கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 201 
 
 

பிறருக்குக் கொடுத்து மகிழ்வதே வாழ்க்கையின் மிகப் பெரிய பேறாகக் கருதின காலம் ஒன்று இருந்தது. செல்வத்துப் பயனே ஈதல்’ என்று கொடைக்குச் சட்டம் வடித்திருந்த பொற்காலம் இப்போது பழங்கதையாகி விட்டது. இப்போது கொடுக் கிறவர்கள் மிகக் குறைவு ; வாங்குகிறவர்கள்தாம் அதிகம். ஆசை களும் தேவைகளும் பெருகி ஒவ்வொருவரும் தன்னைத்தானே திருப்தி செய்து கொள்ள முடியாத காலத்தில் இன்று நாம் வாழ்கிறோம். கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையைவிடச் சேர்க்கவேண்டும் என்ற மனப்பான்மையே இன்று அதிகமாகியிருக்கிறது.

பிறருக்குக் கொடுத்து மகிழ முடியாத நிலையைத் தன் வாழ்வின் பயனற்ற காலமாகக் கருதிக் காட்டுக்கு ஓடின மனிதன் ஒருவனைப்பற்றி இங்கே தெரிந்து கொள்ளப்போகிறோம். பழைய நாளில் அறம் என்று கூறப்பட்ட ஒழுக்கம் கடமையாகக் கருதப்பட்டது. இன்றோ , அது மனம் நெகிழ்கிறபோது தற்செயலாக உண்டாகிற பலவீனமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் அறம்தான் பொதுவாழ்க்கைக்கு வலுத் தரும் பலமாக இருந்தது. அதே அறம் இன்று பலவீனமாகி விட்டதா?

தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் கோபி செட்டி பாளையத்தின் அருகில் பாரியூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் செட்டிப் பிள்ளையப்பன் என்று ஒரு செல்வர் இருந்தார். அவர் கணவாள குலத்தைச் சேர்ந்தவர். தெய்வ பக்தி மிக்கவர். தம்மூருக்கு அருகில் தேவி பாகத்தனாகக் கோயில் கொண்டிருக்கும் அமரவிடங்கப் பெருமானுக்குத் திருப்பணிகள் பல புரிந்தவர்.

அவர் அறம் செய்வதை ஒரு விரதமாக வைத்துக் கொண்டிருந்தார். கவிபாடி வருகிறவர்களையும் ஏழ்மையினால் வாடி வருகிறவர்களையும் வரவேற்று இல்லையென்று சொல் லாமல் முடிந்ததையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கேட்கிறவர்களிடம் ‘இல்லை’ என்று கூறுகிற நிலை நேர்ந்தால் உலகில் உயிரோடு வாழவே கூடாது என்பது போலக் கொடை வெறிபிடித்திருந்தது அவருக்கு. எத்தனை நாளைக்கு முடியும் அப்படி ? கடைசியில் வளமாக இருந்த அவருடைய செல்வ நிலையும் சற்று வறண்டது. நோயுடன் வருகிறவர் களுக்கெல்லாம் பச்சிலையும் வேரும் பட்டையும் கொடுத்துத் தான் தழைக்கமுடியாமல் பட்டுப் போகும் மருந்து மரம் போல் குன்றிப் போனார் செட்டிப் பிள்ளையப்பன். வீட்டுப் பாட்டுக்கே போதாத அளவு அந்தக் குடும்பத்தில் ஏழைமை வந்து கவிந்து கொண்டது. அப்படிப்பட்ட வறுமை நிலையில் ஒரு நாள் காலை அவருடைய வீட்டைத் தேடிக்கொண்டு சில புலவர்கள் வந்தார்கள். அவர்கள் எல்லாரும் முன்பு அவர் வசதியாக இருந்த காலத்தில் அடிக்கடி உதவிகள் பெற்றுக்கொண்டு போனவர்கள். இப்போதும் அப்படி ஏதோ ஓர் உதவி பெறவே வந்திருந்தனர். அவரே இப்போது ஏழைமையில் வாடுகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. பாவம்!

செட்டிப் பிள்ளையப்பன் பார்த்தார். புலவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்ல அவருக்குத் துணிவில்லை; கொடுப் பதற்கும் ஒன்றும் இல்லை. அன்றுவரை ‘இல்லை’ என்ற சொல்லைச் சொல்லாமல் பழகிக் கொண்டிருந்த அந்த நா அன்றும் அதைச் சொல்ல எழவில்லை.

‘இனி நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்?’ என்ற கேள்வி அவர் மனத்தில் உண்டாயிற்று. மானம் என்பது தன் நிலையிலிருந்து தாழாமை. தாழ்ந்தால் உயிர் வாழாமை அல்லவா? புலவர்கள் முன் போய் இப்போது நான் பரம ஏழையாகி விட்டேன். கொடுப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று சொல்ல அவர் தயங்கினார். புலவர்களிடம் போனார். “

“கொஞ்சம் இருங்கள் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கொல்லை வழியாக வெளியேறினவர் திரும்பி வரவேயில்லை.

ஊரருகே பயங்கரமான வேங்கைப் புலிகள் திரியும் பெரிய காடு. அந்தக் காட்டுக்குள் புகுந்துவிட்டார். ‘இல்லை’ என்று கூறுவதற்கு மனமில்லாது காட்டுக்கு ஓடிய இந்தச் செயல் இன்று நமக்கு அசட்டுத்தனமாகப்படுகிறது. ஆனால் ‘அறம்’ என்பதே ஓர் அசட்டுத்தனமாகப்படுகிற இன்றைய வாழ்வில் நமக்கு வேறு எப்படித் தோன்ற முடியும்? செட்டிப் பிள்ளையப்பன் போல் ‘இல்லை’ என்று சொல்வதற்குக் கூசி வருந்தி விதியை நொந்து கொண்டு ஓடுகிறவர்கள் இன்று இல்லை. ‘உண்டு’ என்று கூற மறுத்து ஓடுகிறவர்களே இன்று மிகுதியாக இருக்கிறார்கள்,

“இட்டமான கவிசொல்லும் பாவலர்க்கு
இல்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில் வாழ்
துட்டவன் புலித் தூற்றிற் புகுந்தவன்
தூயவன் கணவாள குலத்தினன்
செட்டிப் பிள்ளையப்பன் தினந்தொண்டு செய்
தேவிமா மலைமாது ஒரு பங்குள்
கட்டுசெஞ்சடை அமர விடங்கனார் –
கதித்துவாழ் பாரியூர் எங்களூரே”

மருந்து மரம்போல் நின்று சமுதாயத்தின் ஏழைமை நோய் தீர்க்க இப்படி எத்தனையோ வள்ளல்கள் தேவை! பாட்டைப் பாடிய புலவரும் பாரியூர்க்காரர் போல் இருக்கிறது! அவரைத் தம் மூர்க்காரர் என்று கூறுவதிலேயே பெருமைப்படுகிறார் புலவர்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email
'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *