தூக்கணாங்குருவி போல!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 2,160 
 
 

சித்திரை மாத அக்னி வெயிலின் தாக்கத்தால் அடுப்பெரியும் போது ஏற்பட்ட தீ ஜ்வாலை வீட்டின் கூரையில் மொத்தமாக பற்றிக்கொள்ள செய்வதறியாது திகைத்த மாலா, சேலையில் கட்டிப்போட்டிருந்த தொட்டிலில் தூங்கிய ஐந்து மாதக்குழந்தையை அவசரகதியில் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள்ளிருந்து எந்த பொருட்களையும் எடுக்காமல் பதறியபடி, கதறிக்கத்தியபடி வெளியே ஓடினாள்.

பக்கத்திலுள்ள பல பேர் தங்களது வீடுகளில் இருந்த தண்ணீரை பக்கெட்டில் எடுத்து வந்து எரியும் நெருப்பின் மீது ஊற்றியும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட தீயின் வேகத்தால் மொத்தமாக மண் சுவற்றில் ஓலையால் வேயப்பட்டிருந்த கூரையில் சாம்பல் தான் மிச்சமானதாக நெஞ்சில் அடித்துக்கொண்டவளுக்கு மயக்கம் வர, குழந்தையை பக்கத்திலிருப்பவர்கள் எடுத்துக்கொண்டு மாலதி முகத்தில் தண்ணீர் தெளிக்க, இயல்பு நிலைக்கு வந்தவள் மீண்டும் அழ ஆரம்பிக்க, அதற்குள் செய்தி கேட்டு தினக்கூலிக்கு உள்ளூரில் நிரந்தர வேலை ஏதுமின்றி கிடைக்கும் சிறிய வேலைகளால் கிடைக்கும் வருமானத்தில் நண்பர்களுடன் குடித்து விட்டு நேரத்தைப்போக்கிக் கொண்டிருந்த கணவன் பிரமன் வந்ததும் கணவனைக்கட்டிப்பிடித்துக்கதறினாள். அவனும் தன் பங்குக்கு கவலையில் கதறியழுதான்.

இவர்கள் அழுவதைக்கண்டு குழந்தையும் அழ, குழந்தைக்கு பால் கொடுக்க மறைவிடம் மாலா தேடியதைக்கண்ட எதிர்த்த வீட்டு பாக்யம் தனது வீட்டிற்குள் கூட்டிச்சென்றாள். குழந்தைக்கு தொட்டில் கட்ட இடம் கொடுத்ததோடு வீட்டை சரி செய்யும் வரை தனது வீட்டிலேயே தங்கிக்கொள்ளும்படி கூறினாள்.

வீடு முற்றிலும் எரிந்து போனதை நினைத்து பாக்யத்தின் வீட்டில் பாதுகாப்பாக படுத்திருந்தாலும் மாலாவுக்கு உறக்கம் வர மறுத்தது. வாழ்க்கையே இத்தோடு முடிந்து விட்டதாகவும், இனி வாழ்வதை விட சாவதே மேல் எனவும் சிந்தனை ஓடியது.

 ‘குடிகாரக்கணவனால் தனக்கு வீட்டை மீண்டும் புதுப்பித்துக்கொடுக்க முடியாது. தந்தை சிரமப்பட்டு தான் வேலை செய்த தோட்டத்துக்குடியானவர்களிடம் இலவசமாகப்பெற்ற தென்னை ஓலைகளில் தனக்காக வீடமைத்துக்கொடுத்தார். இனி பச்சைக்குழந்தையை வைத்துக்கொண்டு தான் யாரிடம் சென்று ஓலைக்கு கையேந்துவது…? அது மிகவும் சிரமமான காரியம். தன்னால் அது முடியவே முடியாது….’ என நினைத்து கண்ணீர் வடித்தாள்.

மறுநாள் தற்போதைய நிலையின் வறுமையைப்போக்க ஒரு பண்ணையாரின் தோட்டத்தில் உள்ள தோப்பில் தேங்காய் எடுக்கும் வேலைக்கு குழந்தையையும் எடுத்துக்கொண்டு மற்ற பெண்களுடன் சென்றவள், குழந்தையை அங்கிருந்த கொய்யா மரக்கிளையில் தொட்டில் கட்டிப்போட்டு விட்டு வேலை செய்தாள்.

மதியம் உணவு இடைவேளையில் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு பாக்யா வீட்டிலிருந்து கொடுத்து விடப்பட்டு, தான் கொண்டு சென்றிருந்த கம்மங்கூழைக்குடித்தவள், அசதியில் தென்னை மட்டையை கீழே போட்டு மர நிழலில் படுத்துக்கொண்டு உயரமாக வளர்ந்து நின்ற தென்னை மரங்களை கவனித்தாள்.

தென்னை மரத்தின் மட்டைகளில் தூக்கணாங்குருவிகள் இரண்டு பறந்து, பறந்து ஓலைகளை தங்கள் மூக்கினால் கொத்திக்கிழித்து, எடுத்துக்சென்று மட்டையில் வைத்து பின்னலாக, ஒன்றில் இன்னொன்றைச்சொருகி  கூடு கட்டுவதை கவனித்தாள். அதன் அழகை மிகவும் ரசித்தாள். ‘அவற்றின் முயற்சியும், அறிவும் நம் மனிதர்களுக்கு, அதிலும் தனக்கு இல்லையே…?’ என வருந்தினாள்.

இப்படியே நாட்கள் நகர்ந்தன. தினமும் குருவிகளின் செயல்பாடுகளைக்கவனித்தாள். கூடு கட்டுவதோடு, இரவிலும் இடைவிடாமல் வேலை செய்ய நெருப்பு போல வெளிச்சம் தரும் மின் மினிப்பூச்சியைப்பிடித்து அருகில் உள்ள வயலின் சேறு எடுத்து வந்து அப்பூச்சியை அச்சேற்றை வைத்து கூட்டில் ஒட்டி வைத்து, அதன் வெளிச்சத்தில் கூட்டின் வேலையை முடிப்பதை மாலை வேலை முடிந்த பின்னும் இருள் வரும் வரை பார்த்துத்தெரிந்து கொண்டாள். 

மழை பெய்தால் மழைநீர் உள்ளே வராதவாறும், கீழே குலாய்போல் செய்து முட்டைகள் கீழே விழாதவண்ணம் படுக்குமிடத்தை மேல் நோக்கி வளைத்து அமைத்திருந்தது குருவிகள்!

இவ்வளவு கூட்டின் வேலைகளை சிறப்பாக முடித்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தருணம், மட்டையும் பழுத்து காற்றுக்கு கீழே விழ, முட்டைகள் அனைத்தும் கீழே சிதறி உடைய, வீடு பற்றி எரிந்த போது தான் பதறி, கதறியதைப்போலவே  கத்திக்கதறிய குருவிகள் அடுத்த நாள், முதல் நாள் நடந்ததையே முற்றிலும் மறந்தவாறு புதிய மட்டையில் இயல்பாக மீண்டும் கூடுகட்டத்துவங்கியதைக்கண்டவள், ஏழையாக இருந்தாலும் கோழையாக இருக்கக்கூடாது என்பதைப்புரிந்தவளாக அதே மண் வீட்டின் மீது புதிய கூரையை வேய்ந்து கொண்டு தூக்கணாங்குருவி போல புதியதொரு வாழ்வை மகிழ்ச்சியாகத்துவங்கிட வேண்டும் எனும் மன உறுதியுடன் தோப்பில் கிடந்த தென்னை  மட்டைகளை வேலை ஓய்வு நேரத்தில் குருவிகளைப்போல சேகரிக்கத்துவங்கினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *