தேவகாந்தன்

 

தேவகாந்தன் (பிறப்பு: 1947) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய-ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் டிறிபேக் கல்லூரியில் உயர்கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா, தொராண்டோவில் வதிகிறார்.

1968-1974 வரை ஈழநாடு நாளிதழில் பணி புரிந்தவர். தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த இலக்கு சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது கனடாவில் இருந்து வெளியாகும் கூர் இலக்கிய இதழின் ஆசிரியராக உள்ளார்.

கண்டியிலிருந்து வெளியாகிய ‘செய்தி’ வாரப்பத்திரிகையில் “குருடர்கள்” என்ற முதற்சிறுகதை 1968 இல் பிரசுரமானது. கணையாழி, தாமரை, தினமணி, கல்கி, சூர்யோதயா, அரும்பு, நிலாவரை, தாய், செய்தி, ஈழநாடு தினபதி, சிந்தாமணி, தினகரன், மல்லிகை ஞானம், தாய்வீடு, காலம், இலக்கு, கூர், பதிவுகள் முதலான ஊடகங்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தில் இலங்கைத் தமிழ் சார்ந்த உரையாடலில் பங்களித்தார்.

புதினங்கள்

 • உயிர்ப்பயணம், 1985
 • விதி 1993
 • நிலாச்சமுத்திரம்
 • யுத்தத்தின் முதலாம் அதிகாரம், 2004, பூபாலசிங்கம் பதிப்பகம்
 • திருப்படையாட்சி 1998
 • வினாக்காலம் 1998
 • அக்னிதிரவம் 2000
 • உதிர்வின் ஓசை 2001
 • ஒரு புதிய காலம் 2001
 • கனவுச்சிறை (முழுத்தொகுப்பு), 2014, காலச்சுவடு பதிப்பகம்
 • கலிங்கு, 2017, வடலி பதிப்பகம்[1]
 • கதாகாலம் 2005[2]
 • கந்தில்பாவை, 2016, காலச்சுவடு
 • நதிமேல் தனித்தலையும் சிறுபுள், 2019, நற்றிணை பதிப்பகம்
 • லங்காபுரம் 2007
 • கலாபன் கதை 2019, காலச்சுவடு
 • மேகலை கதா 2020, பூபாலசிங்கம் பதிப்பகம்

சிறுகதைகள்

 • நெருப்பு 1995, பாரிநிலையம்
 • இன்னொரு பக்கம்
 • காலக்கனா
 • ஆதித்தாய் 2017, ஜீவநதி வெளியீடு

முதல் பிரசவம்

1968ம் ஆண்டு ‘செய்தி’ வார இதழில் வெளிவந்த ‘குருடர்கள்’தான் எனது முதல் சிறுகதை. அப்போது எனக்கு வயது 21. வாழையடி வாழையாகத் தொடர்ந்த ஒரு பண்டித மரபில் வந்திருந்ததனால்போலும் பதினைந்து வயதுக்குள்ளாகவே சங்க இலக்கியங்களுடனான பரிச்சயமும், ஈழத்து செய்யுள் இலக்கியங்களின் வாசிப்பும் எனக்குச் சித்தித்துவிட்டன. பாலைக்கலி முழுவதையும் அந்த வயதிலேயே படித்திருந்தேன். நன்னூல் பெரும்பகுதியும் மனப்பாடமாயிருந்தது. தக்க ஓர் ஆசானுக்காக நான் காத்திருந்த காலமாக அதைச் சொல்லலாம்.

புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும் கல்லூரிப் பாடத் திட்டத்துக்கான தமிழிலக்கிய வரலாற்றில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’, ‘ஆண்மை’ போன்றனவற்றின் வாசிப்பு எதிர்பாராதவிதமாத்தான் ஏற்பட்டது. நான் அதுவரை அறியாத யதார்த்த உலகத்தின் திறவாக அது இருந்தது. பழந்தமிழ் இலக்கியத்தின் சுவடு கண்டு, சத்தியம், அன்பு, அகிம்சைபற்றிப் பேசிய நாவல்களின் ஒருவகைக் கற்பனோலயத்திலிருந்த என்னை அது முற்றிலுமாய் இழுத்தெடுத்தது. நவீன வாசிப்பு என்னில் இப்படித்தான் நிகழ்ந்தது.

1967-ல் இலங்கை தேசிய நாளிதழான ‘ஈழநாடு’ ஆசிரியர் குழுவில் இணைந்ததோடு என் தாகம் தீர்ப்பதற்கான வாசிப்புக் கதவுகள் அகலத் திறந்தன. ‘ஈழநா’ட்டில் சேர்ந்த சிறிது காலத்தில் அப்போது ஞாயிறு வார மலருக்குப் பொறுப்பாசிரியராக இருந்த சசிபாரதியின் ஊக்குவிப்பினால் ‘கலித்தொகைக் காட்சிகள்’ என்ற தொடர் இலக்கியக் கட்டுரையை எழுதினேன். உண்மையில் அது ‘பாலைக்கலிக் காட்சிகள்’தான். காதலின் மிக உன்னதமான கணங்கள் பாலையின் திணையொழுக்கமான பிரிவின்கண் உளதாக அப்போது போலவே இப்போதும் நம்புகிறேன்.

அக்காலகட்டத்தில் எழுதிய கதைதான் ‘குருடர்கள்’.

நான் ‘ஈழநாடு’ அலுவலகத்துக்குப் போகும் வரும் வேளைகளில் அடிக்கடி எதிர்ப்பட்ட இசைக்கலைஞன் அவன். அந்தகன். அவன் வயலின் வாசிப்பில் காட்டியது பெரும் ஞானத்தை. வேலை முடிந்து முற்றவெளி, நூல்நிலையம், முனியப்பர் கோவில் புல்வெளி, திறந்தவெளி அரங்கு என அலையும் போக்குடைய என்னைத் தன்னை நோக்கி இழுத்துப் பிணித்துவிடுகிற இசை அவனுடையது.

ஒருநாள் காலை மணிக்கூண்டுக் கோபுர சங்கிலி வளையத்தைச் சுற்றி மக்கள் கூடிநின்றனர். விசாரித்தபோது தெரிந்தது, யாழ்பாடி இறந்துபோனானென. திடீரென்று சில நாள்களாக அவனைக் காணவில்லை. வயலின் வாசித்துக்கொண்டிருக்கையிலேயே செத்து வீழ்ந்துவிட்டான். மாலையில் நான் வேலை முடிந்து வந்தபோதிலும், ஒரு கையில் வயலின் வாசிக்கும் தண்டோடு அந்த சங்கிலி வளைய எல்லைக்குள் அவன் உடல் கிடந்திருக்கிறது. அதற்கு மேலேதான் மாநகர சபை பிணத்தை அப்புறப்படுத்திற்று. அப்படியானால் அவன் உயிரோடிருந்து வாசித்த வேளையில் நின்று கேட்டு ரசித்த மனிதர்கள் அதைப் பார்த்துக்கொண்டு போய் வந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் மாநகர சபையின் உயர்ந்த கட்டட நெற்றியில் பொறிக்கப்பட்டிருப்பது யாழ்ச் சின்ன விளக்கு. மட்டுமில்லை. சரித்திர காலத்தில் அந்தகக் கவி அதிவீரராகவன் என்கிற இசைக் கலைஞனுக்குப் பரிசிலாகக் கிடைத்த பூமி அது. பெயரே அதற்கு யாழ்ப்பாணம்!

பதறிப்போனேன். அவனா குருடன்? இல்லை. அந்த நகர்தான்… அந்த மக்கள்தான் குருடர்களென்று என்னுள் ஓங்கிக் குமுறினேன். பின்னொரு போதில் என் இதயத்துள் கிடந்து கனன்றுகொண்டிருந்த கோபத்தையெல்லாம் குவியமாக்கி அந்த நிகழ்ச்சியைக் கதையாக எழுதினேன். எனக்குக் கோபம் என்பதற்காகத் துண்டுப் பிரசுரம் அச்சடித்து வீசவா முடியும்? அல்லது தடியெடுத்து யாரையாவது அடிக்கத்தான் முடியுமா?

கதையை என்னோடு ஆசிரியர் குழுவில் வேலைசெய்த நண்பர் பாமா ராஜகோபாலிடம் காட்டினேன். கதை நன்றாக வந்திருப்பதாகக் கூறியதோடு, அப்போது அலுவலம் வந்த கவிஞர் இ.நாகராஜனிடமும் காட்டினார். வாசித்துவிட்டு கதையைப் பாராட்டியதோடு ‘அடுத்த வார மலரிலேயே போடுவதற்குப் பாருங்கள்’ என்று வேறு பாமாவிடம் கூறிச் சென்றார் கவிஞர்.

‘ஈழநாடு’ வாரமலரில் வெளியிட எனக்குச் சம்மதமில்லாதிருந்தது. எனது முதல் கதை நான் வேலை செய்யும் பத்திரிகையில் வருவது அனுசரணை காரணமாக வெளியிடப்பட்டதெனக் கொள்ள ஏதுவாகலாமோவென அஞ்சினேன். அதைப் பாமாவிடம் தெரிவித்தேன். ஒப்புக்கொண்ட நண்பர் அப்போது கண்டியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த வாரப் பத்திரிகையான ‘செய்தி’க்கு அனுப்பலாமென்று கூறி முகவரி தந்தார். அனுப்பிய மூன்று வாரங்களிலேயே கதை பிரசுரமாயிற்று. இது ஒரு முக்கிய நிகழ்வாகும். என் பழந்தமிழிலக்கிய ஆர்வத்தை மேவி நான் சிந்தனைத் தள மாற்றமும் சமூக நோக்கும் படைப்பூக்கமும் பெற்ற புள்ளி அது. அந்தப் புள்ளிக்குப் பின்னால் ‘செய்தி’ இதழும் பாமாவும்.

சுமார் இருபத்தைந்து கதைகளுக்கு மேல் ‘ஈழநாடு’, ‘செய்தி’, ‘சிந்தாமணி’, ‘வீரகேசரி’ , ‘மல்லிகை’ ஆகியவற்றில் எழுதியிருப்பேன். அக் கதைகளில் ஒன்றுகூட இன்று என் கைவசமில்லை. எடுக்க முயன்று முடியாமலே போனது. இனி அந்த நம்பிக்கை இல்லை. அவற்றில் பலவற்றின் தலைப்பே மறந்துவிட்டேன். பலவற்றின் கதையே ஞாபகமில்லை. ஆனால் அந்த முதல் கதை இன்னும் என்னுள் பசுமையாக இருக்கிறது. ஏறக்குறைய அது வெளிவந்த மாதிரியிலேயே இன்றுகூட என்னால் அந்தக் கதையை எழுதிவிட முடியுமென்று தோன்றுகிறது. ஏனெனில்… அது என் முதல் பிரசவம்.

– தினமணிக் கதிர், 02 ஜுலை 2000

(‘முதல் பிரசவம்’ என்ற தலைப்பில் தினமணிக் கதிரில் எழுத்தாளர்களின் முதல் படைப்பு பற்றிய ஞாபக மீட்பு ஒருபோது தொடர்ந்து வெளிவந்தது. அதில் எனது பங்குக்கானது ‘இன்னும் என்னுள் பசுமை’ என்ற தலைப்பில் 02.07.2000இல் வெளியானது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *