கே.எஸ்.சுதாகர்

 

கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை “இனி ஒரு விதி செய்வோம்” ஈழநாடு வாரமலரில் வெளியானது.

இவர் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர்.

நோர்வே தமிழ் சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (மெல்பர்ன்), மரத்தடி இணையம், இலண்டன் பூபாள இராகங்கள், ஞானம் சஞ்சிகை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பிரிஸ்பேன் தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்.

செ. சுதா, சுருதி, கதிரொளியான் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார். இவரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்வுக் கோலங்களைச் சித்திரிப்பவை.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்ற இவரின் சிறுகதைத்தொகுப்பு அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது இவர் போட்டிகளில் பரிசுபெற்ற 12 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு. இந்த தொகுப்பிற்கு எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அணிந்துரை வழங்கியிருக்கிறார்

இவர் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராக உள்ளார்.

வெளியிட்ட நூற்கள்

எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுப்பு)
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் (சிறுகதைத் தொகுப்பு)

எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பி: மார்கழி 2007, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைக் சங்கம், அவுஸ்திரேலியா

தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த கே.எஸ்.சுதாகர் தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யூனியன் கல்லூரியிலும் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர்.

நியூசிலாந்தில் ஆறு வருடங்கள் வசித்து 2000 இல் அவுஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்துள்ள சுதாகர் கவிதை, சிறுகதை, கட்டுரை. விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகிறார்.

நோர்வே தமிழ்ச்சங்கம். ஈழம் தமிழ்ச்சங்கம் (மெல்பர்ண் அவுஸ்திரேலியா), மரத்தடி இணையம், இலண்டன் பூபாள இராகங்கள், ஞானம் சஞ்சிகை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான சுதாகர் இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பணியாற்றியவர். “சுருதி” என்ற புனைபெயரிலும் எழுதி வரும் சுதாகரின் சிறுகதைகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்வுக் கோலங்களை சித்திரிப்பவை.

புலம் பெயர்ந்தோரின் புகலிட இலக்கியங்களில் சுதாகரின் கதைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன என்பதற்கு அவர் பெற்றுள்ள இலக்கியப் பரிசுகள் சான்று பகர்கின்றன.

பதியம்

1. இளமைக்காலத்தில் இலக்கியப்புத்தகங்களாயினும் சரி, சிறுகதை நாவல்களாயினும் சரி ஒளித்து வைத்தே வாசிக்கும்படியாகிவிட்டது. பாடசாலை விடுமுறை நாட்களில் வாசிப்பதற்கு அனுமதியுண்டு. பெற்றோரின் கண்டிப்பு அந்த வகையில் அமைந்திருந்தது.

2. எங்கள் வீட்டு அலுமாரியில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. என்னுடைய சித்தப்பாவும் அத்தானுமாகச் சேர்ந்து ஒரு அச்சுக்கூடம் வைத்திருந்தார்கள். (ஆரம்பத்தில் தண்ணீரூற்று முள்ளியவளையிலும், பின்னர் ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணத்திலும் இறுதியாக சுண்ணாகம் பஸ் ஸ்ராண்டின் முன்பாகவும் அது அமைந்திருந்தது.) ‘சக்தி’ அச்சகம் என்பது அதன் பெயர். அங்கே அச்சிடப்படும் புத்தகங்களும், பாடசாலையிலிருந்து பெற்றவையுமாக அந்த அலுமாரி நிறைந்திருக்கும். ஆரம்ப காலங்களில் அதுவே வாசிப்பிற்கு தீனியாக அமைந்தது.

3. இந்த ‘சக்தி’ அச்சகத்திலிருந்துதான் சிறுவர்களுக்கான ‘வெற்றிமணி’ என்ற சஞ்சிகை 25 ஆண்டுகளாக வெளி வந்தது.

4.1976 இல் அரசு புதிய கல்வித்திட்டத்தை பாடசாலை களில் அறிமுகம் செய்தது. ஒரு சில வருடங்களே நீடித்த க்கல்வித்திட்டத்தில் பல நல்ல திட்டங்களும் அடங்கி யிருந்தன. தொழில் முன்னிலைப் பாட நெறி (Pre Vocational Subject) அதில் மிகவும் முக்கியமானது. அடுத்தது ‘கலை, கலாசாரமும் பண்பாடும்’. இதுவே எனது இலக்கிய உணர்வுகளை மேலும் உந்தித் தள்ளியது.

5.இந்தப் பாடத்தை அதிபர் க. பாலசுந்தரம் அவர்களும், த.சண்முகசுந்தரம் (தசம்) ஆசிரியரும் படிப்பித்தார்கள். ‘சிறுகதை எழுதுதல்’ அதில் முக்கியமானதொரு அம்சமாக இருந்தது. இரண்டுபேருமே தலைசிறந்த எழுத்தாளர்கள். இதில் த.சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். கதிர்.பாலசுந்தரம் கனடாவில் தற்போதும் உயிர்ப்புடன் எழுதிக் கொண்டிருக் கின்றார். இவருடனான தொடர்பு இப்போதும் இருந்து வருகின்றது.

6.பாடசாலையில் படிக்கும் காலத்தில் இரசிகமணி. கனக செந்திநாதன் அவர்களை சந்தித்து பேட்டி எடுத்தது இன்னமும் பசுமையாக இருக்கிறது. பிறகு இந்தப் பேட்டி, கட்டுரை வடிவமாகி 1983 இல் ஈழநாடு பத்திரிகையில் அவரது நினைவுநாளை முன்னிட்டுப் பிரசுரமானது.

7. ஒருமுறை யூனியன் கல்லூரி ‘செய்திப் பலகை’யில் சதாவதானி கதிரைவேற்பிள்ளை நினைவாக சிறுகதைப் போட்டி என்று இருந்தது. அந்தப் போட்டியின் விதிமுறை களில் யார் யார் பங்குபற்றலாம் என்று தெளிவில்லாமல் இருந்தது. கேட்பதற்கு பயம். ஒரு சிறுகதையை எழுதிப் போட்டேன். நாலைந்து மாதங்கள் கழித்து அதிபரின் அறையிலிருந்து அழைப்பு வந்தது. அதிபர் சில குறுக்குக் கேள்விகள் கேட்டார். கதையில் வரும் இரண்டொரு பாத்திரங்கள் பற்றி விசாரித்து அதை நான்தான் எழுதினேனா என்பதை அறிந்து கொண்டார். பின்னர் அந்தப் போட்டியில் பரிசு பெற்றதற்கான கடிதத்தை என்னிடம் தந்தார். அந்தக் கதை அவர்கள் வெளியிட்ட ‘கதிரொளி’ என்ற கையெழுத்துப் பிரதியில் (1979) வெளிவந்தது.

8. அந்தக்காலத்தில் செங்கை ஆழியானின் படைப்புக்களை விரும்பி வாசித்தேன். அவரது நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. இந்தக் ‘கதிரொளி’யும் *செங்கை ஆழியானும்’ மனதில் ஏற்படுத்திய புளகாங்கிதத்தில் ‘கதிரொளியான்’ என்று ஆரம்பத்தில் புனைபெயரை வைத்துக் கொண்டேன்,

9.1981 இல் யாழ் நூலகத்தை எரித்தார்கள். அப்போது ‘ஈழநாடு’ பத்திரிகைக் காரியாலயமும் எரிக்கப்பட்டது. 1983 இல் இனக்கலவரம். அதுக்குப் பிறகு “ஈழநாடு” மீண்டும் புத்துயிர் பெற்றது. அப்போது ஈழநாடு வாரமலரில் ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற கதை வெளிவந்தது. இதுவே முதன் முதலாக அச்சில் வெளிவந்த சிறுகதை. இந்தச்சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெறவில்லை.

10. இதில் வரும் ‘புதிய வருகை’ (ஞானம்), ‘ஆங்கொரு’ (பூபாள ராகங்கள்), ‘காணி நிலம் வேண்டும்’ – ‘பகடை’ (மரத்தடி இணையம்), ‘பின்னையிட்ட தீ’ (ஈழம் தமிழ்ச் சங்கம், அவுஸ்திரேலியா), ‘கதை கதையாம் காரணமாம்’ (காங்கேசந்துறை லங்கா சீமெண்ட் லிமிட்டெட்), ‘அழையா விருந்தாளிகள்’ (நோர்வே தமிழ்ச்சங்கம்), ‘ஆசை கொண்ட நெஞ்சிரண்டு’ (பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம்) என்பவை பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றவை.

11.நியுசிலாந்தில் இருக்கும் காலங்களில், ‘நியுசிலாந்து தமிழ்ச் சங்கம்’ எனது படைப்புக்களை தங்கள் ஆண்டுவிழா மலரில் பிரசுரித்து ஊக்கப் படுத்தினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை, கண்ணன் (நியுசிலாந்து), றேமண்ட் செல்வராஜா (றைசல், SBS) போன்றவர்கள் எனது படைப்புகளை வானொலி வடிவமாக்கி உற்சாகம் தருகின்றார்கள்.

12. ஏறக்குறைய இருபத்தைந்து வருட காலத்தை உள்ளடக்கிய பதினெட்டுக் கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இவற்றை வெளியிட்ட ஈழநாடு, உதயம் (அவுஸ்திரேலியா) போன்ற பத்திரிகைகளிற்கும் உள்ளம், ஞானம், பாலம் (நியுசிலாந்து), சங்கமம் போன்ற இதழ்களிற்கும் திண்ணை, திசைகள், மரத்தடி, பதிவுகள், அப்பால் தமிழ் போன்ற இணையங்களிற்கும் எனது நன்றிகள்.

13.’எங்கே போகிறோம்?’ ஒட்டு மொத்த தொகுப்பையும் தாங்கி நிற்கும் சிறுகதை. ‘இலங்கை எழுத்தாளர்களின் 26 சிறுகதைகள்’ தொகுப்பில் இடம்பெற்றது. அந்தக் கதையின் முடிவிற்கு நேர் எதிரான முடிவைக் கொண்டு இங்கே திருப்பி எழுதப்பட்டுள்ளது.

14. சிறுகதையானது இலக்கியத்தன்மை கொண்டதாக எல்லாருக்கும் புரியக்கூடிய விதத்தில் எழுதப்படவேண்டும். சிறுகதைகள் வாசிப்பவர்களைக் குழப்ப எத்தனிக்கக் கூடாது. பொழுது போக்குவதற்கு மட்டும் என்றில்லாமல் மனவளத்தையும் பெருக்குவதாக இருக்க வேண்டும். என்னைச்சுற்றி, அயலைச் சுற்றி நடந்த சம்பவங்களை இந்தக் கதைகளில் காணலாம். கதைகளில் வரும் ஒரு சில ஊர்களிற்கு இப்போது போக முடியாது. எனது ஊரான வீமன்காமம், தெல்லிப்பழைக்கு கடந்த 17 வருடங்களாக போக முடியாத சூழ்நிலை.

15.இனி -புலம்பெயர் நாட்டின் இயந்திர வாழ்க்கை யிலும், என்றும் எங்களின் மீது அன்பும் அக்கறையும் கொள்ளும் –

அதிபர், ஆசிரியர், எழுத்தாளர் திரு. கதிர் பாலசுந்தரம் அவர்களுக்கும்,

அணிந்துரை வழங்கியுள்ள மூத்த எழுத்தாளர் திரு.காவலூர் ராசதுரை அவர்களுக்கும்,

பதிப்புரை வழங்கி, தொகுப்பை வெளிக்கொணர முக்கிய கர்த்தாவாகவிருக்கும் எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதி அவர்களுக்கும்,

இந்நூலிற்கு அழகாக அட்டைப்பட ஓவியம் வரைந்து உதவிய எனது

அண்ணரான ஓவியக்கலைவேள்

மு.க.சு.சிவகுமாரன் அவர்களுக்கும்,

எனது விருப்பத்திற்கேற்ப அச்சேற்றித் தந்த குமரன் பதிப்பகம் திரு.செ. கணேசலிங்கன் அவர்களுக்கும்,

இறுதியாக

இந்தப் புத்தகத்தை வெளியீடு செய்யும் ‘அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய, கலைச் சங்க’த்திற்கும்

எனது மனமார்ந்த நன்றிகள்.

16. இந்தக் கதைகள் பற்றிய கருத்துக்களை கடித மூலமாகமோ அல்லது மின் அஞ்சல் (E-mail) மூலமாகமோ (எந்த எழுத்துரு என்றாலும் பரவாயில்லை) அறியத்தந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

அன்புடன்,
கே.எஸ்.சுதாகர்
28, Throsby Crescent
Deer Park, Vic 3023.
Australia.
kssutha@hotmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *