கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 27,826 
 
 

அந்த மழை நாள் காலையில் ஈரத்தலைமுடியை காய வைக்கக்கூட நேரமில்லாமல் வேர்க்க விறுவிறுக்க பயிலரங்குக்குள் நான் நுழைந்த பொழுது கிருபாநிதி வகுப்பை துவங்கியிருந்தார். புரஜக்டரின் ஒளி வெள்ளத்தில் திரையில் பவர்பாயிண்ட் ஸ்லைடுகள் பரப்பப்பட்டிருக்க அரங்கு முழுவதும் அரையிருட்டில் புன்னகைகள் தெரிந்தன.

’ஹ! இதோ சுபா வந்துவிட்டார்கள். இன்று முழுவதும் ஆண்களோடு மட்டும்தான் மாரடிக்க வேண்டுமென்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்’

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் சாஃப்ட் ஸ்கில் பயிற்சி வகுப்பு அது. இரண்டு பெண்களாவது குறைந்தபட்சம் வேண்டும் என்று கிருபா வலியுறுத்தியிருந்ததால் இம்முறை ராவ் வற்புறுத்தி என்னையும் அனுப்பி வைத்திருந்தார். மாமூலான அலுவல்களுக்கிடையே இம்மாதிரியான குழு ஆட்டங்களின் மூலம் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கிறது. இன்று இரண்டாம் நாள் பயிற்சி. இருட்டின் மசமசப்பில் வினிதாவைத் தேடினேன்.

‘வினிதா இன்று வர இயலாது என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டார். சுபா! ஒரு சின்ன உதவி. இந்தக் கயிறுகளை எல்லோருக்கும் விநியோகிக்க முடியுமா?’ என்று மூன்றடி நீளத்தில் மெலிதான சணல்க் கயிறுத் துண்டுகளை கொடுத்தார்.

இருவர் இருவராக அணி சேர்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்பொழுதுதான் கவனித்தேன் அர்ஷத்தும் தனியே அமர்ந்திருந்தான்.

‘வணக்கம் சுபாஜி! உங்களைப் பார்த்ததும் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது’

’ஹாய் அர்ஷத்! உனது பார்ட்னர் எங்கே? சந்தோஷ்தானே?’ நேற்றுத்தான் கல்லூரியிலிருந்து வெளியே வந்தவன் போல் இளமையாக இருந்தான். மார்க்கெட்டிங்கில் நல்ல திறமைசாலி என்று பொறுக்கி எடுத்து சேர்த்திருக்கிறார்கள்.

‘அவசரமான கான்ஃபரண்ஸ் கால். மதியம் வந்துவிடுவான்’

‘அணியில் ஒருவர் மற்றவரின் மணிக்கட்டில் இந்தக் கயிற்றின் முனைகளை வளையமாக கட்டுங்கள்.’ என்று கிருபாநிதி அவரே ஒரு அணியினருக்குக் கட்டிக் காண்பித்தார். கைவிலங்கு போட்டது போல் இருந்தது. ஆனால் இரண்டு மணிக்கட்டுகளும் நெருக்கமாக இல்லாமல், நடுவில் ஒன்றரை அடிக்கு இடைவெளி விட்டு நீளமாக இருந்தது. பொதுவாக ஏதாவது ரோல்பிளே செய்யச் சொல்வார்கள். அல்லது சூடான விவாதம் செய்ய வைத்து சத்தமாக சண்டை போட வைப்பார்கள். இது ஏதோ புதிய பயிற்சி போல…

‘சுபாஜி, கையைக் காட்டுங்கள்’ புன்சிரிப்போடு கேட்டான். கூட்டாளிகள் இல்லாத தனி ஆட்களாக நாங்கள் இருவரும் அவசர கூட்டணியாக சேர வேண்டியதாகிவிட்டது. அப்பொழுதுதான் நெருக்கத்தில் அவன் கண்களைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன். நீலத்தில் மிதக்கும் கனவுக் கண்கள். எனது புறங்கையை சுரண்டி

‘இதோ! இப்பொழுது உங்கள் முறை’ என்று இன்னொரு கயிற்றை நீட்டினான்.

கிருபா செய்து காட்டியது போல் செய்ததில் இருவரின் மணிக்கட்டையும் சுற்றி கைவிலங்குகள். ஆனால் நடுவில் இருக்கும் கயிறு ஒன்றுக்குள் ஒன்று பின்னிக் கொண்டு ஒரேச் சங்கிலியின் இரண்டு கண்ணிகள் போல் ஆகி விட்டது.

‘இப்பொழுது உங்கள் எல்லோருக்கும் ஒரு சவால். இந்தக் கயிறுகளை அறுக்காமல், கட்டுகளை பிரிக்காமல் உங்கள் பார்டனரிடமிருந்து விலக வேண்டும். அதற்கு நிச்சயமாக வழியுண்டு. நிதானமாக யோசித்து வழியைக் கண்டுபிடியுங்கள்.’

அங்கங்கே சிரிப்பொலிகள் கேட்டது. கட்டும்போதே ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்துவிட்டு கயிற்றை அறுக்காமலோ மணிக்கட்டில் கட்டியிருக்கும் கட்டை அவிழ்க்காமலோ இருவரும் பிரிவது என்பது எப்படி… என்று சுத்தமாகப் புரியவில்லை.

இவ்வளவு நெருக்கத்தில் சூரஜ் தவிர வேறு ஆணோடு இருந்ததில்லை. ஆனால் அர்ஷத்திடம் ஒரு அலாதியான அமைதி இருந்தது. என்னளவிற்கு நெர்வஸாக இல்லை. அவனுடைய எளிமையான பேச்சு என்னைக் கொஞ்சம் சமநிலைக்கு வரச் செய்தது. என்னென்னவோ வகையில் கைகளை வைத்துப் பார்த்தோம் இருவரும். அந்தக் கட்டுகளிலிருந்து விடுபட முடியவில்லை. சிறிது நேரம் கழித்துத்தான் உறைத்தது. அரங்கில் பெரும்பாலோர் எஙகள் இருவரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் வியர்த்தாலும் மனதிற்குள் ஒரு சின்ன சின்ன… உற்சாகம். அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை. விடுங்கள்.

‘நமது பெரும்பாலான உறவுகள், பணிகள் இது போலத்தான். நாமே விலங்கிட்டுக் கொள்கிறோம். நாமே பிரிக்க முடியாமல் அல்லாடுகிறோம். திருமண உறவு, நட்பு, வேலை எல்லாமே நாமே தேடிக் கொள்வதுதான். ஆனால் அது கழட்ட முடியாத விலங்காக இருந்தால் நமது வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியாக இருக்காது. உங்களது கண் முன்னே இருக்கும் தீர்வை எளிய முறையில் நீங்களே கண்டறியத்தான் இந்தப் பயிற்சி… ’ கிருபா நீளமான லெக்சர் கொடுத்துவிட்டு சுலபமான வழியில் கைகளை விடுவித்து காண்பிக்க சட்! இதற்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று எல்லோருக்குமே ஆச்சர்யமாக இருந்தது.

மதியம் எனது ஃபோனுக்கு ஒரு குறுஞ்செய்தி ’இன்று என் வாழ்வில் சந்தோஷ நாள். விரும்பி ஏற்றுக் கொண்ட விலங்கு அது…’ அனுப்பிய எண் புதியதாக இருந்தது. இதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பிரச்சினையில்லை. இவன் மாதிரி எத்தனை விடலைகளை பார்த்திருக்கிறேன். காலையில் தோன்றிய உற்சாக குமிழி அதற்குள் வடிந்துவிட்டது. பத்து நிமிடம் சேர்ந்தார்ப் போல் பேசினால் எப்படி மட்டமாக எடை போட்டு விடுகிறார்கள்?

அன்று மாலைதான் அய்ஷு சொன்னாள்

‘அம்மா! நான் அனுப்பின SMS கிடைச்சதா? செம க்யூட்டான மெசேஜ். உனக்கு ரொம்ப புடிக்கும்னு தெரியும். அதான் ஃபர்வேர்ட் பண்ணினேன்?’

‘எதுவும் வரலியே செல்லம்? எந்த மெசேஜ்?’

‘ஸ்மிதா ஃபோன்லேந்து வெட்டிங்டே விஷ் ஒண்ணு ஃபர்வேர்ட் பண்ணியிருந்தேனே. டாடிக்கும் அனுப்பிருக்கேன். நெக்ஸ்ட் வீக் வெட்டிங் டேக்கு அதே மெசேஜை ஃபர்வேர்ட் பண்ணுவார்ப் பாரு’

‘ஓ! அது நீதான் அனுப்பினியா? டாடிக்கு கல்யாணம் ஆனதே மறந்து போயிருக்கும் கண்ணு.’

மறுநாள் அர்ஷத்தைப் பார்க்கும்போது கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்தது. தேவையில்லாமல் அவனை சந்தேகப் பட்டிருக்க வேண்டாம். ஆரம்பத்தில் அவனோடு பேசும்போது அவனது கண்களைப் பார்த்து பேசுவது மிகவும் சிரமமாக இருந்தது. எல்டன் ஜானின் ’குழந்தைகளின் நீலக் கண்கள்’ பாடல் நினைவிற்கு அடிக்கடி வந்து கொஞ்சம் தொந்தரவுதான். அவன் அமைதியும் கலகலப்பும் கலந்த கலவையாக இருந்தான். அவனுடைய அனுபவக் கதைகள் மிகவும் சுவாரசியமானவை. நிறைய பெண்கள் அதில் இருந்தனர். உண்மையோ இட்டுக் கட்டிய கதையோ…

’நீ ஒரு சரியான் ஃப்ளர்ட் அர்ஷத். அதுதான் உன்னைப் பெண்கள் துரத்துகிறார்கள்’ என்றேன்.

‘பெண்களுக்கு என்னாலான சேவை அது சுபாஜி’ பெண்’கள்’ஆம். படவா!

ஒரு சமயத்தில் அலுவலகம், மீட்டிங், லஞ்ச், காஃபி பிரேக் என்று சகல நேரங்களிலும் அர்ஷட் ஆக்கிரமித்துக் கொண்டான். முதுகுக்குப் பின்னால் நிறைய முணுமுணுப்புகள்.

‘இந்த மிஸ்டர் & மிஸஸ் ஐயர் படத்தை எப்பொழுது் முடிக்கப் போகிறாய்?’

‘என்னது? என்ன கேட்கிறாய்… ’ வினிதாவின் கேள்வி சட்டெனப் புரியவில்லை. சற்று நிதானித்ததும், என்னையும் அர்ஷத்தையும் சம்பந்தப்படுத்தி அலுவலகத்தில் அரசல் புரசலாக உலவிவரும் பெயரைப் பற்றித்தான் கேட்கிறாள் என்று புரிந்தது. கார்ப்பொரேட் கலாச்சாரத்தில் முதுகுக்குப் பின்னர் பேசப்படும் பொரணிகளுக்கு பஞ்சமேயில்லை. வினிதா அவ்வளவு சீக்கிரம் இதைப் பற்றி வெளிப்படையாக கேட்டுவிடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. நகப்பூச்சை காயவைப்பது போல எப்பொழுதும் கைகளை உயர்த்தியே பிடிததுக் கொண்டு அபிநயத்தோடுதான் பேசுவாள்.

‘பூ்னைக் கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருட்டிவிடாது சுபா’

‘வினி! யோசித்துப் பேசு. எனக்கு பத்து வயதில் ஒரு மகளிருக்கிறாள். வெற்றிகரமான கணவன்…’

இடைவெட்டியவாறே ‘மாமனார், மாமியார், சொசைட்டி, கல்சர்….ப்ளா.. ப்ளா… ‘ என்றவள்

‘உன்னைப் பார். முப்பது வயதுக் கூட முடியவில்லை. அதற்குள் இத்தனை இரும்பு குண்டுகள் உன்னைச் சுற்றி’

வினிதா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவளுக்கு அந்த சுதந்திரம்தான் பிரானவாயு. ஆனால் குடும்ப பந்தங்களில் இருக்கும் அன்பு கலந்த பொறுப்புணர்ச்சியை இரும்பு குண்டாக சொல்ல முடியாது.

‘சரி விடு! அது உன் விருப்பம். ஆனால் அந்தப் பையன் செம ஹாட்’ கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்னாள். எண்ணிப் பார்த்தால் விருப்பத்தின் பேரிலா திருமணம் செய்து கொண்டேன்? சூரஜ்ஜின் துரத்தலும் அம்மாவின் பிடிவாதமும் ஜாதகத்தில் தோஷம் என்ற பயமுறுத்தலுமாய் கல்லூரி படிப்பு முடியுமுன்னரே கால்கட்டு.

‘சீச்சி! அர்ஷத் இஸ் எ கிட் வினி. வெகு கண்ணியமானவன். ஆண்களின் பார்வைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியும்’

’உன் நல்லதிற்குதானம்மா சொல்கிறேன். பாண்டே கூட இதைப்பற்றி என்னை விசாரித்தார். உன்னைப் பற்றி அவருக்கு அபாரமான நம்பிக்கை. அஃப்கோர்ஸ் நான் இப்போது பேசுவது ஆஃப் த ரெக்கார்ட்தான்’ வினிதாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த உரையாடலை சாமர்த்தியமாக அலுவலக குறிப்பாக்கி HR கோப்பில் சொருகி விடுவாள். தொடர்ந்து

‘அவனுடைய பழைய HR ரெஃப்ரெண்ஸ்கள் அவ்வளவு சுத்தமில்லை. முந்தைய கம்பெனியான நெட்விட்டியில் சிநேகா ஷெட்டி என்ற ரீஜனல் மானேஜரோடு நிறைய ஆட்டம் போட்டுத்தான் துரத்திவிட்டார்கள். கொஞ்சம் பாதுகாப்பான தூரத்திலேயே வைத்திரு’ என்றாள்

‘நன்றி வினி! நான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்தே செய்கிறேன். என்னைப் பற்றிய உனது கவனத்திற்கு மிக்க நன்றி’ ஜாக்கிரதையாகவே வார்த்தைகளை தேர்ந்தெடுத்தேன். நண்பியாக இருக்கும் வினிதா வேறு. HR மேலாளராக இருக்கும் வினிதா வேறு.

வினிதா சட்டென்று சன்னமாக குரலை தழைத்து

‘ஒரு சஜெஷன் சொல்லவா? பேசாமல் ஒரு ஒன் நைட் ஸ்டாண்ட் செய்து பாருங்கள். அப்புறம் இந்த அட்ராக்‌ஷன், கவர்ச்சி, புண்ணாக்கு எல்லாம் புஸ்ஸாகிவிடும்’

‘என்னது?’ அதிர்ச்சியோடு கேட்டேன்.

’அவனை, ஒரு நாள் அனுமதித்து விடு என்கிறேன். பிறகு இரண்டு பேரும் ஈஷிக் கொள்ளாமல் நிதானமாக இருப்பீர்கள்’

‘புல்ஷிட்! வினி… இது ரொம்ப அதிகம். என்னை இவ்வள்வு சீப்பாக….’ எனக்கு மூச்சு இரைக்க நாக்கு தழதழத்தது. கண்களில் நீர் வந்துவிடுமோ என்ற நிலை. என்னால் முடிந்தவரை கடுமையான வார்த்தைகளைப் போட்டு அவளைத் தாக்கினேன். கொஞ்சம் பெர்சனலாகவே திட்டினேன் என்று நினைக்கிறேன்.

நான் காயப்பட்டதை உணர்ந்தது போல் அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். பின்னர் யோசித்ததில் கொஞ்சம் அதிகப்படியான ரியாக்‌ஷன் காண்பித்தேனோ என்று தோன்றியது. அவள் என்னை ஆழம் பார்த்திருந்தாளோ என்னவோ…

கொஞ்ச நாட்களுக்கு ஃபார்மலான பேச்சுகள் தவிர அர்ஷத்திடம் இருந்து விலகியே இருந்தேன். கொஞ்ச நாட்கள்தான். மீண்டும் குறுஞ்செய்திக்ள், கலகலப்புகள், புன்சிரிப்புகள்… ‘சுபாஜி! ஒரு ரகசியம் தெரியுமா?’ என்று குறும்புப் பேச்சு.

‘நீ ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை அர்ஷத்?’

’என் காதலிக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் சுபாஜி. அவளை சந்திக்கும்வரை யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என்று’ இப்படி உளறும் பையன்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு வினிதாவிடம் பேசும்போதெல்லாம் அர்ஷத்தைப் பற்றி இருவருமே தவிர்த்து விட்டோம்.

அகில உலக விற்பனையாளர்களோடு சந்திப்பு என்று முப்பது கிலோமீட்டர் தொலைவில் கால்ஃப் மைதானத்தோடு கூடிய ஓய்வு விடுதிக்கு வந்திருந்தோம். வினிதாதான் இந்த சந்திப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும செய்திருந்தாள். சூரஜ் சிங்கப்பூர் போயிருந்தான். விடுமுறைக்காக அய்ஷு பனஸ்வாடி தாத்தா வீட்டில் இருந்ததால் இந்த பிரசண்டேஷனுக்கு ஒத்துக் கொண்டிருந்தேன். இரவில் எப்படியும் பனஸ்வாடிப் போய்விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ‘சான்ஸே இல்லை சுபா! நல்ல மழை வரப்போகுது. RT நகர் கூடப் போய் ரிஸ்க் எடுக்க வேணாம். இந்திரா நகர்ல என் வீட்டுல தங்கிக்கலாம்’ என்று வினிதா மாலையே எச்சரிக்கை செய்திருந்தாள். மேலும் என்னென்னவோ உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தோம். என்னைப் பரிபூரணமாக unwind செய்வது அவளுடைய உரையாடல்தான். ஆனால் வினிதாவின் மூக்கு மகா நீளம்.

அவள் சொன்ன மாதிரியே மழை பிய்த்துக் கொண்டு கொட்டியது. ‘எல்லாந்தூர் கேட்டில் ஏரி உடைப்பெடுத்து விட்டது. நைட்டு இங்கிருந்து கிளம்ப முடியாது. அதிகாலையில் கிளம்பினா விடியறதுக்கு முன்னாடி பெங்களூர்ல இருக்கலாம்’ என்று எங்களைக் கூட்டி வந்த பஸ் டி்ரைவர் சொல்லிவிட்டார்.

வினிதா கொடுத்த சாவியை வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தேன். அய்ஷூவோடு அரைமணி நேரம் பேசிவிட்டு சூரஜ்ஜை கூப்பிடுவதற்குள் அர்ஷத்திடமிருந்து பத்து குறுஞ்செய்திகள். இரண்டாம் தளத்தில் அவனுக்கு அறையாம். அறை நம்பர் எல்லாம் யாருக்கு வேண்டும். ஏதேதோ உபயோகமில்லாத ஸ்வீட் நத்திங்ஸ். இனிப்பிற்கு வேறு என்ன உபயோகம் வேண்டி இருக்கிறது? ஒரு குட்நைட் கரடிபொம்மையை இணைத்து சமர்த்தாக தூங்கு என்று பதிலாக அனுப்பிவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

திடீரென்று முழிப்பு வந்தது போல் இருந்தது. அறையின் தனிமை கனமாக அழுத்தியது. அறைக் கதவைத் திறந்தால் வெற்று லாபி இன்னமும் சூன்யமாய்… யாரையாவது எதிர்பார்த்தேனா என்று தெரியவில்லை. காதருகில் யாரோ மிருதுவான குரலில் ஏதேதோ சொன்னார்கள். Freak out ஆனது போல காந்த முள் எப்பொழுதும் வட துருவத்தை நோக்கியே திரும்புவது போல் ஏன் இப்படி… சட்! உளறிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள். ஆள் இல்லாத லாபியின் ஜன்னல் வழியே மழைநீர் கம்பித்திரையாக பரவியிருக்க.. தொலைந்து போன தூக்கத்தை தேடி அறைக்குள் செல்ல பிடிக்கவில்லை. வேறு யாரும் இந்த நேரத்தில் விழித்திருப்பார்களா?

”அறை ஜன்னல் சரியாக மூடவில்லை. குளிர் அதிகமாகிவிட்டது. ரூம் சர்வீஸ் ஃபோனை எடுக்கவே இல்லை”

”அறையில் எலித்தொல்லை.. (மூன்றாம் தளத்திலா?) க்ர்ரக் க்ர்ரக் என்று கறுவும் சத்தம் தூங்கவே விடமாட்டேன் என்கிறது”

”செல்ஃபோன் சார்ஜ் இல்லை. உன்னிடம் சார்ஜர் இருக்கிறதா? சூரஜ் ஐஎஸ்டி எதிர்பார்க்கிறேன்”

இப்படி பல சாக்குகளை மனதிற்குள் எண்ணிக் கொண்டே இரண்டாம் தளத்தில் அந்த அறையை நோக்கி நடந்தேன். எண்ணங்கள் மாறி மாறி பாரத்தை ஏற்றிக் கொண்டே போவதை விட, வெளிப்படையாக இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டால் இந்த மூச்சுதிணறலில் இருந்து விடுபட்டு விடலாம். அறைக்கதவை தட்டினேன். சில நிமிடங்கள் கழித்து அந்த அறைக் கதவு மெல்ல திறந்தது.

குறிப்பு: பின்வரும் உரையாடல் எனக்கும் கதை சொன்ன சுப்புலக்ஷ்மிக்கும் இடையே நடந்தது.

மெலிதான ஒப்பனையில், கூந்தலில் வண்ண தீற்றல்களோடு இளமையாக மேலும் சில வருடங்களை பின்னோக்கித் தள்ளி விட்டவளாக தெரிந்தாள் சுபா. கதையில் பார்த்தைவிட நேரில் இன்னமும் அழகாக இருந்தாள்.

’அப்புறம்?’ என்றேன் எதிர்பார்ப்பு மிக்க குரலில்.

’அப்புறம் என்ன அப்புறம். அந்த மழை இரவின் தனிமை கொஞ்சம் freaky ஆகத்தான் இருந்தது. ஆனால் அதைத் தாண்ட துணை அவசியமாக இருந்தது. வினிதாவை தூக்கத்திலிருந்து எழுப்பிக் கூட்டிக்கொண்டு தரைத்தளத்திலிருந்த 24 மணி நேர காஃபி ஷாப்பில் போய் ஒரு காஃபி சாப்பிட்டோம். மறுநாள் பனஸ்வாடி போய் அய்ஷுவோடு ஆஞ்சநேயர் கோவில். அவ்வளவுதான்’ என்றாள்.

‘ஓ! இந்த கதைக்கு ஏன் அகலிகை தலைப்பிட்டீர்கள்? அந்தக் கதையிலும் ஒரு ஒன்-நைட்-ஸ்டேண்ட் வருமே?’

’எல்லாப் பெண்களுக்கும் இந்திரன் வாய்ப்பதில்லை எழுத்தாளரே. ஆனால் சாபம் கொடுக்க மட்டும் சமூகம் எப்பொழுதும் தயாராக இருக்கிறது’

‘ஆங்! இதே போல் மகாபாரதத்தில் திரௌபதி பத்திக் கூட ஒரு கதை உண்டே…’ என்று நான் துவங்கும்போது கையை திருப்பி வாட்ச்சைப் பார்த்தவாறே ‘அய்ஷுவை பிக்கப் பண்ண லேட்டாச்சு. அரைகுறையாப் பேச டைம் இல்லை. கேட்ச் யூ லேட்டர்’ என்று கிளம்பினாள்.

கொஞ்சம் கிண்டலாக சிரித்ததைப் பார்த்தால் ’அரைகுறைகளோடுப் பேச நேரமில்லை’ என்றுச் சொன்னமாதிரி இருந்தது.

1 thought on “அகலிகை

  1. தங்கள் பணி மிகவும் மெச்சத்தகுந்தது.
    பணி சிறக்க வாழ்த்துகள்.
    அன்புடன்
    ஜெயராஜ் டேனியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *