வ.ந.கிரிதரன்

 

(நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்) 

ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய. ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள். ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர். வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில் கற்றார். தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியிலும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். அங்கு கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர். இங்கு மேலும் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் தகமைகள் பெற்றுள்ளார். 

‘இவரின் படைப்புகள் தமிழகம் . இலங்கை மற்றும் புகலிடத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள். இணைய இதழ்கள். வலைப்பதிவுகள் மற்றும் முகநூல் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. ஸ்நேகா / மங்கை பதிப்பக வெளியீடுகளாக ‘அமெரிக்கா’ (நாவல், சிறுகதைகளின் தொகுப்பு -1996) ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (1996) ஆகிய நூல்களும், குமரன் பப்ளிஷர்ஸ் வெளீயீடாக ‘மண்ணின் குரல்” , ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும். அகலிகையின் காதலும்’. ‘கணங்களும் குணங்களும்’ மற்றும் ‘மண்ணின் குரல்’ ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு -1998) நூலும் தமிழகத்தில் வெளியாகியுள்ளன. கவிதைத்தொகுப்பொன்று கனடாவில் மங்கை பதிப்பக வெளியீடா ‘எழுக அதிமானுடா’ (1994) என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. ‘மண்ணின் குரல்’ நாவல், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பொன்று கனடாவில் ‘மண்ணின் குரல்’ (1987) என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. ‘மண்ணின் குரல்’ நாவலே கனடாவில் வெளியான முதற் தமிழ் நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மிக இளவயதிலேயே எழுத தொடங்கிய வ.ந.கிரிதரன். பல சிறுவர் கால படைப்புக்களை படைத்துள்ளார். இவரின் படைப்புக்கள் ஈழநாடு ‘சிறுவர் மலர்’, சுதந்திரன், கண்மணி, சிரித்திரன். வீரகேசரி. ஈழமணி கணையாழி’, ‘சுபமங்களா’, ஆனந்தவிகடன், அம்ருதா. ‘துளிர்’, ‘தாயகம்’, ‘தேடல்’, ‘சுவடுகள்’. தமிழ் கம்யூட்டர். ‘திண்ணை’, ‘தட்ஸ்.தமிழ்’ உட்படப் பல பத்திரிகை. சஞ்சிகை மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது 17 வயதில் படைக்கப்பட்ட ‘சலனங்கள்’ என்னும் சிறுகதை சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டது. அச்சில் வெளியான முதற் சிறுகதை இதுவே. ‘பொந்துப் பறவைகள்’ என்னும் சிறுகதை சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டமொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகதை யொன்று ஆனந்தவிகடனின் பவளவிழாக் போட்டியில் ரூபா 3000 சன்மானம் பெற்றுள்ளது. சுஜாதா அறக்கட்டளையும். ஆழி பப்ளிஷர்ஸூம் இணைந்து நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையான ‘நான் அவனில்லை’ என்னும் அறிவியற் சிறுகதை வட அமெரிக்காவுக்கான பிரிவில் சிறந்த கதையாகத்தெரிவு செய்யப்பட்டு ரூபா 5000 பரிசினையும் பெற்றுள்ளது. 

இவரது சிறுகதைகள், மற்றும் ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு. ‘வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்’ ‘கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளிவந்திருக்கின்றன. ‘வானியற் பெளதிகம் (Astro Physics) பற்றிய அறிவியற் கட்டுரைகள் பல வீரகேசரி, கணையாழி, பதிவுகள். திண்ணை ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார். கனடாவிற்கு புலம் புகுந்த பின்பு இவரின் பல படைப்புக்கள் இங்குள்ள சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. மேலும் ரொறன்ரோவில் ‘இரவி (வார பத்திரிகை)’, ‘கல்வி (வார பத்திரிகை)’ குரல் (கையெழுத்துப் பிரதி), ‘நமது பூமி (செய்தி கடிதம்’, ‘கணினி உலகம் (செய்தி கடிதம்) ஆகிய பல ஆரம்ப கால தமிழ் படைப்பு முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். இவை சில இதழ்களோடு நின்றுவிட்டன. 

எனினும் 2000 ஆண்டு இவர் ஆரம்பித்த பதிவுகள் இணைய இதழ் தொடர்ந்து வெளி வருகின்றது. அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்’ என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு. 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் தமிழ் பன்னாட்டு இணைய ‘பதிவுகள்’ இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது ( ‘Pathivukal’ is one of the University Grants Commission (India) approved list of journals).

தமிழகப் பல்கலைக்கழகங்களில் இவரது சிறுகதைகள், நாவல்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இவரது படைப்பு களை முன்வைத்து M.Phil மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்காக ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவரது படைப்புகளை முன்வைத்துத் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் பல சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முனைவர் தெ. வெற்றிச்செல்வனின் ‘ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்’ என்னும் ஆய்வு நூலில் இவரது படைப்புகளைப்பற்றி, குறிப்பாக அமெரிக்கா நாவல் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 

புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கி வெளிவந்து பலரின் கவனத்தை ஈர்த்த ‘பனியும், பனை’யும் சிறுகதைத்தொகுப்பில் இவரது ஒரு மாநாட்டுப்பிரச்சினை சிறுகதை வெளியாகியுள்ளது. கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் இவரது சொந்தக்காரன் சிறுகதை வெளிவந்துள்ளது. புது தில்லியிலிருந்து வெளிவந்த வடக்கு வாசல் இதழின் இலக்கிய மலர் (2008), ஆழி பப்ளிஷரஸ் (தமிழகம்) வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலர். காற்றுவெளி (இலண்டன்) வெளியிட்ட இலக்கியப் பூக்கள் தொகுப்புகள். மற்றும் இலக்கியத்திறனாய்வாளரான வெங்கட் சாமிநாதனின் அரை நூற்றாண்டு இலக்கியப்பணியினைக் கௌரவிக்கும் முகமாக வெளியான வெங்கட்சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும் தொகுப்பு ஆகியவற்றில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. 

அண்மையில் கணையாழி இதழ் வெளியிட்ட கணையாழி (1995-2000) கட்டுரைத் தொகுப்பில் இவரது இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஞானம் சஞ்சிகை வெளியிட்ட ஈழத்துப்புலம்பெயர் இலக்கியத் தொகுப்பில் இவரது சிறுகதையான சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை என்னும் சிறுகதை வெளியாகியுள்ளது. முனைவர் ஆர். சீனிவாசனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘புதிய பனுவல்’ சர்ளவதேசச் சஞ்சிகையில் The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan என்னும் முனைவர் ஞானசீலன் ஜெயசீலனால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரை பிரசுரமாகியுள்ளது. எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் எழுதிய இவருடனான விரிவான நேர்காணலொன்றை ஞானம் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. ‘எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்துத் தொகுத்து தனது ‘அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்’ பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத் தொகுப்பான Fleeting Infinity (கணநேர எல்லையின்மை ) தொகுப்பில் ‘குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி’ என்னும் இவரது கவிதை வெளியாகியுள்ளது. 

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காகத் தொகுத்த ‘அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு – புவி எங்கும் தமிழ்க் கவிதை’ என்னும் கவிதைத்தொகுப்பில் இவரது கவிதையான ‘நவீன விக்கிரமாதித்தனின் காலம்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ளது. 

‘தற்போது டொராண்டோ கனடாவில் வசிக்கும் இவர் திருமணமானவர். மனைவி: கலைச்செல்வி பெண் குழந்தைகள்: தமயந்தி, தீபிகா. 

இதுவரை வெளியான நூல்கள்: 

  1. மண்ணின் குரல் (சிறுநாவல். கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்பு). 1986, கனடா: மங்கை பதிப்பகம் 
  2. எழுக அதி மானுடா! (கவிதைகள்), 1992, கனடா: மங்கை பதிப்பகம் 3. அமெரிக்கா (சிறு நாவல், சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு). 1996, தமிழ்நாடு: ஸ்நேகா, கனடா: மங்கை பதிப்பகம் 
  3. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு, 1996, தமிழ்நாடு: ஸ்நேகா. கனடா: மங்கை பதிப்பகம் 
  4. மண்ணின் குரல் (வன்னி மண். அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், கணங்களும் குணங்களும், மண்ணின் குரல் ஆகிய புதினங்களின் தொகுப்பு). 1998. தமிழ்நாடு: குமரன் பப்ளிஷர்ஸ் 
  5. குடிவரவாளன். புதினம். 2016, ஓவியா பதிப்பகம். தமிழ்நாடு 7. அண்மையில் இலங்கையில் இவரது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூல் சிங்கள மொழிக்கு எழுத்தாளர் ஜி.ஜிசரத் ஆனந்தவினால் மொழிபெயர்க்கப்பட்டு . அகச மீடியா வேர்க்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

வ.ந.கிரிதரன் – வி.மைக்கல் கொலின் (ஆசிரியர் – மகுடம்)

தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் வ.ந.கிரிதரன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். வவுனியா மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலை களில் தன் ஆரம்ப உயர்தரக் கல்வியை முடித்த இவர், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைப் பட்டதாரி. 

தகவற் தொழில் நுட்பம் மற்றும் இலத்திரனியற் தொழில் நுட்பத்துறைகளிலும் கல்வித் தகைமைகளுள்ளவர். இலங்கையிலிருந்த காலத்தில் தன் எழுத்துலக வாழ்வினை ஆரம்பித்த புகலிடத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றார். பதிவுகள் என்னும் இணைய இதழினை 2000 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியராகவிருந்து நடாத்தி வருகின்றார். 

இவரது கதை, கட்டுரை மற்றும் கவிதைகள் பல்வேறு இலங்கை, தமிழக மற்றும் புகலிடத் தமிழர்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தமிழ கத்தில் நடைபெற்ற ஆய்வரங்குகளில் இவரது புகலிடப்புனைகதைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தமிழகப்பல்கலைக்கழகங்களில் இவரது படைப்பு களைப்பற்றி முனைவர் பட்ட மற்றும் M.Phil பட்டப்படிப்புகளுக்காக மாணவர்கள் ஆய்வுகள் செய்திருக்கின்றார்கள். பொந்துப்பறவைகள் என்னும் சிறுகதை சிங்கப்பூர் கல்வி அமைச் சினால் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்ட மொன்றில் உள்ளடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இவரின் சிறுகதையான பல்லிக்கூடம் ஆனந்த விகடனின் பவள விழாப்போட்டியிலும், நான் அவனில்லை என்னும் அறிவியற் சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை மற்றும் ஆழி பப்ளிஷர்ஸ் இணைந்து நடாத்திய உலக அளவிலான அறிவியற் சிறுகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டு பரிசுகளைப்பெற்றுள்ளன. 

இதுவரை இவரது 7 நூல்கள் வெளியாகியுள்ளன. மண்ணின் குரல் (தொகுப்பு, கனடா 1987), எழுக அதி மானுடா! (கவிதைகள், கனடா 1992), அமெரிக்கா (தொகுப்பு, தமிழ்நாடு 1996), நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு, தமிழ்நாடு, 1996) மண்ணின் குரல் (புதினங்களின் தொகுப்பு, தமிழ்நாடு 1998) மற்றும் குடிவரவாளன் (புதினம், தமிழ்நாடு 2016) ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவினால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. 

அண்மையில் கணையாழி இதழ் வெளியிட்ட கணையாழி (1995-2000) கட்டுரைத் தொகுப்பில் இவரது இரு கட்டுரைகள், ஞானம் சஞ்சிகை வெளியிட்ட ஈழத்துப்புலம் பெயர் இலக்கியத் தொகுப்பில் சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை என்னும் சிறுகதை, பனியும் பனையும் தொகுப்பில் ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை சிறுகதை, அமரர் வெங்கட் சாமிநாதன் பற்றிய வாதங்களும், விவாதங்களும் தொகுப்பில் கட்டுரை, வடக்கு வாசல் சஞ்சிகையின் இலக்கிய மலரில் கட்டுரை, ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட ஆண்டு மலரில் கட்டுரை ஆகியவனவும் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைகள், கவிதைகளும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.