அழாத கண்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 7,761 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சமர்களும் சம்பவங்களும் விபத்துக்களும் ஒன்றன் பின் ஒன்றாகக் காளான்கள் போல் கிளம்பும் நிம்மதியற்ற இந்தப் பிரபஞ்சத்தில் சிறிது அமைதி நிலவுகின்ற இடமொன்று இல்லாமல் இல்லை. அரசியலில் அதிர்ச்சியை உண்டாக்கியவர்களும், குடும்ப விவகாரங்களில் தாடிகளைப் பிணைத்துவிட்டுக் கும்மாளம் அடித்தவர்களும், வானளாவிய மனக்கோட்டைகளைக் கட்டி வயிறு புடைக்கச் சிரித்தவர்களும், வறுமையிலே வதங்கியவர்களும், அமீர்களும், அவர்களிடம் யாசகம் பெற்ற பக்கிரிகளும் தங்கள் தங்கள் வாழ்நாட்களை ஒருவாறு தட்டிக் கழித்து விட்டு இறுதியில் அடைக்கலம் புகுவது அந்த ஓர் இடத்தில்தான். உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகள் அவ் விடத்தில் இல்லை. ஆண் பெண் என்ற பிரிவினை அங்கே இல்லை. ஆனால் சாதி, மதம் என்ற பாகுபாடு மாத்திரம் என்ற குதலைச் சொல்லை வீரிட்டுக் கிளப்பியது முதல் உலகத்தாரிடம் இறுதி ‘ஸலாம்’ வைத்துவிட்டு மறையும் வரை இஸ்லாம் என்ற மதத்தை ஆலிங்கனம் செய்து நின்ற ஜீவன்களுக்குத்தான் அங்கே தஞ்சம் உண்டு. மற்றவர்களுக்கு அந்தப் பாக்கியம் கொடுத்து வைக்கவில்லை.

அடர்ந்த இலைகளைக் கொண்ட பரந்த கிளைகளையுடைய வாதுமை மரங்களும் இலுப்பை மரங்களும் அவ் விடத்தைச் சுற்றி வரம்பாக நின்றன. ஹோவென்று அலறிக்கொண்டு வீசும் அனற்காற்றில் அவதியுற்ற இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து எழுப்பிய பயங்கரச் சலசலப்பு அங்கு நிலவிய அமைதியை மெதுவாகக் கலைக்கத் தொடங்கியது. அந்தச் சோக ஒலியைக் கேட்ட ஆந்தைகள் மரப் பொந்துகளின் வெளியே தங்கள் கழுத்துக்களை நீட்டி வெடுக்கு வெடுக்கென்று நெரித்துத் தங்கள் வெறுப் பைக் காட்டத் தொடங்கின. இரைச்சல் பேரிரைச்சலாக மாறியதும் அங்கும் இங்கும் கல்லறைகளும் சமாதி களும் சிதறிக் காணப்பட்ட அந்த இடத்தில் பீதியை உண்டாக்கும் சூழ்நிலை வியாபித்தது.

வெய்யோனின் கொடுமையினாலோ, அன்றி ஜன்ம பலாபலன்களின் விளைவினாலோ சமாதிகள் சரிந்தும் பிளந்தும் மயிர் சிலிர்க்கும் கோரக் காட்சியைத் தோற்று வித்தன. மடிந்த பின் மண்ணோடு மண்ணாகியும் மாநில மக்கள் மறவாதிருக்க நாமகரணங்களும் ‘மெய்க் கீர்த்தி களும் சூட்டிக்கொண்ட கல்லறைகள் கவிழ்ந்தும் உடைந் தும், இதுதான் உன் முடிவு !’ என்ற மறுக்க முடியாத உண்மையை மனிதப் பிறவிக்குப் பறைசாற்றித் தெரிவித்துக்கொண்டிருந்தன.

காலடிச் சுவடுகளினால் ஏற்பட்ட ஒற்றையடிப்பாதை யொன்று வளைந்தவண்ணம் அங்குமிங்கும் ஓடி ஓர் பாழடைந்த கிணற்றை அடைந்தது. கிணற்றருகில் சோகமே உருவெடுத்தது போல் நின்ற கொய்யா மரத்தின் கிளை யொன்றில், வாதாங்கொட்டையை மிக்க சுவாரசியமாகச் சுவைத்தபடி வௌவால் ஒன்று ஹாய்யாகத் தொங் கிக்கொண் டிருந்தது. தேடாத தருக்களை யெல்லாம் தேடித் திரிந்த அதன் காதலன் அதைக் கண்டவுடன் சரே லென்று பாய்ந்து காதலியை எழுப்பிக் கொள்ள எத்தனித்தான். ‘கிரீச் கிரீச்’ என்று அந்தக் காதலர்கள் குஷியுடன் பரிமாறிக்கொண்ட காதல் மொழிகள் மரத்தின் நிழலிலே கல்லறை ஒன்றை மஞ்சமாக அமைத்துக்கொண்டு கவலை ரேகைகள் படர்ந்த வதனத்துடன் படுத்திருந்த கிழவனின் செவிகளில் நாராச ஒலிபோல் வீழ்ந்தன. அவன் அண் ணாந்து பார்த்தான். வட்டமிட்டுத் திரியும் வௌவால் கைகளைப் பிசைந்து கொண்டு எழுந்தான். வெறுப்பும் எரிச்சலும் அவன் முகத்தில் மாறிமாறித் தோன்றி மறைந்தன. பலத்த போராட்டம் அவன் உள்ளத்தில் உருவாகிக் கொண்டிருந்ததை அவனுடைய நிலைமை பளிச்சென்று எடுத்துக் காட்டியது.

சப்பி எறிந்த மாங்கொட்டையைப் போன்ற கன்னங்கள்; சுருக்கங்கள் படிந்த குறுகிய நெற்றி; இலவம் பஞ்சைப் போன்ற தாடி. கிழிந்த ‘பினாங்’ பனியன் ஒன்று அவன் அகன்ற மார்பை மறைத்திருந்தது. பஞ்ச வர்ணக் கயிலியை இடுப்பில் இறுகக் கட்டி அதைச் சுற்றி அகலமான தோல் பெல்ட்டைக் கட்டியிருந்தான்.

அவன் வாழ்க்கையே ஒரு விசித்திரம். அந்த இடந் தான் அவன் ஜீவனத்தின் அஸ்திவார மென்று கூறிவிட லாம். ஆறடி நீளமும் நாலடி அகலமும் எட்டடி ஆழமும் கொண்ட பள்ளத்தை அந்த இடத்தில் அவன் தோண்டி விட்டால் இரண்டு ரூபாய் கூலியாக அவனுக்குக் கிடைத்து விடும். தவிர உடுத்துக்கொள்ள ஆறு முழம் ‘துப்பட்டா’த் துண்டை அவனுக்கு ‘ஜகாத் தாகக் கொடுத்துவிடு வார்கள். அவ்விடத்திற்கு அவன் காவலனாக இருந்த தால் தினம் ஒன்றுக்கு இரண்டு படி அரிசி அவனுக்குக் கிடைக்குமாறு மசூதியின் ‘ஜமாத்’ ஏற்பாடு செய்திருந் தது. சமாதிகளையும் கல்லறைகளையும் சுத்தப்படுத்தி, தண்ணீர் தெளித்துப் பூச்செடிகளை வளர்ப்பது அவன் முக்கிய வேலையாகும். ஏதாவது ஒரு கல்லறையை உட் காருவதற்கு ஆசனமாக அமைத்துக்கொள்வான். தரை யில் கிடக்கும் வாதுமை இலைகளைக் கால்களினால் அப்புறப் படுத்தி அங்கு ஒளிந்திருக்கும் ஓணான்களை விரட்டுவது அவன் பொழுது போக்காகும்.

அவன் உள்ளத்தில் வீசிக்கொண்டிருந்த சூறாவளியின் உக்கிரம் தணிய ஆரம்பித்தது. வேப்பம் பழங்களைத் தேடிக்கொண்டு சமாதிகளின் மீது துள்ளித் திரியும் அணில் கள் அவன் கண்களுக்குத் தென்படலாயின.

“காசீம்!” என்று ஹக்கீம் எழுப்பிய உரத்த குரல் அவன் செவிகளில் லேசாக வீழ்ந்தது. எழுந்து நின்றான்.

“இனிமேல் அல்லா ஹுத்தாலா மெஹரில் தான் வுட்டுட வேணும். செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சாச்சு” என்றார் ஹக்கீம். அவர் நாட்டு வைத்தியர்.

“எனக்கு ஒண்ணுமே புரியல்லே” என்றான் அந்தக் கிழவன் தழுதழுத்த குரலில், கைகளைப் பிசைந்து கொண்டு.

“நமக்கெல்லாம் மேலே ஆண்டவன் ஒருத்தன் இருக் கானென்பதை மறந்துவிடாதே. மனிதன் கையிலே என்ன இருக்கு? நாடி தளர்ந்து போச்சு. இனிமே நடக்க வேண்டிய வேலையைப் பாரு. உன் மாமூ , காலா, சச்சா இவங்களை வரச்சொல்லி ஆள் அனுப்பிடு. ரொம்பத் தொலைவிலிருந்து அவர்களும் வரவேண்டியதாயிருக்கு. நான் போய் நாளைக் காலை – ‘ஸபரு’ – வர்றேன். தைரியமா இரு இவ்வாறு ஆறுதல் மொழிகள் கூறிவிட்டு மறைந் தார் ஹக்கீம்.

சுற்றி நிற்கும் கல்லறைகளுக்கிடையே அந்தக் கிழவனும் ஒரு கல்லறை போல் ஸ்தம்பித்து நின்று விட்டான். குடிசையை அடைந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். திக்குமுக்காடித் திணறிக்கொண்டு அவன் துணைவியின் அடிவயிற்றிலிருந்து மேலெழுகின்ற பெருமூச்சு அவன் செவிகளில் தெளிவாக வீழ்ந்தது. அருகில் அமர்ந்து அவள் சிரத்தை அன்புடன் எடுத்துத் தன் மடியின் மீது வைத்துக்கொண்டு நீண்டதொரு பெருமூச்சு விட்டான். சிக்குகள் கொண்ட அவள் கேசத்தை அவன் விரல்கள் தடுமாற்றத்துடன் கோதிவிட்டுக்கொண் டிருந்தன. அவன் மாசற்ற மனம், கடந்த நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றா கப் புரட்டிப் பார்க்கத் தொடங்கியது. முப்பத்தாறு வரு ஷங்களுக்கு முன் அவன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் அப்பொழுது அவன் நினைவுக்கு வந்தது.

அந்தக் காலத்தில் அவன் கட்டுக்கு அடங்காத காளை. அவன் பரந்த மார்பையும், கொழு கொழுவென்றிருந்த புஜங்களையும், ஒளி வீசும் விழிகளையும் கண்டு அவ்வூராரே பெருமைப்பட்டார்கள். மண்வெட்டியைக் கைகளினால் எடுப்பதுதான் தாமதம், பத்தே நிமிஷங்களில் ஒரு பள்ளத்தைத் தோண்டி விடுவான். ஒரு சமயத்தில் அவ்வூரில் காலராவிற்கு அநேகர் பலியானார்கள். அவர்களை அடக்கம் செய்யும் பொறுப்பு அவன் தலையில் வீழ்ந்தது. நாளொன்றுக்கு நாற்பது குழிகளைத் தோண்டும் படியான நிலைமை ஏற்பட்டபோதிலும், வெகு எளிதாகச் சமாளித்துவிட்டான். அவ்வளவு பிணங்களையும் தன் கைகளினாலேயே புதைத்தானே வாழ்நாளில் ஒரு தடவை யாவது மனந்தாளாது அவன் நயனங்கள் கலங்கினவா? கண்கள் அழுதனவா? இல்லவே இல்லை! அவன் திறனைக் கண்டு ‘குழிதோண்டிக் காசீம்’ என்று பெருமையாக அவ்வூரார் அவனைக் கூப்பிடத் தொடங்கினார்கள். நாட்கள் செல்லச் செல்ல, மமதையும் மளமளவென்று அவன் மதியில் ஏறியதை அவன் ஷோக்’ மைனர் நடை, மசூதியின் டமாரம் போல் முரசொலித்தது. அதன் விளை வாக ‘வஸ்தாத்’ வேலைகளில் அவன் ஈடுபட்டான். அடிகளும் குத்துக்களும் மற்றவர்களுடன் அவன் பரிமாறிக் கொள்வது அவனுக்குச் சர்வ சாதாரண மாகிவிட்டது.

‘வாலிப ஜோஷ்’ – முறுக்கு ஏறிய – அந்தச் சமயத்தில் தான் அவன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாயத் தைத் துவக்கினான் காலதேவன். ‘குழிதோண்டிக் காசீம்’ உண்மையிலே ஒரு குழியில் விழும்படி அவன் நிர்ணயித்து விட்டான். அது காதல் குழியாக இருக்க வேண்டுமென்றும், அதில் தவறி வீழ்ந்தால் சம்சாரம் என்ற ஏணியின் உதவியினால் தான் வெளியேற வேண்டுமென்றும் அவன் அந்த அத்தியாயத்தில் அழுத்தமாகத் தீட்டிவிட்டிருந்தான்!

காசீமின் ஒன்று விட்ட மாமன் ஷேக் மீரா ராவுத்தர் பள்ளிவாசல் தெருவின் கோடியில் வசித்து வந்தார். அவர் மகள் கதீஜா அண்டை வீடுகளுக்குத் தண்ணீர் ஊற்றி ஏதோ சில காசுகள் சம்பாதித்து வந்தாள். ஊரில் பல கிணறுகள் இருந்தபோதிலும், தண்ணீர் எடுப்பதற்குக் காசீம் வசிக்கும் அந்த மயானத்திலுள்ள கிணற்றுக்குத்தான் அவள் போவது வழக்கம். அதற்குக் காரணம் இல் லாமல் இருக்குமா? மெல்லிய மஞ்சள் நிற ஜிமிக்கி தாவணி மார்பழகை எடுத்துக்காட்ட, செவிகளில் வெள்ளி அலுப் புத்துக்கள் ஒன்றோடொன்று உராய்ந்து ரீங்காரம் எழுப்ப, முத்துப் புல்லாக்கு மூக்கில் அசைந்தாட, பூட்டுக் காப்பு கள் கரங்களில் ஒலிக்க, செப்புக் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு உடலை நெளித்துக்கொண்டு ஜிலுஜிலு வென்று அவள் கிணற்றடிக்குச் சென்று விட்டால், காசீம் அப்படியே அவள் வனப்பில் சொக்கிப்போய் வாயடைத்து நின்றுவிடுவான். அவளிடமிருந்து குடத்தை வாங்கித் தானே வலுவில் தண்ணீர் இறைத்து, குடத்தை அவள் இடுப்பில் எடுத்து வைப்பான். கதீஜா விழிகளை ஓர் சுழற் றுச் சுழற்றிவிட்டு அவ்விடத்தை விட்டு மறைவாள். அவள் மறுமுறை திரும்பி வரும் வரையில் பீடியைக் குடித் துக்கொண்டு கிணற்றின் சுவர்மீது அவள் வருகையை எதிர்பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். இவர்கள் ‘கண்ணாமூச்சி’ விளையாட்டை அந்தக் கல்லறைகளும் சமாதிகளுந்தாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

சில சமயங்களில் கதீஜா அச்சுப் பணியாரம், பிரா சாப்பம், வட்லப்பம் கொண்டு வந்து அவனுக்குக் கொடுப் பாள். அவற்றை ஆசையுடன் வாங்கிக்கொள்வான் காசீம். அவற்றைச் சாப்பிட்டுக்கொண்டே தன் பஹ தூர்ச் செயல்களையும், அடி, பிடி, உதை முதலிய முப்பட லங்களில் காண்பித்த சூரத்தனத்தையும் வழவழவென்று அவளிடம் சொல்லுவான். கதீஜா பூரிப்படைந்த போதி லும், அவன் பேச்சில் மமதை பிரதிபலிப்பதை அறிந்து சற்று அருவருப்புக் கொள்வாள். முகத்தைச் சுளித்துக் கொண்டு பல கோணங்களில் தன் வெறுப்பைக் காட்டு வாள். காசீம் அதைத் துளி கூடச் சட்டை பண்ணாமல் தன் பிரதாபங்களை அளந்துகொண்டிருப்பான். அவ னுக்கு நல்ல புத்தி கற்பித்து அவன் கர்வத்தை ஒடுக்கத் திட்டமிட்டான் கதீஜா!

அதற்கு ஒரு தருணம் வாய்த்தது.

“என்னாங்க! இது நெசமான்னு கேக்கிறேன். நீங்க பெரிய ‘வஸ்தாத் னு ஊரே கிடுகிடுக்குதே” என்று நாஸுக்காகப் பேச்சைத் தொடங்கினாள் கதீஜா. அச்சமயத்தில் காசீம் மளமளவென்று கயிற்றை இழுத்துக் கொண்டிருந்தான்.

“இரு, வந்து பதில் சொல்றேன்” என்று குடத்தைப் பிடித்துக் கிணற்றுச் சுவரின் மேல் வைத்தான். இப்போ தான் உனக்குத் தெரிஞ்சுச்சா என் சமாசாரம்?” என்றான் சற்று இறுமாப்புடன்.

“உங்க பிரதாபத்தை உங்க வாயாலேயே அடிக்கடி கேட்டு என் காது புளிச்சாறு மாதிரி புளிச்சுப் போச்சு. ஊராரு சொல்லிக்கிட்டப்புறந்தான், நான் நம்பினேன்” என்றாள் கதீஜா, புகையிலையை வலக் கன்னத்தில் புரட்டி விட்டு.

“இந்தாம் புள்ளே என்னே நல்லாப் பாரு” என்று தோளைக் குலுக்கிவிட்டுத் தன் மீசையின் விளிம்பை முறுக்கிக்கொண்டான். “குழிதோண்டிக் காசீம் எப்படிப் பட்டவன்னு இப்போதாவது தெரிஞ்சுச்சா? என் பெயரைச் சொன்னாலே, ஊரு கப்சிப் ஆயிடும். ஆமா” என்றான்.

“யா அல்லா! ஹும்”

“யாராவது கைவரிசே என்கிட்டே காட்டினா , அப்ப டியே அவனைக் குளிதோண்டி உசுரோட பொதச்சுட மாட்டேன்”

“சரிதான்” என்று சொல்லி, கதீஜா சட்டென்று கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து மேலெழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள். பாக்கு அவ்வளவு லகுவில் பாக்கு வெட்டியில் மாட்டிக்கொண்டது அவளுக்கு வியப்பாக இருந்தது.

“என்னாம் புள்ளே. சரிதான்னு சொல்லிட்டே என்னை எதிர்த்து நிற்க இந்தச் சீமையிலே எவனாவது இருக்கானா, சொல்லு. என்னைக் கண்டாக் கெளுத்தி மீன் மாதிரி குதிச்சுட்டு ஓடிடுவானே!”

“அவன் ஓடிட்டாலும், நீங்க கொக்கு மாதிரி அவ னைப் புடிச்சுடுவீங்களே!” என்று புகழ்ந்து அவன் ‘ஜோரை மேலும் கிளப்பிவிட்டாள் கதீஜா.

“கதீஜா, என்னை ஒரு பயலும் எதிர்க்கவும் முடியாது: ஏமாத்தவும் முடியாது.”

“ஏமாத்தக்கூட?”

“அட போம் புள்ளே ! நீயும் உன் வெட்டிப் பேச்சும்! நானா ஏமார்றவன்? என்னை ஏமாத்த உன்னாலேயும் முடி யாது, உன் வாப்பாவாலேயும் முடியாது” என்று சொல்லிக் கலகல வென்று உரக்கச் சிரித்தான் காசீம். அவள் வாப் பாவின் ஞாபகம் வந்ததும். “இதை வுட்டுத் தள்ளு, கதீஜா! நம்ப சங்கதி உன் வாப்பாகாதுலே போட்டு வச்சியா?” என்று குரலைத் தாழ்த்திக் கேட்டான்.

“அது என்னாங்க தலைபோற சங்கதி?” என்றாள், வெடுக்கென்று உதடுகளைப் பிதுக்கியவண்ணம்.

“பாத்தியா, குணத்தைக் காட்றியெ! இந்தாம் புள்ளே நீயே சொல்லு. எத்தனை நாளு ஊருக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சு, தவக்களே மாதிரி இப்படியே காலத்தைத் தள் ளணும்? ரம்ஜான் போய் ரம்ஜான் வந்துடுச்சு. ஷவ்வால் மாசத்திலேயாவது காரியத்தெ முடிச்சுடச் சொல்லி உன் வாப்பா காதுலே ஒரு வார்த்தை போட்டு வையேன். நிக் காஹ் ஆயி, உன் களுத்துலே ஒரு கருவமணி வுளுந்துட்டா அப்புறம் நம்ப பாடு ஜல்ஸாதான்” என்று காசீம் சொல்லி முடித்தான் மிக்க உணர்ச்சியுடன்.

வெட்கம் உடலை வருத்த மௌனமாக நின்று கொண் டிருந்தாள் கதீஜா. தாவணியின் தலைப்பைச் சுற்றிக் கொண்டு விஷமம் செய்துகொண்டிருந்தது அவள் சுண்டு விரல்.

“கதீஜா, சொல்லேன் மனசில் இருக்கிறதை” என்றான் காசீம், சற்றுப் பொறுமை இழந்தவனாய்.

“ஏன் இப்படிச் சண்டிக்குருதே மாதிரி குதிக்கிறீங்க?”

“என் மனசு துடிக்குது!” தீ மிதித்தவன் போல் காணப்பட்டான் அவன்.

“உங்களைப் பாக்கவே எனக்கு ‘காப்ரா’ வா இருக்கு. குஷ்திப் பயில்வான் மாதிரி இருக்கீங்க. உங்களைக் கட்டிக்கிட்டா … என் குலையே நடுங்குது!”

“ஏன் இந்த வெட்டிப் பேச்சு? நான் வேணுமா , வேணாமா? ஒரே பேச்சுலே சொல்லிடு.”

“அட அல்லாவே! இப்படி ஜல்தி பண்ணா நான் என்ன செய்வேன்! உங்களுக்கு ஒண்ணு குடுத்துட்டு அப் புறம் ஜவாப் சொல்ல இருக்கேன்.”

“என்னா கொடுக்கப் போறேன் தெரியுமா? சூடு!”

“சூடா! நான் மாடுன்னு நெனைச்சுக்கிட்டியா? என் னாம் புள்ளே பேத்தறே?”

“உங்களை நல்லா ஏமாத்தி, உங்க கர்வத்தைக் கப்பல் கவுர்றாப்பலே கவுக்கப்போறேன். பாருங்களேன், உங்க கண்ணாலே” என்று சொல்லிவிட்டுச் செப்புக் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒரு ‘தளுக்குக் காட்டி விட்டு மடமடவென்று சென்றாள் கதீஜா. காசீமுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் அப்படி அவள் பேசினாள் என்று புரியாது கலங்கி நின்றான். செவியில் செருகியிருந்த துண்டுப் பீடியை எடுத்துப் பற்றவைத்துக் காரமான புகையை நெஞ்சு எரியும்படி உள்ளே இழுத்தான்.

மறுநாள் மருண்ட விழிகளுடன் கிணற்றடியில் நின்ற கதீஜாவைக் கண்ட காசீம் கலகலத்துப் போனான்.

“கதீஜா , என்ன, இன்னைக்கு ஒரு மாதிரியா இருக்கே?” என்று பேச்சைத் தொடங்கினான் சஞ்சல உள்ளத்துடன்.

“சொல்லிட்டா உடனே கிளிச்சுடுவீங்க” என்று சள்ளென்று வீழ்ந்தாள் கதீஜா.

விசயத்தைச் சொல்லேன்” என்றான் தணிந்த குர லில், அவளது திடீர்த் தாக்குதலைச் சமாளித்துக்கொண்டு.

“நேத்து ராத்திரி, பெரிய கூத்து நடந்திடுச்சு. என் உசுரே போயிருக்கணும்! நாகூர் ஆண்டவர்தான் கைகொடுத்தாரு.”

“என்ன நடந்திச்சு? அதை முதல்லே சொல்லேன்.”

“ராவு எட்டு மணி இருக்கும். நிலா பால் போலக் காஞ்சுச்சு. விராலு மீனு இரண்டு வாப்பா கொண்டாந் திருந்தாரு. அதைக் களுவத் தண்ணியில்லேன்னு குடத்தை எடுத்துக்கிட்டுத் தன்னந் தனியா இங்கே வந்தேன். நீங்க அப்போ இல்லே. அந்தக் கொய்யா மரத்துக்கிட்ட வந் துட்டு இருந்தேன். ‘ஏ குட்டி, எங்கே போறே?’ன்னு மரத்து மேலேந்து ஏதோ கூப்பிட்டுச்சு. அங்கே திரும்பிப் பார்த்தா , என்னா சொல்லுவேன்! ஒரு குட்டிச் சைத்தான் கால்மேலே காலு போட்டுக்கிட்டு அந்தக் கிளையிலே உக்காந்திருந்துச்சு!”

“அப்புறம்” காசீம் வாயைப் பிளந்தவண்ணம் அசைவற்று நின்றான்.

“அது தாடியை – உருவிக்கிட்டு என்னைப் பார்த்துச் சிரிச்சுச்சு. குடத்தைத் தொபக்குன்னு கீளே போட் டுட்டு, அல்லா அல்லான்னு உசுரைப் புடிச்சுக்கிட்டு கொண்டாள் கதீஜா.

“நீ சொல்றது தமாஷாவா இருக்கு . குட்டிச் சைத்தான், தாடி உருவுச்சு. உன்னேக் கூப்பிட்டுச்சு! நானும் பொறந்த முத இங்கேதான் இருக்கேன். அப்படி. ஒண்ணும் நான் பாக்கவுமில்லை; கேட்கவுமில்லை” என்றான் காசீம். வியப்பும் சந்தேகமும் கலந்த தொனியில்.

“நான் சொல்றது பொய்யினு நினைச்சுட்டீங்களா? இதோ பாருங்களேன், குடங்கூட நசுங்கியிருக்கு” என்று சொல்லி, குடத்தில் இருந்த சொட்டையைச் சுட்டிக் காட்டி வீட்டு, “அந்தக் கொய்யாமரங் கிட்டக்கூடப் போவாதீங்க, சொல்லிட்டேன்!” என்று எச்சரித்தாள். ஏதாவது குரங்கையோ கோட்டானையோ கண்டு கதீஜா பயந்திருக்க வேண்டுமென்று எண்ணினான் காசீம். கொய்யா மரத்திடம் சென்று அவள் சுட்டிக் காட்டிய கிளையின் மீது ஏறி, இரண்டு கொய்யாக் கனிகளைப் பறித்து வந்து அவள் வாயில் திணிக்க வேண்டுமென்று உள்ளுறத் தீர்மானித்து லேசாகச் சிரித்துக்கொண்டான்.

“சரி, நீ இங்கேயே இரு. அந்தக் குட்டிச் சைத்தானைப் பிடித்துத் தரதரன்னு இளுத்துக்கிட்டு உன் முன்னாலே கொண்டு வர்றேன்” என்று சொல்லிக் கொய்யா நெருங்கியவுடன் எதிர்பாராத விதமாக , வாதுமை இலைகளினால் நேர்த்தியாக மூடி வைக்கப்பட்ட பள்ளத்தில் தடாலென்று வீழ்ந்தான். கலகலவென்று உரக்கச் சிரித்த கதீஜாவைக் கண்டதும் அவன் முகம் குபீரென்று அவமானத்தினால் வெளுத்து விட்டது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்து கதீஜாவை நோக்கி வேகமாகச் சென்றான். கதீஜா அவ்விடத்தை விட்டு ஓட. அவன் துரத்த, இறுதியில் கதீஜாவின் தாவணியின் தலைப்பு அவன் கையில் சிக்கிக்கொண்டது. மறுகணத்தில் அவன் அணைப்பில் சிக்கிக்கொண்டு தத்தளித்தாள் கதீஜா.

“வேடிக்கையா பண்றே?” என்று சொல்லி அவள் கன்னங்களையும் காதுகளையும் மனங்குளிர நன்றாகத் திருகினான்.

‘குளிதோண்டி வஸ்தாத் இந்தக் குட்டியிடம் ஏமாந் துட்டாரா இல்லையா?’ என்று இடித்துக் கூறி உரக்கச் சிரித்தாள் கதீஜா.

“நீ செஞ்ச வேலை தானா இது?” என்று சொல்லிக் கொண்டே பிடியைச் சற்று இறுக்கினான். வலி பொறுக் காமல் கதறினாள் கதீஜா.

“அதெல்லாம் நடக்காது. நீ என்னைக் கட்டிக்கிறேன்னு சொன்னாத்தான் நான் வுடுவேன். சொல்லு, சொல்லு” என்று சொல்லிக்கொண்டே அணைப்பை ஆலிங்கனமாக மாற்றிவிட்டான் காசீம்.

“கட்டிக்கிறேன்; கட்டிக்கிறேன்; சம்மதம்” என்று லஜ்ஜையும் வலியும் தாங்காமல் கதீஜா சொன்ன பிறகு தான் அந்தப் புலியிடமிருந்து அந்த ஆட்டுக்குட்டி பிழைத்தது.

அந்த ஒரு சம்பவம் அவன் இருதயத்தில் நிலைத்து நின்றது. நெடுமூச்சு உடலை உலுக்கிக்கொண்டு வெளிக் கிளம்பியது. கண்களை மெல்லத் திறந்தாள் அவள். சுற்றிலும் பார்வையைச் செலுத்திவிட்டுச் சோகமே உரு வெடுத்தாற்போல் வீற்றிருந்த தன் கணவனை அன்புடன் பார்த்தாள்.

“நீங்க இங்கேதான் இருக்கிறீங்களா?” என்றாள் நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு.

“ஆமாம், கதீஜா. நீ பேசி உடம்பை அலட்டிக்காதே” என்று பதிலளித்துவிட்டுக் கண் இமைகளை மூடிக் கொண்டான்.

“எப்பவோ நடந்த சங்கதி. ஒண்ணுவுடாமே கனாப்போல என் நினைவுக்கு வந்திச்சு” என்றாள் கதீஜா, அவனை உற்றுப் பார்த்துக்கொண்டு.

காசீம் மௌனம் சாதித்தான்.

மேலும் தொடர்ந்தாள் கதீஜா : “குளியிலே தள்ளி உங்களை ஏமாத்தினேனே அந்தக் காலத்திலே, ஞாபகம் இருக்கா? அப்போ நடந்த அந்தக் கதை இப்போ நடக் கிறாப்பலே என் மனசுலே தெரிஞ்சுச்சு.”

இதைக் கேட்டதும் காசீமுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் தன் செவிகளை நம்ப முடியவில்லை.

“அட! கொய்யா மரத்துக் குளியைப் பத்தியா பேசுறே நீ?” என்றான் விழிகள் வெளியே வந்துவிடும்படி.

“ஆமாங்க. அதுதான்” என்றாள் அவள் சாந்தமாக லேசான புன்முறுவல் அதரங்களில் தவழ.

“கதீஜா , அதைத்தான் இப்போது நான் நினைச்சுட் டிருந்தேன். நீயுமா….”

“உங்க மனசும் என் மனசும் ஒண்ணு இல்லியா? இத்தனை வருசம் கூடியிருந்து இது உங்களுக்குத் தெரியல்லே ?”

‘எத்தகைய உண்மை அது!’ என்று எண்ணினான் காசீம். அவன் கன்னங்களை ஆசையுடன் வருடினாள் கதீஜா .

“உங்க கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு சொல்ல ணும்னு ஆசை இருக்கு.”

“சொல்லு, கதீஜா” என்றான் பாசம் பொங்க.” அந்த ஆசையை நீங்க பூர்த்தி செஞ்சுடணும்; செய்றீங்களா?” என்றாள் ஆவல் நிறைந்தவளாய்.

“கட்டாயம் செய்வேன். எப்பனாச்சும் மறுத்தேனா?” ‘நான் என் மனசுலே இருக்கிறதைச் சொன்னா உங்க ளுக்குப் பிடிக்காது. இருந்தாலும் நான் சொல்லத்தான் போறேன். என் நாளு கிட்ட வந்திடுச்சு. இனிமே நான் பொளைக்கமாட்டேன். இது நிசம்.”

“இந்த மாதிரி பேசாதே, கதீஜா “

“உங்களுக்கு என்னா தெரியும்? என் நேரம் எனக்காக வாசல்லே காத்துக்கிட்டுக் கிடக்கு.”

“சும்மா இப்படிப் பேசி என் மனசை வாட்டாதே. உன் ஆசையைச் சொல்லு.”

“இதோ வந்துட்டேன். உங்களை ஏமாத்தி, பள்ளத் திலே தள்ளி , வேடிக்கை பண்ணித்தானே நான் நிக்காஹ் பண்ணிக்கிட்டேன்? இல்லியா?”

“அதுக்கு இப்போ என்னா” “சொல்றேன். இருங்க. என்னைப்போலவே நீங்க ளும் ஒண்ணு செஞ்சுடணும். அது நீங்க பண்ணிட்டா என் உசுரு நிம்மதியாப் போயிடும்.”

“சொல்லு, கதீஜா” என்றான் அவன் தழுதழுத்த குரலில்.

“உங்க கையாலேயே நல்ல குளி ஒண்ணு தோண்டி, அதிலே உங்க கையாலேயே என்னைப் புதைச்சுடுங்க மாட்டேன்னு சொல்லாதீங்க. இந்த ஆசை ரொம்ப நாளா என் மனசிலே இருக்கு.”

கதீஜாவின் சொற்கள் காசீமின் இருதயத்தைத் துளைத்து விட்டன.

“கதீஜா , நான் என்னத்தைச் சொல்லப் போறேன்?” என்று ஜீவனற்ற தொனியில் சொல்லி, “கதீஜா, நீ என்னை விட்டுட்டுப் போயிட்டா என்னை யார் கவனிக்கப் போறாங்க? என்னைத் தவிக்க விட்டுட்டுப் போகாதே கதீஜா. என்னையும் உன் கூடவே அழைச்சிட்டுப் போயிடு” என்று அலறினான்.

கதீஜா மிகுந்த கனிவுடன் , “நேரத்தைக் கழிக்காதீங்க. சட்டுனு போய் நான் சொன்ன வேலையைப் பாருங்க. இப்பவே நீங்க குழி தோண்ட ஆரம்பிச் சாத்தான் நல்லது. என் உசுரு போன அப்புறம் நீங்க ஒண்ணும் பண்ணமாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்க மனசு ஒத்துக்காது. சீக்கிரம் கிளம்புங்க. என் ஆசையைப் பூர்த்தி செஞ்சுடுங்க. என்னை இந்தக் கடைசி நேரத்திலே ஏமாத்திடாதீங்க” என்று சற்று ஆவேசத் துடன் அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு குலுக்கினாள்.

அவள் சிரம் அவன் மடியிலிருந்து நழுவி ஓலைப்பாயில் சறுக்கி வீழ்ந்தது.

எழுந்து நின்றான் காசீம். கதீஜாவின் முகத்தை வெறித்துப் பார்த்தான். பரணில் கிடந்த துண்டை அவள் மீது போர்த்தினான். மண் வெட்டியைத் தோளில் எடுத்து வைத்துக்கொண்டான். குடிசையை விட்டு வெளியே வந்தான். கொய்யா மரத்தை நோக்கித் தள் ளாடியவண்ணம் சென்றான். எந்த இடத்தில் ஒரு காலத் தில் தன் காதலியினால் ஏமாற்றப்பட்டுப் பள்ளத்தில் வீழ்ந்தானோ , எந்த இடத்தில் அவள் உள்ளத்தைக் கவர்ந்து சம்மதத்தைப் பெற்றானோ அதே இடத்தில் அவன் நடை நின்றது. மண் வெட்டியை உயரே தூக்கி, “யா அல்லா!” என்று உரக்கக் கத்தித் தரையில் வீழ்த்தி னான். அவன் கரங்களும் கண்களும் அந்தப் பணியில் ஈடுபட , அவன் உள்ளத்தில் சிந்தனை மேகங்கள் திரள ஆரம்பித்தன. முப்பது வருஷங்களாக இன்னல்களிலும் இன்பங்களிலும் பங்கெடுத்துக்கொண்டு, கனிமொழிக ளுடனும் சிரித்த முகத்துடனும் இல்வாழ்க்கை நடத்திய தன் துணைவியைத் தன் கைகளினாலேயே குழி தோண்டி அடக்கம் செய்யும்படி விதி நிர்ணயித்து விட்டதே ‘ என்று அவன் எண்ணியதும் ‘ஓ’ என்று கதறினான். மண் வெட்டி அவன் பிடியிலிருந்து நழுவித் தரையில் வீழ்ந் தது. நூற்றுக்கணக்கான சவங்களைப் புதைத்த அவ னுக்கு அப்பொழுதுதான் மரணத்தின் கொடூரம் புல னாயிற்று. குழி குழியாக வெட்டிப் பிணம் பிணமாகப் புதைத்து வாழ்நாளில் ஒரு தடவையாவது அழாத கண்கள் அந்த ஒரு கணத்தில் அழுதுவிட்டன. அவன் விழிகள் சுழன்றன. பெருத்த ஓசையோடு சண்டமாருதம் தன் முன் உருவாகி அவ்விடத்தைக் காரிருளாகச் செய்வதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. அங்கு நின்ற மரங்கள். சமாதிகள் கல்லறைகள் யாவும் அந்தச் சண்டமாருதத்தில் நிலை பெயர்ந்து கவிழ்வன போல் அவனுக்குப் பட்டது. அவன் உடல் முழுவதும் வேர்த்துவிட்டது. படபடக்கும் மார்பைக் கைகளினால் இறுக அழுத்திக்கொண்டு தன் குடிசையை நோக்கினான். ஒளி மிகுந்த சுடரொன்று குடிசையிலிருந்து வெளிக்கிளம்பி , ஒற்றையடிப் பாதை யில் நெளிந்து சென்று, கிணற்றைச் சுற்றிவிட்டுச் செல் வதைக் காண்பதுபோல் ஒரு பிரமை அவனுக்கு ஏற்பட் டது. அதைத் தொடர்ந்து செல்ல அவன் யத்தனித்ததும் அவன் கால்கள் தடுமாறின. தரையில் வீழ்ந்தான். மண் ணில் சாய்ந்த அவன் அதற்கே உரியவனாகி, ‘மௌத்’ என்ற மீளா நித்திரையில் ஆழ்ந்து விட்டான்.

லைலா மஜ்னூ, ஷீரீன் பர்ஹாத் கவிஞர்களின் கற்பனைக்குக் கருவூலங்களாக அமைந்துவிட்டார்கள். அதே பிரிவில் கலந்த இந்தக் காதலர்களின் கரடுமுரடான இரண்டு கல்லறைகள் எவரும் கேட்பாரற்றுக்காலத்தைக் கடந்து நின்றன!

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– ‘கலைமகளில்’ காட்சியளித்தவை

பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை http://www.sirukathaigal.com/tag/ஜமீலா/ சமர்ப்பணம் 'கலைமகளின் வளர்ப்புப் பிள்ளைகளில் ஒருவராகச் சிறுகதை உலகில் பிரவேசித்த நன்னாளன்று அன்பும் ஆசிகளும் சொரிந்து அடியேனை வாழ்த்திய, தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வரும் கவிஞரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஸ்ரீ கி.வா.ஜகந்நாதையர் அவர்களுக்கு, இந்தச் சிறுகதைத் தொகுதியைத் தாழ்ந்த வணக்கத்துடன் நான் சமர்ப்பிக்கின்றேன். ஜமீலா *** முகவுரை யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற அருமை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *