சோலச்சி

 

DSC_0084என் இயற்பெயர் தீ.திருப்பதி.

சோலச்சி என்பது யார்……?

இதற்கான விளக்கத்தை எனது “முதல் பரிசு ” சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன்.

நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள்.

என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய காலம் அது. அப்போதுதான் என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். , .மறுக்காமல் எங்கள் வறுமை நிலையை போக்கியதோடு மாலை நேரம் அவர் வீட்டில் வந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

நான் என் ஆசிரியர் வீட்டுக்கு சென்ற போது என்னைப்போல் ஏராளமான ஏழை மாணவர்கள் படித்துக் கொண்டு இருந்தனர். ஆங்கிலம், கணக்கு, அறிவியல் சொல்லிக் கொடுப்பார்கள். நானும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டேன்.

அன்று அவர்கள் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அரிசி,காய்கறிகள், மளிகைசாமான், சமைக்கப் பாத்திரம், நாங்கள் உடுத்திக்கொள்ள துணிமணிகள், கைச்செலவுக்கு பணம் இன்னபிறவும் கொடுத்து உதவவில்லை என்றால் என்படிப்பும் பாதியில் நின்றிருக்கும். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் எழமுடியாமல் இருந்த என் தாயைக் காப்பாற்றவும், என் தந்தை மற்றும் தங்கையைக் காப்பாற்ற என் அண்ணனோடு (கவிஞர் புதுகை.தீ.இர) பிழைப்பு தேடி அப்போது அலைந்திருப்பேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை நான் படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அவர்கள் நீட்டிய அந்த உதவிக்கரம் , நான் மேல்படிப்பு (ஆசிரியர் பயிற்சி) படிக்கும் வரை அவர்களைப் போலவே பேராசிரியர் பெருமக்களும் உதவிக்கரம் தந்தார்கள்.

ஆசிரியர் பயிற்சி புதுக்கோட்டையில் (2000-2002) பயின்ற காலத்தில் போற்றுதலுக்குரிய செல்வி.நா.விஜயலெட்சுமி அம்மா அவர்கள், திருமதி.டி.அகிலா அம்மா அவர்கள், திரு.சொ.சுப்பையா அவர்கள் (தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்) , திரு.மு.மாரியப்பன் அவர்கள், திரு. நா.செல்லத்துரை அவர்கள் (தற்போது DIET முதல்வர்) , திரு.ம ராஜ்குமார் அவர்கள், திரு.ஜமால்நாசர் அவர்கள், திரு. கோ.முருகன் அவர்கள், திரு.டி.மாரியப்பன் அவர்கள், மற்றும் மேலான என் பாசத்திற்குரிய நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி என்னை ஆதரித்தார்கள்.

என் வாழ்க்கையில் முதல் ஒளியை ஏற்றிவைத்த என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எண்ணியபோதுதான் அவரது பெயரையே புனைப்பெயராக “சோலச்சி ” என்று வைத்துக்கொண்டேன்.
என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள் கொடுத்த சேலையை படுத்த படுக்கையில் நோய்வாய்ப்பட்டு செயலிழந்து கிடந்ததால் என் தாயால் கடைசிவரை அந்த சேலையை கட்டாமலேயே 2004 இல் நவம்பர் 25 ஆம் தேதி (நான் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்த இருபத்தெட்டாம் நாள்) இறந்து போனார்கள்.

எனது முதல் நூலான “முதல் பரிசு ” சிறுகதை நூல் வெளியீட்டு விழா 19.08.2015 என் அண்ணன் கவிஞர் புதுகை தீ.இர அவர்களின் பிறந்தநாள் அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இளைய எழுத்தாளர்களின் வழிகாட்டி எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்கள் தலைமையில் என் ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் வெளியிட்டு சிறப்பு செய்தார்கள்.

தோழர்களே… என் ஆசிரியர் பெயரையே என் புனைப்பெயராக வைத்துக்கொண்ட சோலச்சியின் வரலாறு இதுதான்.

கவிமதி என்பது புதுக்கோட்டை மாவட்ட உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் திரு.விஜயாசிவகாசிநாதன் அவர்கள் பாசத்தோடு அழைத்ததன் விளைவாக அவர்மீது கொண்ட அன்பின் காரணமாக அதையும் சேர்த்து கவிமதி சோலச்சி என்று வைத்துக் கொண்டேன்.

அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்பின் வழியில்
அன்பு பண்பு பாசம்
நட்புடன் எந்நாளும்
உங்கள்
சோலச்சி, புதுக்கோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *