’

மெல்ல விழி உயர்த்தி அவளைப் பார்த்தேன், அவளும் என்னைப் பார்த்தபடியே நின்றாள்.

அவளது கலங்கிய கண்களைப் பார்த்ததும் எனது கண்களும் கலங்கிப் பார்வையை மறைத்தன.

ஆனாலும் இருவரின் உதடுகளும் ஒரே சமயத்தில் அந்தப் பாடல் வரிகளைத்தான்  முணுமுணுத்தன.

மன்னிப்பாயா..   மன்னிப்பாயா..!

Print Friendly, PDF & Email

1 thought on “அவள் வருவாளா?

  1. நீரடித்து நீர் விலகாது என்கிற சொலவடை உண்டு. அதுபோலத்தான் இப்படிப்பட்ட ஊடல்களும் கூடல்களும் என்பதை மிகச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் ‘அவள் வருவாளா?’ என்ற இந்தச் சிறுகதையில்.
    மன்னிப்பாயா…மன்னிப்பாயா… என்ற பாடல் வரிகளோடு கதையை மிக அழகாக நிறைவு செய்த கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    இவரது காதல் கடலில் , இந்தக் கதை, கரை ஒதுங்கிய வெண்சங்கு.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *