ஆதி.இராஜகுமாரன்

 

திரு ஆதிமூலம் திருமதி சாரதாம்பாள் தம்பதியரின் மூத்த மைந்தனாக 28.8.1948 இல் பினாங்கு மாநிலத்தில் பிறந்தவர் ஆதி.இராஜகுமாரன். இவரின் இயற்பெயர் இளங்கோ. தாயார் செல்லமாக அழைத்த இராஜகுமாரன் என்ற பெயரிலேயே இலக்கிய உலகிற்கு வந்தவர்.

ஆதி. இராஜகுமாரனின் தந்தையார் பெரியாரின் தீவிர தொண்டராவார். தந்தையைப் பின்பற்றி இவரும் கொள்கைப் பிடிப்பில் தீவிர பெரியார் மற்றும் காமராஜர் பற்றாளராகச் செயல்பட்டார்.

திருச்சியில் பெரியார் கல்லூரியில் பி.எஸ்ஸி., படித்து தனது சகோதரர் ஆதிகுமணன் வழியில் மலேசியப் பத்திரிகை உலகிற்கு அறிமுகமானவர். இவரைப் பத்திரிகை உலகிற்குள் வரித்துக்கொண்ட முதல் பத்திரிகை பழைய தமிழ்மலர். பின்பு ஆதி. குமணனின் வானம்பாடி, தமிழ் ஓசை மற்றும் தமது சொந்த இதழ்களான நயனம், நிலா என்று இவரின் இதழியல் உலகம் விரிந்தது.

மலேசியப் புதுக்கவிதைக்குக் களம் அமைத்து தந்தவர்களில் இவரும் ஒருவராவார். இன்று கவிஞராக அறியப்படும் பெரும்பான்மை படைப்பாளிகள் உருவாகக் காரணமாக இருந்தவர். இவருடைய காத்திரமான விமர்சனத்திற்காக படைப்பாளிகள் காத்திருந்தனர்.

இவர் எழுதிய ‘சாசனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. புதுக்கவிதைகளுடன் அற்புதமான சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதியவர். முகவரி தேடும் மலர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலப் புலமையும் கணினி நுட்பமும் அறிந்த இதழியலாளர். ‘இணையம்’ என்ற சொல்லைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியவர்.

தமிழகத்தில் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்து முறைமையை மலேசியாவில் தம் பத்திரிகையில் முதன் முறையாகப் பயன்படுத்தியவர் ஆதி. இராஜகுமாரன்தான். நயனம் வார இதழ் தொடங்கியபோது புதிய எழுத்து முறையை அமலாக்கம் செய்தார். தமிழ் ஓசையில் முதன் முறையாய் 2001இல் கணினி முறையை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவரும் இவரே.

மாரா தொழில் நுட்பக்கல்லூரியில் மலாய் மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியைப் பகுதி நேரமாக செய்தார். ஆர்.டி.எம். செய்தி மொழி பெயர்ப்பாளராகவும் ஆதி. இராஜகுமாரன் தமது பங்கினை ஆற்றியிருந்தார்,

– வாணிஜெயம், மழைச்சாரல், ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1984, மழைச்சாரல், பேராக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *