நாரா.நாச்சியப்பன்

 

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 – 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார் – அன்னபூரணி ஆச்சி இணையருக்கு, ஜூலை 13, 1927-ல் பிறந்தார். குடும்ப வணிகம் காரணமாக தந்தை பர்மாவில் வசித்தார். நாச்சியப்பன் பர்மாவில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பயின்றார். தமிழகம் திரும்பி, திருச்சி தேசியக்கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

சிறார் நூல்கள்

 • மூன்றாவது இளவரசன்
 • குமரித் தீவு
 • சரவணச்சாமி
 • காளி கோயில்
 • மாஸ்டர் கோபாலன்
 • சவுக்கடி தர்பார்
 • மாந்தோப்பு மன்னன்
 • கிரேக்கப் புராணக் கதைகள்
 • ஐந்து மூக்கு மிருகம்
 • ஒட்டுக் குடுமி பட்டுச் சாமி
 • நீளமூக்கு நெடுமாறன்
 • அழகு இளவரசி
 • தெய்வ அரசு கண்ட இளவரசன்
 • சிட்டு
 • அப்பம் தின்ற முயல்
 • காக்கைப் பள்ளிக் கூடம்
 • அசோகர் கதைகள்
 • பஞ்சதந்திரக் கதைகள்
 • தாவிப் பாயும் தங்கக் குதிரை
 • பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்
 • மாயத்தை வென்ற மாணவன்
 • இறைவர் திருமகன்
 • தங்கத் தேனீ
 • பஞ்சதந்திரக் கதைகள்
 • பறவை தந்த பரிசு-1
 • பறவை தந்த பரிசு-2
 • பாசமுள்ள நாய்க்குட்டி
 • ஒரு ஈயின் ஆசை
 • கள்வர் குகை

நாவல்கள்

 • மோகனக் கிளி
 • நான்கு பக்கீர்கள் கதை
 • மதுரைச் சீமையில் புதுவைக் கள்ளன்
 • நகரும் சுவர்
 • உமார் கயாம்
 • மன ஊஞ்சல்

சிறுகதைத் தொகுப்புகள்

 • நல்வழிச் சிறுகதைகள் முதல் பாகம்
 • நல்வழிச் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
 • ஏழாவது வாசல்

முன்னுரை – நல்வழிச் சிறுகதைகள் – டிசம்பர் 1964

அண்மையில் நடந்த குழந்தைகள் தின குழந்தைகள் தின விழாவில் பேசும்போது நம் முதல் அமைச்சர் உயர்திரு பக்தவத்சலம் அவர்கள் சின்னஞ் சிறுவர்களுக்காகத் தமிழில் நல்ல பல நூல்கள் வெளிவர வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இதே கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டு நான் எழுதி வரும் நூல்களிலே மிகச் சிறந்த நூல் ‘நல்வழிச் சிறுகதைகள்’ என்ற இத்தொகுப்பு நூல்.

குழந்தை மனம் எந்தக் கருத்துக்கும் இடங் கொடுக்கக் கூடியது. குழந்தைப் பருவத்தில் படியும் கருத்துக்கள்தாம் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. எனவே குழந்தையுள்ளத்தில் நல்ல பல கருத்துகள் படியவேண்டும் – படியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தை முன் வைத்துத்தான் சிறுவர்கள் படிப்பதற்கென்று நம் தமிழகச் சான்றோர்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்னெறி, மூதுரை ஆகிய பல நீதி நூல்களை இயற்றினார்கள்; அவற்றையே துவக்கப்பள்ளிகளில் பாடமாகவும் சொல்லிக் கொடுத்தார்கள்.

இந்த நூல்கள் நீதி நூல்களாக மட்டுமன்றி சிறந்த இலக்கியங்களாகவும் திகழ்கின்றன. இவற்றிலே காணப்படும் கருத்துக்கள் சிறந்த உவமைகளால் அழகு பெறுகின்றன. அந்த உவமைகளையும், கருத்துகளையுமே வைத்துக்கொண்டு பல கதைகளைப் புனைந்துள்ளேன்.

தமிழில் இது ஒரு தனி முயற்சியாகும். இந்த முயற்சி வெற்றி தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்தக் கதைகளைப் படிப்பதால் சிறுவர் சிறுமியரின் உள்ளம் பண்பட்டு, அவர்கள் வருங்காலத்தில் நல்ல குடி மக்களாகத் திகழ்வார்கள். எவ்வாறெனில், அவர்களை உருவாக்கும் நல்ல கருத்துக்களை இவை நயமாக எடுத்துக் கூறுவதால் என்க.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் பிள்ளைகளின் உள்ளத்தை விரிவடையச் செய்யும் இந்நூலை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பெரிதும் கேட்டுக் கொள்கின்றேன்.

நாரா. நாச்சியப்பன், நூலாசிரியர்.
சென்னை, 21-12-64.