எனது கருப்பு நிற இன்னோவா காரை நுங்கம்பாக்கத்திலிருக்கும் நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து கிளப்பினேன். எப்போதும் சாதுவாக காரை இயக்கும் நான்.. இம்முறை அவசர கதியில் தப்பித்தோடும் மனப்பான்மையோடு..ரோடு தாங்காத வேகத்தில் இயக்கினேன். சிக்னலை மதிக்கவில்லை. சிவப்பு வண்ணமெல்லாம் எனக்கு ’நின்றுவிடாதே.. போ போ’ என்பதுபோல பச்சையாகவே தோன்றியது..
வேகம்.. அதிவேகம்.. இந்த சென்னையை விட்டு ஓடிவிடும் வேகம்….. விரட்டினேன்.. அதிவேகமாக விரட்டினேன். சென்னை எக்மோர் இரயில் நிலையம் செல்லவேண்டிய அவசரம். அவளும் என்னுடன் வரப்போகிறாள் என்கிற இன்பம், பொறுப்பு… சுமை எல்லாம் கூடி வேகமெடுக்க வைத்தது .. வேகம்…வேகம்.. அதிவேகமாய்……. சென்றேன்…. பின் வந்த வாகனங்களை முந்திச் செல்லும் வேகம் முன் சென்ற வாகனங்களை பின் தொடரவைக்கும் ஆதங்கம்.. ஓர் அபாய வளைவு.. வளைவில்…. என் கார் எதிரே ஒரு பெண்ணுடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வளைந்து வந்தான் என் வலையில் வீழ வந்தான்… அவன்….அவன்… அவன் தான்.. “ விடாதே ரூபா.. விடாதே…. ரூபன்…. கொல்லு… அவனை.. கொன்றுவிடு… நாசக்காரனை.. என் தொழிலை நாசம் செய்தவனை கொல்லு.. கொல்லு ” என்றது மனசாட்சியற்ற என் மனம். 130 வேகத்தில்…. செலுத்தியக் காரை .. மிக அனாசயமாக அவனது பைக்கை லேசாக தட்டி விட்டேன்.. என் கார் முட்டிய வேகத்தில் பறந்தான்.. வீழ்ந்தான்.. மடிந்தான்.. அவனோடு வந்த அந்த பெண்ணும் பலத்த ரணத்தோடு செத்தாள்.. நொடி பொழுதும் தாமதிக்கவில்லை… பக்க கண்ணாடியில் என் எதிரி சாவதை ரசித்தவாறே….. ஒரு இளையராஜா பாடலை இசைக்கவிட்டு… பறந்தேன்.. வந்துவிட்டேன்.. சென்னை எக்மோர் இரயில் நிலையம்.
அவள் இன்னும் வரவில்லை. அலைப்பேசிக்கு தொடர்புக்கொண்டேன். அழைப்பு செல்கிறது. அவள் அழைப்பை ஏற்கவில்லை.. “ நீங்கள் தொடர்புக் கொண்ட வாடிக்கையாளர்……….. “ அடச்சே…. இரண்டு மூன்று முறை… மூன்று நான்கு முறை தொடர்ந்து விடாமல் இந்த கணினி பெண்ணே பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் அலைப்பேசியை எடுக்கவில்லை. ஒருவேளை அவள் ஆட்டோவில் வந்துக்கொண்டிருக்க வேண்டும். சரி.. இரயில் மாலை 5: 55 க்கு தானே.. மணி இப்போது 4 : 40 தானே ஆகிறது. வரட்டும்.. காத்திருக்கிறேன்.
அவள்…. அவள்..!
என் மனப் பிருந்தாவனத்தில் எழில் அற்ற தருணத்தில் வந்துச் சேர்ந்த வசந்தம் அவள். வறண்ட அன்பு அருவியில் கொட்டிய மழை அவள். என் நாளத்தில் அவள் இரத்தம். என் தாளத்தில் அவளே சத்தம்.
ஒரு கவிதையின் தளத்தில் அறிமுகமாகி…முகநூலில் வார்த்தைகள் பரிமாறி.. மனம் பரிமாறி… என் நாளையசாதனை காவியத்தின் அடித்தளமாகப் போகிறவள். இப்போதெல்லாம் என் பெற்றோருக்கு அடுத்து பந்தம், சொந்தம், பாசம், அன்புக்கு அவள் பெயரை அன்றி வேறு பெயரை உச்சரிப்பதில்லை என் நாக்கு. சிந்திப்பதில்லை என் மூளை. இனி நான் சிந்தும் வியர்வை அவளுக்காக மட்டுமே. அவள் எனக்கொரு குழந்தை. ஆகச்சிறந்த கவிதை
ஓர் இலையுதிர் காலத்தில் என்னை பற்றிக்கொண்டவள். நான் கனவாக.. கடவுளாக செய்த தொழிலை துரோகியொருவன்..நாசப்படுத்தி நான் மிகவும் தனிமையில் துயரத்தில் வாடிய தருணத்தில் அவள் பணியை உதறி.. அவளையும் உதறி என்னுடன் இணைந்தவள். ” முடியும் ரூபா.. உன்னால் முடியும்.. அசராதே..அசராமல் அடி.. ஆவேசம் மாறாமல் உழை.. உன்னால் முடியாதென்றால் வேறு எந்த கொம்பனாலும் முடியாது. போனால் முடிதானே.. முடி.. முடி.. செய்து முடி.. வெற்றிப்படி.. தொட்டுக் காட்டு நீ.. “ ஒரு கவிதைப் போலவே என்னை உசுப்பேற்றி.. என்னை மீள வைத்தவள். அவளுக்கென குடும்பம் இருக்கிறது.ஆனால் அவளுக்கென யாரும் இல்லை. அவளுக்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன். அவள்.. அவள்.. அவள்.. என் சுவாசம்.
எங்களுக்கு இடையே என்ன உறவு.. என்ன உறவு.?. இன்னும் தீர்மானிக்கவில்லை. தீர்மானிக்க தேவையில்லை. ஆனால் தீர்மானமாக சொல்வோம். நான் அவளுக்கு.. அவள் எனக்கு உயிர். வைரமுத்து சொன்னாரே… இம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.. நீ இல்லையென்றால் இடுகாடு பக்கம். அப்படியான ஒர் உறவையும் மிஞ்சும் உறவு எனக்கும் அவளுக்கும். ம்ம் அவள் இம் என்றும் சொல்லவேண்டாம். இல்லை என்றும் சொல்லவேண்டாம். உறவு கேட்டு.. எல்லாம் கெட்டு போகவேண்டாமென நான் மெளன உறவு ஒன்றை விரும்பினேன். அவளும் தான்.
இப்படியான மெளன உறவில்.. எங்கிருந்தோ வந்துவிட்டான். அவளுக்கான அவன். அவளைப் பற்றி எதையும் என்னிடம் சொல்லியவள். அவனைப் பற்றி எதையும் ஏனோ சொல்ல வில்லை. ஓர் எரிமலைக் குழம்பில் தவித்த பறவையின் சிறகாய் தத்தளித்து கொண்டிருந்தவளின் முக குறி எனக்கு சொல்லிவிட்டது.அவனால் அவள் பாதிக்கப்படுகிறாள் என. என்ன என ஒரு முறை கேட்டும் சொல்லமறுத்தவள். “ ரூபன்.. உனக்கு இது தெரியவேண்டாம் டா. உனக்கிருக்கும் பிரச்சினைல.. இது வேறயா.. வேண்டாம் டா. உன் பிசினஸ் டெவலெப் பண்ணு.. அதுல மட்டும் கவனமா இருடா.” என் மீது மிகுந்த அக்கறைக் கொண்டவள் அப்படித்தான் சொல்வாளென எனக்குத் தெரியும். என்றாலும் ராட்சத பாசத்தை அவள் மீது வைத்துவிட்டு.. அவளை எப்படி நான் தவிக்க விட முடியும்.? அவனைப் பற்றிய விசாரணையை அவளுக்குத் தெரியாமலே செய்தேன்.
அவன் அவளின் காதல் கணவன். திருமணம் முடியும்வரை தெரியாத அவனின் சுயரூபம் திருமணத்திற்கு பிறகு தெரியவந்தது. வேலை வெட்டிக்கு போக விரும்பாதவன். வேலையிலிருப்பதாக நம்ப வைத்து காதலித்து திருமணமும் செய்துக்கொண்டிருக்கிறான். குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டவளை அன்பாய் பொக்கிஷமாய் பாதுகாப்பதை விடுத்து.. பணம் போடும் பொன் முட்டையாய் எதிர்பார்த்திருக்கிறான். அடங்கி அடங்கி பார்த்தவள்.. பெண்மைக்கே உண்டான அமைதியோடு.. அவன் போதையிலிருந்த ஒர் இரவில் அவனிடமிருந்து தப்பித்து சென்னைக்கு வந்துவிட்டாள். ஒரு பெண் குடும்பத்திலிருந்து தனித்து விடப்பட்டவளென தெரிந்தால்.. ஒரு பெருநகரம் எவ்வாறு அணுகும்.. எவ்விதமான நடத்தைக்கு உள்ளாக்கும் என்பது அறிவிக்க தேவையில்லாத ஒரு அபாயம் தானே.! ஆகையால் என்னிடம் ஒரளவு உண்மையை உரைத்தவள்… ஊருக்கும் பேருக்கும் பாதுகாப்பாய் உண்மையை மறைத்திருக்கிறாள். ஒரு கவிதை தளத்தில் எனக்கு அறிமுகமானவள் தான்… என் கவிதைக்குள்ளிருக்கும் உணர்வை உணர்ந்து என்னை அணுகியவள்.. தொழில் முறை உறவாய் மலர்ந்து. விரக்தி கொண்ட இரு மனநிலைக்காரர் கள் ஒன்று சேர்ந்த உறவாக வளர்ந்துக்கொண்டிருக்கிறது.
இப்போது அவன் வந்திருப்பது… அவளைத் தேடிதான். இப்போது அவன் சென்னையில் பெரிய செல்வாக்கு உள்ள கட்சிக்காக உழைக்கும் ரவுடிக்கும்பலில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்த ஒரு காரணத்திற்காகவே என்னிடம் அவனைப் பற்றி சொல்லாமல் இருந்திருக்கிறாள்.
அவனைப் பற்றி முழுமையாக அறிந்தப்பின்பு.. அவளிடமே நான் நேரடியாக கேட்டுவிட்டேன். எதையும் மறுக்கவில்லை. கண்ணீரை மட்டும் சிந்தினாள். என் நேயத்திற்கு உரியவள் சிந்தும் கண்ணீர் என் இருதயத்தில் பாய்ந்த வெந்நீராய் எனை வாட்டியது. வெகுண்டெழுந்துக் கேடேன் “ சொல்லு.. அவனை போட்டுத் தள்ளிடலாமா.?
“அய்யோ ரூபா.. உனக்கு எப்போதுமே அவசரப்புத்தி. உணர்ச்சி வசப்பட்டு நீ எழுதுற கவிதை மாதிரி இது இல்ல. சரியா. ? அவன் மிரட்டுவான்.. நான் மிரளமாட்டேன். வெறுத்துப் போய் அவனே போயிடுவான். உன்னால அவன எதுவும் பண்ண முடியாது. எதாவது செஞ்சி.. இருக்கிற வருமானத்தை கெடுத்துக்காதே. ”
“அப்படின்னா வேற என்ன தான் வழி.. ? லீகல்லா போகலாமா..? டைவர்ஸ் வாங்கிடு.. அவன் எந்த கட்சியில எந்த புடுங்கியா இருந்தாலும் நமக்கென்ன. சட்டப்படி ஒரு பொண்ண டார்ச்சர் பண்ணுவது தப்புதான்….”
“ரூபா.. பெரிய புத்திசாலியா இருந்தா மட்டும் பத்தாது. சமியோசிதமாவும் யோசிக்க பழகு. பளீஸ்.. சட்டமே அவன் கட்சி பாக்கெட்டுல தான் இருக்கு.. தெரியுமா..? எதாவது செஞ்சி.. அவன் வாயால என்னை கோர்ட்டுல விபச்சாரின்னு சொல்ல வச்சிடாதே..அவன் எதையும் சொல்லக்கூடிய ஆளு. கும்பிட்டு கேட்கிறேன். மானத்தோடு வாழ்வோம். “
அவள் அப்படி வலியுறுத்தி சொன்னபோதும் எனக்கு மனம் கேட்கவில்லை. ஒரு இரவில் அவனை தனியாக ஒரு டாஸ்மாக் கடை முன்பு பார்த்தபோது… வேண்டுமென்றே வம்பிழுத்து.. அவன் கையிலிருந்த பீர் பாட்டிலாலே அவன் மண்டையை பிளந்தேன். அவனும் என்னை தாக்கினான். எனது வலது கை சிறிய கீறல் மட்டுமே விழந்தது. கூட்டம் கூட ஆரம்பித்த உடன்… நான் எனது காரை எடுத்து தப்பி வந்துவிட்டேன். யாரோ எனது கார் நம்பரை பார்த்திருப்பார்கள். எப்படியும் விசாரித்து வந்துவிடுவார்கள். ஒருவித பதட்டம் வந்தது. சட்டென முடிவு செய்ய வேண்டிய சூழ்நிலை. ”அவள் சொன்னது போல எனக்கு அவசரப்புத்திதான். என்ன செய்யலாம். என்ன செய்யலாம். நல்ல வேளை ஆபீஸ் ஒரு வாரம் லீவ்வா இருக்கு. இப்போதைக்கு அங்க எவனும் போய் எந்த தகவலும் வாங்கமுடியாது. நான் தங்கி இருக்கிற வீட்டுல… விசாரிச்சா…. நான் போலீஸ்ல மாட்டிகிட்டா.. அவ கதி… ? அவன்கிட்டிருந்து அவளை காப்பாத்தா தானே இத செய்யுறேன். சரி.. தொழிலை எப்போது வேணும்னாலும் பார்த்துக்கலாம். ஆனா… என் தீபா தீபா… நான் தான் காப்பத்தனும். ஹைதராபாத் போயிடுவோம்…. அங்க இதே வேலை என்னால செய்ய முடியும்.. .. அடச் சே.. முகமூடி போட்டு அவன அடிச்சிருக்கனும். இல்லனா.. அடிச்ச உடனே காரை எடுத்து வந்திருக்க கூடாது. தப்பு பண்ணிட்டேன்…. பண்ணிட்டேன்.. ”
அவளுக்கு அலைப்பேசியில் அழைத்து நடந்ததை அனைத்தும் சொன்னேன். என்னை வெகுவாக கோபித்துக்கொண்டவளை சமரசம் செய்து. ” ஹைதராபாத் போயிடலாம். அங்க போயி எதாவது செஞ்சிக்கலாம் வா.. ” என்றேன் .
கார்ல போனால்.. நம்பரை வைத்து கண்டுப்பிடிச்சிடுவாங்களே என்றாள்.
”காரே வேண்டாம் .. நீ வா போதும். நீதான் முக்கியம் ”என்று நான் உடனடி முடிவெடுத்து சொல்ல மறுத்தாள். மறுத்தவளுக்கு மறுப்புச்சொல்லி.. இன்று மாலை எக்மோர் வரச்சொன்னேன்.
காரிலிருந்து புறப்படுவதற்கு முன் அவளை அழைத்தேன். அவள் லேடீஸ் ஹாஸ்ட்டலில் தங்கியிருந்தாள்.
“ கிளம்பிட்டியா பா. சீக்கிரம் வா. நான் காத்திருப்பேன்.”
“ ம்ம்ம்.. அவசரப்புத்தி.. அவசரப்புத்தி.. உன் அவசரப்புத்தினால. எல்லாம் போச்சு.. நீ இப்படி செய்வேன்னுதான் .. நான் எதுவும் சொல்லாம இருந்தேன். “
“சரி சரி புலம்பாதே.. இனி என்ன நடக்கனும் மட்டுந்தான் பார்க்கனும். ”
“ம்ம்ம்ம் உன் காரை யாராவது நோட் பண்றாங்களான்னு செக் பண்ணிட்டே ஒட்டு. இல்லன்னா. நீ… ஆட்டோ பிடிச்சி எக்மோர் போயிடுடா..அதுதான் சேப். ”
“இல்ல இல்ல.. நான் சீக்கிரமா போயிடுவேன். கார் நம்பர் ப்ளேட்ல ஸ்டிக்கர் ஒட்டிப்பேன். டோண்ட் வொரி… உன் பர்த் டேக்கு நான் கொடுத்த வைலட் கலர் சுடிதார் போட்டுட்டு வா பா.. ”
” என்ன தீடிர்ன்னு.. இந்த ரணகளத்திலும்….. ம்ம்ம்ம்.. ரூபா..”
”இல்ல தீபா தோணிச்சி… நாம வேற ஊருக்கு போறோம்ல “ சம்மந்தம் இல்லாமல் எதையோ உளறினேன்.
“ ம்ம்ம் சரிங்க பாஸ்…. உங்க ஆர்டர்.. கேட்டுக்கிறேன். “
இந்த நாளின் அந்திவானத்திலிருந்த சூரியன் ஏனோ காதல் பூத்து வெட்கப்படுவது போலவே எனக்குத் தோன்றியது.
நுங்கம்பாக்கத்திலிருந்து நான் எனது கருப்பு நிற இன்னோவா காரை எடுத்து கிளம்பியவுடன் அவளுக்கு மீண்டும் அழைத்தேன்.
“ரூபா.. உன் வைலட் கலர் சுடியில தான் இருக்கேன். ஆனா..சாரி டா லேட் ஆகும் போல.. இங்க சிட்டி பஸ்லாம் வரலன்னு சொல்றாங்க. என்ன செய்ய.. ?
“ அஞ்சு அம்பதுக்கு டிரெயின் பா.. இப்போ மணி 4 ஆச்சி.. அங்கிருந்து வர….ஒன்றரை மணி நேரம் ஆகுமே. “
“ ஒகே.. என் ப்ரெண்டோட அண்ணாவோட வந்துட்டா… பைக்ல.. “
“ பைக்லயா…? அண்ணா தானே.. சரி… வா.. வந்தா சரி.. “
“ என்ன அண்ணா தானே.. ? என்ன ரூபா புதுசா பொசசிவ்னெனஸ்லாம் ”
“ அதெல்லாம் ஒன்னுமில்ல.. வா.. பை. ..டேக் கேர்..
தீபா… நான் காத்திருப்பேன் தீபா.. “
“ ரூபா.. வந்திடுவேன் டா.. காத்திரு… ரொம்ப காக்க வைக்கமாட்டேன். “
இந்த சின்ன உரையாடல் கூட அப்போது என் மனதிற்கு பெரிய சுகம் கொடுத்தது.
இன்னோவா காரின் நம்பர் ப்ளேட்டில் ஸ்டிக்கரை வைத்து மறைத்தாலும்.. வெகு சீக்கிரமாக எக்மோர் சென்றுவிட வேண்டும்.. எப்படியும் சென்னையை விட்டு தீபாவுடன் வெளியேற வேண்டுமென எண்ணத்தோடு அதிவேகமாக வந்தபோதுதான் என் தொழிலை நாசமாக்கியவனை எதிரில் கண்டேன். எனக்கு துரோகம் செய்து ஒடியவனை இப்போதுதான் பார்த்தேன். அவன் முகத்தை மறக்க முடியுமா. பார்த்தநொடியில் கொலைவெறி தூண்டியது. நெடுநாள் அவன் மீது வைத்திருந்த வன்மம்.. தீர்க்க கிடைத்த சந்தர்ப்பம்.. முட்டினேன்..செத்தான் துரோகி… ஆனால் பாவம்..அவனோடு ஒரு பெண்ணும்….
ஆமா…அந்த பெண்…. அந்த பொண்ணு… போட்டிருந்த சுடிதார் கலர்…………….. !!!!????
“ ரூபா.. உனக்கு எப்போதுமே அவசரப்புத்திடா………….” தீபா அடிக்கடி அடிக்கடி என்னிடம் கடிந்துக்கொண்டு சொல்லும் வார்த்தைகள் வலியாய் உணர்த்தியது இப்போது.