ப.ஆப்டீன்

 
ஆப்டீன்2

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 – 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர்.

1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகுந்தார். 1960 களில் வேலை காரணமாக நாவலப்பிட்டியில் பணியாற்றிய எழுத்தாளர் நந்தி அவர்களின் ஊக்குவிப்பாலும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தொடர்பாலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பன்முக வடிவங்களின் மூலம் தனது படைப்பிலக்கிய பங்களிப்பினை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்து இலக்கியம் வழியாக பணியாற்றி வந்தவ இவரது பல படைப்புக்கள் ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

வெளிவந்த நூல்கள்

Kongani

கொங்காணி (சிறுகதைத் தொகுப்பு, கொடகே வெளியீடு, 2014)

IravinRagam

இரவின் ராகங்கள்- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் வெளியீடு, 1987, NCBH, தமிழ்நாடு மீள்பதிப்பு 1990)

NaamPayanitha

நாம் பயணித்த புகைவண்டி- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் 2003)

கருக்கொண்ட மேகங்கள்- (நாவல், ஆசிரியர் பதிப்பித்தது 1999)

பரிசுகள், விருதுகள்

  • 1968 ஆம் ஆண்டு இலங்கை Y.M.M.A நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சாந்தமும் சகிப்பும் எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1975 ஆம் ஆண்டு பண்பாட்டு அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1980 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது நீந்தத் துடிக்கும் மீன்குஞ்சுகள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1987 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது இரவின் ராகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசினைப் பெற்றது.
  • 1999 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது கருக்கொண்ட மேகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது.
  • 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசு இவருக்கு கலாபூஷண விருது வழங்கியது.

ப.ஆப்டீன் நமது நவ இல்கியத்தில் ஒரு சிறந்த மக்கள் எழுத்தாளர் – பேராசிரியர் டாக்டர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி)

1960 மலையக இளைஞர் மத்தியில் தோன்றிய இலக்கிய விழிப்புணர்வில் ஓர் அம்சமாக ஆப்டீன் வளர்ந்தார். மேலும் பத்து வருட கால வளர்ச்சியும் முதிர்ச்சிக்குப் பின், 1970 அவருக்கு ஒரு மைல்கல் ஆண்டு. 1970-1980 அவரின் மிகவும் போற்றதக்க காலம். ஈழத்தின் உன்னத எழுத்தாளரும், நவீன இலக்கிய ஆய்வாளருமான கலாநிதி செங்கை ஆழியான் 1970-1980 தசாப்தத்தில் குறிப்பிடும் சிறுகதை ஆசிரியர் 24 பேர்களில் ஆப்டீனும் காணப்படுகிறார். அந்த வரிசையில் பிரபல எழுத்தாளர்களான தெணியான், சட்டதாதன், சுதராஜ், ச.முருகானந்தன், கோகிலா மகேந்திரன் புலோலியூர் சதாசிவம் அடங்குவர் என்பது குறிப்பிடதக்கது. ‘ஈழத்து சிறுகதை வரலாற்றில் ப. ஆப்டீன் குறிப்பிடவேண்டியவர்’ என்பது செங்கை ஆழியான் அவர்களின் கூற்று ஆகும்.

இந்தக் காலத்தில் 1968,1975,1980 ஆகிய ஆண்டுகளில் ஆப்டீன் அகில இலங்கை ரீதியில் சிறுகதைகளுக்குப் பரிசுகள் பெற்றார். 1975ல் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற சிறுகதை ஒரு கலாசார அமைச்சின் பரிசு பெற்றது. 1980ல் முஸ்லிம் சமய விவகார அமைச்சு ‘நீந்தத் துடிக்கும் மீன்குஞ்சுகள்’ என்ற கதைக்குப் பரிசு அளித்தது.

ஆப்டீன் அவர்களின் தமிழ் வசீகரமானது. எடுத்துக் கொண்ட கருவுக்கும், கருத்துக்கும், கதைக்கும் ஏற்ப பக்குவம் ஆனது அவரது இலக்கியப் பார்வை சமூகவியல் ஆட்சிக்கு உட்பட்டது. கதை வார்ப்பின் அணுகுமுறை மனிதாபிமானது. ஆகவேதான் அவரது படைப்புக்கள் மக்கள் இலக்கியம்’, ‘சமூக இலக்கியம்’ மனிதாபிமான இலக்கியம்’ என்ற ரீதியில் இனம் காணப்படுகிறது.

ஆப்டீனின் சிறந்த சிறுகதைகள் மல்லிகையில் வெளிவந்த பெருமை அவருக்கு உண்டு. மல்லிகைக்கும் உண்டு யோ.சுந்தரலட்சமியும், செ.யோகநாதனும் தொகுத்த ஈழத்துச் சிறுகதைகள் முதல் தொகுதியில் வெள்ளிப் பாதசரம்) ஆப்டீனின் ‘புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட்’ என்ற சிறந்த சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது. யோகநாதன் ஆப்டீனின் மொழிநடையைக் ‘கூர்மையானது, வசீகரமானது, எளிமையானது. ‘என்பார்.

சிறுகதை எழுத்தாளர் ஆப்டீன் 1999ல் நாவலாசிரியரும் ஆனார். அவரது நாவல் ‘கருக்கொண்ட மேகங்கள்’ இலங்கை இலக்கியப் பேரவை பரிசு பெற்றது. அந்த நாவல் ஆப்டீனின் பன்முக அனுபவங்களையும், சமூகத் தொடர்புகளையும் கொண்டதாக உள்ளது. கிராமவாசிகளையும் விவசாயிகளையும் கொண்ட பல்லின மக்களின் வாழ்வுப் போராட்டங்களைச் சித்திரிக்கும் எழுத்தோவியமாக அமைந்தது. ஆப்டீனின் இலக்கிய வாழ்விலும் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கியது.

மலாய் மொழியைத் தனது தாய் மொழியாகக் கொண்ட ஆப்டீன் அவர்களின் தமிழ் பற்றும், புலமையும், இலக்கிய ஆக்கத் திறனும் நவீன தமிழ் இலக்கியத்திற்கு அணி செய்தது. அவரது ஆசிரியத் தொழிலின் பயிற்சியும், பழக்கமும், சகோதரவ நேசபாங்கும் அன்பான ஒரு எழுத்தாளர் நண்பரை எமக்குத் தந்தது.

நன்றி மறவாத நன்மைக்கும், அடக்கத்துக்கும் அவர் சிறந்த எடுத்துக் காட்டு. ஏற உதவிய ஏணியையும், கடக்க உதவிய தோணியையும் மறந்து துறக்கும் உலகிலே, ஆப்டீன் ஓர் அபூர்வ மனிதன். அவரது படிப்படியான உயர்ச்சியில் நாம் மகிழ்கிறோம். அவர் மேலும் மேலும் உயர்ந்து தமிழ்ப் பணி புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

– கொங்காணி (சிறுகதைத் தொகுப்பு, கொடகே வெளியீடு, 2014)


ஆப்டீனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பாடம் – சுதாராஜ்

கதைகளைக் கூறும்போது: சமூக, தனிமனித விமர்சனங்களையும் பொருத்தமான இடங்களில் வைக்கிறார். தனக்குத் தெரிந்ததும், தான் அனுபவம் அனுபவம் பெற்றதுமான ஆசிரியத்தொழில், மலையக மாந்தர். முஸ்லீம் சமூகம் பற்றிய கதைகளையே அவர் கூறினாலும், அவற்றில் மனித மேம்பாட்டை வலியுறுத்தும் பொதுமைப்பாடான கருத்துக்கள் நிறைய உள்ளன.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இவை போன்ற ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். அல்லது இப்படியானவர்களைச் சந்தித்திருக்கக்கூடும். அப்போது ஏனோதானோ என்று பெரிதாக மனதைத் தொடாமல் விட்டிருக்கலாம். ஆனால் ஆப்மனின் சிறுகதைகளை வாசித்த பின்னர் அவை நிச்சயம் மீள் சிந்தனைக்குட்படும். ஒரு நல்ல சிறுகதையின் பயனும் அதுதான்.

நண்பர் ஆப்பன் இன்னும் நிறைய எழுத வேண்டும். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத்துறையை அணி செய்ய வரும் இத்தொகுதியைப் படைத்தமைக்காக ஆப்டீன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தல் வெளியிடுகிறது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் இதுபோன்ற நல்ல பல சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

–  சுதாராஜ், நாம் பயணித்த புகைவண்டி- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் 2003)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *