தேருக்கு வந்த தேவ மங்கை! – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 6,048 
 

“சுவாமி தேருக்கு வந்த பின்னாடி கோயிலுக்குள்ள எதுக்கு கும்பிடனம்? நேரா தேருக்கு பக்கத்துல போயி கும்பிட்டுட்டு அங்கயே நின்னுக்குவோம்” அம்மாவின் பேச்சைக்கேட்டு தேரின் முன் போனவுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த நண்பர்கள் தன்னை பெயர் சொல்லி அழைக்க, அம்மாவை விட்டு விலகி தன்னையும் அவர்களுடன் இணைத்துக்கொண்டான் இருபது வயது இளைஞனான மாகி.

“இதென்னடா பேரு மாகி…? போகி, ராகி மாதிரி இருக்குது?” நண்பனின் நண்பன் கேட்க “அப்பா பேரு மாடசாமி, அம்மா பேரு கிரிஜா. ரெண்டு பேரோட முதல் எழுத்த சேர்த்து வெச்சிட்டாங்க. அவனுக்கும் பிடிச்சிருக்கு” என்றான் நண்பன் நிகன்.

ஆதீனகர்த்தாக்களும், அரசியல் வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் வந்து குவியத்தொடங்க தேர் மீது வைக்கப்பட்டுள்ள சுவாமிக்கு தீபாராதனை நடந்ததும், தேங்காய் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அதிலிருந்த தேங்காய்களை ஈடுகாயாக தேர் முன் அடிக்க தேர் வடக்கயிறை கூட்டத்தில் உள்ளவர்கள் ‘அரோகரா’ என சத்தமிட்டு இழுக்க தேர் மெல்ல நகர்ந்தது. பின்பக்கக்கயிறை சிலர் பிடித்து தேரின் வேகத்தைக்கட்டுப்படுத்தினர்.

பலர் தங்களது செல்போன்களிலில் வீடியோ, போட்டோ என எடுத்துக்கொண்டிருந்தனர். பலர் தண்ணீர், நீர் மோர், பொங்கல், சுண்டல் என தேர் செல்லும் வழியில் கொடுத்துக்கொண்டிருந்தனர். யானை, குதிரை என தேரின் முன் செல்ல கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என கண்களுக்கு பல விதமான காட்சிகள் விருந்தாக அமைந்ததில் மனம் என்றுமில்லாத அளவுக்கு மகிழ்ச்சிப்பட்ட போது கூட்டத்தில் திடீரென ஒரு முகம் தன்னை வசீகரித்து, காந்தமாக இழுத்த நொடி கூட்டத்தில் மறைய, தேர்க்கயிரை விட்டவன்‌ அந்த தேவதையைத்தேடினான்.

பார்த்த அந்த ஒரு நொடி ஓவியமாய், காவிய நாயகியாய் ‘ரதியோ…?’ என நினைக்கவைத்தது மாகியை. கூட்டத்தில் முழுதும் சல்லடை போட்டுத்தேடினான். ‘இது வரை எந்த ஒரு பெண்ணைப்பார்த்தும் மனதில் இப்படியொரு சலனம் வந்ததில்லையே?’ என மனம் மறுபடியும் அந்த அழகு தேவதையின், தேவ மங்கையின் தரிசனத்துக்கு ஏங்கியது.

நகர வீதிகளை முழுவதும் ஓடிய படியே தேடினான். ‘வெளியூரிலிருந்து வந்திருக்க வேண்டும். இதுவரை இப்படியொருத்தியை உள்ளூரில் பார்க்கவில்லையே…’ என வருத்தத்துடன் தேடிய போது முன்னே வந்த பல இளம் பெண்கள் இவனைப்பார்த்து சிரித்தும், பேச முற்பட்டும் யாரையும் கண்டு கொள்ளாமல் அந்தக்காட்சியை மறுபடியும் காண ஆர்வமாய் அவனது கண்கள் சுற்றிச்சுற்றி தேடுவதிலேயே குறியாக இருந்தது.

அப்போது கல்லூரியில் உடன் படிக்கும் நண்பன் சோகனைப்பார்க்க, சற்று தன்னை ஆசுவாசப்படுத்தி அவனுடன் அருகிலிருந்த அழகு நிலைய கடைக்கு முன் உள்ள இருக்கையில் அமர்ந்தவனை, அந்தக்கடைக்குள் தன் சகோதரன் மேக்கப் போடுவதைப்பார்க்க சோகன் அழைத்த போது சென்றவனுக்கு அங்கே ஒரு பெண் தனது அழகிய முதுகைக்காட்டியபடி சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க, அவளது பக்கத்தில் நின்றிருந்த நான்கைந்து ஆண்கள் கண்ட இடங்களில் அவளைத்தொட்டு, தொட்டு சீண்டுவதைக்கண்டு ‘தான் தவறான இடத்துக்கு வந்து விட்டோம்’ எனக்கருதி திரும்ப வெளியே செல்ல எத்தனிக்கையில் அந்தப்பெண் திரும்பி மாகியை பார்த்த காட்சி மயக்கத்தையே வரவழைத்தது. சாட்சாத் அதே தேவ மங்கை! அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

“என்ன அப்படியே ஷாக்காயிட்டே? என்னோட அண்ணா ரவிதான். வித்தியாசமா மேக்கப் போட்டுக்கிறதுல கில்லாடி. இன்னைக்கு மீசைய எடுத்துட்டு ஒரு பொண்ணப்போல மேக்கப் போட்டு கிட்டான். மேக்கப் போட்டதுக்கப்புறம் எங்கலாலயே அடையாளம் கண்டு பிடிக்க முடியல. உலக அழகியே வந்திட்ட மாதிரி இருந்துச்சு. வீதில போன போது பார்த்த பொண்ணுங்களே அழகை ரசிக்க ஆசப்பட்டு பின்னாடி வந்திட்டாங்க. ‘இந்தி நடிகை’ ன்னு சொல்லிட்டு தேர்க்கூட்டம் பெரும் பகுதி அண்ணனுக்கு பின்னாடி வந்ததுனால இங்கே ஓடி வந்திட்டான்” என நண்பன் சோகன் சொன்ன போது, தானும் ஒரு படி மேலே போய் தேவலோக தேவதையென தேடி அழைந்ததை அவனிடம் சொல்ல விரும்பாமல் தனது செயலுக்காக வெட்டகப்பட்டு தலை குனிந்து நின்றான் மாகி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *