உமா வரதராஜன்

 

உமா வரதராஜன் (1956)

கிழக்கிலங்கையின் கரையோரக் கிராமமான பாண்டிருப்பில் பிறந்த இவர் தன் தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனார்.

ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் பற்றிய விமர்சனக் கட்டுரை மூலம் 1973ல், தன்னுடைய 17வது வயதில் இலக்கிய உலகுக்கு இவர் அறிமுகமானார்.இக் கட்டுரை தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரான நா.பார்த்தசாரதி அவர்களின் ‘தீபம் ‘இலக்கிய இதழில் வெளியானது.

அதைத் தொடர்ந்து சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, நாடகப்பிரதி, நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு,மேடைப் பேச்சு,நாவல் ஆகிய பிரிவுகளில் கடந்த பல வருடங்களாக இயங்கி வருபவர்.

1988-89ல் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசையும், விருதையும் வடக்கு – கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத் துறை இவருக்கு வழங்கியுள்ளது.

தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியைப் பாராட்டி இந்து சமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, ‘தமிழ் சாகித்திய விழா -1993 ன் போது, கொழும்பில் ‘தமிழ் மணி ‘ பட்டம் வழங்கி கௌரவித்தது.

2002 ல் இஸ்லாமிய ஆய்வு மையமும், ஸ்ரீலங்காவுக்கான தென் கிழக்கு ஆய்வமைப்பும் இலக்கியத் துறைக்கான விருதை வழங்கியது.

அயலகத்தில் வெளியான சில தொகுப்புகளில் இவருடைய படைப்புகள் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன.( மாலை சூட்டிகள் -இந்திய சாகித்திய அகாடமி வெளியீடான ‘அயலகத் தமிழ் இலக்கியம் ‘(2004) :தொகுப்பாளர் :சா.கந்தசாமி, அரசனின் வருகை -டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடான ‘100 சிறந்த சிறுகதைகள் ‘(2014) : தொகுப்பாளர் :எஸ்.ராமகிருஷ்ணன், அரசனின் வருகை -இந்தியவெளியாகின சாகித்திய அகாதமி வெளியீடான ‘கண்களுக்கு அப்பால் இதயத்துக்கு அருகில் ‘.தொகுப்பாளர் :மாலன்).

இவரது சில படைப்புகள் ஆங்கிலம், ஜேர்மன், சிங்கள மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன.

அரசனின் வருகை சிறுகதை இந்தியத் தலைநகர் புது டெல்லியிலிருந்து வெளிவரும் ‘Little magazine இதழ் எண் 3 & 4 ல் ‘The advent of the king ‘ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், ‘எலியம்’ சிறுகதை A Lankan Mosaic என்ற தொகுப்பில் Rattology என்ற தலைப்பிலும், ‘முன் பின் தெரியா நகரில் ‘ என்ற கவிதை கனடாவிலிருந்து வெளிவந்த ‘In our translated world ‘என்ற தொகுப்பில் ஆங்கிலத்தில் ‘Alien city ‘என்ற தலைப்பிலும், ‘அரசனின் வருகை ‘ சிறுகதை ஒக்ஸ்ஃ போர்ட் யுனிவெர்சிட்டி பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட ‘Uprooting the Pumpkin ‘ தொகுப்பில் ‘The Advent of the King ‘ என்ற தலைப்பிலும், ‘முகங்கள் ‘ என்ற சிறுகதை ‘ Tamil short stories from Sri Lanka ‘ என்ற தொகுப்பில் ‘faces ‘ என்ற தலைப்பில் கொடகே சகோதரர்களின் நிறுவனத்தாலும், ‘எலியம் ‘ என்ற சிறுகதை ‘மீப்புர புராணய ‘ என்ற தலைப்பில் சிங்கள மொழியில் ‘அசல் வெசி அப்பி ‘ தொகுப்பிலும், ‘அரசனின் வருகை ‘ சிறுகதை ஜேர்மன் மொழியில் ‘Edit ‘ என்ற இலக்கிய சஞ்சிகையின் 50வது இதழில் 2009ம் ஆண்டும் வெளியாகின.

இவருடைய ‘எலியம் ‘ சிறுகதை பாடசாலைகளில் தரம் 10-11 க்கான ‘தமிழ் இலக்கிய நயம் ‘ பாடத் திட்டத்தில் 2015லிருந்து சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது.

1980 களில் கல்முனையில் இயங்கிய ‘புது மோடிகள் ‘ நாடகக் குழுவின் இயக்குனர்களில் ஒருவராகவும், நடிகராகவும் செயற்பட்டவர்.

ஈழத்தின் இலக்கியச் சிற்றிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.(காலரதம், வியூகம், களம் ).

70 களின் இறுதி ஆண்டுகளில் கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராகவும், பின்னர் வியூகம் என்றோர் இலக்கிய அமைப்பின் பொதுச் செயலாளராகவும் இயங்கியவர். தற்போது தற்போது கல்முனை கலை -இலக்கிய நண்பர்கள் அமைப்பின் பொருளாளாளராகவும், பாண்டிருப்பு மறுமலர்ச்சி சன சமூக நிலையம் மற்றும் கல்முனை நெட் ஊடக வலையமைப்பின் ஆலோசகராகவும் உள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கியவர்.(1990-1991 காலப்பகுதியில் ரூபவாஹினியில் ‘சங்கமம் ‘,1991-1994 வரை ரூபவாஹினியில் ‘ஊர் கோலம்’ கலை, கலாசார நிகழ்ச்சி, 2010-2011 வரை நேத்ரா தொலைக்காட்சியில் ‘அழியாத கோலங்கள்’ -பழைய திரைப் படப் பாடல்களையும், ரசனைக் குறிப்புகளையும் கொண்ட நிகழ்ச்சி, 2012- 2014 வரை நேத்ரா தொலைக்காட்சியில் ‘உதிராப் பூக்கள் ‘-பழைய திரைப் படப் பாடல்களையும், ரசனைக் குறிப்புகளையும் கொண்ட நிகழ்ச்சி. )

பத்தியெழுத்தாளராக நன்கு அறியப் பட்டவர்.(கீற்று -கிறுக்கல்கள் (1978), களம் -கிறுக்கல்கள் (1992-1998), திசை -திரைக்கோலம் (1989),வீரகேசரி -காலரதம் (1990),மூன்றாவது மனிதன் -கை போன போக்கில் (1999-2000).

வீரகேசரி -‘சமகாலத்தி’ல் இவர் எழுதிய திரைப்பட ரசனைக் கட்டுரைகள் 2015 ல் வெளியாகியுள்ளன.

அண்மையில் தினக்குரல் பத்திரிகையில் அவருடைய புதிய நாவலின் இரண்டு பாகங்கள் வெளியாகின.

தற்போது தினகரன் வாரமஞ்சரியின் ‘பிரதிபிம்பம்’ எனப்படும் கலை -இலக்கிய விவகாரங்களுக்கான பக்கத்துக்குப் பொறுப்பாகவுள்ளார்.

அவருடைய இதர நூல்கள் :

உள்மன யாத்திரை (பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு)

மூன்றாம் சிலுவை (2009) -நாவல்

உமா வரதராஜன் கதைகள் (2011)

http://www.umavaratharajan.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *