கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 – 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவதில் பெயர் பெற்றவர்.
‘மேரேஜ் மேட் இன் சலூன் ‘மாது +2′, மீசை ஆனாலும் மனைவி. ஆகிய நாடகங்கள் இவரது புகழுக்குச் சான்று. இவையனைத்தும் 400 முறை களுக்கு மேல் மேடையேறியவை. இவரது 30-க்கும் மேற்பட்ட நாடகங்கள் 100 தடவைக்கு மேல் மேடையேறி சாதனை படைத்தவை.
40 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். தமிழின் முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்திலும் இவர் எழுதி, நடித்து, தயாரித்த நகைச்சுவை நாடகங்கள் ஒளிபரப்பாகி புகழ் பெற்றிருக்கின்றன.
ஆனந்த விகடன், குமுதம், கல்கி. குங்குமம், சாவி உள்ளிட்ட பத்திரிகைகளில் 100-க்கும் மேற்பட்ட சிறுகதை களை எழுதியிருக்கிறார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது செகந்திராபாத்திலுள்ள கலாசாகரத்தின் நாடக சாசகர்’ விருது, கிருஷ்ணகான ஈபாவின் ‘நாடக சூடாமணி’ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.
ஆரம்ப காலம்
எஸ். வி. சேகர் அவர்களின் நாடகமான “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” என்ற நாடகத்தின் மூலம் 1976இல் அறிமுகமானார் மோகன். அந்த நாடகம் பெறும் வரவேற்பைப் பெற்றதால் ‘கிரேசி’ என்ற அடைமொழியுடன் ‘கிரேசி’ மோகன் என்று அழைக்கப்பட்டார்.
பணியாற்றிய திரைப்படங்கள்
- பொய்க்கால் குதிரை (1983)
- கதாநாயகன் (1988)
- அபூர்வ சகோதரர்கள் (1989)
- மைக்கேல் மதன காமராஜன் (1990)
- உன்னைச் சொல்லி குற்றமில்லை (1990)
- இந்திரன் சந்திரன் (1990)
- சின்ன மாப்ளே (1993)
- மகளிர் மட்டும் (1994)
- வியட்நாம் காலனி (1994)
- சின்ன வாத்தியார் (1995)
- எங்கிருந்தோ வந்தான் (1995)
- சதி லீலாவதி (1995)
- அவ்வை சண்முகி (1996)
- மிஸ்டர் ரோமியோ (1996)
- ஆஹா (1997)
- அருணாச்சலம் (1997)
- ரட்சகன் (1997)
- சிஷ்யா (1997)
- தேடினேன் வந்தது (1997)
- காதலா காதலா (1998)
- கண்ணோடு காண்பதெல்லாம் (1999)
- என்றென்றும் காதல் (1999)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- தெனாலி (2000)
- லிட்டில் ஜான் (2001)
- பஞ்சதந்திரம் (2002)
- பம்மல் கே. சம்பந்தம் (2002)
- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004)
- இதயத்திருடன் (2006)
- ஜெர்ரி (2006)
- கொல கொலயா முந்திரிக்கா (2010)
- நான் ஈ (2012)
மறைவு
கிரேசி மோகன் மாரடைப்பால் 10 சூன் 2019 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மருத்துவமனையில் மறைந்தார்.
சிரிப்பூ – பதிப்பாளர் – ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்
‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது சும்மா பேச்சுக்கு சொல்லப்பட்ட விஷயமல்ல. வாய் விட்டுச் சிரிப்பவர்களுக்கு நிஜமாகவே மன அழுத்தம் வருவதில்லை. மன வருத்தமும் இருப்பதில்லை !
மற்றவர்களைச் சிரிக்கவைப்பது ஒருசிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அதிலும், விரசமில்லாமல் ஜோக்கடிக்க எல்லோராலும் முடிவதில்லை .
பேசும்போதுகூட சமாளித்துவிடலாம். எழுத்தில் நகைச்சுவையை வெளிக்கொண்டு வருவதுதான் இன்னும் கடினமானது. படிப்பவர்களை ஒவ்வொரு பாராவிலும் சிரிக்கவைக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்தைப் புரட்டிவிடுவார்கள்!
படிப்பவர்களைப் புன்னகைக்க வைக்கும் டெக்னிக்’ அறிந்தவர் கிரேஸி மோகன். இவரது படைப்புகள் எத்தகைய உம்மணா மூஞ்சிகளையும் புன்முறுவல் பூக்க வைக்கும். கட்டுரைகளில் மிகவும் அப்பாவித்தனமாக இவர் நுழைக்கும் ஜோக்குகளைப் படித்தால் களுக்’ சிரிப்பு உத்தரவாதம்!
‘ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட வருடத்தில், வெவ்வேறு தலைப்புகளில் கிரேஸி மோகன் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெறுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் நூலாசிரியரின் ‘நகைச்சுவை கைவண்ணம். மிளிர்வதை உணரலாம்.
ஜூ.வி. யின் வெள்ளி விழா ஆண்டில் இந்தக் கட்டுரைகள் புத்தகமாக வெளிவருவது ஓர் இனிமையான நிகழ்வு!
காமெடி கட்டுரைகளைப் படிப்போம்….. கவலையை மறந்து சிரிப்போம்!
மாங்காய் தின்ன வைத்த ஜூ.வி.! – கிரேஸி மோகன் – ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்
எனக்கு எழுத்தறிவித்த இறைவன் ஆனந்த விகடன். என்னை நிறைய எழுத வைத்து வளர்த்த அழகான ராட்சஸன் ஜூனியர் விகடன்.
என் வரையில் நகைச்சுவை என்பதற்கு , வர்ணபேதமின்றி, ஒரு குழந்தையைப் பார்க்கும்போது உண்டாகும் உற்சாகத்தை உவமையாகக் கூறலாம்…. அது கருப்புக் குழந்தையா..? வெளுப்புக் குழந்தையா? சிகப்புக் குழந்தையா?’ என்ற ஆராய்ச்சி அபத்தம். மொத்தத்தில் அது பச்சைக் குழந்தை…. அம்புடுதேன்.
கிரேஸி மோகன் என்ற இந்த பச்சைக் குழந்தையை மடியில் போட்டு, கொஞ்சிக் குலாவி, பகைச்சுவை இல்லாத நகைச்சுவை உரைநடைப் பாலை ஊட்டிவிட்டது அந்த அழகான ராட்சஸன்…. பால் ஊட்டியதால் ‘அழகான ராட்சஸி!’
சூரியனுக்கு முன்னே போய், சூரியனுக்குப் பின்னே வீடு திரும்பும் சுந்தரம் க்ளேட்டன் வேலையை நான் விட்டதற்கு, சினிமா மோகம், நாடகப் பித்து என்று பலர் பல காரணங்கள் கூறினாலும், எனக்கு மட்டுமே தெரிந்த காரணம், பேராசை. அதாவது, கல்யாணப் பத்திரிகையில் மட்டுமே பிரசுரமான என் பெயர் வெகுஜனப் பத்திரிகையில் வரவேண்டும் என்ற ‘பேர்’ ஆசை.
கந்தர் சஷ்டி கவசம், விஷ்ணு சகஸ்ரநாமம் போல, நான் தினமும் பாராயணம் செய்யும்…. கல்கி, தேவன் போன்ற நகைச்சுவையாளர்கள் முத்தெடுத்துக் குளித்த விகட மகா சமுத்திரத்தின் அலையில் நின்று விளையாட அனுமதித்தவர் விகடன் தாத்தா சீனியர் பட்டறையில் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஜூனியர் பத்திரிகையின் கருவறை பள்ளியறையாக ஈர்த்தது. அப்போது ஜூ.வி ஆபீஸ், இந்த லேஸி மோகனுக்கு வசதியாக, என் வீட்டுக்குப் பக்கத்தில் கஸ்தூரிரங்கா ரோட்டில் இருந்தது.
ஜூ வி ஆரம்பித்த நாளில், அதில் என்னென்ன இருக்கலாம், என்னென்ன இருக்காது என்று ஒரு பட்டியல் போட்டார்கள். இருக்கலாமில் என் பெயர் இல்லை ; நல்ல வேளையாக இருக்காததிலும் என் பெயர் இல்லை. இருக்காததில் இருந்த என்னைக் கூப்பிட்டு, கம்பல்ஸரி எஜுகேஷனாக, ஜூ.வி-யில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதும்படி, உருட்டி , மிரட்டி உற்சாகப்படுத்தினார் எம்.டி (ஆசிரியர் பாலசுப்பிரமணியன்).
ஜூ.வி தொடங்கிய வாரத்திலிருந்து, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு இடைவெளி இல்லாமல் எழுதியதில், இந்தக் குழந்தை ஜூராஸிக் பேபியாக பரிணாம வளர்ச்சியுற்றது.
அந்நாளில் எனக்கு ‘ஸைனஸ்’ என்ற பேரில், மூக்கில் உபதிரவம் ஓயாமல் ஒழுகும் அளவுக்கு ஒரு உபத்திரவம் இருந்தது. எதிராளி மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ‘கின்னஸ்’ ரேஞ்சில் தும்மித் தும்மி, அவரை ஈரத்தமிழனாக்குவேன். அப்புறம், நாடக அரங்கேற்றத்துக்கு அடுத்தபடியாக என் அடிவயிற்றைக் கலக்குவது, தெரு நாய்களை நான் சந்திக்கும் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சிகள்…அப்போது பார்ப்பவர் காறித் துப்பும் அளவுக்கு நான் கோழையாகி விடுவேன்.
இப்படி ‘கிசுகிசு’ வில் வராத என்னுடைய வீக்னஸ்களையெல்லாம், ஜூ.வியில் சயனஸ் மூக்கு, நாய் வில்லர்கள் என்று உயர்வு நவிற்சியணி நகைச்சுவைக் கட்டுரைகளாக ‘ஆர்ச் புசவால்ட்’ டைப்பில் எழுதினேன்…. (இப்போது அவர் இல்லை. தைரியமாகச் சொல்லலாம்) கையோடு கையாக எனக்குத் தெரிந்தவர்களை ஜூ.வி வாங்கும்படி வற்புறுத்தி, சர்குலேஷனை என் பங்குக்கு கணிசமாக உயர்த்தினேன்.
இப்படியாக, எனது பல எழுத்து மசக்கைகளுக்கு, மாங்காய், சாம்பல் அளித்து கட்டுரைகள், கதைகள் என சுகப்பிரசவம் செய்ய வைத்தது குறும்புக்கார ஜூ.வி.
ஜூ.வி-யின் ஆரம்பக் காலத்தில் நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, இப்போது நூல் வடிவில் வெளியிட்டிருக்கும் விகடன் பிரசுர பதிப்பாளருக்கு என் நன்றி.
எழுத்தைப் பொறுத்தவரையில் நான் பட்ட ஒரே கடன் விகடன்….விகடனில் வந்த எழுத்தை வேறு புத்தகத்தில் பிரசுரித்தால் ‘நன்றி: விகடன்’ எனக் குறிப்பிடுவது வழக்கம்.
என் வரையில், என் எழுத்து எங்கு பிரசுரமானாலும் நன்றி: விகடன்.
விகடன் தாத்தா போல, என் எழுத்தில் ஆர்வம் காட்டிய வீட்டுத் தாத்தா வி.கே. வெங்கடகிருஷ்ண ஐயங்காருக்கு நன்றி.