பயணம் – ஒரு பக்கக் கதை

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 9,800 
 
 

“காதல் கீதலெல்லாம் சரிவராது.”

கோபமாகக் கத்தினார் நித்யானந்தன்.

“எனக்கு ரத்தினத்தைப் பிடிக்கலை; பிடிக்கலை; பிடிக்கலை…!” பதிலுக்குக் கோபமாகக் கத்தினாள் கௌசிகா.

“உன் மாமன் மகன் ரத்தினத்துக்கும் உனக்கும் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். மனசை தயார் பண்ணிக்க..”

நித்யானந்தன் கராறாகச் சொன்னார்.

தன் சகோதரனின் ஒரே மகன்தான் ரத்தினம் என்றாலும், பிடிக்கவில்லை என்று மகள் சொன்ன பிறகு இந்த சம்பந்தத்தில் விருப்பமேயில்லை கொளசிகாவின் தாய்க்கு. ஆண்டவன் விட்ட வழி என்று அமைதியாக இருந்தாள்.

பேருக்குச் சாப்பிட்டுவிட்டு, சென்னைக்குச் செல்ல ஆயத்தமானார் நித்யானந்தம்.


“என்னங்க..”

“ம்..”

“நம்ம தலையாரி மகன் ராமு, கார்ல ஒண்டியாத்தான் போறானான். இப்பதான் கேள்விப்பட்டேன். நீங்க அவன் கூட வசதியாப் போயிடுங்களேன்.”

“சீச்சீ.. வாயக் கழுவு. அவனை எனக்கு அறவே பிடிக்காது. அவனோட, ரெண்டு மணி நேரம் பயணம் பண்ணி சென்னைக்குப் போகச் சொல்றியே அறிவுருக்கா உனக்கு…”

“பிடிக்காதவங்களோட ரெண்டு மணி நேரம் பயணம் செய்யவே யோசிக்கற நீங்க, பிடிக்காத ஒருத்தனோட வாழ்க்கைப் பூரா என்னைப் பயணம் பண்ணக் கட்டாயப்படுத்தறீங்களே, ஞாயமாப்பா..?”

அமைதியாகக் கேட்ட மகளின் ஞாயம் மனதைக் குத்தியது.

“நான் சொன்னாச் சொன்னதுதான். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடத்தே தீரணும். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் நடந்தாகணும்.”

பிடிவாதமாய் கூறிய நித்யானந்தன் சற்றே அமைதியாக இருந்துவிட்டுத் தொடர்ந்தார்.

“உன் காதலனோட முகவரி குடு கௌசிகா, நானும் அம்மாவுமாப் போய் பேசறோம்.” என்றவரை வியப்புடன் பார்த்தார்கள் தாயும் மகளும்.

– மே 2023 கதிர்ஸ்

Print Friendly, PDF & Email

1 thought on “பயணம் – ஒரு பக்கக் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *