ந.பழநிவேலு

 

ந.பழநிவேலு (பிறப்பு: 20-6-1908) இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1930ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து சிங்கப்பூரிலே வசித்துவந்தார். இவரொரு வானொலி ஒலிபரப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், மொழிபெயர்ப்பாளரும், சிறுகதை, நாடக, புதின எழுத்தாளரும், கவிஞருமாவார்.

1930களில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியினைத் தொடங்கிய இவர் 1949ம் ஆண்டில் அப்போதைய ‘ரேடியோ மலாயா’ எனும் மலாயா வானொலி சேவையில் இணைந்தார். அங்கு ஒலிபரப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பின்னர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றி 1968ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

இவரின் முதல் கவிதை 1931ம் ஆண்டு நவநீதம் எனும் இதழில் ‘வலிமை’ எனும் தலைப்பில் வெளிவந்தது. 1936ம் ஆண்டில் இவரது முதல் மேடை நாடகமான ‘சுகுண சுந்தரம்’ அரங்கேற்றம் பெற்றது. இவரின் முதல் சிறுகதைகள் 1939ம் ஆண்டு தமிழ் முரசு இதழில் வெளிவந்தது. அன்று முதல் நூற்றுக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், மேடை – வானொலி நாடகங்கள், இசை, கவிதை, நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதிய பலநூறு சிறுவர் பாடல்கள் இசையமைக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.

எழுதியுள்ள நூல்கள்

  • கவிதை மலர்கள் – இது இவரால் எழுதப்பட்ட முதல் கவிதைத் தொகுப்பு நூலாகும். இந்நூல் 1947ம் ஆண்டில் வெளிவந்தது.
  • காதற் கிளியும் தியாகக் குயிலும் – இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். 1977ல் வெளியிடப்பட்டது.
  • கவியின் நலிவு – தமயந்தி கதையினைப் பன்னணியாகக் கொண்ட கவிதை நாடக நூல் 1981ம் ஆண்டு வெளிவந்தது.
  • பாப்பா பாடல்கள் – சிறுவர் பாடல் தொகுப்பு 1990ல் வெளியீடு கண்டது.

பெற்ற விருதுகளும் கெரளவங்களும்

  • முத்தமிழ் வித்தகர்
  • கலாசார விருது
  • கலாரத்னா விருது
  • தமிழவேள் விருது

காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

அணிந்துரை

பாவலர் ந.பழநிவேலு அவர்கள் பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்றவர். ‘கவிதை மலர்கள்’ என்னும் பாடல் நூல் கற்பனை வளத்தையும் பாநலத்தையும் பகர்வது; பாட்டுச் சுவைஞர்க்கு நல்விருந்து.

செழுமையில் முழுமையுற்றுத் திகழும் சிங்கையில் வாழும் இப்பாவலர் “காதற் கிளி யும் தியாகக் குயிலும்” என்னும் இச்சிறு- கதைத் தொகுப்பின்வழி நன்னயம் பயக்கும் பன்னலம் சான்ற நற்கதைகளைப் புனைவதிலும் வல்லவர் என்பதை நிலைநாட்டுகின்றார்.

நெடுங்கதைகளில் கதைமாந்தர் நெடிது பழகி, வளர்ந்து-நிறைவு கண்டு, அமைவுபெற முடிகின்றது. ஆயின், சிறுகதைகளோ அதனி னும் மாறுபட்ட தன்மையைக் கொண்டவை. சிறுகதைகள் நம்மனதில் தங்கவேண்டுமானால் இரண்டு வழியுண்டு. ஒன்று கதையில் ஓர் ஒப் பற்ற நிகழ்ச்சி நடைபெறவேண்டும்; அஃதின் றேல், கதைமாந்தர் நாம் மதித்துப் போற்றும் ஒப்பற்ற சிறந்த பண்புகளைப் பெற்றுத் திகழ வேண்டும். இவ்வாறு உள்ள சிறுகதைகள் மனித இனத்திற்கு மாமருந்தாகவும், நல்விருந் தாகவும் அமையுமென்பதில் ஐயமில்லை.

அவ்வகையில் இத்தொகுப்பு நூல் அமைந் திலங்குகின்றது. 1936- ஆம் ஆண்டொட்டி முப்பதாண்டு இடைவெளியின் காலச்சுவடுகள் இக்கதைகளில் பதிந்துள்ளன.

குழந்தைக் காதலர்கள், திட்டம், செல்லாத நோட்டு, வண்டின் ரீங்காரம், கானல் நீர், நினைத்ததும் நடந்ததும், காயும்கனியும் போன்ற கதை நிகழ்ச்சிகளும் பண்புக் கூறுகளும் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளும் பின்னிப்பிணைந்து செல்கின்றன. இத்தொகுப்பின் மூலம் பழநிவேலு பகர்ந்த வாழ்வின் நுண்கூறுகளைத் தேர்ந்து, வாழ்வுச் சுவைகளைத் துய்க்கக் கதையமைப்புப் பெரிதும் உறுதுணை யாய் அமைந்து விளங்குகின்றது.

காதலும் ஈகமும் வளரவும் தொடரவும், வாழ்வுக் கேட்டினைத் துடைத்து மயக்கினை மாற்றி அறிவினைப் போற்றி ஆக்கம் செழிக்க வும் கதைகள் பல படைத்தளித்தப் பாவலரைப் பாராட்டி வாழ்த்தும்,

25-5-77
சேலம்-636 003
அன்பன்
மி.மு.சின்னாண்டார்

பதிப்புரை

சிங்கை, மலேசியாவின் முதுபெரும் பாவலர்களில் ஒருவராகிய திரு. ந.பழநிவேலு அவர்கள் சிறுகதை, கட்டுரை, மேடை நாடகம், வானொலி, தொலைக்காட்சி நாடகம் ஆகிய துறைகளிலும் கைவந்தவர்.

தமிழ் முரசு” நாளிதழ், சிங்கப்பூர் தமி ழர் கழகத்தின் வெளியீடாகிய “சீர்திருத்தம்’ “திராவிடமுரசு” ஆகிய இதழ்களில் 1936க்கும் 1964க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். சீர்திருத்த மணங்கமழும் இக்கதைகள், மூடப் பழக்கங் களை நகைச்சுவையோடு முறியடிக்கும் வல்ல மைபெற்றவை.

பாவேந்தர் பாரதிதாசனாரின் மாணவ ராகிய இவர் பாடல்கள் “பாரதிதாசன் கவிதா மண்டலத்திலும்” வெளியானதுண்டு.

பாடல் தொகுப்பாக இவர் வெளியிட் டுள்ள “கவிதை மலர்கள் ” சிங்கப்பூர் பாத் தொகுப்பு நூல் வரலாற்றிலேயே 2ஆம் பதிப்பாக வந்த பெருமையுடையது. சிங்கப்பூர் கலாச்சார அமைச்சு இவரது தேசியப் பாடல் களைத் தொகுத்து நூல்வடிவில் வெளியிட்டு இருப்பதே இவரின் பாத்திறனுக்கோர் சான்றாக விளங்குகிறது.

1949 முதல் சிங்கை வானொலியில் பணி யாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர், குமுகாய மறு மலர்ச்சி எண்ணங்களை 40 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே தம் எழுத்துப் படைப்புகளின் கரு வாயமைத்து வருவது, சிங்கை, மலேசியா எழுத்துலகிற்குப் பெருமைதரத்தக்கது ஆகும்.

பயன்மிக்க இவருடைய கதைகள், எக் காலத்தும் மக்களுக்கு நல்லறிவு விளைப்பன வாக விளங்குதலின், அவற்றைத் தொகுத்து “காதற் கிளியும் தியாகக் குயிலும்” என, தமிழுலகிற்குப் படையலிட்டுள்ளோம்.

விற்பனை உரிமை ஏற்றுக் கொண்ட பாரி நிலையத்தார், எங்கள் பதிப்பக இரண்டாம் வெளியீடாக இந் நூலை வெளியிட உரிமை தந்த பாவலர், சிறந்த முறையில் அச்சியற்றிய பொன்முடி அச்சகத்தார்,நெஞ்சைவிட்டகலா வண்ணஓவம் தீட்டியளித்த ஈசுவரி ஆகி யோர்க்கு எங்களின் உழுவலன்பு கலந்த நன்றி என்றும் உரியது.

சிங்கப்பூர். 14-5-77
மறைமலை பதிப்பகத்தார்.

முன்னுரை

இத்தொகுப்பில் அடங்கியுள்ள சிறுகதை கள் பன்னிரண்டும் 1936 ஆம் ஆண்டுக்கும் 1964 ஆம் ஆண்டுக்கும் இடையில் நான் எழு திய சிறுகதைகளினின்றும் எடுக்கப்பட்டவை யாகும்.

அக்காலச் சூழ்நிலை, அதையொட்டிய மாந்தர் போக்கு முதலியவற்றைச் சித்தரிப் பவை இக்கதைகள்.

இவை தமிழ் முரசு ” “சீர்திருத்தம் ” “ திராவிட முரசு” ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.

தங்கள் பத்திரிகைகளில் கதைகளை வெளியிட்டு, என் கன்னி முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மேற்கண்ட இதழாசிரியர்களுக்கும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி இதன் தரத்தை உயர்த்திய அரிமாப்புலவர் மி.மு.சின்னாண்டார் அவர்களுக்கும், நூல் விரைவில் வெளிவரத் துடிப்புடன் உழைத்த என் உழுவலன்பர்கள் சிறுகதைச் செம்மல் மா.இளங்கண்ணன், மறைமலைப் பதிப்பக உரிமையாளர் திரு.வே.இறைவாணன் ஆகியோர்க்கும், கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அழகுற அச்சிட்டுத் தந்த சேலம் பொன்முடி அச்சகத்தார்க்கும், ஓவியர் ஈஸ்வரி அவர்கட்கும், இந்நூலின் விற்பனை உரிமையை அன்புடன் ஏற்றுக்கொண்ட பாரி நிலையத்தார்க்கும், என் உளமிகு நன்றி.

சிங்கப்பூர்
31-3-77
ந.பழநிவேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *