திருமலை வீ.என்.சந்திரகாந்தி

 

ந.பார்த்திபன் விரிவுரையாளர் தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா இலங்கை

நீண்டகால வாசிப்பு முதிர்ச்சியும் நிதானமான எழுத்து முயற்சியும் சேர்ந்து இவரது கதைகளினூடு பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம். இலக்கியம் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். இவரது சிறுகதைகள் அதனை செய்கின்றன. சமூகத்தில் காணப்படும் புரையோடிப்போன பல விடயங்களை படிப்பினையூட்டும் வண்ணம் எழுதியிருக்கிறார். கற்பனை உலகில் சஞ்சரிக்காது நிஜவாழ்வில் கண்டவற்றை மனதை தொடும் படியும் மனதில் படியுமாறும் சொல்லியிருக்கிறா ரென்றே கூறவேண்டும்.

பெரும் பாலான கதைகளில் பெண்களின் பிரச்சனைகள் பல் வேறுபட்ட கோணங்களில் அலசப்பட்டிருக்கின்றன. பெண்களின் பிரச்சனையே குடும்பத்தின் சிக்கலாகி, சமூகத்தை பாதிக்கின்றன என்ற பனப்பாங்கு எழுத்தாளரின் மனதில் வடிவம் கொள்கின்றது. அவை சிறுகதையின் மூலமாக வண்ணம் பெறுகின்றன.

சிறுகதை ஒன்றை வாசகர்களுக்கு தரும் பணியில் தற்கால எழுத்துகளிலிருந்து மாறுபட்டு தனக்கென தைரியத்துடன் ஒரு பாணி அமைந்துள்ளமையை அவரது கதைகளை படிக்கும் இலக்கிய சுவைஞர்கள் உணர்ந்து கொள்ள முடியும். புதிய புதிய உத்திகளை தனது ஒவ்வோர் கதைகளிலும் பயன் படுத்துவதன் மூலம் தனது ஒரு கதையிலிருந்து மற்றைய கதையை மிகவும் வேறுபட்ட வகையில் அமைத்து தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை அவர் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றார் என்பதில் ஐயம் இல்லை!

பூப்பெய்திய சிறுமி ஒருத்தி சமூகத்தில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள்…இந்த உலகில் தனக்கு மறைக்கப்படும் விடயங்களை தெரிந்து கொள்ள எத்தனிக்கும் மாணவ சிறுமி………. காதல் தரும் போதை ஆணையும் பெண்ணையும் தம் நிலை மறக்க வைக்கும் விந்தை…

தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மாணவி அடிமை மனச் சிறையை உடைத்தெறிதல்…பொய்கள் நிமித்தமே முற்று பெறும் விவாகம்….காலம் கடந்த விவாகத்தின் தாக்கம்…பிரசவத்தின் போது பெண்ணொருத்தியின் மனநிலை….காதலனை அடைவதை காட்டிலும் குழந்தை ஒன்றை பெறுவதில் அவசரம் காட்டிய பெண்….இல்லத்தரசி என்ற வகையில் அந்நாட்களில் ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம்…தனது கணவனுக்காக எதையும் செய்ய துணியும் மனைவி….கணவனால் ஏமாற்றப்படும் பெண் எய்தும் எல்லை…இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண் எல்லைகளை உடைத்தெறிந்து தப்பி ஓடுதல்….என பெண்களின் பிரச்சனைகள் தொகுதி முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளன.

குறிப்பாக கலாச்சார புயல் சிறுகதை சிறந்து நிற்பதை நான் காண்கின்றேன். பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சிறுமிகளும் பெண்களும் படுகொலை செய்யப்படும் இன்றைய காலகட்டத்தில் இக்கதையில் வரும் சிறுமியின் பக்குவப்பட்ட பேச்சினுாடாக பல படிப்பினைகளை சமூகத்திற்கு முன்வைத்த ஆசிரியரின் உத்தி பாராட்டப்படக் கூடியது.

நல்ல சிறுகதைக்கான கவித்துவ மொழி நடை இவரிடம் நிறையவே உண்டு. இந் நிலையில் ஆசிரியரிடமிருந்து மென்மேலும் ஆழமான இலக்கிய கவர்ச்சி கொண்ட தரமான சிறுகதைகளை நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதை தருவதற்கான தகுதியும் ஆற்றலும் அவரிடம் நிறையவே உண்டு என்பதில் சந்தேகமில்லை!

**********************************************************

சித்தி. அமரசிங்கம், ஈழத்து இலக்கியச் சோலை 21, ஔவையார் வீதி, திருக்கோணமலை, 01.10.2002

நான் பழகிய இன்றைய புது எழுத்தாளர் மத்தியில் இவரை ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன்………

“எது உண்மை” – 1998ல் வெளிவந்த இவரது முதலாவது கதை. தினமுரசே இதை வெளிக்கொணர்ந்தது. இதைத்தொடர்ந்து பல கதைகள் வெளிவரத்தொடங்கியது.

1967ல் இலங்கைப்பல்கலைக்கழக பிரவேச அனுமதி பெற்று அங்கு கல்வி பயில்கையில் சில நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்ததனைத் தொடர்ந்து 1968ல் அரசாங்க சிறாப்பர் சேவையில் இணைந்து கொண்டார்.

இவர் கொழும்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முதல் முதல் தன்கடமையை ஏற்றுக் கொண்டார். இருந்த போதும் இவர் நீர்பாசனத் திணைக் களத்தினுாடாக மின்னேரியா, மட்டக்களப்பு, பண்டாரவளை, வவுனிக்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் சேவை செய்த போதும் இவரை ஒரு எழுத்தாளனாக்கியது. திருக்கோணமலை மண்ணே! ஆம் இவர் 89ல் திருக்கோணமலைக்கு மாற்றலாகி மாகாணசபையில் பதவி ஏற்ற பின்னரே எழுத்துத்துறையில் கால் பதிக்க முடிந்தது.

அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட வே.நாகராஜா இரத்தினம் தம்பதிகளின் இரண்டாவது புத்திரனாக 1946 டிசம்பர் 28ல் பிறந்தார். இவரது மூத்த சகோதரி சீதாலஷ்மி 1987ல் எறிகணைத் தாக்குதலில் பலியானார். இவருக்குப்பின் இரவீந்திரநேரு, சந்திரபோஸ் என்ற இளையவர்களும், சாந்தாலஷ்மி என்ற கடைக் குட்டியும் உண்டு.

ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவக் கல்லூரியில் ஆரம்பித்து, அங்கிருந்தே பல்கலைக்கழகம் சென்றார். பொலிகண்டி செல்வராஜா பாக்கியலஷ்மி தம்பதிகளின் மகள் செல்வசோதியை 1976ல் கையேற்றார்.

இவர் எழுத்துத் துறையில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். கரப்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்ட இவர் 1993 இல் ஜெயகாந்தி விளையாட்டுக்கழகத்தை ஸ்தாபித்து அதனுாடாகப் பல போட்டிகளை ஏற்படுத்தி ஊக்குவித்து வந்துள்ளார். குறிப்பாக ஒவ்வொரு சிவராத்திரி இரவுகளிலும் மின் ஒளியில் கரப்பந்தாட்டப்போட்டிகளை விடிய விடிய நடாத்தி வென்றோர்களுக்கு நிறைய பரிசுகளும் வழங்கியுள்ளார்.

சதீஸ்காந்தன் (மாணவன். ‘உயர் தொழிநுட்ப நிறுவனம்.’ திருமலை) சஜந்தி (மாணவி கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகிய இரு குழந்தைகளுக்குத் தந்தையான போதும் இவரது எழுத்தாற்றல் குறையவே இல்லை .

தினமுரசைத் தொடர்ந்து, ஞானம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளுக்கும் எழுதி வருகின்றார்.

இவர் தினமுரசு, ஞானம், தினக்குரல் ஆகியவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். இவர் அண்மையில் திருக்கோணமலை பிரதேச செயலகம் (பட்டணமும் சூழலும்) நடாத்திய சாகித்திய விழா 2002ற்கான சிறுகதைப் போட்டியில் முதல் தடவையாகப் பங்கு பற்றி ‘மலரத்துடிக்கும் மொட்டு’ என்ற சிறுகதைக்கு முதற் பரிசினைப் பெற்றுக் கொண்டார்.

*********************************************************

எனதுரை

நான் மிக மிக அண்மைக் காலத்தில் எழுதிய பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பாக இந்நுால் வெளியாகின்றது…

இலக்கிய பணியில் எனது திறன்…திறனின்மை, பலம்…பலவீனம் பற்றியெல்லாம் நான் ‘வாய்ச் சாதுர்யம்’ பண்ணுவதற்கு அவசியமே இல்லாமல் எனது ஆக்கங்களே அப்பணியை நிறைவேற்ற ஒன்றிற்கு மற்றையது போட்டி போட்டு முன் நிற்கின்றன….

இச் சிறுகதைகள் அனைத்துமே ஏற்கனவே அச்சேறும் அங்கீகாரம் பெற்று தினமுரசு வாரமலர், ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை, தினக்குரல் பத்திரிகை ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. அப்பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்களுக்கு நன்றி கூறவேண்டியது எனது மகத்தான கடன்!

இத்தொகுப்பிற்கான முகவுரையை பிரபல எழுத்தாளரான ந.பார்த்திபன் அவர்கள் வழங்கியமையை நன்றியுடன் நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன்.

இலக்கிய உலகில் எனது நண்பர் வெளியீட்டாளர் கலாவினோதன் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் இச்சிறுகதை தொகுப்பினை ‘ஈழத்து இலக்கியச் சோலை’ பிரசுரமாக வெளியீடு செய்யமுன் வந்தமை எனது பணியை மிகவும் இலகுவாக்கி விட்டது.!

வெளிநாட்டிலிருந்தபடி வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கருதி எமது எழுத்தாளர்களுக்கும் இலக்கிய சுவைஞர்களுக்கும் பூச்சாண்டி’ காட்டிவரும் வெளியீட்டாளர் களுடன் ஒப்பு நோக்கும் போது இவரது இலக்கிய சாதனை மகத்தானது!

இளமை உணர்வோடு, வயதிற்கு மிஞ்சிய செயற்பாட்டுடன் அவர் ஆற்றும் பணி மென்மேலும் சிறந்து நீடிக்க சர்வ வல்லமை படைத்த காளித் தாயின் அருள் அவருக்கு தொடர்ந்து கிடைக்குமாறு பிரார்த்திக்கின்றேன்…

எனதன்பு வாசக நெஞ்சங்களே…’வீடியோ’ என்றும் ‘ஓடியோ’ என்றும் வீண் பொழுது போக்கும் சுவைஞர்களுக்கு மத்தியில் உங்கள் இலக்கிய ஆர்வத்தை மெச்சாமல் இருக்க முடியாது!

வாசிப்பு மட்டுமே சிந்தனைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் வளர்க்கின்றதென்பதை புரிந்து கொண்டு நீங்கள் வழங்கும் உற்சாகத்தில் தான் இலக்கிய உலகம் இனி நீடிக்க முடியும்…

நன்றியுடன்..
திருமலை. வீ.என்.சந்திரகாந்தி
572 A, ஏகாம்பரம் வீதி, திருக்கோணமலை தொலைபேசி:- 026-24706

– ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *