கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 283 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘புண்ணியத்தைப் பற்றி நீ கொண்டிருக் கும் கர்வம் மிகவும் கொடியது; பாவம் அவ்வளவு கொடியதல்ல..’ 

அக்கம் பக்கமாக அமைந்த இரு வீடுகள். 

ஒன்றிலே குலமகள் ஒருத்தி வாழ்ந்தாள். பூசை அநுட்டானங்களிலெல்லாம் மகா ஒழுங்கு. விரத நியமங்களைச் சீர்த்தியுடன் ஒழுகினாள். நாள் தவறாது, காலம் பிசகாது ஆலயவழிபாட்டிலும் ஈடுபட்டாள். தான் கற்பு நெறி பிறழாது வாழ்வதான மமதையைச் சுகித்தனள். 

அடுத்த வீட்டில் வாழ்ந்தவள் பொதுமகள். ஆடவருக்கு உடலின்பம் விற்பதிலேயே அவளுடைய நாளெல்லாம் பொழுதெல்லாம் கரைந்தது. சோர நாயகர்களுக்குப் பிரீதியானவற்வையே குடித்தும் புசித்தும் வந்தாள். ஆலய வழிபாட்டிற்கு நேரமே கிடைக்கவில்லை. 

இருவருக்கும் ஒரே நேரத்தில் மரணாவஸ்தை ஏற்பட்டது. 

புஷ்பவிமானம் ஒன்று ஆகாயத்திலிருந்து இறங்கி, பொதுமகளின் வீட்டுப் பக்கமாக நகர்ந்தது. அதனைக் கண்ட குலமகளின் மனத்திலே சரிவு. ஏதோ தவறுதல் நடப்பதாகவே அவளுக்குத் தோன்றியது. 

‘விமானமே! நீ வந்து சேரவேண்டிய முகவரி என்னு டைய வீடே….’ எனக் கத்தினாள். 

புஷ்பவிமானம் சற்றே தரித்தது. 

‘சரியான இடத்தை நாடித்தான் செல்கிறேன். உன் பக்கத்து வீட்டுக்காரியின் உயிரைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப் பணிக்கப்பட்டிருக்கிறேன்…’ என்றது விமானம். 

‘நான் பூஜைகளையும் விரதங்களையும் நியமப்படி நிறைவேற்றியுள்ளேன். வேளை தவறாது ஆலயம் சென்றேன். நான் கற்பு நெறி பிறழாதவள். பக்கத்து வீட்டுக்காரி கேவலம் ஒரு வேசி….’ 

‘நீ புண்ணியமான கர்வ வாழ்க்கையை மேற்கொண்டாய். அவள் பாவமானதாயினும் பணிந்த வாழ்க்கையை மேற் கொண்டாள். புண்ணியமான வாழ்க்கையிலே நீ பரம்பொருளை மறந்தாய்…’ 

‘அவள்….?’ நம்பிக்கை வரண்ட தொனியிற் குலமகள் கேட்டாள். 

‘வர்ணாசிரமம் வகுத்த வாழ்க்கையை அவள் பயின்றிருக்கலாம், பாவ வாழ்க்கை கிட்டியபோதிலும் அவள் பரம்பொருளை மறந்தாளல்லள். இதனை நீ அறிந்து கொள்ளக் கடவாய்: புண்ணியத்தைப் பற்றி நீ கொண்டிருக்கும் கர்வம் மிகவும் கொடியது; பாவம் அவ்வளவு கொடியதல்ல….’ என்று கூறி, புஷ்ப விமானம் நகரத் தொடங்கியது. 

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *