“திறமை, புலமை இவைகளை உண்மையாகவே பாராட்டி ஊக்குவிக்கும் வள்ளல்களைக் கதைகளிலும் காவியங்களிலும் தான் பார்க்கமுடியும் போலும். வாழ்க்கையில் அத்தகைய மனிதர்கள் இருப்பதாக எண்ணுவதோ, நம்புவதோ கானல் நீரைத் தண்ணீர் என்று கருதிக் குடிக்க ஆசை கொள்ளுவது போன்றது தான். பொருள் செறிந்த பாடல் அற்புதமாக அமைந்துவிட்டது. இதை அந்த வள்ளலிடம் பாடிக் காட்டினோமானால் அவர் வாரி வழங்குவது நிச்சயம்’ என்றெல்லாம் ஆர்வமும் நம்பிக்கையும் தூண்டச் சுவடியைத் தூக்கிக்கொண்டு போனால், ‘பாட்டா? தமிழிலா? அது என்ன அது? ஏதாவது புது மோடி வித்தையா? இதுவரை நான் பார்த்ததில்லையே?’ என்று, இது போல அறியாமையை வெளிப்படுத்தும் மனிதர்களைக் காண முடிகின்றதே அன்றிக் கவிதை அறிவும், கலை உணர்ச்சியும், கொடுக்கும் இயல்பும் ஒருங்கே அமைந்த வள்ளல் ஒருவனையேனும் காண முடிவதில்லை. இந்த மூன்றும் ஒருங்கே அமைந்த உள்ளம் எங்காவது அத்தி பூத்தாற்போல் அகப்பட்டால் அந்த உள்ளத்தின் விரிவுக்கேற்ப உடைமையின் விரிவு அங்கே இல்லை .”
நமச்சிவாயப் புலவர் இப்படியெல்லாம் எண்ணி உள்ளம் வெதும்பி வாடியதெல்லாம் செல்லூர் வள்ளலைக் காண்பதற்கு முன்னால் தான். செல்லூர் வள்ளலைக் கண்ட பிறகு, அவருடைய இனிய மொழிகளாலும் வரவேற்பாலும் அன்புப் பணிகளாலும் மேற்கூறிய மூன்று இயல்புகளும் அவரிடம் குறைவற்ற நிறைந்திருப்பதைப் புலவர் அறிந்துகொள்ள நேர்ந்தது. அப்படி ஒரு மனிதர் இருப்பார் என்று அதுவரை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. புலவர்களோடு பழகுவதிலும் அவர்களைப் போற்றுவதிலும் அவர்கள் புலமையை இரசிப்பதிலும் இவ்வளவு பேரார்வம் உள்ள ஒரு வள்ளலைக் கற்பனையில் கூட அவர் எண்ணியதில்லை. அவ்வளவு அருங்குணங்களும் செல்லூர் வள்ளலினிடம் மிக மிகச் சிறப்பாகக் குடிகொண்டிருந்தன. இப்படிப்பட்ட ஒரு வள்ளலைத் தம் ஆயுள் முழுவதும் வாய் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கலாம் போலத் தோன்றியது நமச்சிவாயப் புலவருக்கு. சில நாள் அந்த வள்ளலுடைய விருப்பத்தைத் தட்ட முடியாமல் அவருடனேயே இருந்தார் புலவர். ஜன்மம் முழுவதும் அப்படி இருந்துவிடக்கூட அவர் மறுத்திருக்கமாட்டார். ஆனால், ஊரில் மனைவி மக்களின் நிலைதான் வள்ளலிடம் விரைவில் புலவரை ஊர் செல்ல விடை கொடுக்குமாறு கேட்பதற்குத் தூண்டியது.
அரை மனத்துடன், புலவரைப் பிரிய மனமின்றி விடை அளித்த செல்லூர் வள்ளல், நிறைந்த பெரும் பரிசில்களை அவருக்குக் கொடுத்தார். ஊருக்குப் புறப்படும் போது இரண்டாவதாக மீண்டும் வள்ளலிடம் சொல்லிக்கொள்வதற்காக உள்ளே சென்றார் புலவர். உள்ளே வள்ளலைக் கண்டு கை கூப்பி வணங்கியவாறே போய் வருவதாகச் சொன்ன அவரது கூப்பிய கையைக் கூர்ந்து நோக்கிய வள்ளல், புலவருக்குப் பதில் வணக்கம் செய்துவிட்டு அவரை அருகில் வருமாறு அழைத்தார்.
‘வள்ளல் எதற்காக அருகில் வருமாறு அழைக்கிறார்’ என்ற காரணம் புரியாத வியப்புடன் புலவர் அவரருகே சென்றார். தம் அருகே வந்த புலவரைப் பக்கத்தில் மரியாதையாக அமரச் செய்த வள்ளல், அவரது வலது கைவிரல்களை உரிமையோடு பிடித்தார். புலவரோ ஒன்றும் புரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தார். வள்ளலின் கைவிரலை அணி செய்து கொண்டிருந்த அழகிய வைர மோதிரம் புலவர் கைவிரலுக்கு மாறியது. ஊருக்குப் புறப்படும் நேரத்தில் வணங்கிய தம் கையைக் கண்டு அருகில் வரவழைத்து மோதிரமிட்ட அவர் பெருங்குண நலத்தை எண்ணி எண்ணி வியந்தது புலவரது ஏழையுள்ளம். அந்த வியப்புக்கு நடுவே ஒரு கற்பனை அருமையாகத் தோன்றியது. “என்னிடம் பரிசில் பெற்ற பிறகு, தமிழ்ச் சுவை அறியாத வேறு எந்தப் புல்லர்களிடமும் போய் இந்த வலது கைவிரல்களை நீட்டிக் கேட்கவேண்டாம். நானே என்றும் கொடுப்பேன்’ என்று தன் கைக்கு ஒரு தடை காப்பாக அந்த மோதிரத்தை வள்ளல் இட்டதாகக் கற்பித்துப் பாடினார் புலவர்.
“கா ஒன்றும் கைத்தலத் தண்ணல்
செல்லூரன் கனிந்து நம்மை
வா என்று அழைத்து இட்ட
மோதிரமே வண்மையான தமிழ்ப்
பா ஒன்றும் சற்றும் அறியாத
புல்லர் தம் பக்கலிற் போய்
தா என்று கையெடுத்து ஏற்காமல்
இட்ட தடை இதுவே’
கா ஒன்றும் = கற்பகமரம் போன்ற. கைத்தலம் = கைகள், கனிந்து = பரிந்து, பா = பாட்டு.
வள்ளல் அணிவித்த மோதிரம் அழகான கற்பனை ஒன்றை அளித்துவிட்டது புலவருக்கு.
– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.