கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர் புனைவு
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 2,490 
 
 

அது ஒரு அமைதியான ஞாயிறு காலை. முழு சுற்றுப்புறமும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, சூடான Nescafe இன்ஸ்டன்ட் காபியுடன் நான் ஹிந்துவின் கிரிக்கெட் பக்கத்தில் மூழ்கியிருந்தேன்.

திடீரென்று ஒரு அலறல் சத்தம் கேட்டது. எங்கள் வீட்டு கொல்லைப்புறத்திலிருந்து வந்த குரல் என் மனைவியுடையது. எங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் போது அவள் எதையாவது பார்த்திருக்க வேண்டும்.

நான் உடனே கொல்லைப்புறத்திற்கு விரைந்தேன். என் மனைவி, கையில் தோட்டத்து மண்வெட்டியுடன், இருபது அடி தூரத்தில் இருந்த தக்காளிச் செடியின் அருகே ஒரு இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்னைப் பார்த்தவுடனே, தன் கையை நீட்டி “அது தெரிகிறதா?” என்று கிசுகிசுத்தாள்.

ஆம், என்னால் பார்க்க முடிந்தது. அந்த இடத்தில் சுமார் இரண்டடி நீளமுள்ள இளம் பாம்பு ஒன்று தன் சட்டையை உரித்துக் கொண்டிருந்தது. அதன் தோலின் பெரும்பகுதி வெளியில் கிடக்க, பாம்பு கடைசி சில அங்குலங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. வேலை முடிந்தவுடன், புதர்களுக்குப் பின்னால் விரைவாக மறைந்தது.

நான் அருகில் சென்று தோலை எடுத்து ஆராய்ந்தேன். அது ஒரு சொரசொரப்பான செதில் படிந்த தோல். அதன் மேலிருக்கும் அழகழகான வடிவத்தைப் பார்த்தால், அது ஒரு கட்டுவிரியன் என்று தோன்றியது.

“அய்யோ, அதை ஏன் தொடுகிறீர்கள்? தூக்கி எறியுங்கள் அந்த சனியனை! ” என்று என் மனைவி கத்தினாள்.

நான் சிரித்துக் கொண்டே அவளை நோக்கி தோலை ஆட்டினேன். அப்போது தான் தோலின் பின்புறத்தில் விசித்திரமான ஒன்றைக் கவனித்தேன். அது என்ன என்று கூர்ந்து பார்த்தேன்.

இரண்டு அழகான முக்கோண வடிவங்களுக்கு இடையில் பொறிக்கப்பட்டிருந்தன மூன்று சொற்கள் – MADE IN CHINA.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *